அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?

அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி தேடப்பட வேண்டும்’ என்று அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் கூறியதாக குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் ‘உங்களுக்கு முன் வாழ்ந்திருந்தவர்கள் புதைகுழிகளைப் பள்ளிகளாக அமைத்தார்கள். எனவே நீங்கள் அப்படிச் செய்வதை விட்டும் தடுக்கிறேன்’ என்று கூறினார்கள். ‘புதைகுழிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கி விடாதீர்கள்’. (முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள் ‘கப்றுகள் மீது உட்காராதீர்கள். கப்றுகளைப் பார்த்து (முன்னோக்கி) தொழாதீர்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மேலும் ‘மூன்று பள்ளிவாசல்களை நோக்கி அல்லாது வேறு எந்தப் பள்ளிகளுக்கும் பிரயாணம் செய்யப்பட மாட்டாது. அவற்றுள் ஒன்று எனது மதீனா பள்ளி. மற்றொன்று மக்கா பள்ளி. மூன்றாவது பைத்துல் முஹத்தஸிலுள்ள அக்ஸா பள்ளி’ என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இமாம் மாலிக்கிடம் ‘நபி (ஸல்) அவர்களின் கப்றுக்கு வருவதாக நேர்ச்சை நேர்ந்துக் கொண்டால் அதன் சட்டமென்ன? என்று ஒரு மனிதர் வினவினார். கப்றுக்கு வருவதாகக் கருதினால் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபியின் பள்ளிவாசலுக்கு வருவதாக கருதினால் கண்டிப்பாக அந்த நேர்ச்சையை நிறைவேற்றியாக வேண்டும்’ என்று இமாமவர்கள் பதிலளித்தார்கள். பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸையும் எடுத்துரைத்தார்கள். (புகாரி, முஸ்லிம்) காளீ இஸ்மாயில் என்பவரும் தமது மப்ஸூத் என்ற நூலிலும் இதைக் கூறியுள்ளார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.