முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (1)

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

மூல நூல்: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி, தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப், வெளியிடு: தாருல் ஹுதா

பதிப்புரை

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், நல்லோர் அனைவருக்கும் உண்டாகட்டும்.

இதற்கு முன்பு ‘முன்மாதிரி முஸ்லிம்’ என்ற நூலை ‘தாருல் ஹுதாவின்’ மூலமாக நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்… அந்நூலுக்கு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் அந்நூலைக் கொண்டு பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்று மத சகோதர சகோதரிகளும் அந்நூலைப் பெரிதும் விரும்பிப் படித்துப் பயன் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசாங்கம் அந்நூலின் 600 பிரதிகளை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசாங்க நூல் நிலையங்களிலும் வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ‘முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி’ என்ற நூலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறோம்.

இதற்கிடையில் திருமணம் செய்யும் வாலிப சகோதர சகோதரிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் வகையில் நல்ல ஒரு பரிசுப்புத்தகம் தேவை என்று நண்பர்கள் கருத்துக் கூறினர். அதற்கிணங்கவே ‘முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்’ என்ற இந்நூலை வெளியிடுகிறோம்.

இந்நூலில், கணவர் தமது மனைவியுடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தாம் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது? போன்ற விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அவ்வாறே ஒரு முஸ்லிம் பெண், தனது கணவருடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தனது கணவருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது? என்ற விஷயங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்விருவரும் தங்களுக்குப் பிறக்க இருக்கும் பிள்ளைகளை எப்படி இஸ்லாமிய முறையில் வளர்ப்பது, அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி தருவது, இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் நல்லவர்களாக உருவாக்குவது? போன்ற விஷயங்களும் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.

பலமுறை இந்நூல் மேலாய்வு செய்யப்பட்டு வாசகர்கள் எளிதாக படிக்கும் அளவு மெருகூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக குர்ஆன் மற்றும் ஆதாரமிக்க நபிமொழிகளின் வெளிச்சத்தில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

திருமணம் முடிக்க இருப்பவர்கள் மட்டுமல்லாமல் திருமணம் முடித்தவர்களுக்கும் இந்நூல் அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறோம்.

ஒவ்வொரு கணவரும் மனைவியும் இந்நூலில் கூறப்பட்டிருப்பதற்கு ஏற்ப தங்களை அமைத்துக் கொண்டால், தங்களைப் பண்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அவர்களது குடும்ப வாழ்க்கை ஒரு முன்மாதிரி முஸ்லிம் குடும்பமாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்ஷா அல்லாஹ்… இத்தகைய தம்பதிகள் இவ்வுலகத்திலேயே தங்களது சொர்க்க வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

அல்லாஹு தஆலா நமது எல்லா நல்ல காரியங்களையும் ஏற்றுக் கொள்வானாக! இந்நூலை எழுதிய ஆசிரியருக்கும் அதை மொழிபெயர்ப்பதிலும் வெளியிடுவதிலும் உதவிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அல்லாஹ் அவனது அன்பையும் மன்னிப்பையும் அருளையும் நெருக்கத்தையும் ஈருலக வெற்றியையும் வழங்குவானாக!

இந்நூலில் பிழை ஏதாவது இருப்பின் சிரமம் பாராது வாசகர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். இன்ஷா அல்லாஹ்! அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுகிறோம். அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்!

தங்களின் நல்ல துஆக்களில் எங்களையும் தாருல் ஹுதாவையும் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற அன்பான கோரிக்கையுடன் நிறைவு செய்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்…

முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்

தாருல் ஹுதா, சென்னை – 1.

Leave a Reply