சவுரி முடி செயற்கை சிங்காரங்கள் பற்றி.

1375. ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

புஹாரி : 5935 அஸ்மா (ரலி).

1376. அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, ‘என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்கள்.

புஹாரி :5205ஆயிஷா (ரலி).

1377. ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள். இச்செய்தி பனூஅசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!” என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்” என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்” என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!” என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4886 இப்னு மஸ்ஊத் (ரலி).

1378. முஆவியா (ரலி) ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), ‘மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?’ என்று கேட்டுவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுப்பதையும், ‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களின் பெண்கள் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன்.

புஹாரி : 3468 ஹூமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரலி).

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , . Bookmark the permalink.