Feed on
Posts
Comments

11 -  ஏராளமான நன்மைகளைப் பெறுவது எப்படி?

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருட்பேறும் உயர்வும் மிக்கவனாகிய தம் இறைவன் கூறியதாக அருளினார்கள்: ‘திண்ணமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்து விட்டான்’

பிறகு அதற்கு விளக்கம் அளித்தார்கள்: ஒருவன் ஒரு நன்மையை நாடினால் அதனை அவன் செயல்படுத்தாவிட்டால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். மேலும் ஒருவன் நன்மை செய்ய நாடி அதனைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்து கொள்கிறான். அது எழுநூறு மடங்குகளாக ஏன் அதற்கும் அதிகமாக ஏராளமான மடங்குகளாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது!

ஒருவன் ஒரு தீமையை நாடினான். ஆனால் அதைச் செய்திடவில்லை என்றால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். ஆனால் தீமையை நாடி அதைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனை ஒரேஒரு தீமையாகத்தான் பதிவு செய்கிறான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

மனிதர்களின் செயல்களை மட்டுமல்ல அவற்றிற்குத் தூண்டுகோலாய் அமையும் நிய்யத்-எண்ணங்களையும் இறைவன் கவனிக்கிறான். அவை ஒவ்வொன்றிற்கும் தனது அறிவு ஞானத்திற்கு ஏற்ப நற்கூலி தண்டனை வழங்குகிறான். இவ்வாறு மனிதனுக்குரிய நன்மை-தீமைகளை இறைவன் பதிவு செய்வது இருவகையாய் உள்ளது.

லவ்ஹுல் மஹ்பூழ் எனும் மூல ஏட்டில் பதிவு செய்தல்

- பேரண்டத்தில் நிகழ்கிற எல்லாவற்றையும் அந்த மூல ஏட்டில் அல்லாஹ் பதிவு செய்கிறான். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘திண்ணமாக நாம் ஒவ்வொன்றையும் ஒருகுறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கிறோம்’ (54: 49)

மற்றோரிடத்தில், ‘ஒவ்வொரு சிறிய – பெரிய விஷயமும் எழுதப் பட்டுள்ளது(54: 53) என்று கூறுகிறது.

நன்மைகளையும் தீமைகளையும் – மனிதன் அவற்றைச் செய்கிற பொழுது பதிவு செய்தல்

இவ்விரண்டையும் வேறொரு வார்த்தையில் விளக்குவதானால் இவ்வாறு சொல்லலாம்: ஒன்று முந்தைய பதிவு. மற்றொன்று பிந்தைய பதிவு.

முந்தைய பதிவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்திட முடியாது. அல்லாஹ் நமக்கு நன்மையைப் பதிவு செய்துள்ளானா? தீமையைப் பதிவு செய்துள்ளானா? என்பதை – அவை நிகழும் முன்னர் யாரும் அறிய முடியாது. தொடர்ந்து படிக்க »

10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே!

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது.

அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் – தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான். ஒரு குற்றத்தை அவரை விட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.

பள்ளிவாசலில் நுழைந்து விட்டாரெனில் – தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம் வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்: யா அல்லாஹ், இவருக்கு அருள் பொழிந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு என்று! அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் தொழுகையும் ஒன்று. இது நாள்தோறும் ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையான தொழுகையைப் பள்ளிவாசல் சென்று இமாம் – ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதாவது ஒருவரை இமாமாக -தலைவராக முன்னிருத்தி அவர் பின்னால் எல்லோரும் அணிவகுத்து நின்று கூட்டான முறையில் நிறைவேற்றுவது கடமை. இத்தகையக் கூட்டுத் தொழுகையின் அவசியத்தையும் சிறப்பையுமே இந்நபிமொழி எடுத்துரைக்கிறது.

இமாம் – ஜமாஅத்துடன் நிறைவேற்றும் ஒரு தொழுகைக்கு இருபது சொச்சம் (மற்றோர் அறிவிப்பின்படி) இருபத்தேழு நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் ஜமாஅத்துடன் தொழுவதென்பது அல்லாஹ் விதித்த முக்கியமானதொரு கடமை. அதனைப் பேணுவதற்கே இத்துணை சிறப்பு!

சிலரிடம் தவறான கருத்தொன்றுள்ளது. அதாவது ஜமாஅத்துடன் தொழுவது கடமையானதல்ல. ஸுன்னத்தானது – சிறப்பானது மட்டுமே என்று வாதிடுகின்றனர். அதற்கு இதுபோன்ற நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர். தொடர்ந்து படிக்க »

9. இருவரும் குற்றவாளிகளே!

அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: நிச்சயமாக அவன் தன் சகோதரனைக் கொலை செய்யப் பெரிதும் ஆசைப்பட்டவனாக இருந்தான்” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக்கொண்டு மோதிக் கொண்டால்… என்பதன் கருத்து இருவரும் பரஸ்பரம் கொலை செய்யும் எண்ணத்தில் வாளை உருவித் தாக்குதல் தொடுத்தனர் என்பதாகும். வாட்கள் என்று சொல்லப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டிற்காகவே! கத்தி, துப்பாக்கி, கைக்குண்டு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கும்.

கொலைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தைக் கையிலேந்தி முஸ்லிம்கள் இருவர் மோதிக்கொண்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்தால், கொன்றவன் -கொல்லப்பட்டவன் இருவருமே நாளை மறுவுலகில் நரக வேதனை எனும் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும்!

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது: அதாவது கொலை செய்தவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இதில் நியாயம் உண்டு. ஏனெனில் அவன் வேண்டுமென்றே ஓர் இறை நம்பிக்கையாளனைக் கொலை செய்துள்ளான். அதற்கான தண்டனையிலிருந்து அவன் தப்பிட முடியாதுதான்! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேணடுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான். சபித்தான். மேலும் பெரியதொரு தண்டனையையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்.” (4 : 93)

ஆனால் கொலை செய்யப்பட்டவனுக்கு ஏன் தண்டனை, மறுமையில்? இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினா எழுப்பினார்கள், அபூ பக்ரா (ரலி)- ‘இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனும் ஏன் நரகம் செல்ல வேண்டும்?” தொடர்ந்து படிக்க »

8. இறைவழிப்போரும் இலட்சியமும்

அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ அவர்தான் இறைவழியில் உள்ளவர்’ (நூல்: புகாரி, முஸ்லிம் )

தெளிவுரை

இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காக… எனும் வார்த்தை அல்லாஹ்வுக்காகப் போரிடும் எண்ணத் தூய்மையைச் சுட்டிக் காட்டுகிறது. இதனடிப்படையில் தான் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழியை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.

வீரம், மனமாச்சரியம், முகஸ்துதி ஆகிய மூன்று நோக்கங்களில் ஒன்றுக்காகப் போர் செய்வது பற்றி வினவப்பட்டது.

வீரத்திற்காகப் போர் செய்வதன் கருத்து: மாவீரன் ஒருவன் போர்க்களம் புக வேண்டும். தன் வீர சாகசங்களை வெளிப்படுத்த வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறான். அதற்கொரு களம் அவனுக்குத் தேவைப்படுகிறது. போர்ச் சூழலை யாரேனும் தோற்றுவிக்க மாட்டார்களா என ஓயாது விரும்புகிறது அவனது உள் மனம்! இந்த மனநிலையே போர் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது!

மனமாச்சரியத்திற்காகப் போர் செய்வதென்பது, மொழி, இனம், நாடு போன்ற குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் போர் செய்வதாகும். தொடர்ந்து படிக்க »

7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை!

அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்)

தெளிவுரை

இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? உங்களது தோற்றம் அழகானதா? அலங்கோலமானதா? நீங்கள் பிறந்தது உயர்ந்த குடும்பத்திலா? தாழ்ந்த குடும்பத்திலா? இதேபோல் உங்களிடம் செல்வம், செல்வாக்கு உள்ளதா? பட்டம், பதவியைப் பெற்றுள்ளீர்களா? இவற்றை வைத்து எந்த மனிதனுக்கும் இறைவன் கண்ணியம் அளிப்பதில்லை. இவற்றில் எதனையும் அளவுகோலாய்க் கொண்டு மனிதர்களை இறைவன் தரம் பிரிப்பதில்லை.

ஆனால் ஓரே ஓர் அம்சத்தைக் கொண்டு மனிதர்களை அவன் தரம் பிரிக்கிறான். அதுவே பயபக்தியும் நல்லொழுக்கமும் கொண்ட தூயவாழ்வு! ஆம்! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதனை அடிப்படையாகக் கொண்டதே! இறைவனுக்கு அஞ்சி வாழ்பவர் யாரோ அவரையே கண்ணியமும் உயர்வும் உடையவராக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அவரே அவனிடத்தில் அதிகம் நெருக்கமானவராகிறார். நல்லொழுக்கம் தவறியவர் இறைவனிடம் தரம்தாழ்ந்தவர் மட்டுமல்ல தண்டனைக்கு உரியவரும்கூட!

குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது: ‘ஓ மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைத்தோம். பிறகு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியது, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டே! நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் அதிகக் கண்ணியமானவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்! திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான் ” (49: 13)

இதுதான் குர்ஆனின் போதனை. மனித குலத்திற்குச் சிறப்பும் உயர்வும் அளிக்கவல்ல இஸ்லாமிய சன்மார்க்கத்தின் அடிப்படைச் சித்தாந்தம். தொடர்ந்து படிக்க »