உறவுகளைப் பேணுதல்.

1655. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்”என்று கூறியது. ‘உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), ‘நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4830 அபூஹூரைரா (ரலி).

1656. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5984 ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி).

1657. ”ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2067 அனஸ் இப்னு மாலிக் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , . Bookmark the permalink.