அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)

நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும்.

இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.

இஸ்லாம், நோன்பு என்ற இந்த மாண்புமிக்க கடமையை ஏற்படுத்தியதன் மூலம் ஓர் ஒப்பற்ற நல்வாழ்வுத் திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. நோன்பின் ஆன்மீகப் பொருள் விளக்கம் பின்வருமாறு:

1. நோன்பு, அன்பு என்ற அற்புதத் தத்துவத்தை மனிதனுக்கு கற்றுத் தருகின்றது. ஏனெனில், ஒரு மனிதன் நோன்பினை நோற்கின்றான் என்றால், அது அவன் இறைவன்பால் கொண்ட உண்மையான அன்பினால்தான். இறைவனை உண்மையாக நேசிக்கின்றவன் உண்மையான அன்பு என்னவென்பதை உணர்ந்தவனேயாவான்.

2. நோன்பு மனிதனிடம் நன்னம்பிக்கையை வளர்க்கின்றது. நோன்பு நோற்பவன் வாழ்வை நம்பிக்கையுடன் நடத்துகிறான். நோன்பு வாழ்க்கையில் மனிதனுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் மனிதன் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே நோன்பினை நோற்கிறான். அவன் அதன் மூலம் இறைவனின் கருணையை நாடுகின்றான்.

3. ஆழ்ந்த பக்தி எனும் உண்மையான நற்பண்பையும் நோன்பு ஏற்படுத்துகின்றது. அது நேர்மையான தியாகம், இறை நெருக்கம் என்ற உன்னத நிலைகளை ஏற்படுத்தித் தருகின்றது.  ஏனெனில் ஒருவன் நோன்பிருக்கிறான் என்றால் அவன் இறைவனுக்காகவே உலகப் பொருட்களை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் துறந்திருக்கின்றான். அவன் இறைவனுக்காக மட்டுமே அவ்வாறு செய்கின்றான்.

4. மனிதனிடத்தில் பண்பட்டதொரு மனசாட்சியை நோன்பு உருவாக்குகின்றது. நோன்பை நோற்பவர் தன்னை யாரும் கண்காணித்திடாத போதும், நோன்பை கண்ணெனக் காத்து வருகிறார். மறைவானதொரு இடத்தில் வைத்து அவர் எதையேனும் சாப்பிட்டாலோ அல்லது பருகினாலோ கண்டு கொள்பவர் எவருமில்லை. இருந்து அவர் நோன்பை காத்து வரக்காரணம் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற நம்பிக்கையே முழு முதற்காரணம்.

நோன்பினை நோற்றுத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துபவர் எவருமில்லை. தனிமையிலும் வெளியிலும் அவர் நோன்பை காத்திடுவதின் காரணம் இறைவனின் திருப்பொருத்தம் தனக்குக் கிடைக்கும் என்பதே. இதன் மூலம் அவர் தனது மனசாட்சியை திருப்திப் படுத்துகின்றார். நல்ல மனசாட்சியை வளர்த்திட இதுவே சிறந்த வழி.

5. மனிதனுக்கு பொறுமையை கற்றுத் தருகின்றது நோன்பு. சுயநலமற்ற உணர்வு மனிதனிடத்தில் வளர நோன்பு வகைச் செய்கின்றது. ஏனெனில் நோன்பினை நோற்றிடுபவர் பசியின் வேதனையை உணருகிறார். இருந்தும் அதனைப் பொறுமையோடு சகித்துக் கொள்கிறார். இவ்வாறு பட்டினி இருப்பது தற்காலிகமானதுதான். இருந்தாலும் இதன் வழி அவர் வறியவர்களின் வாட்டத்தை, பஞ்சையர்களின் பசியை நன்றாக உணர்ந்து விடுகிறார். ஒரு நாள் பசி, வாழ்நாள் முழுவதும் வாடுபவர்களின் வறுமையை அவருக்கு உணர்த்துகின்றது. இத்தகைய அனுபவத்தைப் பெறுபவர் சுயநலமற்ற வகையில் வறியவர்களுக்கு வாரி வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்கிறார். இதில் அவர் ஏனையவர்களை விட முன்வரிசையில் நிற்கிறார்.

6. மனக்கட்டுப்பாடு எனும் நற்பண்பை கற்றுத் தருகின்றது நோன்பு. தனது மன ஆசைகளையும், உடல் தாபங்களையும் அடக்கிக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே நோன்பு நோற்கிறார்கள். நிச்சயமாக இவர்கள், நற்குணம், நன்னடத்தை, மனக்கட்டுப்பாடு, உளத்திண்மை இவற்றைப் பெறுவார்கள், பெற்றிருப்பார்கள்.

7. மனிதன் சிந்திப்பதற்கான மனத்தெளிவை ஏற்படுத்துகின்றது நோன்பு. உற்சாகத்தோடும், சுறுசுறுப்போடும் இயங்கும் வகையில் உடலை மாற்றுகின்றது நோன்பு. உணவுக் கட்டுப்பாட்டினால் இன்னும் பல நன்மைகள் உண்டு. மருத்துவ உரைகளும், உயிரியல் விதிகளும், அறிவார்ந்த அனுபவங்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன – நோன்பின் மாண்புகளை விளக்குகின்றன.

8. நோன்பு ஒரு சிறந்த குடும்ப வரவு செலவு திட்டத்தை அமைப்பதற்கும், சீரிய சேமிப்பிற்கும் வழிகாட்டுகிறது.

9. வருவாயில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப மனிதன் வாழ்ந்திடத் தேவையான பயிற்சியாக அமைகின்றது நோன்பு. அதுபோலவே சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதன் தனது உணவுப் பழக்கங்களை வளைத்துக் கொள்ள உதவுகின்றது நோன்பு. நோன்பிருக்கும் காலங்களில் மனிதனின் அன்றாட வாழ்க்கை முறைகள் முற்றும் மாறி விடுகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தனது உணவு பழக்கங்களையும் ஏனைய நடைமுறைகளையும் மாற்றிக் கொள்ள மனிதன் இயல்பாகவே முயற்சிக்கின்றான். காலப்போக்கில் இது, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி வாழும் திறனை மனிதனுக்கு அளிக்கின்றது. வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் ஏற்படும் வாட்டத்தை சகித்துக் கொள்ளவும், வருவாயில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்திடவும் மனிதன் பயிற்சி பெறுகின்றான். இந்த வகையில் அவன் தனக்கென ஒரு சுய ஆற்றலைப் பெற்றிடுகின்றான். புதிய சூழ்நிலைகளுக்கேற்ப வாழும் துணிவையும், துணிச்சலையும் விரும்புபவர்களும் வரவேற்பவர்களும் நோன்பின் இந்நற்பண்புகளை எளிதில் ஏற்றுக் கொள்வர்.

10. நோன்பு மனிதனுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆரோக்கியமான வாழ்வுமுறை ஆகியவற்றை அளிக்கின்றது. புனித ரமளான் மாதத்தில் தொடர்ந்து ஒழுங்காக நோன்பு நோற்று வருபவர், ஒவ்வொரு ஆண்டிலும் நோன்பை நிறைவேற்றி வருபவர், தன்னை ஓர் உயர்ந்த கட்டுப்பாட்டு முறைக்கு உட்படுத்திக் கொள்கிறார். அதுபோலவே தன்னுடைய வயிற்றுக்கும், ஜீரண உறுப்புகளுக்கும் கனமான வேலையிலிருந்து ஓய்வு கொடுப்பதால் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். இவ்வாறு உடலைப் பேணுவதன் மூலம் அவர் உடல் ஆரோக்கியமடைகின்றது. உடலின் ஆரோக்கியம், உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. அவருடைய ஆன்மா தூய்மையுடனும் அமைதியுடனும் இலங்குகின்றது.

11. நோன்பு மனிதனுக்கு சமூக உணர்வையும், ஒற்றுமை உணர்வையும், சகோதரத்துவ உணர்வையும் ஊட்டுகின்றது. இறைவனின் முன்பும், இறைவன் வகுத்துத் தந்துள்ள சட்டத்தின் முன்பும் அனைவரும் சமமானவர்கள் என்ற உணர்வுகளை அளிக்கின்றது. ஒரு முஸ்லிம் நோன்பு நோற்கின்றபோது, அதே கடமையை, அதே இலட்சியத்திற்காக நிறைவேற்றும் உலக முஸ்லிம்களில் தானும் ஒருவர் என்பதை உணருகிறார். இஸ்லாம் அமைத்துத் தந்த இந்த உன்னத கடமைக்கு நிகராக எதுவுமில்லை. இத்தகையதோர் அரிய ஏற்பாட்டை இஸ்லாத்திலல்லாமல் வேறு எங்கணும் காணவியலாது. சமூக அறிவியலாளர்கள் யாரும் கற்பனையில்கூட இப்படிப்பட்டதொரு அமைப்பை எண்ணிப் பார்த்ததில்லை.

மதிக்கப்படத்தக்க உறவுக்காக, ஒற்றுமைக்காக, சகோதரத்துவத்திற்காக மக்கள் காலங்காலமாக ஏங்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் இதுவரை அதற்கு எந்த மார்க்கத்தையும் காணவில்லை. இவற்றைப் பெற்றுத் தருவதாக பறைசாற்றிய மதங்கள் எல்லாம் மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்தன. இவர்களுக்கு இஸ்லாம் மட்டுமே வழி காட்ட முடியும். இஸ்லாம் ஒன்றே அவர்களின் ஏக்கம் போக்க உற்ற மார்க்கம். இஸ்லாம் இன்றி இவர்கள் உலக சகோதரத்துவம், உலக ஒற்றுமை என்ற கனவுக் கோட்டைகளை நனவாக்கிட முடியாது.

12. தன்னம்பிக்கை மனிதனின் இலட்சிய வெற்றிக்கு உயிர் போன்றது. இந்த தன்னம்பிக்கையை மனிதனிடம் வளர்ப்பது நோன்பு. மனிதனுக்கு சுதந்திரம், கண்ணியம், அமைதி இவற்றோடு வெற்றியையும் பெற்றுத்தருகின்றது. பாவங்களிலிருந்து மனிதனை விடுவிக்கின்றது. முறையாக நோன்பு நோற்பவர் நோன்பின் இத்தகைய பலன்களை அனுபவத்தால் அறிகின்றார். இந்த நன்மைகளை அடையும் ஒருவர் உள்ளத்தில் அமைதி பெறுகிறார். இறைவனின் அருளைப் பெறுகிறார். தான் வாழும் வட்டத்தில் நிம்மதியாக வாழ்கின்றார்.

இப்போது நோன்பினால் இவ்வளவு நன்மைகள் விளையும் என்பது உண்மையானால் முஸ்லிம்கள் ஏன் ஓர் உயர்ந்த நிலையை அடையவில்லை என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். உண்மை என்னவெனில், முஸ்லிம்கள் தங்களுடைய வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு சகாப்தத்தில் இத்தகைய உன்னத நிலையை அடையவே செய்தார்கள். இது மனித வரலாற்றிலேயே தனித்தன்மை வாய்ந்த ஒரு சாதனையாகும். தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்வதற்கான காரணம், இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த சமயமும், சமூக அமைப்பும் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடைந்ததில்லை. ஏனைய கொள்கைகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்தனவே தவிர நடைமுறைப் படுத்தப்பட்டதில்லை. இவைகள் சில வேளைகளில் தெளிவாகத் தென்பட்டன. ஆனால் பல வேளைகளில் அவைகள் தெளிவற்றே தோன்றின.

இஸ்லாத்தின் கொள்கைகள் முழு அளவில் செயல்படுத்திக் காட்டப்பட்டன. இதன் பொருள், இஸ்லாத்தின் இலட்சியங்களை இந்த உலகில் மீண்டும் நிலைநாட்டிட முடியும் என்பதாகும். அவைகள் எப்பொழும் செயல்படுத்திக் காட்டிடும் வகையில் வலுவான அடிப்படையில் அமைந்தவைகள்.

இன்றைய நாட்களில் இஸ்லாத்தின் இலட்சியங்கள் ஏன் நிலைநிறுத்தப்படவில்லை என்பதற்குப் பல காரணங்களுண்டு. நோன்பு என்ற கடமையை பொறுத்தவரையில், முஸ்லிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் பலர் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை. இன்னும் பலர் இதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. நோன்பினை நோற்பவர்களில் பலர் அதன் உண்மையான பொருளைத் தெரிந்து முறையாக நிறைவேற்றுவதில்லை. இதனால் பலர் நோன்பிலிருந்து முறையான பலனை அடைவதில்லை. இன்னும் பலருக்கு அதிலிருந்து எந்தப் பலனுமே கிடைப்பதில்லை. இதனால்தான் நோன்பின் உண்மையான பலன்களை இன்றைய முஸ்லிம்கள் முழுமையாகப் பெறவில்லை.

இஸ்லாமிய நோன்பு பற்றி சொல்லப்படுவதெல்லாம் யூத, கிறிஸ்தவ, காந்தியவகை நோன்புகளுக்கும் பொருந்தும் என சிலர் எண்ணலாம். இந்த அடிப்படையில் சிலர், ’முஸ்லிம்கள் ஏன் தங்களது நோன்பு பற்றி இப்படி அலட்டிக் கொள்கிறார்கள்’ என்றொரு கேள்யையும் கேட்கலாம். இவர்களுக்கு நமது பணிவான பதில் இதுதான்:

இறைத்தூதர்களை இகழ்வதும், உண்மைகளை நிராகரிப்பதும், இறைவனின் மார்க்கங்கள் எதையாவது பொய்யாக்குவதும் இஸ்லாத்திற்கு எதிரானதாகும். இத்தகைய பொறுப்பற்ற செயல்களைச் செய்திட சுதந்திரம் இருப்பதாக சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு எண்ணுவதில்லை. இத்தகைய இழிசெயல்களை செய்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டவர்களாக கருதப்படுவார்கள். வரலாறு எவ்வளவு தொன்மையானதோ அவ்வாறு தொன்மையானது நோன்புமுறை. முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டது போலவே இஸ்லாத்திற்கு முன்பிருந்தவர்களுக்கும் நோன்பு விதிக்கப்பட்டிருந்தது. இறைவன் விதித்த மற்ற நோன்புகளின் சரியான முறைகள் நமக்குத் தெரியாது. தெரிந்ததாக சொல்லிக் கொள்பவர்களின் கூற்றுகள் ஏற்கும் தரத்தில் இல்லை. ஆயினும் உண்மையை தெரிந்து கொள்ளும் முகமாக இஸ்லாத்தின் நோன்பு முறையை மற்ற நோன்பு முறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நோன்புகள்: ஓர் ஒப்பாய்வு

1. ஏனைய மதங்களிலும் கொள்கைகளிலும், நோன்பு நோற்பவர்கள் சில குறிப்பிட்ட உணவுகளையும், பானங்களையும் மட்டுமே தவிர்த்திடும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம்கள் எல்லாவகையான பானங்களிலிருந்தும், உணவுகளிலிருந்தும் விலகி இருக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள். அந்த குறிப்பிட்ட நேரம்வரை அவர்கள் எதையும் அருந்திடக் கூடாது.

2. ஏனைய மதங்களிலும் கொள்கைகளிலும், நோன்பு நோற்பதன் நோக்கம் முழுமையானதாக இல்லை. ஆன்மீகம், அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி இவைகளில் ஏதேனும் ஒன்றையே நோக்கமாகக் கொண்டதாக இருக்கின்றன.

3. ஏனைய நோன்பு முறைகள் சில குறிப்பிட்ட உலகியல் தேவைகளை மட்டுமே புறக்கணிக்கும்படி கோருகின்றன.

ஆனால் இஸ்லாம் பணித்துள்ள நோன்பு இவற்றோடு வழக்கமானதை விட அதிகமான தொழுகைகளை மேற்கொள்ளும்படி கோருகின்றது. நோன்பு மாதத்தில் தர்மங்கள் தாராளமாகச் செய்யப்படுகின்றன. குர்ஆன் ஓதுதல் அதிகமதிகமாக இடம் பெறுகிறது. நோன்பு நல்ல மனசாட்சியை ஏற்படுத்துகின்றது. சுயக்கட்டுப்பாட்டை பயிற்றுவிக்கின்றது. இதனால் நோன்பு நோற்கும் முஸ்லிம் அகத்திலும் புறத்திலும் முற்றிலும் ஒரு புதிய மனிதராகின்றார். அதை அவர் உணருகிறார். இதன் மூலம் அவர் இறைவனை நெருங்குகின்றார்.

4. நம் அறிவுக்கு எட்டியதைக் கொண்டும், அன்றாடம் ஏற்படும் அனுபவத்தைக் கொண்டும் சொல்வதானால் மற்ற மதங்களும் கொள்கைகளும், மனிதன் உலக வாழ்க்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டாலன்றி அவன் தனது ஆன்மீக இலட்சியங்களை அடைய முடியாது என்றும், இறைவனின் இராட்சியத்துக்குள் நுழைய முடியாது என்றும் போதிக்கின்றன. அக்கொள்கைகளின்படி மனிதன் உலக வாழ்க்கையைத் துறந்திடுவதும், துறவறத்தை மேற்கொள்வதும் அவசியமாகின்றது. இந்த வகையில் நோன்பு அவர்களுக்கு முக்கியமானதாகும். இந்த முறையில் நோன்பு நோற்கும் மனிதர்கள், தாங்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றதை மறைப்பதற்கு, விரதத்தை (நோன்பை) ஒரு போர்வையாகப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆனால் இச்லாம் கற்றுத்தரும் நோன்புமுறை வாழ்க்கையை விட்டு ஒதுங்கி ஓடுவதற்கல்ல. வாழ்க்கையோடு இணைந்து இனிய முறையில் வாழ்வதற்கேயாகும். வாழ்க்கையிலிருந்து நழுவி ஓடுவதற்கல்ல. ஆன்மீக ஆயுதம் கொண்டு வாழ்க்கையில் நுழைந்து நுகர்வதற்கேயாகும். வாழ்க்கையை புறக்கணிப்பதற்கல்ல. வாழ்க்கையின் அகத்தையும் புறத்தையும் ஒழுக்கத்தால் அலங்கரிப்பதற்கேயாகும்.

இஸ்லாம் பணித்துள்ள நோன்புமுறை மதத்திலிருந்து நித்திய வாழ்வை நீக்கிடுவதற்காக அல்ல. அல்லது ஆன்மாவை உஅடலிலிருந்து பிரிப்பதற்காகவும் அல்ல. நித்திய வாழ்வில் நீந்திக் களிப்பதற்கேயாகும். ஆன்மாவை உடலோடு ஐக்கியப்படுத்துவதற்கேயாகும்.

5. இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமான புனித ரமளான் மாத்தில் தான் நோன்பு கடமையாக்கப்படுள்ளது. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்படுகின்றது. இதனை பிறையாண்டு என பொதுவாக வழங்குவர். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் ரமளான் மாதம் நான்கு பருவ காலங்களிலும் வந்து விடுகிறது. இதனால் முஸ்லிம்கள் எல்லாப் பருவக் காலங்களிலும் நோன்பு நோற்றிடும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள். இது ஒரு சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கின்றது. ஓர் ஆண்டில் நோன்பு நீண்ட பகல் பொழுதையுடைய கோடைக் காலத்தில் வரும். இன்னொரு ஆண்டில் மழை காலத்தில் வரும். ஆக, கோடையும், மழையும், குளிரும் நோன்பு நோற்பவர்களுக்கு எளிதாகி விடுகின்றது.

ஆனால் மற்ற நோன்பு முறைகளில் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே நோன்பு நோற்கிறார்கள்.

நோன்பின் காலம்

நோன்பு ரமளான் மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகும். நோன்பு வைகறைக்குச் சற்று முன்னர் தொடங்கி சூரியன் மறைந்தவுடன் முடிவடைகிறது. நோன்புக் காலத்தை துல்லியமாகத் தெரிவிக்கும் கால அட்டவணைகள் இருக்கின்றன. ஆனால் இந்த அட்டவணைகள் கிட்டாதபோது கடிகாரத்தையும், சூரியனுடைய நிலைகளையும், வானிலை பற்றியும், நேரங்களைப் பற்றியும் நாளிதழ்களும், வானொலியும் தெரியத்தரும் தகவல்களைத் துணையாகக் கொள்ளலாம்.

ரமளானில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் ஒருமித்த கடமையாகும். இந்த நோன்புகளைத் தவிர வேறு சில நாட்களில் நோன்பு நோற்றிடும்படி முஹம்மத் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

திங்கட்கிழமைகளிலும், வியாழக்கிழமைகளிலும், ரஜப், ஷஃபான் மாதங்களில் சில நாட்களிலும், நோன்பு பெருநாளை அடுத்த ஆறு நாட்களிலும் நோன்பு நோற்கலாம். இரு பெருநாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்கலாம்.

எந்த நிலையிலும் முஸ்லிம்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதை விட்டுவிடக் கூடாது. இந்த நோன்புகள் சந்திரனின் சுழற்சியைப் பொறுத்து 29 முதல் 30 நாட்கள் வரை இருக்கும்.

நோன்பு இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தகுந்த காரணங்களின்றி அதனை நிறைவேற்றிட தவறுவது தண்டனைக்குரிய பாவமாகும்.

நோன்பு மனிதனுக்குப் பல வகைகளில் நன்மையளிக்கும் என்பதை அறிந்த இறைவன், இன்னும் சில சந்தர்ப்பங்களில் நோன்பை விதித்திருக்கின்றான்.

ஒருவர் தனது மனைவியை தாய்க்கு ஒப்பிட்டுத் தனக்கு ஆகாதவள் என்று கூறி, பின்னர் மீண்டும் அவளோடு சேர விரும்பினால், இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியதற்குப் பரிகாரமாக இரண்டு மாதங்கள் தொடர்சியாக நோன்பு நோற்க வேண்டும்.

வாக்குறுதியை ஒருவர் முறித்துவிட்டால் அதற்குப் பரிகாரமாக அவர் பத்து வறியவர்களுக்கு உணவு அளித்தல் வேண்டும். அல்லது உடை அளித்தல் வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால், அவர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவருடைய விடுதலைக்குப் பணம் செலுத்த வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால், மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன்: 5:92) தன் மனைவியிடம் மேற்சொன்ன பொறுப்பற்ற சொற்களைக் கூறுபவர் அதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுவித்தல் வேண்டும், அல்லது விடுதலைக்கான பணம் செலுத்த வேண்டும், அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால், அவர் தனது மனைவியை நெருங்குவதற்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் அவர் நோன்பு நோற்க வேண்டும். அவரால் நோன்பு நோற்க இயலவில்லை என்றால் அறுபது ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும், அல்லது அறுபது பேர்களுக்கு உள்ள சாப்பாட்டை ஏழைகளிடையே பங்கிட வேண்டும். நிறைவேற்ற முடியாத செயல்களுக்குப் பதிலாக நோன்பு நோற்கும்படி கட்டளையிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன. (58:1-4, 2:196)

நோன்பு நோற்க கடமைப்பட்டவர் யார்?

பின்வரும் தகுதிகளையுடைய முஸ்லிம்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயமாகிறது.

1. மனதாலும் உடலாலும் தகுதியுடையவராக இருத்தல். அதாவது புத்தி சுவாதீனமும் உடல் திறனும் உள்ளவராயிருத்தல்.

2. தகுந்த வயதுடையவராயிருத்தல். அதாவது பருவம் அடைந்து நல்லது கெட்டது புரியும் வயது. இது சாதாரணமாக பதினான்கு (14) வயதாகும். இந்த வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நோன்பினை நோற்றிட உற்சாகமூட்டிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் பருவமடைந்தவுடன் நோன்பு நோற்பதற்கு உள்ளத்தளவிலும் உடலளவிலும் தயாராக இருப்பார்கள்.

3. ஒரே இடத்திலிருத்தல். அதாவது ஐம்பது மைல் அல்லது அதற்கு மேற்பட்ட தொலைவுக்குப் பயணம் செய்யாதிருத்தல்.

4. பசி, தாகம் முதலியவற்றைத் தவிர உடலிலோ உள்ளத்திலோ தீங்கு எதனையும் நோன்பு அனேகமாக விளைவிக்காது என்று ஓரளவேனும் நிச்சயமாயிருத்தல்.

சில விதிவிலக்குகள்:

பின்வருபவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை.

1. பருவம் அடையாத மற்றும் போதிய அறிவு வளர்ச்சி இல்லாத குழந்தைகள்.

2. புத்தி சுவாதீனமில்லாதவர்கள்.

மேற்சொன்ன இருவகையினரும் நோன்பு நோற்கும் கட்டளையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவராவார்கள். அவர்கள் நோன்பு நோற்காதிருப்பதற்கு பதிலாகவோ, ஈடாகவோ எதையும் செய்ய வேண்டியதில்லை.

3. மிக முதுமை அடைந்து நோன்பு நோற்பதற்கு வேண்டிய ஆற்றலின்றி, நோன்பின் சில கடுமையானத் தன்மைகளைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள், இத்தகையவர்கள் நோன்பு நோற்பதற்குப் பதிலாக குறைந்தது ஒவ்வொரு நாளும் ஓர் ஏழை முஸ்லிமுக்கு நிறைவாக உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான பொருளை அல்லது தொகையை அளிக்க வேண்டும். இதில் அடங்கியுள்ள கருத்து என்னவெனில், இத்தகைய முதியோர்கள் தங்களால் முடியுமானால் ரமளான் மாதத்தில் ஒரு நாளைக்காவது நோன்பு நோற்க வேண்டும். மற்ற நாட்களுக்கு விதிக்கப்பட்ட முறையில் ஈடுசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் அசட்டையாக இருந்ததற்கு அவர்கள் பொறுப்பாவார்கள்.

4. நோன்பு நோற்பதனால் தங்களுடைய ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள நோயாளிகள், அவர்கல் நோயிலிருக்கும் வரையில் நோன்பை தள்ளிப்போடலாம். ஆனால் பின்னர் எத்தனை நோன்புகள் விட்டார்களோ அத்தனை நோன்புகளையும் நோற்றாக வேண்டும்.

5. ஏறத்தாழ 50 மைல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொலைவு பயணம் செய்பவர்கள், பயணம் முடியும் வரையில் நோன்பு நோற்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். எனினும் விட்டுப்போன நோன்புகளுக்குப் பதிலாக பின்னர் நோன்பு நோற்றாக வேண்டும். ஆனால் அதிக சிரமம் இல்லாவிட்டால் பயணக் காலத்திலும் நோன்பு நோற்பது நல்லது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

6. கர்ப்பமுற்றிருக்கும் பெண்களும், குழந்தையிருக்கும் தாய்மார்களும் நோன்பு நோற்பது தங்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக இருந்தால் நோன்பு நோற்பதைத் தற்காலிகமாக விட்டு விடலாம். ஆனால் பிர்பாடு விட்டுப்போன நோன்புகளுக்குப் பகரமாக நோன்பு நோற்க வேண்டும்.

இஸ்லாத்தின் இதர கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு எவ்வாறு நிய்யத் செய்து கொள்கிறோமோ அதேபோன்று நோன்பு நோற்கும் போதும் நிய்யத் செய்ய வேண்டும். அதாவது இறைவனுக்குப் பணிந்து, அவனுடைய கட்டளைகளுக்குப் பணிந்து, அவனுக்காகவே அந்த கடமையை செய்ய தொடங்குவதாக உள்ளத்தால் உறுதி பூணவேண்டும்.

நோன்பிருப்பது நன்றாக நினைவிருந்தும் உணவுகளை உட்கொண்டால் அல்லது ஏதேனும் பானங்களைப் பருகினால் அல்லது மனைவியுடன் உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும். இஸ்லாமியச் சட்டங்கள் அனுமதிக்கின்ற நியாயமான காரணங்கள் ஏதுமின்றி வேண்டுமென்றே மேலே சொன்னவைகளில் ஏதேனும் ஒன்றை செய்வது குற்றமாகும். இதற்கான பரிகாரம் 60 நாட்கள் தொடர்ந்து நோன்பிருப்பதாகும். இதற்கான இரண்டாவது பரிகாரம் 60 ஏழைகளுக்கு போதிய அளவு உணவு அளிப்பதாகும். அதோடு குறிக்கப்பட்ட நோன்புகளையும் ஒவ்வொன்றாக நோற்றாக வேண்டும்.

சில விதிவிலக்குகள் என்ற தலைப்பின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்படியான காரணங்களுக்காக ரமளான் மாதத்தில் நோற்க வேண்டிய நோன்பல்லாத வேறு நோன்புகள் முறிக்கப்பட்டு விட்டால், அவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பிற்கு ஒரு நோன்பு என்ற விகிதத்தில் பின்னர் நோன்பு நோற்க வேண்டும்.

நோன்பின் நினைவில்லாமல் ஒருவர் நோன்பை முறிக்கக்கூடிய செயலைச் செய்யத் தொடங்கிய பின்னர் தாம் செய்வது தவறு என்று உணர்ந்தவுடனேயே அச்செயலை நிறுத்திக் கொண்டால் அந்த நோன்பு முறிந்ததாகக் கொள்ளப்பட மாட்டாது.

ரமளான் மாதத்தின் நோன்புகள் முடிந்தவுடன், ’பித்ரா’ என்று சொல்லப்படும் தர்மத்தைச் செய்திட வேண்டும்.

பொதுவான சில பரிந்துரைகள்:

நோன்பிருக்கும் காலங்களில், குறிப்பாக ரமளான் மாதத்தில் பின்வருவனவற்றைப் பின்பற்ற வேண்டுமென முஹம்மத் (ஸல்) அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

1. நோன்பு ஆரம்பிக்கும் நேரத்தில் அதாவது வைகறைக்கு முன், எளிதான உணவுகளையே உட்கொண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும்.

2. மாலையில் சூரியன் அடைந்தபிறகு, ‘இறைவனே! உனக்காவே நாங்கள் நோன்பிருந்தோம், நீ அருளிய உணவைக் கொண்டே நாங்கள் இப்பொழுது நோன்பைத் திறக்கிறோம்’ என்று சொல்லி மூன்று பேரிச்சம் பழங்களையும், சுத்தமான தண்ணீரையும் கொண்டு நோன்பைத் திறக்க வேண்டும்.

3. உங்களுடைய உணவுகள் முடிந்தவரையில் எளியதாக (இலேசானதாக) இருந்திட வேண்டும். ஏனெனில் அதிகமாக உண்பது கூடாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

4. சுன்னத் தொழுகையான தராவீஹ் தொழுகையைத் தொழ வேண்டும்.

5. உறவினர்களையும், நண்பர்களையும், நல்லவர்களையும் சந்தித்து ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். மனிதாபிமான பணிகளை விரைவுபடுத்திட வேண்டும்.

6. திருக்குர்ஆன் ஓதுவதையும், அதன் பொருளை புரிந்து கொள்ளும் முயற்சிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.

7. பொறுமையையும், அடக்கமும் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

மனதை அடக்கி புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக நாவை மிக எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். அனாவசியமான பேச்சுகளைத் தவிர்த்திட வேண்டும். சந்தேகங்களையும், சபலங்களையும் உள்ளத்திலிருந்து பிடுங்கி எறிந்திட வேண்டும்.

Leave a Reply