மறைமுகமான பிரார்த்தனை

பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும்.

எனவே தான் நபிகள் ‘இறை அங்கீகாரத்துக்கு வலிமையாக மிக நெருங்கிய பிரார்த்தனை பார்வைக்கு அப்பாலுள்ளோர் ஒவ்வொருவரும் மற்றவருக்கு வேண்டி இறைஞ்சும் பிரார்த்தனையாகும்’ என்று கூறினார்கள்.

இன்னொரு ஹதீஸில் ‘கண்பார்வைக்கு அப்பாற்பட்ட சகோதரனுக்காக ஏதேனுமொரு துஆவைக் கொண்டு பிரார்த்தித்தால், பிரார்த்தித்தவனுடன் ஒரு மலக்கை அல்லாஹ் ஏவுவான். அம்மனிதன் பிரார்த்திக்கும் போதெல்லாம் இந்த மலக்கு ‘ஆமீன்’ கூறி நீர் மறைவான சகோதரருக்கு ஆசித்தவையெல்லாம் உமக்கும் உண்டு’ எனக் கூறுவாராம் என்று வருகிறது. (முஸ்லிம்)

பொதுவாக மனிதன் தன்னைப் போன்ற ஒருவனிடம் சென்று அவனால் புரிந்து நிறைவேற்றித் தரக்கூடியதைக் கேட்க வேண்டும். மனிதனால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமென்றால் இப்பிரார்த்தனையை அவனிடம் வேண்டலாம். ஆகவே ஒருவருக்கொருவர் தமக்கு மத்தியில் துஆக்களைக் கொண்டு பணிப்பது, பிரார்த்தனையை வேண்டுவது அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. அன்றியும், மனிதனால் செய்து முடிக்க இயலுமான வேலைகள், உதவி ஒத்தாசைகள் அனைத்தையும் பிறரிடம் வேண்டுவதற்கு அனுமதியுண்டு. படைப்பினங்களால் செய்ய இயலாத (அல்லாஹ்வுக்கு மட்டும் முடியுமான) செயல்களை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். வேறு எந்த சிருஷ்டியிடமும் (அது நபி, மலக்கு யாரானாலும் சரி) கேட்க கூடாது. சிருஷ்டியிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு மழை பெய்யச் செய்யுங்கள். காபிர்களுக்கு எதிராக எங்களூக்கு உதவி செய்யுங்கள். எங்கள் இதயங்களை நேரான வழியில் திருப்புங்கள் என்றெல்லாம் கேட்பது ஜாயிஸல்ல-ஹராமாகும்.

நபிகளின் காலத்தில் மூமின்களுக்குத் தொல்லைக் கொடுத்த ஒரு நயவஞ்சகனை விட்டும் தப்பித்துக் கொள்ள அபூபக்கர் (ரலி) இதர ஸஹாபிகளிடம் ‘எழுந்து வாருங்கள். இந்த முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள நபியிடம் உதவித் தேடுவோம்’ என்று கூறியதற்கு ‘என்னைக் கொண்டு உதவி தேடப்பட மாட்டாது. அல்லாஹ்வைக் கொண்டு தான் உதவி தேடப்படும்’ என்று நபியவர்கள் பதிலுரைத்தார்கள் (தபரானி). ஏனெனில் உதவியளித்தல் மனிதனால் முடியக்கூடியதல்ல. இறைவன் கூறுகிறான்: “நீங்கள் அல்லாஹ்விடம் உதவித்தேடிப் பிரார்த்தித்தபோது… அவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுப் பதிலளித்தான்” (8:9)

நபி மூஸா (அலை) தமது பிரார்த்தனையில் ‘இறைவா! புகழெல்லாம் உனக்கே. உன்னிடம் முறையிடப்படும். நீதான் உதவித் தேடப்படுகிறவன். உன்னைக் கொண்டே ஆதரவு தேடப்படும். உன்மீது தவக்கல் வைக்கப்படும். உன்னைத்தவிர வேறு எவருக்கும் இந்த சக்தியோ வல்லமையோ இல்லை’ என்று கூறினார்கள்.

மேலும் அபூ யஸீதுல் பிஸ்தாமி அவர்கள் ‘மனிதன் தன்னைப்போன்ற இன்னொரு மனிதனைக் கொண்டு உதவித் தேடல், தண்ணீரில் மூழ்கிறவன் தன்னைப் போல மூழ்கிக் கொண்டிருக்கும் இன்னொருவனைக் கொண்டு உதவித் தேடுவதற்குச் சமமாகும்’ என்று கூறினார்கள்.

மேலும் அறிஞர் அப்துல்லாஹ் அல் குறஷீ அவர்கள் ‘ஒரு சிருஷ்டி இன்னொரு சிருஷ்டியிடம் உதவி தேடுவது சிறைவாசம் கொண்ட இருவரில் ஒருவர் மற்றவரிடம் உதவி தேடுவதைப் போன்றது’ எனக் கூறினார்கள்.

இறைவன் கூறுகிறான்: “இவர்கள் கடவுள்கள் என அழைப்பவையும், தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கத்தால்) சமீபிப்பதைத் தேடிக் கொண்டும், அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர்கள் யார்? என்பதைத் தேடிக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயப்படுகின்றன. ஏனெனில் நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ மிக மிகப் பயப்படக் கூடியதே” (17:56-57)

அன்று மலக்குகளையும், அன்பியாக்களையும் அழைத்துப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன பதிலளித்து விளக்கம் கொடுத்தான் என்பதைப் பற்றி ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் சிலர் கூறியதும் நினைவு கூறத்தக்கது. (இதுபற்றி விளக்கம் முன்னரே தரப்பட்டுள்ளது.)

மலக்குகளையும், அன்பியாக்களையும் கூப்பிட்டு பிரார்த்திப்பதை அல்லாஹ் தடுக்கிறான். அத்துடன் நமக்காக அவர்கள் பிரார்த்திக்கிறார்கள். ஷபாஅத் செய்கிறார்கள் என்று சில இடங்களில் அறிவித்துள்ளான். ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப மூமின்களுக்கு துஆச் செய்பவர்களாக இருக்கலாம். நாம் அதைக் கவனிக்க வேண்டியதில்லை. நாம் இவர்களிடம் எதையும் கேட்கக் கூடாது. அன்பியாக்களும் ஸாலிஹீன்களும் அவர்கள் கப்றில் உயிருடன் இருந்த போதிலும் சரியே. கப்றில் உள்ளவர்கள் உலகில் உள்ளவர்களுக்குப் பிரார்த்திக்கிறார்கள் என்று கற்பனை செய்தாலும் கூட நாம் எதையும் அவர்களிடம் வேண்டக் கூடாது. ஏனெனில் இப்படி கேட்பது அவர்களைக் கொண்டு இணை வைக்கக் கோருகிறது. அவர்களுக்கு வழிபட்டு வணங்க வேண்டுமென்று தூண்டுகிறது. ஆனால் சிருஷ்டிகள் வாழ்ந்திருக்கையில் மட்டும் அவர்களால் செய்ய முடியுமான எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அது ஷிர்க்கின் பால் மனிதனை தூண்டாது. மட்டுமின்றி மலக்குகள் செய்கின்ற அமல்களும், காலஞ்சென்ற அன்பியாக்கள், ஸாலிஹீன்கள் செய்கின்ற செயல்களும் அல்லாஹ்வுடைய ‘அல் – அம்ருல் கவ்னீ’ என்ற விதிகளுக்கு உட்பட்டவையாகும். எனவே இந்த விதியை மாற்ற பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைகள் எந்த பயனையும் தராது.

மலக்குகள், நபிமார்கள் இவர்களை இரட்சகர்கள் என்று நினைத்துக் கொள்பவர் காஃபிர் என்று கீழ்வரும் ஆயத்து விளக்குகிறது: “ஒரு மனிதனுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின் அவர் மனிதர்களை நோக்கி ‘அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள்’ என்று கூறுவதற்கு உரிமையில்லை. ஆயினும் நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்து கொண்டும், ஓதிக் கொண்டும் இருப்பதன் காரணமாக இறையடியார்களாகி விடுங்கள். தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாகக் கொள்ளுங்கள் என்று அவர் உங்களுக்கு கட்டளையிட மாட்டார். இறைவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டதன் பின்னர் அவனை நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?” (3:79-80)

“(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என்று) எண்ணிக் கொண்டீர்களோ, அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்றுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை. அன்றி அவ்விரண்டிலும் (அவற்றை படைப்பதில்) இவற்றுக்கு எத்தகைய பங்குமில்லை. இதில் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவருமில்லை. அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர அவனிடம் பரிந்து பேசுவதும் பலனளிக்காது” (34:22-23)

“அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் சிபாரிசு செய்ய யார் இருக்கிறார்கள்” (2:255)

“அவனுடைய அனுமதிக்கு பிறகல்லாமல் பரிந்து பேசக்கூடியவர்களே இல்லை” (10:3)

“அவனையன்றி உங்களை இரட்சிப்பவனோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவனோ வேறில்லை” (32:4)

“(இணை வைப்போர்) தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். ஆகவே நபியே நீர் கூறும் வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்கு தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக்க உயர்ந்தவன்” (10:18)

ஸூரா யாஸீனில் வருகிறது. ஹபீபுன் நஜ்ஜாரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது சொல்கிறான்: “என்னை சிருஷ்டித்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள் திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) நான் கடவுளாக எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதி ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்து விடாது. என்னை அவற்றால் விடுவிக்கவும் முடியாது. அவன் ஒருவனையே நான் வணங்கா விட்டால் நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன். நிச்சயமாக நான் உங்களைப் படைத்துப் போஷிப்பவனையே விசுவாசிக்கின்றேன். ஆதலால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறினார்” (36:22-25)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…
This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.