65 (1). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4474

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே நான் (தொழுது முடித்தபின்) அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள். பிறகு என்னிடம் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம் நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4475

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: (தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் ‘ஆமீன்’ கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4476

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 3 ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் – அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், ‘குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை’ என்று சொல்வேன் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), ‘நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்’ எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4477

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4478

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4479

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ‘ஹித்தத்துன்’ (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ‘ஹித்தத்துன்; ஹபபத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து)’ என்று (பரிகாசமாகச்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4480

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (ஒத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘ஜிப்ரீல் (தங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, ‘வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீலுக்குப் பகைவவர் அல்லாஹ்வுக்கும் பகைவராவார். ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களின் இதயத்தில் இறக்கி வைத்தார்’ என்று (நபியே) கூறும் எனும் இந்த (திருக்குர்ஆன் 02:97வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, ‘அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனுடைய சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலைப் பெறுகிறது’ என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் இறைத்தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத் தங்களிடம் பொய்யுரைப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்’ என்று அப்துல்லாஹ் இப்னு சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), ‘இதைத்தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4481

உமர்(ரலி) அறிவித்தார். எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார் எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்’ என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்’ என்று கூறியுள்ளான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4482

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, ‘அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது’ என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, ‘எனக்குக் குழந்தை உண்டு’ என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக் கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்’ என்று அல்லாஹ் கூறினான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4483

உமர்(ரலி) அறிவித்தார். ‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்’ நான் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும், நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!’ என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, ‘நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்’ என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, ‘உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!’ என்று கேட்டார். அப்போது அல்லாஹ், ‘இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருககு வழங்கலாம்’ எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4485

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4486

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 02:144வது வசனத்தை அருளினான். உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர். அவர், ‘அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்’ என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய வைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான்’ எனும் (திருக்குர்ஆன் 02:143வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4487

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், ‘உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை’ என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், ‘உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?’ என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், ‘முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்’ என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், ‘நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்’ என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே ‘இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக’ எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது.

‘நடுநிலையான’ (வசத்) என்பதற்கு ‘நீதியான’ என்று பொருள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4488

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் ‘சுப்ஹு’த் தொழுகையை ‘மஸ்ஜிது குபா’வில் தொழுது கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, ‘கஅபாவை (த் தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்’ என்று கூறினார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4489

அனஸ்(ரலி) அறிவித்தார். (பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4490

இப்னு உமர்(ரலி) கூறினார். மக்கள் குபாவில் ‘சுப்ஹு’த் தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கித் வந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4491

இப்னு உமர்(ரலி) கூறினார். மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவு நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை நாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸைவிட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்’ என்று கூறினார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4492

பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4493

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் ‘குபா’வில் ‘சுப்ஹு’த் தொழுகையிலிருந்த போது, ஒருவர் வந்து, ‘சென்ற இரவு (நபி(ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பினார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4494

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் குபாவில் ‘சுப்ஹுத்’ தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன்வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4495

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமில்லை’ என்ற (திருக்குர்ஆன் 02:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயது உடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா(ரலி), ‘(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு அந்த வசனத்தில் ‘அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை’ என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த ‘முஷல்லல்’ எனும் குன்றில் உள்ள) ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) ‘குதைத்’ எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகிறோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை’ என்ற (திருக்குர்ஆன் 02:158) இந்த வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4496

ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்) கூறினார். நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், ‘ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். எனவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எனவே, இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 02:158வது) இவ்வசனத்தை அருளினான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4497

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4498

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (ம்ஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, ‘கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும்’ என்று கூறுகிறான்.

‘மன்னிப்பளித்தல்’ (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும். ‘இது உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும்’ அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)களின் மீது கடைமையாக்கப்பட்டிருந்ததை விட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகிறானோ அவனுக்கு – அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு – துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 02:178) இதை முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4499

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4500

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரி (அத்தை) ‘ருபய்யிஉ’ (பின்த் நன்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ‘ருபய்யிஉ’வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது’ என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அன்ஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்’ என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகிறான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4501

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், ‘(ஆஷுரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதை விட்டுவிடலாம்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4502

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ‘ஆஷுரா’ (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4503

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, ‘இன்று ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே’ என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், ‘ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்’ என்று சொன்னேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4504

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்கமாம், ஆஷுரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகிவிட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4505

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத்துன் தஆமு மிஸ்கீன்’ (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனத்தை ஓதி, ‘இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4506

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி), (திருக்குர்ஆன் 02:184வது வசனத்தில் ‘அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ என்பதன் மூலத்தை) ‘ஃபித்யத்து தஆமி மஸாகீன’ என்று (‘ஏழைகள்’ எனப் பன்மையாக) ஓதிக்காட்டி ‘இது, சட்டம் மாற்றப்பட்டு விட்ட வசனமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4507

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். ‘நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (‘உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.

அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4508

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அல்லாஹ், ‘(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்’ என்று (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்தை அருளினான்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4509

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். (இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) ‘இறைத்தூதர் அவர்களே!’ என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4510

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள் தாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்) தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, ‘(அதன் பொருள்) அதுவன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4511

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (ஆரம்பத்தில்) ‘வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02: 187வது வசனத்தின்) தொடர் ‘விடியலின்’ (‘மினல் ஃபஜ்ர்’) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், ‘மினல் ஃபஜ்ர்’ (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்து கொண்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4512

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4513

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, ‘மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் ‘குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘(ஆம்! இறைத்தூதர்(ஸல்) காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்க உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4514

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடம், (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு ‘ஹஜ்’ செய்கிறீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கைவிட்டுவிடுகிறீர்களே, ஏன்? அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்!’ என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஅபாவில் ஹஜ் செய்தல்’ என்றார்கள்.

அந்த மனிதர், ‘அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் ‘இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரண்டு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்தால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள்’ என்றும் (திருக்குர்ஆன் 49:09), ‘குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்’ என்றும் (திருக்குர்ஆன் 02:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுற மாட்டீர்களா?’ என்று கேட்டார். இப்னு உமர்(ரலி), ‘(நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின் படி) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆனபோது குழப்பம் ஏதும் இருக்கவில்லை’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4515

அந்த மனிதர், ‘அலீ(ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான்(ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். இப்னு உமர்(ரலி), ‘உஸ்மான்(ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள் தாம் விரும்பவில்லை. அலீ(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி(ஸல்) அவர்களின் மருமகனுமாவார்’ என்று கூறியவாறே, ‘(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கிறீர்களே இதுதான் அலீ அவர்களின் வீடாகும்’ என்று தம் கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4516

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ‘இறைவழியில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:195 வது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4517

அப்துல்லாஹ் இப்னு மஅகில்(ரஹ்) கூறினார். நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா(ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4518

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். ‘தமத்துஉ’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி(ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மத் இப்னு இஸ்மாயீல் புகாரீயாகிய நான் கூறுகிறேன்: ‘அவர் உமர்(ரலி) தாம்’ என்று சொல்லப்படுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4519

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். எனவே, ஹஜ் பருவத்தில், ‘உங்களுடைய இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது’ எனும் (திருக்குர்ஆன் 02:198 வது) வசனத்தொடர் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4520

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள். (ஹரம் – புனித எல்லையைவிட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) ‘உறுதி மிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் ‘மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4521

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது ‘தமத்துஉ’ ஹஜ் செய்கிற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் வலம்வரலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாம்விட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாள்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தலிஃபாவில் கழிக்கட்டும். பிறகு, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமின்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், லாஇலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்துதான் திரும்பிக் கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: ‘மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கருணையுள்ளவனும் ஆவான். (திருக்குர்ஆன் 02:199)
(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறியும் வரை (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4522

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலம்லும் நன்மையை அருள்வாயாக! மறு உலம்லும் நன்மையை அருள்வாயாக! மறு உலம்லும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?’ எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4523

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டை பிடிப்பவனேயாவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4524

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத்தில் (‘குஃத்திபூ’ இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப் பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள் – என்று வாசிக்காமல்) ‘குஃதிபூ’ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்’) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, ‘இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கிற அளவிற்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். ‘இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது’ (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது’) எனும் (திருக்குர்ஆன் 02:214 வது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள். பிறகு நான் உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் (குஃதிபூ என இப்னு அப்பாஸ்(ரலி)) அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4525

அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன’ என்று கூறினார்கள். மேலும், ஆயிஷா(ரலி), ‘வழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ’ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் ‘குஃத்திபூ’ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4526

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக்கொண்டேன். அவர்கள் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி ‘இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘தெரியாது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது’ என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4527

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். ‘எனவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர்(ரலி), ‘மனைவியிடம் அவளுடைய… கணவன் புணரலாம்’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4528

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4529

மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார். எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர். ஹஸன் அல்பஸரீ(ரஹ்) கூறினார். மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களின் சகோதரியை அவரின் கணவர் விவாகரத்துச் செய்து ‘இத்தா’ காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். (எனவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.) பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில்(ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்து விட்டார்கள். அப்போதுதான், ‘அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4530

அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார். நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், ‘உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை ‘ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?’ அல்லது ‘இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4531

அப்துல்லாஹ் இப்னு அபீ நஜீஹ் அல்மக்கீ(ரஹ்) அறிவித்தார். ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்து போயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்’ (எனும் 02:234 வது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:

(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த ‘இத்தா’வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம் மரண சாசனம் செய்வார்களாக, ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது.’ எனும் (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாள்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாள்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாள்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாள்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத்தான் ‘வெளியேற்றி விடலாம் ஓராண்டுக்காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்றவற்றைச்) செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது’ என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 02:240) குறிப்பிடுகிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாள்கள் எனும்) ‘இத்தா’ கால வரம்பு கணவனை இழந்த கைம் பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.

(எனவே, 02:234 வது வசனம் 02:240 வது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) கூறினார்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார். இந்த வசனம் (திருக்குர்ஆன் 02:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருப்பாள். இதையே ‘(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக்காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக’ எனும் இந்த இறைவசனத் தொடர் குறிக்கிறது.

(இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுப்படுத்தும் விதத்தில்) அதாஉ(ரஹ்) கூறினார் அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் ‘இத்தா’ இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறினான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ(ரஹ்) கூறினார்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12 வது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் சாசனம் செய்து தரவேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தன் விரும்பிய இடத்தில் ‘இத்தா’ இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது. (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.
இதையே முஜாஹித்(ரஹ்) கூறினார்கள் என்றும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அதாஉ(ரஹ்) வழியாக முஜாஹித்(ரஹ்) அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போன்றே அதாஉ அவர்கள் வழியாக இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4532

முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார். அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ்(ரலி) தொடர்பான அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்டதில்லையே’ என்று கூறினார். உடனே நான் உரத்த குரலில், ‘கூஃபா நகரத்திற்கு அரும்லுள்ள (அப்துல்லாஹ் இப்னு உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன் தான்’ என்று சொன்னேன். பிறகு நான் (அந்த அவையிலிருந்து வெறியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) ‘மாலிக் இப்னு ஆமிர்’ அல்லது ‘மாலிக் இப்னு அவ்ஃப்'(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், ‘தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி), ‘(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்நிலையில் தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம் பெற்றுள்ள ‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), ‘(வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் இப்னு ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்’ என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறினார்கள் என வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4533

அலீ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் ‘வீடுகளையும்’ அல்லது அவர்களின் ‘வயிறுகளையும்’ நெருப்பால் நிரப்புவானாக’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்களே சந்தேகத்துடன் (‘அல்லது அவர்களின் வயிறுகளையும்’ என்று) கூறினார்கள்

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4534

ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4535

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்: (முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

இதன் அறிவிப்பாளரான மாலிக்(ரஹ்) கூறினார்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக கருதுகிறேன் என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4536

அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார். நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக!’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (திருக்குர்ஆன் 02:234 வது) இறை வசனத் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன். உஸ்மான்(ரலி), இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4537

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறந்தவற்றுக்க அல்லாஹ் எப்படி உயிரூட்டிகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், ‘என் இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு’ என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்’ என்று பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4538

(அப்துல் அஸீஸ் இப்னு அப்தில் மலிக் இப்னி ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களின் சகோதரர் அபூ பக்ர் இப்னு அபீ முலைக்கா அவர்கள், உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:

உமர்(ரலி) ஒரு நாள் நபித்தோழர்களிடம், ‘நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிற திராட்சை மற்றும் பேரீச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து…’ (என்று தொடங்கும்) இந்த (திருக்குர்ஆன் 02:266 வது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, அவர்கள், ‘அல்லாஹ்வே அறிந்தவன்’ என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) கோபமடைந்து, ‘எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டிலொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்’ என்று கேட்க, இப்னு அப்பாஸ்(ரலி), ‘அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்’ என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘என்ன செயல்?’ என்று கேட்க, இப்னு அப்பாஸ், ‘ஒரு செயலுக்கு’ என்று (மீண்டும்) கூறினார்கள். உமர்(ரலி), ‘செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்து விட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4539

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், ‘அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்’ எனும் (இந்த 02:273 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4540

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அல்பகரா அத்தியாயத்தின் இறுதிவசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) வட்டி தொடர்பாக இறங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி வாசலில் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4541

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02: 275 – 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மதுவியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4542

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது அவற்றை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4543

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4544

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4545

மர்வான் அல் அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி) தாம் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆற்றல்மிக்கவன் ஆவான்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4546

மர்வான் அல்அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி)தாம் என்று எண்ணுகிறேன் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான்.’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (‘அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை’ எனும் 02:286 வது) இறைவசனம் மாற்றிவிட்டது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4547

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4548

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். ‘(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். பிறகு அபூ ஹுரைரா(ரலி), ‘நீங்கள் விரும்பினால், ‘இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)’ எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4551

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம்) தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4552

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்: இரண்டு பெண்கள் ‘ஒரு வீட்டில்’ அல்லது ‘ஓர் அறையில்’ (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள், ‘பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4553

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து ‘திஹ்யா அல் கல்பீ’ அவர்கள் கொண்டு வந்து, ‘புஸ்ரா’வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) ‘தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், ‘தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?’ என்று கேட்டதற்கு நான், ‘நான் (தான் நெருங்கிய உறவினன்)’ என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), ‘தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்’ என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்’ என்று கூறினார். நான், ‘அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்’ என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் ‘அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் ‘அவர் தம்மை ‘நபி’ என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்று சொன்னேன். ‘அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்’ என்றேன். அவர், ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்’ என்று சொன்னேன். அவர், ‘அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்று சொன்னேன். அவர், ‘அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘உண்டு’ என்று சொன்னேன். அவர், ‘அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?’ என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (ம்ணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்’ என்று சொன்னேன். அவர், ‘அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறை சொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.(பிறகு) அவர், ‘இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை ‘நபி’ என) வாதித்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்று சொன்னேன். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: ‘அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், ‘தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்’ என்று கூறியிருப்பேன்.

‘மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?’ என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் ‘அவர் தம்மை ‘நபி’ என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)hத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் ‘அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இல்லை’ என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் ‘அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?’ என்று கேட்டேன், நீர் ‘அதிகரித்தே வருகின்றனர்’ என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்). மேலும், உம்மிடம் நான் ‘அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். ‘அவர் வாக்கு மீறுகிறாரா?’ என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், ‘அவர் வாக்கு மீறுவதில்லை’ என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை.

நான் ‘இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?’ என்று உம்மிடம் கேட்டபோது நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், ‘தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்’ என நான் சொல்லியிருப்பேன்’ என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ், ‘என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னேன்.

ஹெராக்ளியஸ், ‘அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்’ என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4554

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த ‘பீருஹா’ (அல்லது ‘பைருஹா’) எனும் தோட்டம் தம் சொத்துக்களிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , அந்த தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல(சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள்.

‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ என அல்லாஹ் கூறினான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பீருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நல்லது. அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அதைத் தர்மம் செய்து, மறுமைக்குச் சேமிப்பாக்கிக் கொள்வது நல்லதுதான்.)’ என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்’ என்றார்கள். அபூ தல்ஹா(ரலி), ‘அவ்வாறே செய்கிறேன் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள். ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (‘அது அழிந்துபோய்விடும் செல்வம்தானே!’ என்பதற்கு பதிலாக) ‘அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே’ என்று (நபிகளார் கூறினார்கள் என) இடம் பெற்றுள்ளது.

யஹ்யா இப்னு யஹ்யா(ரஹ்) கூறினார்: நான் மாலிக்(ரஹ்) அவர்களிடம் ‘அது (அழிந்து) போய்விடும் செல்வம்தானே’ என்று வாசித்துக் காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4555

அனஸ்(ரலி) அறிவித்தார். எனவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களுக்கும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களுக்கும் (அபூ தல்ஹா(ரலி) தர்மமாக) வழங்கி விட்டார்கள். ஆனால், நானே (அவ்விருவரையும் விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4556

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள் ‘நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) ‘ரஜ்கி’ (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?’ என்று கேட்க, யூதர்கள், ‘(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை’ என்று பதிலளித்தனர். உடனே, (ஒதமார்க்க அறிஞராயிருந்) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், ‘பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் ‘ரஜ்கி’ தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, ‘இது ரஜ்முடைய வசனம்’ என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது. அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை பார்த்தேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4557

அபூ ஹாஸிம் சுலைமான் அல்அஷ்ஜஈ(ரஹ்) அறிவித்தார். ‘(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்ப பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர்’ எனும் (திருக்குர்ஆன் 03:110 வது வசனத்திற்கு விளக்கமளிக்கையில் ‘நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கிலிகளில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர்களாவீர்கள்’ என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4558

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘உங்களில் இரண்டு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!)’ எனும் (திருக்குர்ஆன் 03:122 வது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் விஷயத்திலேயே இறங்கியது. பனூ ஹாரிஸா மற்றும் பனூசலிமா குலத்தாரான நாங்கள்தாம் அந்த இருபிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், ‘அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்’ என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) மற்றொரு முறை அறிவிக்கும்போது, ‘இது இறங்காமலிருந்திருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4559

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தும்போது, ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹகித்’ (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கிறான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, ‘இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று (சில எதிரிகளுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான்.  இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4560

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை ‘சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹகித்’ என்று சொன்ன பின்பு, ‘இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள். அதை சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், ‘இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக’ என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4561

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான் ‘இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்)’ எனும் இந்த (திருக்குர்ஆன் 03:153 வது) இறைவசனம் குறிப்பிடுகிறது. அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4562

அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்தபோது எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண்டது. அதனால் என்னுடைய வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4563

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது ‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத்(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்’ என மக்கள் (சிலர்) கூறியபோது கூறினார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. ‘எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4564

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ (ஹஸ்பியல்லாஹ் வநிஃமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4565

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரின் செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (ம்ழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரண்டு கறுப்புப் புள்ளிகள் இருக்கும் மறுமை நாளில் அது (அவரின் கழுத்தில்) மாலையாக) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரின் முகவாய்க் கட்டையை அதாவது அவரின் இரண்டு தாடைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நானே உன்னுடைய செல்வம்; நான்தான் உன்னுடைய கருவூலம்’ என்று சொல்லும்’ எனக் கூறிவிட்டு, பிறகு, ‘அல்லாஹ் தன்னுடைய பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிடவேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கிறவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 03:180 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4566

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபதக்’ நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் இப்னு அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள் – இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. – அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலு}ல்’ இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. – அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, ‘எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.

இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலு}ல் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்’ என்றார். இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி), ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்’ என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறி ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் ‘சஅதே! அபூ ஹுபாப் – அப்துல்லாஹ் இப்னு உபை – சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்’ என்றார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்துவிட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்துவிட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்தால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்’ என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறினான்:

(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமைகாத்துத் தீமையிலிருந்து விலம் நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 03:186)

மேலும் அல்லாஹ் கூறினான்: (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாகி. ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (திருக்குர்ஆன் 02:109)

அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி(ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறையுகளில் இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலு}லும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் ‘(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த (இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்’ என்று கூறி (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை எற்றனர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4567

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் ‘தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு’ எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4568

அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார். (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம்25 தம் காவலரிடம் ‘ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, ‘தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே!’ என்று (நான் வினவியதாகக்) கேள்’ என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) ‘உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக்கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்’ என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் ‘நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது’ என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188)

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4569

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு – பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) உளு (அங்க சுத்தி) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால்(ரலி) பாங்கு சொன்னபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) ‘சுப்ஹு’ தொழுதார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4570

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் ‘நிச்சயம் (இன்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன்’ என்று சொல்லிக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீள வாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைக் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் 3 வது அத்தியாயமான) ஆலஇம்ரானிலிருந்து கடைசிப்பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்க விடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து ‘உளு’ (அங்கசுத்தி) செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போன்றே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (வலக்) கரத்தை என் தலை மீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத் திருக் (உஷார்படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் தொழுதுவிட்டு, பிறகு ‘வித்ர்’ தொழுதார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4571

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் இரண்டு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (திருக்குர்ஆன் 03:190 – 200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து ‘உளு’ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளுவை அவர்கள் செம்மையாகச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்தது போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக்காதைத் திரும்னார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ‘வித்ர்’ தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4572

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா(ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு, அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு, ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப்பத்து வசனங்களை (திருக்குர்ஆன் 03:190 – 200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து ‘உளு’ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளுவை அவர்கள் செம்மையாகச் செய்துகொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.

அவர்கள் செய்தது போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத் திருகலானார்கள்.
(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ‘வித்ர்’ தொழுதார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால்(ரலி) பாங்கு சொல்லிவிட்டுத்) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு, வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4573

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணந்தார். அவளுக்குப் போPச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் போPச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரின் உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. எனவே, அவர் விஷயத்தில் தான் ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம்’ எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் (ஹிஷாம் இப்னு யூசுஃப், அல்லது ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறுகிறார்: (இதை அறிவித்தபோது) உர்வா(ரஹ்), ‘அந்தப் பேரீச்ச மரத்திலும் அவரின் செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள்’ என்று அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4574

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம்’ எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கிற அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் – மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.

இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல் அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே, அல்லாஹ், ‘பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான்.

மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (திருக்குர்ஆன் 04:127) உயர்வுக்குரிய அல்லாஹ் ‘மேலும் யாரை நீங்கள் நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ…’ என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.

அப்பெண்கள் செல்வத்திலும் அழம்லும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் ‘நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணந்துகொள்ளலாகாது’ என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4575

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதைகளின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!’ எனும் (திருக்குர்ஆன் 04:6 வது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4576

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பாகப்பிரிவினை செய்துகொள்ளும்போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி (அனுப்பி) விடுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:8 வது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசனமாகும்; சட்டம் மாற்றப்பட்ட வசனமன்று. 5

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4577

ஜாபிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!’ என்று கேட்டேன். அப்போதுதான் ‘அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:11 வது) வசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4578

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது. அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கை நிர்ணயித்துத்தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கிலொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப்பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4579

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(hது அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக ‘இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) வசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4580

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இந்த (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘மவாலிய’ எனும் சொல்லுக்கு ‘வாரிசுகள்’ என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) ‘தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும்விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்’ எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) வசனம் அருளப்பட்டபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.

பின்னர் இப்னுஅப்பாஸ்(ரலி) கூறினார்: நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவிபுரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதாம் உள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக மரணசாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4581

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! (காண்பீர்கள்) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மேகமே இல்லாத பெளர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்’ என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்.

மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் ‘ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் ‘யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை’ என்று கூறப்படும். மேலும், ‘இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!’ என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக்கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்று கூறுவர். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை’ என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அம்லத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்)12 அப்போது ‘எதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயம் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருகின்றனரே!’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான். அதற்கு அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்’ என்று இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ கூறுவர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4582

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு ‘அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு ‘அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4583

ஆயிஷா(ரலி) கூறினார். (என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமிருந்து) தொலைந்துவிட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் உளுவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளுச் செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, உளு இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோனாகிய அல்லாஹ் – தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை – அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4584

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக’ எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ(ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4585

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) ஸ¤பைர்(ரலி) அவர்களுக்கு ‘ஹர்ரா’ எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஸ¤பைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)’ என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஸ¤பைர்(ரலி) அவர்களைப் பார்த்து), ‘ஸ¤பைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரைவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள். அந்த அன்சாரித்தோழர் தம்மைக் கோபபப்படுத்தியபோது நபி(ஸல்) அவர்கள் ஸ¤பைர்(ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஸ¤பைர்(ரலி) கூறினார்: குர்ஆனின் ‘இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்ற பின்னர் நீர் அளிக்கிற தீர்ப்புக்குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் நம்பிக்கைகொண்டவர்களாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:65 வது) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே எண்ணுகிறேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4586

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறுதியாக) நோயுற்றுவிடுகிற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு – மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்)’ என்று சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன். (இதிலிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4587

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4588

இப்னு அபீ முலைக்கா (அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறினார். இப்னுஅப்பாஸ்(ரலி), ‘எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர’ எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, ‘(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்’ என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (திருக்குர்ஆன் 04:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸிரத்’ (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, ‘(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறும்க்கொண்டன’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 04:135 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்வூ’ (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு ‘நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்’ என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்: (திருக்குர்ஆன் 04:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முராஃகம்’ எனும் சொல்லுக்கு ‘ஹிஜ்ரத் செல்லுமிடம்’ (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த காலவினைச் சொல்லான) ‘ராஃகமத்து’ எனும் சொல்லுக்கு ‘நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்’ என்று பொருள். (திருக்குர்ஆன் 04:103 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்கூத்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4589

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) 4:88 வது இறைவசனம் குறித்துக் கூறினார். (உஹுதுப் போருக்காக) நபி(ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டார்கள். இவர்களின் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபட்டு) மக்கள் இரண்டு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆம்விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்’ எனும் (திருக்குர்ஆன் 04:88 வது) இறைவசனம் அருளப்பட்டது. மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கி விடுவதைப்போல் அது தீமையை அகற்றிவிடும்’ என்று கூறினார்கள்.

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுண் ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:82 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அஃதாஊ’ எனும் சொல்லுக்குப் ‘பரப்பிவிடுவார்கள்’ என்று பொருள். ‘யஸ்தன்பித்தூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:86 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹசீப்’ எனும் சொல்லுக்குப் ‘போதுமானவன்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04: 117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஸ்’ எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். ‘மரீத்’ எனும் சொல்லுக்கு ‘(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:119 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபல்யுபத்திகுன்ன’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:122 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கீல்’ எனும் பதமும் ‘கவ்ல்’ எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 04:155 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தபஅ’ எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) ‘துபிஅ’ எனும் சொல்லுக்கு ‘முத்திரையிடப்பட்டது’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4590

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4591

இப்னு அப்பாஸ்(ரலி) 4:94 வது வசனம் குறித்துக் அறிவித்தார். ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அவரின் ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். ‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே ‘உலகப் பொருள்’ என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.

அறிவிப்பாளர் அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), (இந்த வசனத்தில் ‘சலாம்’ எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4592

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நான் மர்வான் இப்னு ஹசுமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்னு ஸாபித்(ரலி) (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மகத்தூம்(ரலி) வந்து, ‘அதல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்’ என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு, அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் ‘இடைஒறு உள்ளவர்களைத் தவிர’ எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4593

பராஉ(ரலி) அறிவித்தார். ‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) வந்து தம் ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ் ‘இடையூறு உள்ளவர்களைத் தவிர’ எனும் சொற்றொடரை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4594

பராஉ(ரலி) அறிவித்தார். ‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘இன்னாரைக் கூப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் ‘பலகையையும்’ அல்லது ‘அகலமான எழும்பையும்’ தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே!’ என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில் ‘இறைநம்பிக்கையாளர்களில் இடைஒறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்’ என்ற இறைவசனம் (திருக்குர்ஆன் 04:95 முழுமையாக) இறங்கிற்று.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4595

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் வசனம் (திருக்குர்ஆன் 04:95) பத்ருப்போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4596

முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 25 அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி ‘இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?’ என வினவுவார்கள். அதற்கு அவர்கள், ‘பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்’ என பதிலளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?’ என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

இதை அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்களிடமிருந்து ஸைத் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4597

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். ‘இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர!’ எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின் வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4598

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, ‘சமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்’ என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, ‘இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்யாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4599

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்களின் மீது தவறேதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 04:102 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது, ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது)’ என்று கூறினார்கள்.

‘(நபியே!) பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர். நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட (மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களோ அந்தப் பெண்களின் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டமும் (உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறது.)’ எனும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத் தொடர்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4600

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) இந்த வசனத்திற்கு (திருக்குர்ஆன் 04:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள். (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். போPச்ச மரம் உள்பட அவரின் செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணந்துகொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகிறவ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்துவந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போதுதான் ‘ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் – மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும்’ எனும் (திருக்குர்ஆன் 04:128 வது) வசனம் அருளப்பட்டது.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:35 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘யுகாக்’ எனும் சொல்லுக்குப் ‘பரஸ்பரப் பிணக்கு’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4601

ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி), ‘ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் – மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 04:128 வது) வசனம் குறித்துக் கூறுகையில், ‘தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் ‘என்னுடைய (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகாரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்)’ என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (திருக்குர்ஆன் 04:128) இறங்கிற்று’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4602

அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா(ரலி) வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு, ‘உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டு சோதிக்கப்)பட்டது என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) ‘நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறானே’ என்று சொல்ல, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா(ரலி) பள்ளி வாசலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எழுந்து நிற்க, அவர்களின் தோழர்கள் கலைந்து சென்றார்கள். உடனே, ஹுதைஃபா(ரலி) பொடிக் கற்களை என் மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களை விடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தினர் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான்’ என்றார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4603

பராஉ(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் ‘பராஅத்’ எனும் (9 வது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் ‘(நபியே!) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்’ எனும் (இந்த 4:176 வது) வசனமாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4606

தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அறிவித்தார். யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். உமர்(ரலி), ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள்; ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்’ எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4607

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது என்னுடைய கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அரும்லும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்களிடம் சென்று, ‘(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று முறையிட்டனர். உடனே அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னைப் பார்த்து), ‘அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தம் கரத்தால் என்னுடைய இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ உடைய (திருக்குர்ஆன் 05:6 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி), ‘அபூ பக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்(சமுதாயநலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்களின் மூலம் ஏற்பட்டுள்ளன.)’ என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளம்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4608

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் (பனூ முஸ்தலிக் போர் முடிந்தது) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அங்கே தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, என்னுடைய மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, ‘ஒரே கழுத்து மாலைக்காக தடுத்து நிறுத்திவிட்டாயே’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் மடிமீது தலைவைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)று இருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு (நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹுத் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. உளு (அங்கச் சுத்தி) செய்வதற்காக தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்கவில்லை. அப்போதுதான், ‘இறைநம்பிக்கையாளர்களே! தொழுகைக்காகச் செல்லுமூபோது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்’ என்று தொடங்கி ‘தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் ‘தயம்மும்’ செய்து கொள்ளுங்கள்’ என்று கூறும் (திருக்குர்ஆன் 05:6 வது) வசனம் அருளப்பட்டது. அப்போது உசைத் இப்னு ஹுளைர்(ரலி), ‘அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் பொழிந்துள்ளான், அபூ பக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4609

இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். மிக்தாத்(ரலி), பத்ருப் போரின்போது, ‘இறைத்தூதர் அவர்களே! பனூ இஸ்ராயீல்கள் மூஸா (அலை) அவர்களிடம் ‘நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்’ என்ற சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்ல மாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்’ என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.

இதே ஹதீஸில் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) சொன்னபோது நான் இருந்தேன்’ என்ற தொடங்குகிறது. இன்னும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4610

அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நான் (உமய்யா கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து ‘அல்கஸாமா’ எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அதுபற்றி), மக்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்கள்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, ‘அப்துல்லாஹ் இப்னு ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ அல்லது அபூ கிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘திருமணமான பின்பு விபச்சாரம் புரிந்த மனிதனையும், அல்லது உயிருக்கு பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவனையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவனையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை’ என்று சொன்னேன். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்), ‘என்னிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி) (‘அல்கஸாமா’ மற்றம் ‘உரைனா’ சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.

நான் சொன்னேன்: ‘அனஸ்(ரலி) என்னிடம் கூட (இப்படிச்) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் (‘உக்ல்’ மற்றம் ‘உரைனா’ குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், ‘இந்த பூமி (மதீனா) எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டோம்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதோ, எங்களின் (தர்மத்திற்குரிய) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்றுடன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய்நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின் மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றார்கள்.

ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனம் போர்புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா, என்ன? அப்போது அன்பஸா(ரஹ்), (வியப்புத் தெரிவிப்பது போன்று) ‘சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூயவன்’ என்று கூறினார்கள்.
நான், ‘என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இல்லை) இதை எங்களுக்கு அனஸ்(ரலி) அறிவித்தார்’ என்ற கூறிவிட்டு, ‘இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர்களையும் அல்லாஹ் உங்களிடையே வாழ வைத்திருக்கும்வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4611

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த் நள்ர்(ரலி) ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)’ என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றனர். (ருபய்யிஉவை பழி வாங்காமல் மன்னித்தார்கள்.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4612

ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ ‘(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!’ என்று கூறுகிறான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4613

ஆயிஷா(ரலி) கூறினார். ‘நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 05:89 வது ) இறைவசனம் ‘லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!’) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!’ என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகிறவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4614

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் தந்தை (அபூ பக்ர்(ரலி)) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூ பக்ர்(ரலி), ‘நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்தோ அதையே செய்வேன் என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4615

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ‘எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.’ என்று கூறிவிட்டு பிறகு, ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4616

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மது பானத்தைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பட்டபோது ஐந்து வகையான மதுபானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4617

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நீங்கள் ‘ஃபளீக்’ என்றழைக்கிற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, ‘உங்களுக்குச் செய்தி எட்டியதா?’ என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டனர். அவர், ‘மது தடை செய்யப்பட்டு விட்டது’ என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், ‘அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டி விடுங்கள்’ என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4618

ஜாபிர்(ரலி) அறிவித்தார். மக்கள் சிலர், உஹுதுப் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4619

இப்னு உமர்(ரலி) கூறினார். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உரைமேடையிலிருந்தபடி, ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத்தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4620

அனஸ்(ரலி) அறிவித்தார். (மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது:

அனஸ்(ரலி) கூறினார்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), ‘வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)’ எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), ‘இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டு விட்டது என்று அறிவித்தார்’ என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,’நீ போய், இதைக் கொட்டிவிடு!’ என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், ‘(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!’ என்று கூறினார். அப்போதுதான் ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.’ எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4621

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4622

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்.

இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 05:101)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4623

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். ‘பஹீரா’ என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால்கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். ‘சாயிபா’ என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள். ‘சாயிபா’ என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ’ தம் குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை கண்டேன். முதன் முதலாக ‘சாயிபா’ (ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்துத்) திரியவிட்டவர் அவர்தாம். ‘வஸிலா’ என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டியிடுகிற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டு வந்தனர். இரண்டு(ஈற்று)க்கு மத்தியில் ஆண்குட்டியிடாமல் ஒன்றையடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதனால் (இதனைத் ‘தொடர்ந்து வரக்கூடியது’ எனும் பொருளில்) ‘வஸீலா’ என்று அழைத்தனர். ‘ஹாம்’ என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல்கொள்ளச் செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல்கொள்ளச் செய்த பின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக்கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டார்கள்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதனை ‘ஹாமீ(தன் முதுகைப் பாதுகாத்துக் கொண்ட ஒட்டகம்) என்று பெயரிடடு அழைத்தனர்.

இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்சொன்ன விளக்கமும் ஹதீஸும் வந்துள்ளன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4624

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை கண்டேன். ‘அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ’ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4625

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), ‘மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்காளகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டுப் பிறகு ‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்’ எனும் (திருக்குர்ஆன் 21:104 வது இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, ‘அறிந்துகொள்ளுங்கள்; மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக்கத்(திலுளள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்’ என்று சொல்வேன். அதற்கு ‘இவர்கள் உங்க(ளுடைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, ‘நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!’ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள்’ என்று கூறப்படும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4626

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப் படவிருக்கிறீர்கள். சிலர் இடப் பக்கத்திலுள்ள நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் (ஈசா(அலை) அவர்கள்) சொன்னதைப் போல், ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்’ (திருக்குர்ஆன் 05:117,118) என்று சொல்வேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4627

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறினான்:) ‘நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். (பெண்களின்) கருவறைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்தமனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறேன் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 31:34) என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4628

ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ‘உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும் வைக்கவும் அதன் ஆற்றலுள்ளவன்’ என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறைவா!) உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார்கள். ‘உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ’ என்று கூறினார்கள். ‘அல்லது உங்களைப் பல்வேறு குழுககளாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்’ என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இது (முந்தைய வேதனையை விட) ‘எளிதானது’ அல்லது ‘இது சுலபமானது’ ஆகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4629

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?’ என்று கேட்டனர். அப்போது, ‘இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்’ எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4630

அபுல் ஆலியா ருஃபைஉ இப்னு மிஹ்ரான்(ரஹ்) கூறினார். உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்கு அறவித்தார்கள். ‘நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன்’ என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4631

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ‘நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிந்தவன்’ என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4632

முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸாத்’ (எனும்வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (திருக்குர்ஆன் 38:24 வது வசனத்தில் சஜ்தா உண்டு)’ என்று கூறிவிட்டு ‘நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததிகளாக) வழங்கினோம்’ என்று தொடங்கி ‘இவர்களுடைய நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்’ என்பது வரை (திருக்குர்ஆன் 06:84-90 வசனங்களை) ஓதினார்கள். பிறகு இப்னு அப்பாஸ்(ரலி), ‘தாவூத்(அலை) அவர்கள் இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர் தாம்’ என்று கூறினார்கள்.

யஸீத் இப்னு ஹாரூன்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெற்றிருப்பதாவது: முஜாஹித்(ரஹ்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள் ‘முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டவர்களில் உங்களில் நபி(ஸல்) அவர்களும் ஒருவர்தாம்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4633

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணிகளின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இது வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4634

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4635

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருபபவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4636

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாம் மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது’ எனும் இந்த (திருக்குர்ஆன் 06:158 வது) வசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4637

அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார். நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ஆம்! அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள். ‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ என்று கூறினார்கள். 2

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4638

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?’ என்று கேட்க அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், ‘மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மதை விடவுமா?’ என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்து விட்டேன்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகிறவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியாசனத்தின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது ‘தூர்சீனா’ மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்ற போது) அடைந்த மூர்ச்சைக்கு பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப் படாமல்) விட்டு விடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4639

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 5

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4640

அபுத் தர்தா(ரலி) அறிவித்தார். (ஒரு சமயம்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை கோபப்படுத்தி விட்டார்கள். அப்போது உமர்(ரலி) கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர்(ரலி) மன்னிக்காமல் அபூ பக்ர்(ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால் (தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். (அப்போது) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூ பக்ர்(ரலி) வருவதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். (பிறகு) உமர்(ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள். (நடந்த) செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்கு வாதத்தை தொடங்கி வைத்ததால் உமரை விட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) ‘மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று சொன்னேன். அப்போது நீங்கள் ‘பொய் சொல்கிறீர்’ என்று கூறினீர்கள். ஆனால், அபூ பக்ர் அவர்களோ, ‘நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘ஃகாமர’ எனும் சொல்லுக்கு ‘நன்மையில் முந்தினார்’ என்று பொருள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4641

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இஸ்ரவேலர்களிடம், ‘ஹித்ததுன்’ (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாசலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம்’ என்று கூறப்பட்டது. ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் பிட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும், (உள்ளே நுழையும் போது) ‘ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்’ (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 7

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4642

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், ‘என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’ என்று கூறினார். அதற்கு அவர், ‘உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’ என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, ‘கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’ என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக!’ (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4643

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4644

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார். மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில் 7:199) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4645

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அல்அன்ஃபால்’ அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், ‘அது பத்ருப்போர் தொடர்பாக அருளப்பெற்றது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4646

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார். நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடம் மிகவும் இழிவான விலங்குகளாவர் எனும் (திருக்குர்ஆன் 08:22 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில் ‘பனூ அப்தித்தார் குலத்தைச் சேர்ந்த சிலர் தாம் அவர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4647

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். நான் (‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், ‘இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்’ என்று கூறவில்லையா?’ எனக் கேட்டார்கள். பிறகு, ‘நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் தாம்’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸை நபித்தோழர் அபூ ஸயீத் ‘பின் முஅல்லா(ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று வேறு அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4648

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்’ எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4649

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல், ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! அறியமாட்டார்கள்’ எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4650

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் என்னிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின் வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். ‘இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விரு வருக்குமிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதி வான்களை நேசிக்கிறான்’ (திருக்குர்ஆன் 49:09). ‘இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?’ என்றும் கேட்டார். நான், ‘என் சகோதரர் மகனே! இந்த (திருக்குர்ஆன் 49:9 வது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்குக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, ‘ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலைசெய்தால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்ற (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்திற்கு சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பானதாயிருக்கும்’ என்று கூறினேன். அந்த மனிதர்’ ‘(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்’ (திருக்குர்ஆன் 08:39) என்று அல்லாஹ் கூறுகிறானே!’ என்று கேட்டார். நான், ‘(இதை) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்தி விட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்று விடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை’ என்று பதிலளித்தேன். தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், ‘அலீ இப்னு அபீ தாலிப்) மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான், ‘அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான்(ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்து விட்டான். ஆனால், அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ(ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனுமாவார்கள்’ என்று கூறினேன்.

(இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்:) இப்னு உமர்(ரலி) ‘இதோ நீங்கள் காண்கிற இந்த இடத்தில் உள்ளது தான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்’- என்று தம் கரத்தால் சைகை செய்தவாறு – கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4651

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். எங்களிடம் இப்னு உமர்(ரலி) புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), ‘நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, இப்னு உமர்(ரலி), ‘குழப்பம்’ (ஃபித்னா) என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? முஹம்மத்(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் போரிட்டு வந்தார்கள். இணைவைப்பவர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்’ என்று பதிலளித்துவிட்டு, ‘அவர்களின் போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களின் போரைப் போன்று இருந்ததில்லை’ என்றும் கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4652

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ‘உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது. இதையே ‘இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது’ என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) பலமுறை தெரிவித்தார்கள். அதன் பிறகு ‘எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு, தற்போது (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். எனவே, உங்களில் (பொறுமையும்) சம்ப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேர்களை வெற்றிகொள்வார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வெற்றி கொள்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 08:66 வது) இறைவசனம் அருளப்பெற்றது. (அதன்மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.

ஒரு முறை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) இவ்வசனம் (திருக்குர்ஆன் 08:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஈயுமான (அப்துல்லாஹ்) இப்னு ஷப்ருமா(ரஹ்), ‘நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும் கூட நான் இது போன்றே கருதுகிறேன் என்று கூறினார்’ என்றும் அதிகப்படியாக அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4653

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) வசனம் அருளப்பெற்று, (முஸ்லிம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டபோது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. எனவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது. அதில் அல்லாஹ், ‘எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்போது (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். எனவே, உங்களில் (நிலை குலையாத) பொறுமைசாலிகள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றிகொள்வார்கள்’ எனும் வசனம் (திருக்குர்ஆன் 08:66) அருளப்பெற்றது. (எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்ட போதே அதே அளவுக்கு சகிப்புத்தன்மையையும் அவன் குறைத்து விட்டான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4654

பராஉ(ரலி) அவர்களிடம் அறிவித்தார் ‘(நபியே!) உங்களிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அல்லாஹ் அத்தகையவர்கள் குறித்து உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறான் என்று நீங்கள் கூறுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:17 வது) இறை வசனம் தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4655

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (அபூ பக்ர்(ரலி) தலைமையில் ‘ஹஜ்ஜத்துல் வதா’விற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூ பக்ர்(ரலி) ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய(வர)க் கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக்கூடாது’ என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பி வைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பி வைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களை அனுப்பி, (இணை வைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்: எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே ‘(இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக் கூடாது என்றும் அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4656

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) (தம் தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது ‘துல்ஹஜ் மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய நாளில் மினாவில் ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக்கூடாது’ என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பி வைத்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களை அனுப்பி, (இணை வைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள். எனவே, எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4657

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு அபூ பக்ர்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூ பக்ர்(ரலி) ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது’ என்றும், ‘நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக்கூடாது’ என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பி வைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹுமைத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில் ‘(துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்’ என்று சொல்லிவந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4658

ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், ‘இந்த இறைவசனத்தில் (திருக்குர்ஆன் 09:12) குறிபிட்டப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர் தரமான பொருள்களைத் திருடிச் செல்கிற இவர்களின் நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லையே’ என்று கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி), ‘அவர்கள் பாவிகளே! (இறைமறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவிற்கு முதியவரென்றால்) குளிர்ந்த நீரைப் பருகினால் கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4659

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களின் கருவூலம் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4660

ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார். நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் அபூ தர்(ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், ‘இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஷாம் நாட்டில் இருந்தோம். அப்போது நான், ‘தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்து, அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக’ எனும் (திருக்குர்ஆன் 09:34 வது) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா(ரலி), இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்களின் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது’ என்று கூறினார்கள். நான், ‘இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிச்சை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்’ என பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4661

காலித் இப்னு அஸ்லம்(ரஹ்) கூறினார். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்) போது அவர்கள், (திருக்குர்ஆன் 03:95 வது இறைவசனத்தைப் பற்றி) இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப்படுத்தக் கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4662

ஹஜ்ஜத்துல் வதாவில்’ உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பி விட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4663

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி(ஸல்) அவர்களுடன் (‘ஸவ்ர்’ எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவானே!’ என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4664

இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் இப்னு ஸ¤பைர்(ரலி) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,) ‘இப்னு ஸ¤பைரின் தந்தை ஸ¤பைர்(ரலி) அவர்களும்,) அவர்களின் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களும், அவர்களின் பாட்டி ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸ¤பைர்(ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக்கூடாது?)’ என்று கேட்டேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4665

இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். இப்னு ஸ¤பைர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் காலையில் சென்று, ‘நீங்கள் இப்னு ஸ¤பைர்(ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸ¤பைரையும் பனூ உமய்யாக்களையும் தாம் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கிறவர்களாக அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.’ என்று கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: மக்கள் (என்னிடம்) ‘இப்னு ஸ¤பைர் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவரின் தந்தையோ நபி(ஸல்) அவர்களின் பிரத்தியேக உதவியாளராவார் – ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவரின் தாயாரோ ‘கச்சுடையாள்’ (என்று நபி(ஸல்) அவர்களால் பட்டப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார். – அஸ்மா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவர்களின் சிறிய தாயாரோ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையாவார். – ஆயிஷா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவர்களின் துணைவியராவார். – கதீஜா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் அத்தையோ அவரின் பாட்டியாவார். -ஸஃபிய்யா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி தவறாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தினால் உறவாடுகிறார்கள். எனக்கு அவர்கள் ஆட்சியாளர்களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைத் கைவிட்டு, இப்னு ஸ¤பைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதி பூண்டேன். ஆனால்) அவரோ ‘துவைத்’களுக்கும், ‘உசாமா’க்களுக்கும், ‘ஹுமைதா’க்களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்து விட்டார். (இப்னு ஸ¤பைரின் குலத்தினரான) ‘பனூ அஸத்’ குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகிறார்கள். இப்னு அபில் ஆஸ் – அப்துல் மலிக் இப்னு மர்வான் – அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ – இப்னு ஸ¤பைரோ – பின்னடைவுக்கு ஆளாகி விட்டார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4666

இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேரவேண்டுமென்று) இப்னு ஸ¤பைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? ‘நான் இப்னு ஸ¤பைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதாக வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவிற்கு) நான் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்காவோ உமர்(ரலி) அவர்களுக்காகவோ வாதாடியதில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸ¤பைரைவிட அனைத்து நன்மைகளுக்கும் தகுதிவாய்ந்தோராய் இருந்தனர்’ என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன்.
‘இப்னு ஸ¤பைர் அவர்கள், நபி(ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூ பக்ர்(ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா(ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸ¤பைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார்’ என்று (மக்களிடம்) கூறினேன். ஆனால், இப்னு ஸ¤பைரோ, தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு என்னைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

‘மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதனை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தன் நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், (பனூ உமய்யா) என் மீது ஆட்சி செலுத்துவதே மற்றவர்கள் (பனூ அஸத்) என் மீது ஆட்சி செலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்’ என்று நான் எண்ணிக்கொண்டேன்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4667

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், ‘இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்’ என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் ‘நீங்கள் நீதி செய்யவில்லை’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்று விடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4668

அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்(ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், ‘(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்’ என்று (குறை) கூறினார்கள். அப்போதுதான் ‘(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு’ எனும் (திருக்குர்ஆன் 09:79 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4669

அபூ வாயில் ஷகீக் இப்னு சலாமா(ரஹ்) அறிவித்தார். அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) ‘தர்மம் செய்யும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரண்டு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவதற்குக் கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார் ஃ திர்ஹம்) உள்ளது’ என்று – தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று – கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4670

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி(ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ்(ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர்(ரலி) எழுந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்’ என்று கூறிவிட்டு, ‘(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்’ என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘இவர் நயவஞ்சகராயிற்றே!’ என்று கூறினார்கள். இருந்தும் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4671

உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்தபோது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!’ என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, ‘ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே!’ என்று கூறினார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், ‘இவருக்காகப் பாவமன்னின்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.) நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவருமாயின் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் ‘பராஅத்’ (9 வது) அத்தியாயத்திலிருந்து ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 09:84, 85ஆகிய) இரண்டு வசனங்கள் அருளப்பெற்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4672

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் இப்னு உபையை அதில் கஃபனிடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) நபி(ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, ‘நயவஞ்சகராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம். அல்லது கோரமலும் இருக்கலாம் என்று) ‘எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான்’ அல்லது ‘அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்’ என்று கூறி, ‘(நபியே!) நீங்கள் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமல் இருங்கள். (இரண்டும் ஒன்றுதான். எனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்’ எனும் (திருக்குர்ஆன் 09:80 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, ‘நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ் ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்கவேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4673

அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) ‘தபூக்’ போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கி விட்டது குறித்துக் கூறியதை கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன். ‘நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ள மாட்டான்’ எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4674

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: இன்றிரவு எங்களிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார்கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர்கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்திலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது. அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், ‘நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள்’ என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பி வந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களை விட்டுச் சென்று விட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறி விட்டிருந்தனர். (என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம் ‘இதுதான் ‘அத்ன்’ எனும் சொர்க்கம். இதுதான் உங்கள் தங்குமிடம்’ என்று கூறிவிட்டு பிறகு, ‘பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்து விட்டவர்கள். அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான்’ என்று (விளக்கம்) கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4675

முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் இருக்க, நபி(ஸல்) அவர்கள் வந்து, ‘என் பெரிய தந்தையே! ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன்’ என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு உமய்யாவும், ‘அபூ தாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘(பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்கள். அப்போதுதான், ‘இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் – அவர்கள் நெருங்கிய உறவினர்களாகிய கூட – அவர்களுக்காபப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’ எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) இறைவசனம் அருளப்பட்டது. 21

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4676

அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி கஅப்(ரஹ்) அறிவித்தார். (என் பாட்டனார்) கஅப் இப்னு மாலிக்(ரலி) (அந்திமக் காலத்தில்) கண் பார்வையற்றிருந்தபோது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) தெரிவித்தார். (என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தம் செய்தியை விவரித்தபோது ‘எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தோ அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டான்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை செவியுற்றேன். கஅப்(ரலி) தம் பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், (இறைத்தூதர் அவர்களே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (என்னுடைய) உரிமையைவிட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4677

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) அறிவித்தார். என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார். ‘அல்உஸ்ரா’ (எனும் தபூக்) போர், பத்ருப்போர் ஆகிய இரண்டு போர்களைத் தவிர, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த எந்த அறப்போரிலும் ஒருபோதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக்போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி(ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை. எனவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரமும் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி(ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தாமல் இருந்துவிடுவார்களோ! அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்தால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்திலிருந்து ஐம்பது நாள்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முஸலமா(ரலி) என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘உம்முஸலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்துவிடுவார்கள்’ என்றார்கள்.
ஆக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது. குறித்து (மக்களுக்கு) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாம்ப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப் போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறினான். (நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப் போக்குக் கூறுகின்றனர். (எனவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப் போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்க அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (திருக்குர்ஆன் 09:94)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4678

அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி கஅப்(ரஹ்) அறிவித்தார். (என் பாட்டனார்) கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) கூறினார்கள். (என் தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்துவிட்ட செய்தியை அறிவித்தபோது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.

‘நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.’

‘மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.’ (திருக்குர்ஆன் 09:117-119)

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4679

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) – அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார். யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்’ என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) ‘நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போPச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) ‘உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்hர். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.’ (திருக்குர்ஆன் 09:128 , 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், ‘(அவ்விரு வசனங்கள்) ‘குஸைமா'(ரலி) அல்லது ‘அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன’ என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4680

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் ‘ஆஷுரா’ (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்குக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், ‘இது மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தம்தோழர்களிடம், ‘(யூதர்களான) இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4681

முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை ‘அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸ¤தூருஹும்’ என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் ‘மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறப்புறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறப்புறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4682

முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸ¤தூருஹும்’ என்று இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், ‘அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள ‘தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்’ என்பதன் பொருள் என்ன?’ என்று கேட்டேன். அவர்கள், ‘சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறப்புறுப்பு வெளியே தெரிந்து விடுகிறதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4683

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை (பிரபல ஓதலின் படி) ‘அலா இன்னஹும் யஸ்னூன ஸ¤தூரஹும்’ என்றே ஓதினார்கள்.

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களல்லாத மற்ற சிலர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4684

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன்’ என்று சொன்னான். மேலும் ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டமு எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிட வில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையுளம் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4685

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அறிவித்தார். ‘(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர்(ரலி) (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு,அபூ அப்திர்ரஹ்மானே!’ அல்லது ‘இப்னு உமரே!’ (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி (நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.’ அல்லது ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.’ அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்து விடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். அவரிடம் இறைவன்) ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா’ என்(று கேட்)பான். அவர், ‘(ஆம்) அறிவேன். என் இறைவா! என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்.’ என்று கூறுவான். பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். ‘மற்றவர்கள்’ அல்லது ‘இறைமறுப்பாளர்கள்’ சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, ‘இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்’ என்று அறிவிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4686

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்’ என்று கூறிவிட்டு, பிறகு, ‘மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 19:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4687

இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டு விட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4688

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4689

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் ‘நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.

இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4690

இப்னு யுஹாப் அஸ்ஸ¤ஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஆயிஷா குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா இப்னு ஸ¤பைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) ‘நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு’ என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று). நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்’ (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ‘இந்த அவதூற்றைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்…’ என்று (தொடங்கும் 24:11 முதல்வரையுள்ள) பத்துவசனங்களை அருளினான்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4691

ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மூ ரூமான்(ரலி) கூறினார். நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘(அவதூறைப் பற்றிப்) பேசப்பட்டு வரும் பேச்சின் காரணத்தினால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!’ என்று கூறினார்கள். நான் ‘ஆம்! (அப்படித்தான்)’ என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப்(அலை) அவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாவார். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கி விட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும்’ (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4692

அபூ வாளில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார். (திருக்குர்ஆன் 12:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காலத் ஹைத்த லக்க’ எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 12:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘மஸ்வாஹு’ எனும் சொல்லுக்கு ‘இவரின் அந்தஸ்து’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஃபயா’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் இருவரும் கண்டனர்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்ஃபவ் ஆபா அஹும்’ என்பதற்கு ‘அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்’ என்று பொருள்.

இப்னு மஸ்ஊத்(ரலி), (திருக்குர்ஆன் 37:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘பல்அஜிப்த்த வ யஸ்கரூன்’ என்பதை) ‘பல் அஜீப்த்து வ யஸ்கரூன்’ (நான் ஆச்சரியப்டுகிறேன்; அவர்களே பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடமிருந்து குறையுயர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி(ஸல்) அவர்கள், கிஇறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடு’ என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்து விட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைத்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகிறான்: இனி ஒரு நாளை எதிர்ப்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டு வரும்’ (திருக்குர்ஆன் 44:10). மேலும், அல்லாஹ் கூறினான்: நாம் சற்று வேதனையை அகற்றி விடுகிறோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே மீள்கிறீர்கள் (திருக்குர்ஆன் 44:15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களை விட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்பட போவதில்லை) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்த புகையும் வந்து விட்டது; பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்) ‘லூத்’ (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4695

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது’ என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110) இவ்வசனத்தின் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குஃத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குஃதிபூ’ (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன். ‘குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றே வாசிக்க வேண்டுமென ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.

உடனே, ‘தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேம்க்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், ‘ழன்னூ – நபிமார்கள் சந்தேகித்தார்கள்’ என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகிறவாறு எப்படிப்பொருள் கொள்ளமுடியும்?)’ என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா(ரலி), ‘ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், ‘ழன்னூ’ என்பதற்கு ‘நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ளவேண்டும்; ‘சந்தேகித்தார்கள்’ என்று பொருள் கொள்ளக்கூடாது)’ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அவர்களிடம் நான், ‘ ‘கத்குஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்ற நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை’ என்றார்கள். உடனே நான், ‘இந்த வசனம் (கூறும் பொருள்) தான் என்ன?’ என்று கேட்டேன். ஆயிஷா(ரலி), ‘இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர் தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன்பிறகு (தாம் ஏற்ற மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறை உதவியும் தள்ளிப்போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தினரில் தம் செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டார்கள். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நம்முடைய செய்தியைப் பொய்யென்று, கருதுகிறார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது’ (என்பதே அந்த வசனத்தின் பொருள்) என பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4696

உர்வா(ரஹ்) அறிவித்தார். நான், (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) ‘அது அழுத்தல் குறி இல்லாமல் ‘குஃதிபூ’ என்றிருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்’ என்று மேற்கண்டபடி கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4697

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன றடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வருமென்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கம் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4698

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்’ அல்லது ‘(அவரைப்) போன்றிருக்கும்’ ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி.. இப்படி.. இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)’ என்று கூறினார்கள். அப்போது என் மனத்தில் ‘இது பேரீச்ச மரம்தான்’ என்று தோன்றியது. அபூ பக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை கண்டேன். எனவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தாமே) ‘அது பேரீச்ச மரம்’ என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர்(ரலி) அவர்களிடம், ‘என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்ச மரம் தான் என்று தோன்றியது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை’ என்று பதிலளித்தேன். உமர்(ரலி), ‘நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4699

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்’ என்று உறுதிமொழி கூறுவார். இதுதூன் ‘(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்’ எனும் (திருக்குர்ஆன் 14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4700

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்கால் மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?’ எனும் (திருக்குர்ஆன் 14:28 வது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்து இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.