ரியாளுஸ் ஸாலீஹீன் (பாடம்-1-1)

1 – எண்ணம் போல் வாழ்வு

உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும். (புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன.

மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

இந்த இரு வாக்கியங்கள் குறித்து நபிமொழி ஆய்வாளர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன. சிலர் கூறுவர்: இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருள் கொண்டவை. முதல் வாக்கியத்தின் பொருளையே இரண்டாம் வாக்கியமும் வலியுறுத்திக் கூறுகிறது!

இந்தக் கருத்து சரியானதல்ல. இரண்டாவது வாக்கியம் புதியதொரு கருத்தைக் கொடுப்பதே தவிர முந்தைய வாக்கியத்தின் கருத்தையே மீண்டும் கூறுவதல்ல.

சற்று ஆழமாகச் சிந்தித்தால் இவ்விரண்டு வாக்கியங்களுக்கிடையே பெருத்த வேறுபாடு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முதல் வாக்கியம் காரண அடிப்படையிலானது.

இரண்டாம் வாக்கியம் விளைவாய் வருவது.

முதல் வாக்கியத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எண்ணம் இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் செயல் சுதந்திரம் உடையவன். எனவே அவனுடைய செயல்களின் பின்னணியில் எண்ணம் இருக்கத்தான் செய்யும். அறிவும் சுதந்திரமும் உள்ள எந்த மனிதனின் செயலும் எண்ணமின்றி அமையாது. அப்படி அமைவது இயலாத ஒன்று!

அறிஞர் சிலர் கூறியதைக் கவனியுங்கள்: ‘எண்ணுதல் இன்றி அமல் செய்யுமாறு அல்லாஹ் நம்மைப் பணித்திருந்தால் அது நம்மால் முடியாது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை அல்லாஹ் நம் மீது சுமத்தியதாக ஆகிவிடும்’

– இந்தக் கருத்து முற்றிலும் சரியானது. நீங்கள் அறிவும் சுதந்திரமும் பெற்றிருந்து எவருடைய நிர்பந்தமும் இல்லா நிலையில் ஒரு செயலைச் செய்யும் பொழுது எந்த ஓர் எண்ணமும் இல்லாமல் எப்படிச் செயல்படுவீர்கள்? அது நடைமுறைக்கு இயலாதது. நாட்டம் மற்றும் ஆற்றலில் இருந்து பிறப்பதே செயல். நாட்டமே எண்ணம் என்பது!

இப்பொழுது பாருங்கள். முதல் வாக்கியம் ஒரு செயலைச் செய்பவருக்கு ஓர் எண்ணம் இருப்பது அவசியம் எனும் பொருளைத் தருகிறது.

– இங்கு இன்னொன்றை அறிந்து கொள்வது பயன்மிக்கது. அதாவது, எண்ணங்கள் பலவிதமாய் உள்ளன. ஓர் எண்ணத்திற்கும் மற்றோர் எண்ணத்திற்கும் வானம், பூமி அளவு வேறுபாடு உள்ளது.

சிலரின் எண்ணம் நல்லதாக இருக்கும். அவர்களுடைய அமல்களில் மேலான-உன்னதமான குறிக்கோள் இருக்கும். வேறு சிலரின் எண்ணம் கீழ்த்தரமானதாய் இருக்கும். மட்டரகமான – கெட்ட நோக்கமே அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்.

நீங்கள் இரண்டு மனிதர்களைப் பார்க்கலாம்! இருவரும் ஒரே செயலைத் தான் செய்வார்கள். அதன் தொடக்கம் – முடிவு, அமைதி, அசைவு எனும் அனைத்து அம்சங்களிலும் இருவரும் ஒன்று போல் தெரிவார்கள்! ஆனால் அவ்விருவருக்கும் வானம் – பூமி அளவு வித்தியாசம்! ஏன்? எண்ணத்தின் வேறு பாட்டினால்தான்!

-ஆக, எண்ணமின்றி எந்த ஒருசெயலும் இல்லை என்பது ஓர்அடிப்படை அம்சமாகும்.

இப்பொழுது இரண்டாவது வாக்கியத்திற்கு வாருங்கள். மனிதன் எந்த எண்ணத்தோடு செயல்படுகிறானோ அந்த எண்ணத்தின் பயனையே – விளைவையே அவன் அடைவான் எனும் கருத்தைத் தருகிறது அது.

பிறருக்குக் குழிபறிக்கும் எண்ணத்தோடு ஒருவன் செயல்பட்டால் இறுதியில் அவனே தான் அதில் வீழ்வான். அவன் எண்ணம் போலவே முடிந்தது என்று மக்கள் கூறுவது இதையே!

இங்கு இன்னோர் உண்மையையும் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் தொழுகை, தர்மம் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றுகிறீர்கள். அப்பொழுது இறைவனின் திருப்பொருத்தமும் மறுமையின் வெற்றியும் மட்டுமே உங்கள் எண்ணமாக குறிக்கோளாக இருந்தால் அவை நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் அந்த அமல்களின் மூலம் உலக நலன்களை நீங்கள் எதிர்பார்த்தால் நாலு பேர் நம்மை தொழுகையாளியென மெச்ச வேண்டும். மதிக்க வேண்டும். தர்மவான் எனப் போற்ற வேண்டும் என எண்ணினீர்களாயின் நீங்கள் எதிர்பார்த்தது உங்களுக்குக் கிடைக்கவும் செய்யலாம். கிடைக்காமலும் போகலாம்!

அல்லாஹ் கூறுகிறான் :

விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில் அவனுக்கு இங்கேயே கொடுத்து விடுகிறோம். நாம் நாடுவதை! நாம் நாடுபவருக்கு மட்டும்! (கொடுத்து விடுகிறோம்)’ (17: 18)

– அதாவது அவன் நாடியதை அவனுக்குக் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லவில்லை. நாம் எதைக் கொடுக்க நாடுகிறோமோ அதைக் கொடுப்போம். அவன் நாடியதை அல்ல! நாம் கொடுக்க நாடியவருக்குக் கொடுக்கிறோம். எல்லாருக்கும் அல்ல என்றே அல்லாஹ் சொல்லியுள்ளான்!

எனவே மனிதர்களின் விருப்பப்படி உலகப்பலன்கள் கொடுக்கப் படுகின்றன என்றாலும் சிலருக்கு ஏதோ கொஞ்சம் கொடுக்கப்படுகிறது! வேறு சிலருக்கோ எதுவும் கொடுக்கப்படுவதில்லை. எப்பொழுதும் கொடுக்கப் படுவதில்லை!

ஆனால் மறுமைப் பேறுகள் அவ்வாறல்ல.

அல்லாஹ் கூறுகிறான் : யார் மறுமையை விரும்புகிறாரோ – இறைநம்பிக்கை கொண்டவராகவும் இருந்து அதற்காகப் பாடுபடுகிற முறைப்படி பாடுபடுகிறாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும்’ (17 : 19)

ஆம்! இறைவனின் திருப்பொருத்தத்தையும் சுவனப்பேறுகளையும் நாடி நற்செயல் ஆற்றுபவர் கண்டிப்பாக அதன் நற்பயனை – கனியைப் பறித்து மகிழ்வார்!

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன என்று தொடங்குகிற இந்த நபிமொழி ஒவ்வொரு செயலுக்கும் அளவுகோலாய்த் திகழ்கிறது. ஆனாலும் அது அந்தரங்க நிலையைப் பொறுத்ததாகும். இதேபோல் –

நமது வழிகாட்டல் இல்லாத ஒரு செயலை (வழிபாட்டை) ஒருவர் செய்வாராயின் அது ரத்து செய்யப்படும்’ (புகாரி, முஸ்லிம் – அறிவிப்பு : ஆயிஷா (ரலி)) எனும் நபிமொழி வெளிப்படையான செயல்களுக்கு அளவு கோலாய்த் திகழ்கிறது.

இதனால் தான் நபிமொழி ஆய்வாளர்கள் சிலர் இந்த இரண்டு நபிமொழிகளும் இறைமார்க்கம் முழுவதையும் உள்ளடக்கியுள்ளன என்று கூறியுள்ளார்கள்!

நிய்யத்தும் ஹிஜ்ரத்தும்

நிய்யத்- எண்ணத்தை வைத்தே செயல்கள் மதிப்பிடப்படும். அதன் அடிப்படையிலேயே கூலி வழங்கப்படும் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் என்பது ஓர் அரபிச் சொல். துறந்து செல்லல், வெறுத்தல், விட்டுவிடுதல் போன்ற பல பொருள்கள் அதற்குண்டு. இஸ்லாமிய வழக்கில் இறைமார்க்கத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப வாழமுடியாத ஒரு நாட்டை விட்டு வெளியேறி இறைநெறிப்படி வாழ்வதற்கேற்ற இடத்தைத் தேடிச் செல்வது ஹிஜ்ரத் ஆகும்!

அமெரிக்காவில் வாழும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தான் ஏற்றுள்ள அக்கொள்கைப்படி வாழ்வதற்கு அங்கு அவருக்கு அனுமதி இல்லை என்றால் அங்கிருந்து அவர் வெளியேறிட வேண்டும். எங்கு இஸ்லாத்தைக் கடைப்பிடித்து வாழ முடியுமோ அங்கு அவர் குடியேறிட வேண்டும். நாடு துறத்தல் எனும் இந்த ஹிஜ்ரத்தை மேற்கொள்வது அவர் மீது கடமையாகும்.

திருமக்காவில் இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் அழைப்பை ஏற்று இஸ்லாம் தழுவிய ஏழை முஸ்லிம்களையும் இறைநிராகரிப்பாளர்கள் கடுமையாகத் துன்புறுத்தினார்கள். இறை வழிகாட்டலைப் பின்பற்றவோ அதன் பால் மக்களை அழைக்கவோ முஸ்லிம்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஹிஜ்ரத் நாடு துறந்து செல்வது முஸ்லிம்களின் மீது கடமையாக்கப்பட்டது. முதலில் அபீஸீனியா நாட்டை நோக்கியும் பிறகு மதீனா மாநகரை நோக்கியும் முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்றார்கள்.

இறைவனுக்காக பிறந்த நாட்டையும் வளர்ந்த வீட்டையும் துறந்து பெற்றோரையும் உற்றோரையும் மறந்து அயல் நாடு சென்று குடியேறுதல் எனும் வகையில் ஹிஜ்ரத் என்பது பெரும் தியாகம் மட்டுமல்ல. இறைவனுக்கு உவப்பான, உன்னதமான ஒரு வழிபாடும் ஆகும்.

இத்தகைய ஹிஜ்ரத்தைக் கூட வாய்மை நிலை நின்று தூய எண்ணத்துடன் மேற்கொண்டால் தான் இறைவன் அதை ஏற்று நற்கூலி வழங்குவான். உலக நலனின் அடிப்படையில் இருந்தால் அதை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் அது பேரிழப்பாகவே வந்து முடியும்.

ஹிஜ்ரத் செய்வோர் நிய்யத் எனும் எண்ணத்தைப் பொறுத்து பல வகைப்படுவர்.

1) நாட்டையும் வீட்டையும் துறந்து அல்லாஹ்-ரஸூலின் பால் ஹிஜ்ரத்தை மேற்கொள்பவர்கள். அதாவது, இறைவன் வழங்கிய ஷரீஅத் – நெறிமுறையின்பால் ஹிஜ்ரத் செல்பவர்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்வதன் பக்கம் வந்து விடுபவர்கள். இத்தகையவர்களின் குறிக்கோளும் இலட்சியமும் இறைவனின் கருணையும் மன்னிப்புமேயாகும். – தாங்கள் மேற்கொண்ட தியாகத்தின் நற்கூலியைப் பெற்று வெற்றியடைபவர்கள் இவர்கள் தாம்!

2) உலகாயத குறிக்கோளை எதிர்பார்த்து ஹிஜ்ரத் மேற்கொள்பவர்கள். எடுத்துக்காட்டாக, ஒருவன் அதிகம் பொருளீட்ட விரும்புகிறான். இஸ்லாமிய நாடுகளில் செல்வச் செழிப்பு உள்ளது. அங்கு சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம். ஏராளமாய்ப் பொருளீட்டலாம் எனக் கேள்விப்படுகிறான். உடனே தான் வசிக்கும் நாட்டைத் துறந்து இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்கிறான். பொருளீட்டுவது தான் இவனது நோக்கமே தவிர தீனை-இறைமார்க்கத்தை முன்னை விடவும் சிறப்பாக, முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் சூழ்நிலையைப் பெறலாம் என்பதல்ல! இத்தகைய மனிதனுக்கு அவன் எதிர்பார்த்த செல்வச் செழிப்பு கிடைத்தாலும் கிடைக்குமே தவிர இறையருளும் மறுமைக் கூலியும் கிடைக்கப் போவதில்லை!

3) தாம் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய நாட்டை நோக்கி ஹிஜ்ரத் செய்பவர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக அவளுடைய தந்தையை அணுகிய பொழுது அவர் சொன்னார்: நீ எங்கள் (இஸ்லாமிய) நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்தால் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருவேன். பிறகு உனது (நிராகரிப்பு) நாட்டிற்கு அவளை அழைத்துச் செல்லக்கூடாது! இந்நிபந்தனையை ஏற்று திருமண ஆசையில் இஸ்லாமிய நாட்டிற்கு குடிவந்து விட்டான் அவன். இது ஹிஜ்ரத் ஆகாது. ஹிஜ்ரத் என்று கூறிக்கொண்டாலும் சரியே! இது உலகியல் நோக்கம் கொண்டது. இது அவர்களது நோக்கத்தைப் போல் அமையுமே தவிர அல்லாஹ்-ரஸூலின் கட்டளைக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையாது!

தஃவத் – அழைப்புப் பணிக்காக ஹிஜ்ரத்:

நிய்யத்தைப் பொறுத்து ஹிஜ்ரத் செய்வோர் மூன்று வகையில் உள்ளனர் என்பதைக் கண்டோம். இதே போல் ஹிஜ்ரத் அதன் அகராதிப் பொருளின் அடிப்படையில் மூன்று வகையில் உள்ளது. அதனை இப்பொழுது விவரிப்போம்.

1) ஹிஜ்ரதுல் ம(க்)கான் – இடத்தை வெறுப்பது

2) ஹிஜ்ரதுல் அமல் – செயலை வெறுப்பது

3) ஹிஜ்ரதுல் ஆமில் – செயல்படுபவரை வெறுப்பது

இடத்தை வெறுப்பது

பாவங்களும் தீமைகளும் நிறைந்த, தீய சூழலை விட்டுவெளியேறி தூய்மையான, நல்ல இடம் தேடி ஹிஜ்ரத் செய்வதாகும் இது.

ஒருக்கால், தீமைகளும் பாவங்களும் நிறைந்த இந்த இடம் என்பது நிராகரிப்பு நாடாக இருக்கலாம். அங்கிருந்து கொண்டு தீமைகள் செய்யாமல், தீனை-இறைமார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ்வது இயலாது போகலாம்! இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். எந்நாடு இஸ்லாமிய வாழ்வுக்குச் சுதந்திரம் தருகிறதோ அங்கு குடியேறிட வேண்டும். இப்படி ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.

ஆயினும் தீமைகளும் பாவங்களும் தலைவிரித்தாடும் சூழ்நிலையிலும் அந்நிராகரிப்பு நாட்டிலிருந்து கொண்டு இறைமார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து தூய்மையான வாழ்வு வாழ்ந்திட முடியுமானால் வேறு நாட்டிற்கு ஹிஜ்ரத் செல்வது கடமையாகாது.

இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒருவர் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி வரும் நிலையில் அங்கிருந்து வெளியேறுவது கூடாது. இஸ்லாத்திற்கு எதிரான நிராகரிப்பு நாட்டிற்கு ஹிஜ்ரத் செல்வது கூடாது! ஏனெனில், அதனால் அவரது தீன் வாழ்வுக்கும் குணவொழுக்கத்திற்கும் ஆபத்து நேரலாம்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் நற்கல்வியாளராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் தெளிவும் உறுதியும் உடையவராகவும் அவரது சொல் – செயலுக்குப் பிறமத மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்க்கும் ஆற்றலுள்ளவராகவும் இருந்தால் – இப்படிப்பட்டவர் அழைப்புப் பணியின் நோக்கத்திற்காக நிராகரிப்பு நாட்டிற்கு ஹிஜ்ரத் செல்வது கூடும். அதற்கு அனுமதி உண்டு என்பது மட்டுமல்ல இறைமார்க்க ரீதியான ஒரு தேவையுமாகும் அது!

ஏனெனில் இப்படிப்பட்ட நாடுகளில் வாழும் மக்களுக்கு- குறிப்பாக யூத, கிறிஸ்தவ மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எந்த விவரமும் தெரியாது என்பது ஒருபுறம் இருக்க, இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்தே பெரும்பாலான மக்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டுள்ளன. இஸ்லாம் என்றால் ஒழுங்கற்ற – நெறிமுறைகளில்லாத – காட்டுமிராட்டித்தனமான மதம் என்றுதான் அவர்களுக்கு மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. பரப்பப்பட்டு வருகிறது!

குறிப்பாக மேலைநாட்டு மக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, அதன் சிறப்பு, இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் துயவாழ்வு, அருளார்ந்த ஆளுமை ஆகியவை பற்றி எதுவும் தெரியாது. அதேநேரத்தில் – முஸ்லிம்களில் சில வழிதவறிகள், மன இச்சைக்கு அடிமைப்பட்டு வாழும் தீயவர்கள் தங்களையும் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்திற்கெதிரான காரியங்களைச் செய்கிறார்கள். இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைப் பேசுகிறார்கள். இவற்றைப் பார்க்கிற மேலைநாட்டு மக்கள் இவர்களின் மதம்தான் இஸ்லாமா? இஸ்லாம் என்றால் காட்டுமிராண்டிகளின் கூடாரமா? என்று கருத்து மயக்கம் கொள்கிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு என்ன காரணம்? இறைவாக்கான குர்ஆனையும் நபிகளாரின் தூய வாழ்வையும் அறிந்து கொள்ள முன்வராததற்கு தடையாக இருப்பது எது? இப்படிப்பட்ட வழிதவறிய முஸ்லிம்களும் அவர்களின் தவறான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தான் காரணம்!

இந்நிலையில், அந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தின் அழகிய போதனைகளையும் அடிப்படைகளையும் புரிய வைப்பது முஸ்லிம்களின் மீது கடமை. தஃவா – அழைப்புப்பணியில் ஆற்றலும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்நோக்கத்திற்காக அந்த நாடுகளுக்குச் செல்வது அவசியமாகும். அதற்காக ஹிஜ்ரத் மேற்கொண்டு அங்கேயே குடியேறிட வேண்டும். இது இஸ்லாமிய அழைப்புப் பணியின் இன்றியமையாத் தேட்டமாகும்.

இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு எனது செய்தியை எட்டச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் இட்ட கட்டளைக்கு ஏற்ப நபித்தோழர்கள் உலகின் பலபாகங்களை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். ஆங்காங்கே குடியேறி இஸ்லாத்தின் இனிய செய்தியை மக்களுக்குப் போதித்தார்கள். இதேபோல் அதற்கடுத்தடுத்த தலைமுறைகளில் தோன்றிய ஆன்றோரும் சான்றோரும் அழைப்புப் பணிக்காக இத்தகைய ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்கள். இவையாவும் இங்கு நினைவு கூரத் தக்கவையாகும்.

செயலை வெறுப்பது:

இது அல்லாஹ் விலக்கிய பாவங்களையும் தீமைகளையும் வெறுப்பதாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவனது நாவிலிருந்தும் கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் நிம்மதி பெற்றிருக்கிறார்களோ அவன்தான் முஸ்லிம்! மேலும் அல்லாஹ் விலக்கிய தீமைகளை எவன் வெறுத்தொதுக்கினானோ அவன்தான் ஹிஜ்ரத் செய்தவன்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

எனவே அல்லாஹ் விலக்கியுள்ள எல்லாத் தீமைகளிலிருந்தும் நாம் விலகிடவேண்டும். அவற்றை வெறுத்திட வேண்டும். அல்லாஹ்வுக்குச் செலுத்தும் கடமைகளில் அலட்சியம் செய்வதும் தீமைதான். மனிதர்களின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பதும் தீமைகள்தான்! இவ்விருவகை தீமைகளில் இருந்தும் விலகிட வேண்டும்!

திட்டுவது, ஏசுவது,கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, பிறர் பொருளை அநியாயமாக உண்பது, பெற்றோரை நிந்திப்பது, இரத்த பந்தங்களைத் துண்டிப்பது போன்ற எல்லாத் தீமைகளையும் நாமும் தவிர்த்திட வேண்டும். மனித சமுதாயத்திலிருந்தும் அவற்றைக் கெல்லி எறிந்திட வேண்டும்.

செயல்படுபவரை வெறுப்பது:

யார் தீமைகள் – பாவங்கள் புரிகிறார்களோ அவர்களை வெறுப்பதும் அவர்களுடைய தொடர்பை நிறுத்துவமாகும் இது.

மார்க்க அறிஞர்கள் சொல்வர்: ‘ஒருவன் பாவத்தை வெளிப்படையாகச் செய்கிறானெனில், அதற்கு வெட்கப்படுவதில்லையெனில், அவனுடன் யாரும் பேசாமல்- எவ்விதத் தொடர்பும் வைக்காமல் அவனை வெறுத்து ஒதுக்கிட வேண்டும். இது ஷரீஅத்தின் கட்டளையாகும்.

ஆனால் ஒன்று: அப்படி வெறுப்பதனால் பயனேதும் விளையும் நிலை இருக்க வேண்டும். எல்லோரும் அவனை வெறுத்தால் அவன் திருந்தி விடுவான். தனது தவறினை உணர்ந்து பாவம் புரிவதை விட்டு விடுவான் என்றிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சமுதாயத்தில் வெளிப்படையாக வட்டித் தொழில் செய்யும் மனிதனை எல்லோரும் வெறுத்தால், யாருமே அவனுடன் பேசாமல், ஸலாம்கூட சொல்லாமல் விலகிச் சென்றால் அவன் வெட்கப்பட்டு அல்லது விரக்தி அடைந்து திருந்தும் நிலை இருக்க வேண்டும். அந்தத் தீய தொழிலைக் கைவிடும் நிலை இருக்க வேண்டும்.

அப்படி வெறுத்தொதுக்குவதால் எவ்விதப்பயனும் இல்லையெனில் அதில் சற்று தளர்வு காட்டலாம். சற்று நெளிவு சுளிவான போக்கை மேற்கொள்ளலாம். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:

‘தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்தொதுக்குவது இறைநம்பிக்கையாளனுக்கு ஆகுமானதல்ல. இருவரும் சந்திக்கும்பொழுது இவர் இப்படியும் அவர் அப்படியுமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது கூடாது. இருவரில் யார் முந்திக் கொண்டு ஸலாம் சொல்கிறாரோ அவர்தான் சிறந்தவர்’ (நூல்: புகாரி, முஸ்லிம்) – ஆனாலும் தொடர்ந்து சீர் திருத்தத்திற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பாவம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அது பயனளித்தது என்பதற்கு நபித்தோழர்களின் வாழ்வில் ஓர் அழகிய எடுத்துக் காட்டு உண்டு. கஅப் பின் மாலிக், ஹிலால் பின் உமைய்யா, மிறாறா பின் ரபீஃ (ரலி-அன்ஹும்) ஆகிய மூன்று நபித்தோழர்களும் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் மதீனாவிலேயே தங்கி விட்டார்கள். அவர்களின் சோம்பலும் பொடுபோக்கும்தான் அதற்குக்காரணம். போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்த நபியவர்கள் அம்மூன்று தோழர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களைச் சமூகத்தை விட்டும் ஒதுக்கி வைத்தார்கள். யாரும் அவர்களுடன் பேசக்கூடாது., ஸலாம்கூட சொல்லக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எடுத்த இந்நடவடிக்கை நற்பயனளித்தது. அம்மூன்று தோழர்களும் திருந்தினார்கள். வாய்மையான முஸ்லிம்களாய் மீண்டும் திகழ்ந்தார்கள்.

அறிவிப்பாளர் அறிமுகம்: உமர் பின் கத்தாப் (ரலி)

உமர்(ரலி)அவர்கள் குறைஷி குலத்து சிறப்புமிகு தலைவர்களுள் ஒருவர். அறியாமைக் காலத்தில் பிரச்னைக்குரிய விவகாரங்களில் சமரசம் செய்து வைக்கும் பொறுப்பு உமர் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. நபித்துவ 6 ஆம் ஆண்டில் இவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பொழுது சுமார் 40 பேர் மட்டுமே முஸ்லிம்களாகியிருந்தார்கள். உமர் அவர்களது வருகையால் இஸ்லாத்திற்குக் கண்ணியமும் உதவியும் கிடைத்தது! மதீனாவை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத்தை மேற்கொண்டவர்களுள் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள், பத்று போரிலும் பைஅதுர் ரிள்வான் என்ற போர்ப் பிரமாண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்கள். தவிர நபிகளாரின் தலைமையில் நடந்த எல்லாப் போர்களிலும் உமர் அவர்கள் பங்கேற்றார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஃகிலாஃபத் ஆட்சிப் பொறுப்பு உமர் (ரலி) அவர்களிடம்; ஒப்படைக்கப்பட்டது. மிகச் சிறந்த ஆட்சியை வழங்கினார்கள். சிரியா, ஈராக் மற்றும் எகிப்து போன்ற நாடுகளை வெற்றி கொள்ளும் பேற்றை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஸஹாபாக்களிலேயே சிறந்தவர்கள் உமர் (ரலி) அவர்கள்தாம்!

உமர் (ரலி) அவர்கள், ஃபஜ்ர் தொழுகையின்பொழுது அபூ லுஃலுஆ என்ற அடிமை ஒருவனால் குத்தப்பட்டு ஷஹீதானார்கள்! நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யபட்டுள்ள வீட்டிலேயே அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு அடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்! உமர் (ரலி) அவர்களின் மூலமாக சுமார் 537 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

கேள்விகள்

1) வணக்கவழிபாட்டில் நிய்யத் எப்படி அமைய வேண்டும்?

2) நிய்யத்தை நாவால் மொழிவதன் சட்ட நிலை என்ன?

3) பித்அத் என்பது என்ன?

4) அமல்கள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு இக்லாஸ் அவசியம் என்பதை 20 வரிகளில் விளக்கவும்.

5) ஹிஜ்ரத் என்றால் என்ன?

6) உமர் (ரலி) அவர்களைப்பற்றி நீ அறிந்திருப்பதென்ன?

7) அழைப்புப் பணியின் அவசியத்தைச் சுருக்கமாக விளக்கிக் கூறவும்.

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.