சகுனம் இல்லை நற்குறி உண்டு.

1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on சகுனம் இல்லை நற்குறி உண்டு.

தொற்று நோய் சகுனம் பற்றி….

1435. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ ஸஃபர்’ தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

புஹாரி : 5717 அபூஹூரைரா (ரலி).

1436. வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள். என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5774 அபூ ஹுரைரா (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on தொற்று நோய் சகுனம் பற்றி….

பிளேக் எனும் கொள்ளை நோய் பற்றி….

1433. (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3473 உஸாமா பின் ஜைது (ரலி).

1434. உமர் இப்னு கத்தாப் (ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) ‘ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாகமுஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், ‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை” என்று கூறினார்கள். வேறு சிலர், ‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி), ‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.அப்போதும் உமர்(ரலி), ‘நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), ‘மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்” என்றனர். எனவே, உமர் (ரலி) மக்களிடையே ‘நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), ‘அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று கேட்க, உமர் (ரலி), ‘அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல கேட்டேன்” என்று கூறினார்கள்.உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

புஹாரி : 5729 இப்னுஅப்பாஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பிளேக் எனும் கொள்ளை நோய் பற்றி….

தேன் ஒரு நோய் நிவாரணி.

1432. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

புஹாரி : 5684 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on தேன் ஒரு நோய் நிவாரணி.

மனதுக்கு ஆறுதல் தரும் தல்பீனா.

1431. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் பாயசம்)தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு ‘ஸரீத்’ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் ‘தல்பீனா’ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா (ரலி) ‘இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், ‘தல்பீனா’ (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று சொல்வார்கள்.

புஹாரி :5417 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மனதுக்கு ஆறுதல் தரும் தல்பீனா.

கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

1430. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாவைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள்.

புஹாரி : 5688 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

இந்தியக் கோஷ்டக் குச்சி நோய் நிவாரணி.

1429. நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5692 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இந்தியக் கோஷ்டக் குச்சி நோய் நிவாரணி.

ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்….

1428. ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை” .

புஹாரி : 223 உம்மு கைஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்….

நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே

1427. நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, ‘என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்” என்பது போல் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, ‘என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்,” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘(ஆம்! தடுத்தீர்கள்) நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் இதை வெறுத்து, ‘வேண்டாம்’ என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)” என்று கூறினோம். அவர்கள், ‘நான் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்படவேண்டும்” என்று கூறிவிட்டு, ‘ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 4458 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே

இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.

1421. உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5683 ஜாபிர் (ரலி).

1422. ”நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!”

புஹாரி : 2278 இப்னு அப்பாஸ் (ரலி).

1423. ”நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!”

புஹாரி : 2280 அனஸ் (ரலி).

1424. காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3264 இப்னு உமர் (ரலி) .

1425. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்” என்றும் கூறினார்கள்.

புஹாரி :5724 ஃபாத்திமா பின்த் அல் முன்திர் (ரலி).

1426. காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.