பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவர்மீது பத்துமுறை ஸலவாத்துச் சொல்வான். பிறகு பாங்குடைய துஆவில் எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தியுங்கள். இந்த வஸீலா சுவனத்தில் வழங்கப்படும் மாபெரும் ஒரு பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒரே ஒரு மனிதருக்கு அப்பதவி வழங்கப்படுகிறது. அது எனக்கு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன். ஆகவே எனக்காக எவர் அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேட்கிறாரோ அவர் மறுமையில் என்னுடைய ஷபாஅத்துக்கு உரியவராகிறார்’. (முஸ்லிம்)

ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்கு பாங்கு சொல்லப்படுவதைக் கேட்கும்போது ‘நிலையான தொழுகையின் ரப்பே! பரிபூரணமான இப்பிரார்த்தனைகளின் நாயனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மதிப்பையும், கண்ணியத்தையும், உயர்ந்த பதவிகளையும் அளித்தருளுவதுடன் அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற பதவியையும் அருள்வாயாக! புகழுக்குரிய ஸ்தானத்தில் அவர்களை மறுமையில் அனுப்பியருள்! இவ்வாறு செய்வதாக இறைவா நீ வாக்களித்துள்ளாய்! நீ வாக்குறுதி பிறழாதவன்’ என்று எவர் கூறினாலும் அவருக்கு மறுமையில் என் ஷபாஅத் கிடைத்து விடும்.’ (புகாரி). இப்படி முஸ்லிம்கள் வஸீலா கேட்கும்படி நாயகம் பெரிதும் விரும்பினார்கள். நபிகளுக்கு வஸீலாவைக் கேட்பதினால் முஸ்லிமானவன் நபிகள் (ஸல்) அவர்களின் சிபாரிசுக்குரியவனாக ஆகி விடுகிறான். ஒருமுறை ஸலவாத்துச் சொல்வதினால் அல்லாஹ் அவன் மீது பத்து விடுத்தம் ஸலவாத்துச் சொல்வான்.

ஆக நபிகளுக்கு வேண்டி நாம் செய்கிற சின்னஞ்சிறு வேலைகளுக்குப் பதிலாக மாபெரிய கூலிகளை இறைவன் தருகிறான் என்ற கருத்தை நபிகள் (ஸல்) விளக்கி ஸலவாத்துகள், துஆக்கள் போன்றவற்றை ஏராளம் சொல்ல வேண்டுமென்று தூண்டுதல் அளித்திருக்கிறார்கள். முஸ்லிம்களை நல்லமல்களில் நீடித்திருக்கின்ற பிரேரணைகளைச் செய்திருக்கிறார்களேயொழிய நபிகள் தமக்குரிய தேவைகளை முறையிட்டுக் கூறி விண்ணப்பித்தார்களென்று விளங்கி கொள்ளப்பட மாட்டாது. ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் உம்றாவுக்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டினார்கள். அதற்கு நபிகள் அனுமதிக் கொடுத்து விட்டு உமரிடம்: (‘என்னுடைய சகோதரரே! உமது பிரார்த்தனையில் எங்களை மறந்து விடாதீர்’ என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

இங்கே நாம் ஒரு படிப்பினையைப் பெற வேண்டும். நபிகள் (ஸல்) அவர்கள் தமக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்று உமரிடம் கூறியது ஸலவாத்தையும், வஸீலாவையும், உயர்ந்த பதவியையும் கேட்க வேண்டுமென்று மக்களிடம் பணித்தது போன்றதாகும். உமரிடம் துஆச் செய்ய வேண்டுமென்று ஏவினார்கள். முஸ்லிமை நற்கிரியைகளின்பால் தூண்டி உற்சாகமளித்து முஸ்லிம்களுக்குப் பேருதவி செய்வதைத் தவிர நபிகளுக்கு வேறொன்றும் இலட்சியமாக இல்லை. எத்தனை எத்தனையோ நன்மைகளைச் செய்ய வேண்டுமென்று நபிகள் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பணித்திருக்கிறார்கள். அதிலொன்றுதான் தமக்காக உமரிடம் துஆ கேட்க வேண்டுமென்று பணித்ததும். உம்றாவுக்கு அனுமதிக் கேட்ட உமருக்குப் பயனளிக்கவல்ல செயலைப் புரியத்தூண்டி, அவருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்பதே நபிகளின் இலட்சியமாகும். நபிகளின் சொல்லுக்கிணங்கி முஸ்லிம்கள் இத்தகைய நற்கருமங்களை நிறைவேற்றினால், நபிக்காக துஆச் செய்தால் நபிகளும் அதனால் பலனடையாமலிருக்கப் போவதில்லை. அவர்களும் மக்கள் கேட்கிற துஆவினாலும், இதர அமல்களினாலும் பயன் பெறுவார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து: ‘நாயகமே! பிரார்த்தனையின் போது நான் தாங்கள் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்லி வருகிறேன். இருப்பினும் சுமார் எத்தனை முறை ஸலவாத்துகளை நான் துஆவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ‘நீர் விரும்பிய மாதிரி சொல்லும்’ என்று நபிகள் பதிலுரைத்தார்கள். உடனே அம்மனிதர் ‘அப்படியானால் எனது பிரார்த்தனையின் கால்பகுதியைத் தாங்கள் மீது ஸலவாத்துச் சொல்வதில் கழிக்கவா? என்றார். உடனே நபியவர்கள் முன்னர் கூறியது போல ‘நீர் விரும்பியது போல ஸலவாத்துகள் சொல்லும், கால்பங்கை விட அதிகம் சொன்னாலும் அது மிக நல்லது தான்’ என்றார்கள். அதைக் கேட்டதும் அம்மனிதர் ‘அப்படியானால் என் துஆவின் பாதியைத் தாங்கள் மீது ஸலவாத்துச் சொல்வதில் கழிக்கவா?’ என்று வினவ, அதற்கும் நபிகள் முன்னர் கூறியது போல பதில் கூறிவிட்டு: ‘அதிகம் சொன்னாலும் உமக்கு நன்மைதான் கிடைக்கும்’ என்றார்கள். இதைக் கேட்ட அம்மனிதர்: ‘அப்படியென்றால் என் துஆவின் மூன்றில் இரு பகுதிகளில் நான் ஸலவாத்துகள் சொல்கிறேனே’ என்றார். அதற்கும் நபிகள் (ஸல்) அவர்கள் முன்னர் கூறியது போல் கூறி ‘இன்னும் அதிகமாகச் சொன்னால் உமக்குத்தான் நல்லது’ என்றார்கள். உடனே அம்மனிதர் நாயகமே! என் பிரார்த்தனைகள் முழுவதையும் ஸலவாத்துக்காகவே ஆக்கி விடுகிறேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் உம் எண்ணங்கள் நிறைவேற்றப்படும். உமது பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று கூறினார்கள்.

அதைப்பற்றி நல்ல பல விளக்கங்கள் ‘பக்தாது வினாக்களின் விடைகள்’ என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். அம்மனிதர் தம் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திப்பதற்கு பதிலாக நபியின் மீது ஸலவாத்துகளை மட்டும் கூறி துஆவை முடித்துக் கொள்கிறார். இந்த ஸலவாத்துகள் அவர் துஆக்களின் இடத்தை நிரப்புகின்றன. இதிலிருந்து மனிதன் தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பதற்குப் பதிலாக ஸலவாத்துக்களை மாத்திரம் ஓதிக் கொண்டிருந்தாலும் அந்த மனிதரின் இலௌகீக, வைதீகத் தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன என்பதனை விளங்க முடிகின்றது. அல்லாஹ் அவருக்கு இது விஷயத்தில் பொறுப்பேற்றிருக்கிறான். நபிகளுக்கு ஒரு விடுத்தம் கூறும் ஸலவாத்துக்கு பத்து முறை அல்லாஹ் கூலி கொடுக்கிறான் அல்லவா?

மனிதன் ஒவ்வொரு மூமினுக்கும் தனித்தனியாக துஆச் செய்ய நினைக்கிறான் என வைத்துக் கொள்வோம். இந்த துஆக்களுக்கு மலக்குகள் ஆமின் கூறி ‘உனக்கும் அதுபோல் கிடைக்கட்டும்’ என்று பதிலுரைத்து துஆ அங்கீகரிக்கப்பட்டது என்றால்கூட இத்தகைய துஆக்களை மாற்றி ஸலவாத்தாக ஆக்கி விட்டால் இந்த ஸலவாத்து அவனுடைய மேற்கூறிய அங்கீகரிக்கப்படத் தகுதியுள்ள துஆவுக்கு ஈடு செய்கிறது. ஆகவே மனிதன் ஸலவாத்தினால் தன் தேவைகளை அடைகிறான். ஏனெனில் மூமின்களுக்கு துஆச் செய்வதைக் காட்டிலும் நபிக்காக துஆ (ஸலவாத்து) செய்வது எத்தனையோ மேன்மைக்கு உரியதல்லவா? ஆகவே மூமினுக்கு துஆச் செய்வதைக் காட்டிலும் நபிகளுக்கு ஸலவாத்து உரைப்பதில் ஏராளமான கூலிகளை மனிதன் அடைகிறான்.

‘எனக்காக துஆச் செய்யுங்கள்’ என்று ஒருவரை மற்றவர் வேண்டினார் என்று வைத்து கொள்வோம். இந்த வேண்டுதலினால் வேண்டியவனும் வேண்டப்பட்டவனும் பயப்பெற வேண்டுமென ஒரே இலட்சியம் கருதப்பட்டால் இத்தகைய வேண்டுதல்கள் நன்மை தரும். இதில் பெருமானாரின் முன்மாதிரியைக் காண முடிகிறது. ஏனெனில் ஒரு ஸலவாத்தை நாம் நபிகள் (ஸல்) அவர்கள் மீது சொல்வதனால் நபி (ஸல்) அவர்கள் பத்து ஸலவாத்தை நம்மீது நல்குகிறார்களல்லவா? இது போன்ற விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் இஸ்லாம் ஆதரிக்கிறது. ஏனெனில் இதில் தமக்கும், மற்றவருக்கும் நலன்கள் நாடப்படுகிறது. ஆனால் பிறரிடம் கேட்கும் போது நம் நலன்கள் மட்டும் கருதப்பட்டால் இம்மாதிரியான வேண்டுதல்களை இஸ்லாம் வெறுக்கிறது. ஏனெனில் இதில் பெருமானாரின் முன்மாதிரி இல்லை. அவர்கள் பத்து ஸலவாத்துகளை பிறருக்கு நாடியதற்கப்பால் தானே தமக்காக ஸலவாத்துச் சொல்ல வேண்டுமென பணித்தார்கள். சுயநலம் கருதி இப்படித் தேவைப்படுவதை விட அல்லாஹ்விடம் ஆதரவு வைத்துக் கொண்டு சும்மா இருந்து விடுவது நல்லது.

இத்தனை நேரமும் நாம் விளக்கியது உயிருடனிருப்பவனிடம் கேட்பதைப் பற்றியது. அதில் அனுமதிக்கப்பட்ட முறைகளை நாம் விளக்கினோம். ஆனால் இறந்து மடிந்த மைய்யித்திடம் கேட்பதும், கெஞ்சுவதும் முழுக்க முழுக்க விலக்கப்பட்ட தீய வினையாகும். சுன்னத்துமில்லை. கடமையுமில்லை. அனுமதிக்கப்பட்ட ஜாயிஸான செய்கையும் கூட ஆகாது. முற்றிலும் இஸ்லாம் மார்க்கம் ஹராமாக்கி வெறுத்தொதுக்கிய கொடிய தீய செய்கை. இதை ஸஹாபாக்கள் எவரும் செய்யவில்லை. தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் எல்லோரும் இதை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். ஈமானுக்கு இழுக்கு ஏற்படும் ஒரு செய்கையை எவரால் தான் மதித்துக் கூற முடியும். மனிதனுடைய வாழ்க்கையின் இலட்சியத்துக்கே கேடு விளைவிக்கும் ஒரு நச்சு வினையை யாராவது அனுமதிப்பார்களா? பாயிதா இல்லாத வீண் செயல்கள் விசுவாசத்தைப் போக்கடித்து விடுகிறதல்லவா? இஸ்லாம் கூறும் போதனைகள் இம்மை, மறுமையில் பற்பல பலாபலன்களை அளிக்கிறது. நன்மை பயக்காத போதனைகளை போதிப்பது இஸ்லாம் மார்க்கமாகாது. காலம் சென்றவர்களிடம் தேவைகளை முறையிட்டுக் கெஞ்சுவதில் என்ன நன்மையை மனிதன் காணப் போகிறான்?

முன்னர் நாம் விளக்கிய சம்பவத்துக்கு வருவோம். நபிகள் (ஸல்) அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்பதின் தாத்பரியம் பொதுவாக மக்களுக்கு நன்மை செய்தல் என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் ஏவல்களனைத்தும் இதை விளக்கிக் காட்டுகின்றன. அவர்களின் ஏவல்களைப் பார்க்கும்போது உயிருடனிருந்தாலும், காலம் சென்ற பின்னரும் பிறருக்கு உதவுதல் என்ற தாத்பரியத்தையே காண முடிகிறது.

உதாரணமாக மைய்யித்துத் தொழுவதை எடுத்துக் கொள்வோம். மேலும் மூமின்களின் கப்றுகளில் ஸியாரத் செய்தல், அவர்கள் மீது கப்றில் ஸலாம் சொல்லுதல், அவர்களுக்கு பிரார்த்தித்தல் இவை அத்தனையுமே இறந்தவர்களுக்கு உதவுதல் என்ற தலைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. இதன் விதி வாஜிபாக இருக்கட்டும் அல்லது ஸுன்னத்தாக இருக்கட்டும். எதுவாயினும் பிறருக்கு உதவுதல் எனும் தாத்பரியத்தையே இதில் காண முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் அதை ஏவியுள்ளார்கள். மற்றொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மக்கள் அல்லாஹ்வுக்கு வேண்டித் தொழ வேண்டும், ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் தொழுகை, ஜகாத் இவற்றைப் பற்றி சிந்தித்தாலும் தொழுகை அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அது அவனுடைய ஹக்கு. படைப்பினங்கள் தொழுகையை அவசியம் நிறைவேற்ற வேண்டும். மேலும் ஜகாத் ஏழை எளியோருக்குச் சொந்தமானது. அது அவர்களின் ஹக்கு. அதையும் செல்வந்தர்களே கொடுத்து தீர வேண்டும். இதன் அடிப்படையில் தான் நபிகள் (ஸல்) அவர்கள் இதையும் ஏவியிருக்கிறார்கள். அடியார்களின் பாத்தியதைகளையும் கொடுத்து நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ஏவினார்கள்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் காட்டுகின்ற வழிகளெல்லாம் மனிதர்களுக்கு நன்மைகள் நாடப்படுகின்றன. மக்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட வேண்டும். அவ்வழிபாட்டில் யாரையும் அவனுடன் பங்கு சேர்க்கக் கூடாது. மனிதனுக்கு உதவுதலும், இறைவனுக்கு வழிபடும் ஒரு அம்சமாகவே மதிக்கப்படுகிறது. ஜனாஸா தொழுகை என்பது மைய்யித்துக்காக கேட்கப்படும் ஒரு பிரார்த்தனையாகும். மனிதன் இறந்தாலும் உதவ வேண்டுமென்ற நோக்குடன் இது கடமையாக்கப்பட்டுள்ளது. மூமின்களுடைய கப்றை ஸியாரத் செய்வதும் ஒரு வழிபாடாகும். அங்கு மூமினுக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்ற நன்னோக்குடன் இது ஸுன்னத்தாக்கப் பட்டிருக்கிறது.

இப்படி இஸ்லாம் அனுமதி வழங்கும் அனைத்து வழிபாடுகளிலும் மனிதனின் நன்மைகளையே நாடப்படுகின்றன. மார்க்கத்தின் பெயரால் புரியப்படும் ஒவ்வொரு அமலும் மனிதனுக்குப் பயனளிக்கத்தக்க செய்கையாய் அமைதல் வேண்டும். ஆனால் ஷைத்தான் தன் ஆதரவாளர்களைத் தன் வசமாக்கிக் கொண்டு அவர்களை தனக்குக் கீழ்படிய வைத்து விட்டான். காலம் சென்றவர்களை ஸியாரத் செய்வதிலும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதின்பால் மக்களின் இலட்சியத்தைத் திருப்பி விட்டான். கப்றில் புதையுண்டு இருக்கும் மைய்யித்துக்கு துஆச் செய்ய வேண்டுமென்று நினைப்பதைத் திருப்பி அவருக்குத் தீங்கு செய்யும் எண்ணத்தைப் புகுத்தி விட்டான். இதனால் நபிமார்கள், ஸாலிஹீன்கள், அவ்லியாக்கள் இவர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வதின் நோக்கம் இவர்களிடம் தத்தம் தேவைகளைச் சமர்ப்பித்தல் என்றும், சமாதிகளில் பரகத்திருக்கிறது, அங்கு துஆச் செய்வதில் ஏதோ தனி விசேஷமிருக்கிறது, துஆவும் அங்கீகரிக்கப்படும் என்றெல்லாம் மக்கள் தப்பெண்ணம் கொள்ளுமளவுக்கு அவர்களின் மனதை ஷைத்தான் திருப்பி விட்டான். மைய்யித்துக்கு ஸலாம் கூறாமலும், துஆ கேட்காமலும் தம் தேவைகளை மட்டும் விண்ணப்பித்து வருதல் போன்ற வெறும் அனாச்சாரத்தின் பால் தம் ஆதரவாளர்களை ஷைத்தான் திருப்பி விட்டான்.

இதனால் மக்களின் எண்ணமே மாறி விடுகிறது. ஸியாரத்துக்குச் சென்று முஸ்லிம்கள் தம் ஈமானைப் பறிகொடுத்து விட்டுத் திரும்புகிறார்கள். ஜனாஸா தொழும்போது மனிதனின் எண்ணம் ஜனாஸாவுக்கே தொழுவதாக இருக்க வேண்டும் என்று சொல்லி மக்களை ஷைத்தான் ஏமாற்றுகிறான். இதனால் மக்கள் விரைவில் முஷ்ரிக்குகளாகி விடுகிறார்கள். இவர்கள் தமக்குத்தாமே குற்றம் செய்து, மைய்யித்துக்கும் தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். பற்பல தீவினைகளைப் புரிந்து, அக்கிரமக்காரர்களாக மாறி விடுகிறார்கள். அல்லாஹ்வும், ரஸூலும் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நிர்ணயம் பண்ணித் தந்திருக்கிறார்களோ, அவற்றில் ஏகத்துவத்தின் உயிரோட்டத்தைக் காண முடிகிறது. அவற்றில் நேர்மையையும், நெறியையும் காண முடியும். அவற்றில் சிருஷ்டிகளுக்குச் சாதகமான பற்பல நன்மைகளையும் பார்க்கலாம். கலப்பறுதலையும் (இக்லாஸையும்) பார்க்கலாம். அல்லாஹ்வின் விதிகளில் அடியார்கள் யாவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் பல ஆதாயங்கள் இருக்கின்றன. அல்லாஹ் சொல்லாத ஒன்றை வழிபாடாக நினைத்துச் செய்யும்போது, ஏகத்துவத்திற்குப் பதிலாக ஷிர்க்கையும், அநீதியையும், நெறிகேட்டையும், ஒழுக்கமின்மையையும் அதில் காண முடிகிறது. உபகாரத்துக்குப் பதிலாக அபகாரத்தையும், கெடுதல்களையும் அதில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அல்லாஹ்: “வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்களுக்கும், உற்றார்களுக்கும் உதவுங்கள்” என கூறுகிறான். (4:36)

இஸ்லாத்தின் ஏவல், விலக்கல்கள் எப்போதும் உயர்ந்த நற்பண்புகளைப் போதிக்கின்றன. இறைவன் இவ்வொழுக்கங்களை மிக நேசிக்கிறான். ஒழுக்கக் கேட்டையும், தீய குணத்தையும் வெறுக்கிறான். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நற்பண்புகளைப் பரிபூரணமாக்குவதற்காக நான் நபியாக அனுப்பப் பட்டிருக்கிறேன்’. (ஹாகிம்)

பிறிதொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘உயர்ந்த கரம், தாழ்ந்த கரத்தை விட மேன்மையானது’. நபி (ஸல்) அவர்கள் இன்னுமொரு ஹதீஸில் கூறுகிறார்கள்: ‘உயர்ந்த கரத்துக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் தன்மையுண்டு. தாழ்ந்த கரம் யாசித்துக் கெஞ்சி பிறரிடம் தேவைப்படுகின்ற கரமாகும்’. அப்படியென்றால் கேட்பவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? யாசிப்பவன் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும்? கெஞ்சுகிறவன் எப்போதும் மற்றவருக்குத் தீயதே செய்கிறானே தவிர, நல்லதைச் செய்ய மட்டான்.

துன்பங்கள் வந்தால் அல்லாஹ்விடம் கெஞ்ச வேண்டும். இதில் தான் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) காண முடிகிறது. இங்கேதான் ஏகத்துவத்தின் ஒளியும் பிரதிபலிக்கும். அடியானைப் பற்றி அவன் உண்மையானவன், நேர்மையானவன், தன் பொறுப்புகள் அனைத்தையும் தன் இரட்சகனான அல்லாஹ் ஒருவனிடமே பாரம்சாட்டி ஒப்படைத்து அவனை மெய்யாக நேசிக்கும் சத்திய விசுவாசி என்றெல்லாம் அவனைப் போற்ற முடியும். இப்படியிருக்க துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தால் சிருஷ்டிகளிடம் சென்று கெஞ்சி, அவற்றை ஆதரவு வைத்து, தன் பொறுப்புகளைப் பாரம்சாட்டி இறைவனை நேசிப்பது போன்று அவற்றை நேசித்து நடப்பவனிடம் தவ்ஹீதைக் காண முடியுமா? எப்படி அவனை சத்திய விசுவாசி என்று சொல்வது? மனிதன் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடந்து அவனிடம் மட்டும் இரங்கி மன்றாடினால் இவனைப் பற்றி உண்மை விசுவாசி என சொல்லப்படும். சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்திப்பவனுக்கும், ஈமானுக்குமிடையில் பெரும் தொலைவு இடைவெளி இருக்கிறதல்லவா?

நபிகளின் ஏவல்கள் அனைத்திலும் இம்மை, மறுமையின் நன்மைகளைக் காண முடியும் என்று கூறினோம். இறைவழிபாடு, இறைவனுக்கு இணை-துணை கற்பிக்காமலிருத்தல்,பெற்றோருக்கும், மற்றோருக்கும் உதவி செய்தல் இம்மூன்று நற்பண்புகளையும், பற்பல சீரிய ஒழுக்கங்களையும் நபியவர்கள் போதித்துச் செனறார்கள். நபிகளின் அனைத்துப் போதனைகளையும் குறிப்பாக இம்மூன்று சீரிய பண்பாடுகளையும் பேணுகிறவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளுண்டு. இதற்கு மாறு செய்கிறவர்களை நபியவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். தவறுகள் புரிந்தால் துன்பங்கள் பலவற்றை மக்கள் சந்திக்கக் கூடும். ஷைத்தான் என்றுமே நபியவர்களின் கொள்கைகளுக்கு மாறுசெய்கிறவன் அல்லவா? அவர்களுக்கு மாறுசெய்வதையே என்றும் அவன் எதிர்பார்க்கிறான். இதைத் திருமறையும் நன்றாக விளக்குகிறது: “ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?”

“(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62) “என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இராது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர”. (15:42)

 “(நபியே!) நீர் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக் காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக் கொள்ளும். எவர்கள் விசுவாசம் கொண்டு தங்கள் இறைவன் மீது தவக்குல் வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைத்திருப்பவர்களிடமும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்”. (6:98-100)

“எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (சினேகிதனாக) காட்டி விடுவோம். அவன் இவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுவான். நிச்சயமாக அவைதாம் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. எனினும் அவர்களோ தாங்கள் நேரான பதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்”. (43:36-37)

“நிச்சயமாக நாம்தாம் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும், அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை இரட்சித்துக் கொள்வோம்”. (15:9)

“நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகின்றானோ அவன் வழிதப்பவும், நஷ்டமடையவும் மாட்டான். எவன் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாக எழுப்புவோம். அவன் என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய். நான் (உலகில்) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான். அதற்கு இவ்வாறே நம் வசனங்களும் உன்னிடம் வந்தன. நீ அவற்றை மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று இறைவன் கூறுவான்”. (20:123-126)

“அலிஃப், லாம், மீம், ஸாத். (நபியே! இவ்) வேதம் உம்மீது அருளப் பெற்றுள்ளது. இதைப் பற்றி உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு நெருக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசம் கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் அருளப் பெற்றுள்ளது. (மனிதர்களே!) உங்களுக்கு உங்கள் இறைவனால் அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு) பாதுகாப்பாளர் (களாக ஆக்கி அவர்) களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே”. (7:1-3)

“(நபியே! இது) வேதநூல்.இதனை நாமே உம்மீது அருட்செய்திருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவீராக. (அப்பிரகாசமே) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய, யாவரையும்) மிகைத்தோனின் நேரான வழியாகும். அந்த அல்லாஹ் (எத்தகையோனென்றால்) வானங்களிலும், பூமியிலும் இருப்பவை யாவும் அவனுக்கே சொந்தமானவையே. ஆகவே நிராகரிப்போருக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்கு) பெருங்கேடுதான்”. (14:1-2)

“(நபியே!) உமக்கு நம்முடைய கட்டளைகளில் உயிரானதை (குர்ஆன்) வஹி மூலம் அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், விசுவாசம் இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும் (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு இதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீர் (இதன் மூலம் ஜனங்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர். இதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை (யாவையும்) அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீர் அறிந்து கொள்வீராக”. (42:52-53)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.