அத்தியாயம்-3 தொழுகை அழைப்பு (அதான்)-பாங்கு

பெருமானார் (ஸல்) அவர்களின்  போதனைகளின்படி தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்கான அழைப்பு விடுப்பது சிறந்ததாகும். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், கிப்லாவை (மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி) நின்று கொண்டு தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்த குரலில் பின்வருமாறு முழங்குதல் வேண்டும்.

1. அல்லாஹ் அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) (4 முறை சொல்ல வேண்டும்.)

2. அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி சொல்கின்றேன்) (2 முறை சொல்ல வேண்டும்.)

3. அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்) (2 முறை சொல்ல வேண்டும்.)

4. ஹய்ய அலஸ்ஸலாத் (தொழுகைக்கு விரைந்து வாருங்கள்) (இதை வலது பக்கம் திரும்பி 2 முறை சொல்ல வேண்டும்.)

5. ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றிக்கு வாருங்கள்) (இதை இடது பக்கம் திரும்பி 2 முறை சொல்ல வேண்டும்.)

6. அல்லாஹ் அக்பர் (2 முறை சொல்ல வேண்டும்.)

7. லாஇலாஹ இல்லல்லாஹ் (ஒருமுறை சொல்ல வேண்டும்.)

ஃபஜ்ருத் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதைச் சொல்லிய பிறகு பின்வரும் வாக்கியத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

8. அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகையே சிறந்தது) (2 முறை சொல்ல வேண்டும்)

பின்னர் ஆறாவதாகவும் ஏழாவதாகவும் சொல்லப்பட்டவற்றை தொடர்ந்து சொல்ல வேண்டும். இந்த வாக்கியம் (அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம்) ஃபஜ்ருத் தொழுகை (வைகறைத் தொழுகை)க்கான அழைப்பில் சொல்லப்படுவதற்கான காரணம் வெளிப்படையானதாகும். இந்த வேளையில் தான் மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அப்போது தொழுகையின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது.

தொழுகையில் இணைதல் (இகாமத்)

தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டவுடன் தொழுகையாளர்கள் தொழுகைக்கு ஆயத்தமாகின்றார்கள். பின்னர் தொழுகையை, இகாமத் என்ற அறிவிப்புடன் தொடங்கப்படுகின்றது. இகாமத், தொழுகைக்கான அழைப்பைப் போன்றதுதான். ஆனால் இது இரண்டு வேறுபாடுகளைக் கொண்டது.

1. இகாமத் வேகமாகவும், மெல்லிய குரலிலும் சொல்லப்படுகின்றது.

2. ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்பதற்குப்பின் ‘கதுகாமத்திஸ் ஸலாத்’ என்ற வாக்கியத்தையும் இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும். இதற்கு தொழுகை ஆரம்பமாகி விட்டது என்பது பொருள். பின்னர் மேலே ஆறாவதாகவும் ஏழாவதாகவும் சொல்லப்பட்டவற்றைத் தொடர்ந்து சொல்ல வேண்டும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.