கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….

1411. நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே” என்று கூறினார்கள்.

புஹாரி :5740 அபூஹூரைரா (ரலி).

1412. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமை ஊட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்டார். அத்தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்ல, முதலாமவர் ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்று கேட்டார். தோழர், ‘லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)” என்று பதிலளித்தார். அவர், ‘எதில் வைத்திருக்கிறான்?’ என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே இருக்கிறது?’ என்று கேட்க, மற்றவர், ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது. அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)” என்று கூறினார்கள்.

புஹாரி : 5763 ஆயிஷா (ரலி.)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , . Bookmark the permalink.