தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..

“எவர்கள் விசுவாசம் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தை (ஷிர்க்கை)யும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82)

மேற்கண்ட வசனம் அருளப்பட்ட போது ஸஹாபாக்களின் நிலைபற்றி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘ஸஹாபாக்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! எங்களில் எவர்தான் அநியாயம் செய்யாதவர்கள் இருப்பார்கள் என்று வினவினார்கள். அப்பொழுது நபியவர்கள் இதன் அர்த்தம் நீங்கள் கருதுவதன்று. இணைவைத்தலையே இது குறிக்கின்றது என்று கூறிவிட்டு, “லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனை நோக்கி, எனதருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காதே! நிச்சயமாக ஷிர்க் மாபெரும் அக்கிரமமாகும்” (31:13) என்று செய்த உபதேசத்தை (குர்ஆனில்) நீங்கள் செவி தாழ்த்தவில்லையா? என்று கேட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட வசனம் ஷிர்க்கில் தமது ஈமானைக் கலந்து கொள்ளாமல் அதனைவிட்டுத் தூர விலகக்கூடிய மூமின்களுக்கு நன்மாராயம் கூறுகின்றது. மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து இவர்களுக்குப் பூரண பாதுகாப்புண்டு; இவர்கள் தான் இவ்வுலகில் நேரான வழியில் இருப்போராவர்.

‘ஈமான் அறுபதுக்கும், எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும்; அவற்றில் மிகவரிசை மிக்கது, லாஇலாஹ இல்லல்லாஹ் என்று மொழிவதாகும்; மிகத் தாழ்ந்தது, பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக்கூடியதை நீக்குவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஹையாத் அவர்கள் ‘தலீலுல் முஸ்லிம் பில்-இஃதிகாத் வத்-தத்ஹீர்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘தௌஹீத் என்பது நற்பாக்கியத்தை ஏற்படுத்தி, பாவங்களை அகற்றக் காரணமாய் அமைகின்றது. மனித சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதாலும் கவனயீனத்தினாலும் மனிதன் சில வேளைகளில் கால் சறுகி, அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாக மாறி விடுகின்றான். அவன் ஷிர்க்கென்னும் அழுக்கிலிருந்து நீங்கி, பரிசுத்தமான தௌஹீதுடையவர்களில் இருப்பானென்றால், அவனுடைய தௌஹீத் அல்லாஹ்வுக்காகவே இருக்கும்.

லாஇலாஹ இல்லல்லாஹ்வை அவன் தூய உள்ளத்துடன் மொழிவதானது, நற்பாக்கியத்தியதிலே அவனை ஓர் உயர்ந்த நிலைக்கு அது ஏற்படுத்தி, அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்து, தீமைகள் அழிக்கப்பட இடமுண்டாகிறது. பின்வரும் ஹதீஸ் இதற்குப் பொருத்தமாக அமைவதைக் காணலாம்.

‘எவனொருவன், அல்லாஹ்வைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும், அவனுடைய ரஸூலுமாவார்கள் என்றும், ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வுடைய அடியாரும், அவனுடைய ரஸூலும், மர்யம் (அலை) அவர்கள் பால் ‘ஆகு’ என்று சொன்ன சொல்லும், அவனிடமிருந்துள்ள ரூஹூ (ஆவியு) மாவார்கள் என்றும் சான்று கூறி உரைக்கிறானோ அவனை அவன் செய்திருந்த செயலுக்குத் தக்கவாறு அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் அமைந்துள்ள ஷஹாதாக்கள் அனைத்தைக் கொண்டும், ‘ஷஹாதா’ உரைக்கக்கூடிய முஸ்லிமுக்கு, ‘தாருன்நஈம்’ (அருட்பாக்கியம் நிறைந்த வீடு) என்னும் சுவர்க்கம் வாஜிபாகின்றது. பின்வரும் ஹதீஸுல் குதுஸியில் அல்லாஹ் சொல்லுகின்றவாறு அவனுடைய வணக்க வழிபாடுகளில் சில குறைகள் பிழைகள் இருப்பினும் கூட அவன்மீது அது குற்றமாகக் காணப்பட மாட்டாது.

‘மனிதனே! நீ எனக்கு எதனையும் இணையாக்காத நிலையில் பூமியின் நிறையளவு பாவத்துடன் (மறுமையில்) என்னைச் சந்தித்தாலும், நான் அதே அளவு மன்னிப்புடன் உன்னிடம் வருவேன்’ ஆதாரம்: திர்மிதி (ஹஸன்)

மேற்காட்டிய ஹதீஸின் அர்த்தம் யாதெனில், பூமி நிறைந்து விடுமளவு பாவங்கள் செய்த நிலையில் நீ என்னிடம் வந்தாலும் தௌஹீதுடைய நிலையில் நீ மௌத்தாகியிருந்தால், உனது பாவங்கள் அனைத்தையும் நான் மன்னிப்பேன் என்பதாகும்.

‘அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காமல் (மறுமையில்) அவனைச் சந்திக்கின்றவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்; அவனுக்கு எதனையும் இணையாக்கினவனாக அவனைச் சந்திக்கின்றவன் நரகம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் தௌஹீதுடைய சிறப்புக்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுடைய நற்பாக்கியத்துக்கு, இது மிக மேலானதோர் அமலாக (செயலாக)வும், அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதற்கும் குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கும் மாபெரியதொரு வஸீலாவாக (வழியாக)வும் இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.