Feed on
Posts
Comments
Fri
12
Mar
2010

79. பிரார்த்தனைகள்

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6227

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, ‘நீங்கள் சென்று, அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். ‘சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)’ என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6228

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பி விட்டார்கள். அப்போது அப்பெண், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நிறைவேறும்)’ என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து படிக்க »

Thu
11
Mar
2010

78. நற்பண்புகள்

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 5970

வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 5971

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க »

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள். தொடர்ந்து படிக்க »

Mon
8
Mar
2010

76.மருத்துவம்

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5678

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5679

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார். நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.

பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5680

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது’ என வந்துள்ளது. தொடர்ந்து படிக்க »

Sun
7
Mar
2010

75. நோயாளிகள்

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5640

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5643

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும். இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க »