Feed on
Posts
Comments

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5351

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?’) என்று கேட்டதற்கு, அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5352

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்’ என்று கூறினான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5353

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொடர்ந்து படிக்க »

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப் படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய்விட்டு விடு’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5256

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. தொடர்ந்து படிக்க »

Thu
25
Feb
2010

67. திருமணம்

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5063

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப் பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். ஒருபோதும் மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5064

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார். நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக கொள்ளலாம். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணந்து கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்” எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்.

என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (காப்பாளரான) அவர், மற்றவர்கள் அவளுக்கு வழங்குவது போன்ற (விவாகக் கொடையான) மஹ்ரை விடக் குறைவானதை வழங்கி அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.) இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மஹ்ரை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணந்துகொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது” என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து படிக்க »

சகோதரர்களிடம் நடந்து கொள்வது.

ஒரு முஸ்லிம் தன் தந்தையிடம் பிள்ளையிடமும் நடந்து கொள்ள வேண்டிய அதே ஒழுங்கோடு தன் சகோதரர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும். இது விஷயத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கருத வேண்டும். எனவே இளைய சகோதரர்கள் தம் மூத்த சகோதரர்களிடம் தம் தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். மூத்த சகோதரர்கள் தம் இளைய சகோதரர்களிடம் தம் தந்தையின் பிள்ளைகளிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள், கடமைகள், ஒழுக்கங்கள் ஆகிய எல்லா விஷயத்திலும் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் தாய் பிறகு உன் தந்தை பிறகு உனது சகோதரி பிறகு உனது சகோதரர் ஆகியோரிடத்திலும் பிறகு அடுத்தடுத்து வரக்கூடிய உன் நெருங்கிய உறவினரிடத்திலும் நீ நல்ல முறையில் நடந்து கொள். நூல்:பஸ்ஸார், தைலமி (இந்த ஹதீஸ் பலவீனமானது).

நூல்: முஸ்லிமின் வழிமுறை.

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979

ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980

அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், ‘இவர் யார் (தெரியுமா)?’ என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), ‘இவர் (தங்களின் தோழர்) திஹ்யா’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், ‘இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து’ என்று பதிலளித்தார்கள்.  தொடர்ந்து படிக்க »