அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.

சமுதாயம் என்ற சொல்லுக்கு மிக விரிந்த விளக்கங்கள் உண்டு. நாம் சமுதாய அமைப்பின் அடிப்படைகளையே இங்கே எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். ஆகவே சமுதாய அமைப்பின் அடிப்படைகளை மட்டும் எடுத்துச் சொல்லும் சில இலக்கணங்களை மட்டுமே இங்கே தருகின்றோம்

சமுதாயம் என்பது எல்லாவகையான உறவுகளையும் உள்ளடக்கியதாகும். அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் அந்தரங்கமான உறவுகள், உணர்வுகள், ஒழுக்கக் கடமைகள், சமூக பிணைப்பு இவைகளை குறிப்பதாகும். இந்த உறவு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காணப்படலாம். ஒரே தேசத்தைச் சார்ந்த மக்களிடையே காணப்படலாம். ஒரே தொழிலைச் செய்பவர்களிடையே காணப்படலாம். இதனுடைய மிகச் சிறிய எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தைக் குறிப்பிடலாம்………….. (Nisbet pp. 74-8) Robert Nisbet. The Sociological Tradition (Newyork: basic Books, 1966)
சமுதாயம் என்பதற்கு இன்னொரு வகையில் பொருள் சொல்வதானால்:- அது இரண்டு தனிக்குணங்களைக் கொண்ட ஒரு குழு எனச் சொல்லலாம். முதலில், அந்தக் குழுவில் தனிமனிதன் தனது வாழ்க்கைக்கு முக்கியமான பயிற்சியையும், அனுபவத்தையும் பெறுகின்றான். இரண்டாவதாக அந்தக் குழு ஏதேனும் ஒரு சொந்தத்தின் கீழ் அல்லது ஒரு பொது நன்மையின் கீழ் ஒன்றுபடுகின்றது. அல்லது அந்தக் குழு ‘ஒத்த உணர்வுகளை’ உடைய மனிதர்களால் ஆனதாகவும் இருக்கலாம். (Broom & Selznick p. 31) L.Broom & P. Selznick Sociology – A Text With A Text With Adapted Readings (Newyork: Harper & Rows 1968)

இஸ்லாம் கூறும் சமுதாய அமைப்பு மேலே சொன்ன இலக்கணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும்.

இஸ்லாம் கூறும் சமுதாய அமைப்பு, இனம், நாடு, பிறந்த மண், செய்யும் தொழில், சொந்த பந்தங்கள், சில தனிப்பட்ட உணர்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது அரசியல் வரையறைகளையும், தேசிய எல்லைகளையும் கடந்து நிற்பது.

இறைவனின் விருப்பங்களுக்கு கீழ்படிதல், அவனது சட்டங்களை ஏற்று நடப்பது, அவன் அமைத்துத் தந்த இலட்சியங்களுக்காக உழைப்பது என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டதே இஸ்லாமிய சமுதாய அமைப்பு. சுருக்கமாகச் சொன்னால் இஸ்லாத்தினால் உரமூட்டப்பட்டு வளர்க்கப்படுவதே இஸ்லாமிய சமுதாயம்!

இஸ்லாமிய சமுதாயத்திற்கென  ஒரு சிறப்பான இலட்சியம் உண்டு. அந்த இலட்சியம், இந்த உலகில் எப்படி அதிக நாள் வாழ்வது, இந்த உலகில் எப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பனவற்றிற்கு அப்பாற்பட்டது. இஸ்லாமிய சமுதாயத்தின் இலட்சியத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அமைத்துத் தருகின்றது.

‘(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)

(விசுவாசிகளே!) நன்மையான காரியங்களை செய்யும்படி (மனிதர்களை) ஏவி, பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம், மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:110)

இஸ்லாமிய சமுதாயம் என்பது நற்குணம், நன்மை, உயர்ந்த குணங்கள் இவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்திட வேண்டும். நற்குணங்களின் குன்றாகத் திகழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி, அதை அல்லாஹ்வின் சட்டத்தை பணிந்து – வேறெந்த சட்டத்தையும் பணிந்திடாமல் – நடக்கும் ஒரு குழுவாக உருவாக்குவதே இஸ்லாமிய சமுதாய அமைப்பின் இலட்சியமாகும். ஒரு உண்மையான இஸ்லாமிய சமுதாயம் நன்மையின் இருப்பிடமாகவும், தீமையின் தீவிர எதிரியாகவும் இருக்கும். சமுதாயத்திடம் மொத்தமாக என்னென்ன இருந்திட வேண்டும் என்ரு எதிர்பார்க்கின்றோமோ அது தனி மனிதர்களிடம் தனித்தனியாக இருந்திட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் சமுதாயம் மொத்தமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் அல்லாஹ்விடம் பொறுப்பாவான்.

ஒரு முஸ்லிமின் கடமை என்ன என்று பார்க்கும்போது, அதை பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

‘உங்களில் தீமைகளைக் காணும் ஒருவர் தனது கைகளால் அதைத் தடுக்கட்டும். அவ்வாறு முடியாவிட்டால் அதை அவர் வார்த்தைகளைக் கொண்டு தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் அதை அவர் தனது மனதினால் வெறுக்கட்டும். இன்னும் இது ஈமானின் கடைசி நிலையாகும்.’

இஸ்லாமிய சமுதாய அமைப்பின் பணிகளை திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:

‘(விசுவாசிகளே!) அவ்வாறே, (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பீர்களாக! (திருக்குர்ஆன்: 2:143)

இப்படி சாட்சியாக இருந்திட வேண்டிய ஒரு மகத்தான பொறுப்பு இஸ்லாமிய சமுதாயத்திற்கு இருக்கின்றது. இதன் பொருள் இஸ்லாமிய சமுதாயம் ஏனைய சமுதாயங்களுக்கு ஒரு முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக இலங்கிட வேண்டும் என்பதேயாகும்.

சிறந்த சமுதாயமாக ஆவதெப்படி? என்ற கேள்வியை கேட்கின்ற பிற சமூகத்தாருக்கு இஸ்லாமிய சமுதாயம் பதிலாக அமைந்திட வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் எல்லாவிதமான அத்துமீறல்களையும் தவிர்த்திட வேண்டும். அது எல்லாச் செயல்களிலும், எல்லாத் துறைகளிலும் அழகியதொரு முன்மாதிரியாக அமைந்திட வேண்டும்.

ஏற்றத்தாழ்வுகளில்லாமல் நடுநிலையில் நிலைத்திடுவதும், கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றிடுவதும், எதை ஏற்று நடப்பது எதைத் தள்ளுவது என்பதைத் தெளிவாக தெரிந்திருப்பதும், தனக்கென சில கொள்கைகளைக் கொண்டிருப்பதும், அதே நேரத்தில் விட்டுக் கொடுத்து வாழ்ந்திடுவதும் சமுதாயத்தின் சீரிய அமைப்பிற்கு துணையாக அமையுமன்றோ! இதுதான் இஸ்லாமிய சமுதாய அமைப்பின் பணியாகும். இப்படிபட்டதொரு சமுதாயத்தை அமைத்திடுவதே முஸ்லிம்களின் இலட்சியமாகும். முஸ்லிம்களை மிக உயர்ந்த சமுதாயமாக ஆக்கிடுவதும் இதுவேயாகும்.

இஸ்லாமிய சமுதாயத்தின் அடையாளங்கள், எப்போதும் நடுநிலை வழுவாமை, ஏனைய சமுதாயங்களுக்கு முன்மாதிரியாக அமைகின்ற நன்னடத்தை, இலட்சியத்தில் ஒருமை, ஒற்றுமை, தியாகம், நேர்மை, ஒருவருக்கொருவர் உதவி செய்து உவந்திருத்தல் ஆகியவையே ஆகும். இவைகளை விளக்குகின்ற எண்ணற்ற திருமறை வசனங்கள் உள்ளன. அதுபோலவே எண்ணற்ற நபிமொழிகளும் இருக்கின்றன. (பார்க்க திருக்குர்ஆன்: 4:135, 21:92, 23:52)

இஸ்லாமிய சமுதாயம் காலப்போக்கில் அழிந்து விடாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வகையில் நாம் பின்வருவனவற்றைக் கவனித்திட வேண்டும். முதன் முதலில் இஸ்லாமிய சமுதாயத்தை (உடைந்து விடாமல்) பாதுகாப்பதற்கு தங்களால் இயன்றவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமையாகும். இரண்டாவதாக திருமண சட்டங்கள், வாரிசுரிமை சட்டங்கள், ஜகாத், ஹஜ் போன்ற கடமைகள், உறவினர்களின் உரிமைகள், கடமைகள், தனிமனிதனின் பொறுப்புக்கள், சமுதாயப் பொறுப்புக்கள் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பவைகளே! இன்னொரு புறம் அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயம் உடைந்து போகாமல் – அழிந்து போகாமல் பாதுகாப்பேன் என உறுதி அளித்திருக்கின்றான். அவன் திருக்குர்ஆனை அதனுடைய அசல் வடிவில் சற்றும் மாற்றமில்லாமல் பாதுகாப்பேன் என உறுதி அளித்துள்ளது இதையே குறிக்கின்றது. (திருக்குர்ஆன்: 15:9 வசனத்தை பார்க்கவும்)

இதன் பொருள் திருக்குர்ஆனைப் பின்பற்றி வாழுகின்றதொரு சமுதாயம் இருந்துகொண்டே இருக்கும் என்பதாகும். ஏனைய வேத நூல்களை பின்பற்றி வாழக்கூடியவர்கள் இருந்தாலும், திருக்குர்ஆனைப் பின்பற்றி வாழுகின்ற சமுதாயம் ஒன்று இல்லாமல் இருக்காது.

இனி, இஸ்லாம் என்ற இறைவனின் வழிகாட்டுதல் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. இந்த வகையில் இஸ்லாம் என்பதே ஒரு தொடராகும். எப்போதாவது ஒரு சமுதாயம் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடம்புரண்டு செல்லுமேயானால், அவன் தனது வழிகாட்டுதலை திரும்பவும் அருளினான். உண்மையைத் திரும்பவும் நிலைநாட்டினான். இன்னும் புதிய திருத்தூதர்களையும், சீர்திருத்தவாதிகளையும் அனுப்பினான். அத்துடன் இறைவன் வலுவானதொரு எச்சரிக்கையையும் விடுத்தான். ‘முஸ்லிம்கள் நேர்வழியிலிருந்து பிறழ்ந்து வேறு வழிகளில் செல்வார்களேயானால் அவர்களே நஷ்டமடைந்தவர்கள் ஆவார்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்திற்கு தனது அருளை வழங்குவான்.’ இப்படிபட்டதொரு எச்சரிக்கை முஸ்லிம்களின் முன் இருந்து கொண்டே இருக்கின்றது. (திருமறையின் 47:38 வசனத்தைப் பார்க்கவும்)

இன்னும் முஸ்லிம்கள் பின்வருமாறு எச்சரிக்கப்படுகின்றார்கள்: அவர்கள் நேர்வழியிலிருந்து மாறுவார்களேயானால் அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவான். அவர்கள் இறைவனை நேசிப்பார்கள். இறைவனும் அவர்களை நேசிப்பான். இறைவன் நம்பிக்கை கொண்டவர்களிடம் பரிவாகவும், நிராகரிப்பவர்களிடம் பலம் மிக்கவனாகவும் நடப்பான். நம்பிக்கையாளர்கள் எதற்கும் தயங்காமல் இறைவழியில் துணிந்து நிற்பார்கள். (சான்றாக திருமறையின் 5:57 வசனத்தைப் பார்க்கவும்.)

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.