Feed on
Posts
Comments
Mon
28
Feb
2005

பாடம் – 6

நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும்.

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுவீராக’ (39:38)

பித்தளை மோதிரமொன்றை அணிந்திருந்த ஒருவரிடம் அது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். முதுமையின் பலகீனத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கு என அந்த மனிதர் பதிலளித்தார். அதனை கழற்றுங்கள். அது உங்கள் பலகீனத்தை மேலும் அதிகரிக்கத்தான் உதவும். அதனை அணிந்திருக்கையில் உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் ஒரு போதும் சித்தி பெற மாட்டீர்கள் எனக் கூறியதாக இம்ரான் பின் ஹுசைன் தெரிவிக்கிறார்கள். ஆதாரம் அஹ்மத் (இப்னு ஹம்பல்)

நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர் அனைவரையும் குறிப்பிடும் மர்பு ஹதீஸில் “எவராயினும் ஒரு துஆ கூட்டை அல்லது தாயத்தை அணிந்துக் கொண்டால் தன் நாட்டத்தை அல்லாஹ் பூர்த்தி செய்வதை அவர் ஒரு போதும் காணமாட்டார். எவரேனும் ஒரு கடல் சங்கை தொங்கவிட்டுக் கொண்டால் அவர் ஒரு போதும் ஓய்வும், சாந்தியும் பெறமாட்டார்” என நபி (ஸல்) கூறியதாக உக்பா பின் ஆமிர் தெரிவித்தார். ஆதாரம் அஹ்மத் (இப்னு ஹம்பல்)

நபி (ஸல்) அவர்களின் இன்னுமொரு ஹதீஸின்படி, “யாரேனும் ஒரு தாயத்தை அணிந்து கொண்டால், அவர் ஒரு ஷிர்க்கான காரியத்தை செய்து விட்டார்”, என்று கூறியிருக்கிறார்கள்.

கையில் (மந்திரம் ஓதிய) ஒரு நூலை கட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட ஹுதைபா (ரலி) அவர்கள் அதனை வெட்டியெரிந்து 12:106 குர்ஆன் ஆயத்தை ஓதிக் காட்டியதாக இப்னு அபி ஹாதிம் அறிவிக்கிறார்கள்.

இப்பாடம் காட்டும் முக்கிய அம்சங்கள்:

* பாதுகாப்பு நாடி மோதிரம், நூல் போன்றவற்றை அணிவது கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.* நபித் தோழர்களாயினும் இவற்றை அணிந்திருக்கையில் மரணிக்க நேரிட்டால் மறுமையில் சித்தி பெற மாட்டார்கள். சிறிய ஷிர்க், பெரிய ஷிர்க்கை விடக்கொடியது என்ற நபித்தோழர்களின் கூற்று இதனை உறுதிப் படுத்துகிறது.

* பிழை செய்தால் அறியாமையை காரணம் காட்ட முடியாது.

* பாதுகாப்புத் தேடி அணியும் எதுவும் இவ்வுலக வாழ்வில் உதவி செய்யாது. மாறாக அவற்றால் தீமையே ஏற்படும்.

* நபி (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை கடுமையாக கண்டித்த முறையும் அவற்றை தடை செய்ததும்.

* யாரேனும் பாதுகாப்பு நாடி ஏதேனும் ஒன்றை அணிந்து கொண்டால் அந்த மனிதர் அதன் பொறுப்பில் மாத்திரம் விடப்படுவார் என்ற எச்சரிக்கை.

* தாயத்தை கட்டிக் கொண்டவர் ஷிர்க்கான காரியமொன்றை செய்து விட்டார் என்ற கண்டனம்.

* சகாபாக்கள் பெரிய ஷிர்க்கை சுட்டிக்காட்டும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டி சிறிய ஷிர்க்கை தடை செய்தார்கள் என்பதை ஹுதைபா (ரலி) வின் செய்கை சுட்டிக்காட்டுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் சூரா பகராவில் 165வது வசனத்தை ஓதிக்காட்டி இக்காரியத்தை செய்தார்கள்.

* நோய்கள், பிறரின் கண்திருஷ்டிப் படுவது போன்றவற்றிலிருந்து தாயத்து, துஆக்கூடு முதலியவைகளின் உதவியைக் கொண்டு பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கில் சார்ந்ததாகும்.

* தாயத்து, துஆக்கூடு முதலியவற்றில் பாதுகாப்புத் தேடுபவர்கள் தாங்கள் தேடிய நிவாரணம் பெறமுடியாது, கடல் சங்கை தொங்க விட்டுக் கொண்டவர்கள் சாந்தி பெறமாட்டார்கள் என்ர நபி (ஸல்) அவர்களின் சாபம். அதாவது, அல்லாஹ் அவர்களை நிராகரித்து விட்டான் என்ற அறிக்கை.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
இன்னும் வரும்.

17:7. “நீங்கள் நன்மை செய்தால் அது உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுகே கேடாகும்”.

3:176. “நிராகரிப்பால் அவர்கள் விரைந்தோடுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது”.

14:7-8. “இதற்காக நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் நான் என்னுடைய அருளை பின்னும் நான் உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும். மேலும் நபி மூஸா தம் மக்களை நோக்கி நீங்களும் உலகிலுள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு முற்றிலும் மாறு செய்த போதிலும் அவனுக்கொன்றும் நஷ்டமேற்பட்டு விடாது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் இல்லாதவனும், புகழுக்குரியவனுமாக இருக்கிறான்”.

27:40. “எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”.

39:7. “நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”.

41:46. “எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”.

6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத் தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் – அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.

7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வருமென்று வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது – அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.

9:69. (நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்கு கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள் தான் நஷ்டவாளிகள்.

12:40. “அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்கு சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.

25:50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

30:6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.

Wed
23
Feb
2005

பாடம் – 5

ஷிர்க்
அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்

ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும்.
1. பெரிய ஷிர்க்
2. சிறிய ஷிர்க்

1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்)

இதன் காரணத்தால் நற் செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது.
‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ (6:88)

‘இணை வைத்துக்கொண்டிருப்போருக்கு – இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிராகரிப்பைக் கொண்டு சாட்சி கூறிக் கொள்பவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளை இவர்கள் நிர்வாகம் செய்ய எவ்வித உரிமையும் இல்லை. அத்தகையோர் – அவர்களுடைய செயல்கள் அழிந்து விட்டன. இன்னும் அவர்கள் (நரக) நெருப்பில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.’ (17:9)

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ அவர் திட்டமாக வெகுதூரமான வழிகேடாக வழி கெட்டு விட்டார்.’ (4:116)

‘நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியை தடுத்து விடுகிறான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை.’ (5:72)

இக்குர்ஆன் வசனங்களின்படி ஷிர்க்கான காரியங்களில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் மரிக்க நேரிட்டால் அவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காது என்பது மாத்திரமின்றி அவர் ஒருபோதும் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெளிவாகிறது.

இறந்த மனிதர்களிடம் உதவி கோருவது, சிலை வணக்கத்தின் மூலம் உதவி, நிவாரணம் முதலியவை தேடுவது, அவைகளுக்கு நேர்ச்சை வைப்பது, காணிக்கை வைப்பது, அவைகளுக்கு பணிவு காட்டும் முறையில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவது போன்ற காரியங்கள் பெரிய ஷிர்க்கில் அடங்கும்.

2, சிறிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு சிறிய அளவிலான இணை வைத்தல்)

குர்ஆன் வசனங்களும் நபியவர்களின் சுன்னாவும் சிறிய ஷிர்க்கைப் பற்றி விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையில் மற்றவர்களை ஏமாற்ற போலிவேஷம் போடுவது, அல்லாஹ்வையன்றி ஏனையவைகளின் மீது சத்தியம் செய்வது, அல்லாஹ்வும் நாடுவான் மற்றவர்களும் நாடுவார்கள் எனக்கூறுவது போன்ற காரியங்கள் சிறிய ஷிர்க்கில் அடங்கும்.

பின் வரும் ஹதீஸ்கள் இவற்றை மேலும் விளக்குகின்றன.

‘சிறிய ஷிர்க்கைப்பற்றி உங்களுக்காக பயப்படுகிறேன்’ என ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறிய ஷிர்க் என்றால் என்ன என்று வினவிய போது ‘அவை உருவம் மாறிய ஷிர்க்காகும்’ எனக்கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்சாரி (ரலி) தெரிவிக்கிறார்கள். அறிவிப்பவர் இமாம் அஹ்மத், அல் தப்ரானி, பய்ஹகி ஆகியோர்.

அல்லாஹ்வைத் தவிர வேறெவற்றின் மீதும் சத்தியம் செய்பவர் ஒரு முஷ்ரிக் எனக் கருதப்படுவார் என்று இப்னு உமர் (ரலி) தெரிவித்ததாக இமாம் அஹ்மத் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வைத் தவிர வேறெவற்றின் மீதும் சத்தியம் செய்பவர் குப்ரில் அல்லது ஷிர்க்கில் விழுந்து விட்டார், எனக் கருதப்படுவார் என்று இப்னு உமர் (ரலி) தெரிவித்தார்கள். அறிவிப்பவர் அபு தாவுத், திர்மிதி.

அல்லாஹ்வும் நாடுவான், மற்றவரும் நாடுவார் எனக் கூறாதீர்கள். அதற்குப் பதிலாக அல்லாஹ் நாடுவான் அதன் பின்பு மற்றவர் அதனை நாடுவார் எனக் கூறுங்கள் என்று ஹுதைபா இப்னு அல் யமன் (ரலி) தெரிவித்தார்கள் – அறிவிப்பவர் அபு தாவுத்.

இத்தகைய சிரிய ஷிர்க்குகள் நரக நெருப்பில் ஒருவரை வீழ்த்தக் கூடிய இணை வைக்கும் பெரிய பாவங்களாகாதெனினும் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இருக்க வேண்டிய தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை இன்னும் முழுமை பெறவில்லை என்பதையே காட்டுகின்றன.

வேஷம் மாறிய ஷிர்க்குகள்.

வேஷம் மாறிய ஷிர்க்குகள் பெரிய ஷிர்க், சிறிய ஷிர்க் ஆகிய இரண்டிலும் அடங்கும். முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கையில் தாங்களும் முஸ்லிம்கள் என நடிக்கும் இறை நம்பிக்கையற்ற முனாபிக்குகள் விஷயத்தில் இது பெரிய ஷிர்க்காகும்.

பிற மனிதர்களுக்கு காட்டும் நோக்கத்தில் நற்காரியங்களைச் செய்வதும், அவற்றை அழகு படுத்துவதும், ரியா என அழைக்கப்படும் வேஷம் மாறிய ஷிர்க்காகும் என மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்சாரி தெரிவிக்கும் பின்வரும் ஹதீஸ் குறிப்பிடுகிறது.

‘மஸீஹ் அத்தஜ்ஜாலை விட உங்களுக்குப் பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியதென நான் பயப்படும் ஒன்றைப் பற்றிக் கூறவா? என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். ஆம் யாரசூலல்லாஹ்! என மற்றவர்கள் பதிலளிக்க, ‘அதுதான் பிற மனிதர்கள் பார்க்கிறார்கள் என்ற காரணத்துக்காக ஒருவர் எழுந்து தொழுவதும், அதனை அழகு படுத்துவதுமாகிய வேஷம் மாறிய ஷிர்க்காகும்’ என நபி (ஸல்) விளக்கினார்கள். அபி சஈத் அல் குத்ரி (ரலி) இதனை தெரிவித்ததாக இமாம் அஹ்மத் தன் முஸ்னத் தொகுப்பில் அறிவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆபத்துகளினின்றும் தூரவிலகி வெற்றிபெற அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

Tue
22
Feb
2005

வல்லமையுடையவன்!

2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனீத்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)” என்று: அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும்படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று; (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாக சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை! நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும், உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எவ்விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச்) செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எழும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படி சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக் கூறி (அதனை உயிர் பெறச் செய்தான் – இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர் ” நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.

2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரிய போது, அவன், “நீர் (இதை) நம்பவில்லையா?” எனக் கேட்டான்; மெய்(யாக நம்புகிறேன்)! ஆனால் என் இதயம் அமைதி பெரும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார்; (அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக் கொள்ளும்; பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடும்; பின், அவற்றை கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து )வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசு மாடு)