மனமிருந்தால் மாற்றம் வரும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அரேபிய தீபகற்பத்தில் அறியாமை எனும் இருள் சூழ்திருந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையுமே தம்முடைய வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு எதற்கெடுத்தாலும் நல்ல நேரம், சகுனம் பார்த்து தம் அன்றாட வாழ்க்கையை நடத்தியவர்களாகயிருந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் கூட அறிவீனமும் மௌட்டீகமுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் மனிதர்களின் மீது பேரன்பு மிக்கவனான அல்லாஹ் திருக்குர்ஆன் என்னும் ஒளியை நபி (ஸல்) அவர்களுக்கு அருளி அதன் மூலம் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த அறிவீனம் என்னும் இருளை அகற்றி அறிவீனத்தையும் மூட நம்பிக்கையையும் ஒழித்திட பேருதவி புரிந்தான். Continue reading மனமிருந்தால் மாற்றம் வரும்!

[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில:

அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவனே சகல படைப்பினங்களையும் படைத்து பரிபாலிப்பவன்; அவனுக்கு அழகிய திருநாமங்கள், பண்புகள் இருக்கின்றன் என்பது பற்றி அல்லாஹ்வாகிய அவனே கூறுவது.

நிச்சயமாக அல்லாஹ்தான் உங்களுடைய இறைவன். அவன் எத்தகையவன் எனில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷில் அமைந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் படைத்தவன். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்! (அல்குர்ஆன்: 7:54)

மூஸாவே! நான் தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி!
(அல்குர்ஆன்: 28:30)

நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை! எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூறுவதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன்: 20:14)

இதுபோல மாறுபட்ட இவ்வுலகங்களும் வேறுபட்ட படைப்பினங்களும் அவற்றைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவனே அல்லாஹ்! என்பதற்குச் சான்று பகர்வது.

ஏனெனில் இவ்வுலகங்களைப் படைத்தவன், அவற்றை உருவாக்கியவன் நான்தான் என்று வாதிடக்கூடியவன் இவ்வுலகில் (அல்லாஹ்வைத் தவிர) வேறு யாரும் இல்லை. உருவாக்குபவன் இல்லாமல் எதுவும் தானாகவே உருவாகுவது சாத்தியமில்லை என்று தானே மனித அறிவும் கூறுகிறது. எனவே இதுபோன்ற அறிவுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான மற்றும் வேறு பல சான்றுகளின் அடிப்படையில்தான் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும் அவன் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன்; முன்னோர் பின்னோர் அனைவருக்கும் இறைவன் என்பதையும் நம்புகிறான். Continue reading [பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13)

இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.

எவரேனும் ஒருவர் மற்றவரின் இதயத்தில் உள்ள இரகசியங்களை அல்லாஹ்வைத்தவிர இறைநேசரோ, அவுலியாவோ, மற்றவர்களோ அறிந்துக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலாகிய இதயங்களில் உள்ள இரகசியத்தை அறியும் தன்மை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதுவதாகும். இதற்கு ஒரு உதாரணம் காண்போம்: –

ஒருவர் மலேசியாவில் இருந்துக் கொண்டு தம் மனதிற்குள், தம்முடைய ஒரு தேவையை நாகூரில் அடக்கமாகியிருக்கும் சாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தந்தால் அந்த அவுலியாவுக்கு காணிக்கை செலுத்துவேன் என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம். இங்கே இவர் இரண்டு விதமான ஷிர்க்கைச் (இணை வைத்தலைச்) செய்தவராகிறார்.

ஒன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சை என்ற வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர மற்றவரிடத்தில் செய்வது

இரண்டாவது மலேசியாவில் இருக்கும் அவருடைய மனதில் உள்ள இரகசியங்களை  அல்லது தேவைகளை அல்லாஹ்வுக்கு தெரிவதோடு மட்டுமல்லாமல் நாகூரில் இருக்கும் சாகுல் ஹமீது அவுலியாவுக்கும் தெரிகிறது என்று நம்புவது.

மேற்கண்ட இரண்டு நம்பிக்கைகளுமே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்”
(அல்குர்ஆன் 4:116)

மேலும் நம் இதயங்களில் உள்ள இரகசியங்களை, (தேவைகளை, எணணங்களை) அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்  – 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38

இணைவைத்தல் என்னும் கொடிய பாவத்தைத் தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இணைவைத்தலின் சாயல் கூட நம் வாழ்வில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே நம் இதயங்களின் இரகசியங்களை அறியக்கூடியவனான அல்லாஹ்விடமே நம் தேவைகளைக் கூறி பிரார்த்திக்க அல்லாஹ் கிருபை செய்வானாகவும்.

ஆக்கம்: புர்ஹான்
சவூதி அரேபியா

கூத்தாநல்லூரில் கந்தூரி விழா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

pp-kanthoori

‘தமிழகத்தில் என்பதுகளுக்கு முன்னிருந்த நிலைமாறி ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது’ என்று நமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்! ஆனால்,’நீங்கள் எது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், நாங்கள் எங்களின் குல தெய்வமான குல அவுலியாவைப் போற்றிப் புகழ்ந்து அவர்களுக்கு பாமாலைகள் பாடி அவர்களை கவுரவித்து அவர்களுக்கு படையல் (சீரணி) படைத்து அவர்களிடம் எங்களின் தேவைகளைக் கேட்டு பெற்று வாழ்வில் சுபிட்சம் பெறுவோம்’ – இப்படி இறைவனுக்கு தொடர்ந்து இணைவைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம்.

ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாது விழா என்ற பெயரில் நடைபெற்ற அநாச்சாரத்திற்குப் பிறகு அதற்கு அடுத்து வந்த மாதத்தில் முஹையத்தீன் மாநாடு என்ற பெயரில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயர்களில் கட்டுக்கதைகளை அள்ளிவிட்டனர். தற்போது சென்ற மாதத்தில் விடுபட்ட கட்டுக்கதைகளை அரங்கேற்றுவதற்காக இரண்டு மதராஸாக்களின் முதல்வர்களின் தலைமையில் மற்றுமொரு கந்தூரி விழா!

இந்த கந்தூரி விழா என்ற பெயரிலே இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்கும் நம்பிக்கைகளையுடைய கட்டுக்கதைகளை ஏழு வருடங்கள் மதரஸாக்களில் கல்வி பயிலும் வருங்கால உலமாக்களுக்கு மார்க்க கல்வியைப் போதிக்கும் மௌலானா மௌலவிகளே, ஷைகுல் பலக்குகளே கட்டவிழ்த்து விடுவது தான் வேதனையாக இருக்கின்றது. அவர்களுக்கு சத்தியம் இதுதான் என்று தெரியும். இருந்தும் உண்மையைச் சொன்னால் எங்கே தம் பிழைப்புக்கு பொல்லாப்பு ஆகிவிடுமே என்ற அச்சத்தினால் மார்க்கத்தின் பெயராலேயே பொய் கூற துணிந்து விட்டனர்.

அப்துல் காதிர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நிகழ்ச்சிகளின் இறுதியில் இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் முஹையதீன் மவ்லூது மற்றும் யாகுத்பா போன்ற பாடல்களில் அப்துல் காதிர் ஜீலானியை (ரஹ்) இறைவனுக்கு நிகராக சித்தரித்து இணை வைக்கும் மாபாதக செயல்களைச் செய்கின்றனர்.இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் யாகுத்பா என்ற பாடலை ஒருவர் நம்பிக்கையுடன் பாடினால் அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும் அளவிற்கு ஷிர்க் நிறைந்தது தான் இந்த யாகுத்பா என்ற நச்சுக்கவிதை! இந்த மௌலானா மௌலவிகள் பயபக்தியுடன் பாடும் இந்த யாகுத்பா பாடலின் சில வரிகளைப் பார்ப்போம்!

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களுக்கு முஹ்யித்தீன் தான் குத்பு!!!!

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் முஹ்யித்தீன்!

(அப்துல் காதிர் ஜீலானி அவர்களே!) நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிவிட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்.

முஹ்யித்தீனைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அருள்???

கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரிவானாக!

முஹ்யித்தீன் மகத்தான இரட்சகராம்!!!

எல்லா காலங்களிலும் நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான இரட்சகரே!

(அல்லாஹ்வுக்கும், உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டு இருக்கும்போதே காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றியவராகிவிடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர்! என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; முஹ்யித்தின் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைத்தான் சூட்டப்பட்டு விட்டீர்கள்!

ஆயிரம் தடவை அழைத்தால் ஓடோடி வரும் முஹ்யித்தீன்!!!

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும் தனது உறக்கத்தைக் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்! எனவே ஓ!அப்துல்காதிர் முஹ்யித்தீனே! என்று அவர் (என்னை) அழைக்கட்டும் (என்று தாங்கள் கூறினீர்கள்)

வழிகாட்டும் முஹ்யித்தீன்!!!

யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறேன்! எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன்! எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள் எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!

மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் முஹ்யித்தீன்!!!

நன்மையான எல்லாசெற்களுக்கும் நீங்களே எனக்கு கலீபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகிவிடுங்கள்! அறிவுடையேர் உங்களைப் பொருந்திக் கொண்டனர் முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் என்று எனது பாட்டனார் நபி(ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.

இரட்சகர்! உதவி செய்பவர்!

என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே! எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்கு பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகிவிடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகிவிடுங்கள்! காலாகாலம் என்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும்! முஹ்யித்தீனே!

தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னனி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

நேர்வழி காட்டும் முஹ்யித்தீன்!

நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்கு காட்டிவிடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்த துறைக்கு சொந்தக்காரராக உள்ளீர்கள்! கொளுந்து விடடெறியுயம் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள்! அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே! முஹ்யித்தீனே!

என்றென்றும் நிலைத்திருக்கும் முஹ்யித்தீனின் கை!

எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும். என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். ‘தீனை உயிர்ப்பித்தவர்’ என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.

முஹ்யித்தீன் என்ற பெயருக்கான காரணம்!

நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதரிடம் இருந்த நோய் விலகி, அவன் எழுந்து அன்புடன் ‘தீனை உயிர்பித்தவரே!’ என்று தங்களை அழைக்கலானான்.

மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைகளை விட மிக மோசமான நம்பிக்கைகளையுடைய மற்றும் கராமத்துக்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகளையுடைய இந்த நச்சுக் கவிதைகளைத் தான் மவ்லூது சரீப் என்ற பெயரிலும் யாகுத்பா என்ற பெயரிலும் இவர்கள் இறையில்லமான பள்ளிவாசலில் வைத்து பாடுகின்றனர். அல்லாஹ்வின் இல்லங்களில் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் அழைக்க வேண்டாம் என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க நாங்கள் அல்லாஹ்வுடன் முஹ்யித்தீனையும் அழைப்போம் என்று இவர்கள் செயல்படுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 72:18)

அல்லாஹ் அல்லாதவர்களை  ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்பவர்களைப் பார்த்து இவர்கள் கூறுவது  ‘நீங்கள் வழிகெட்டவர்கள்’ என்று! ஆனால் அல்லாஹ்வோ, அவனது வேதத்தில், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்து உதவி தேடும் இவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? எனக் கேட்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

“மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

துன்ப நேரங்களில் ஆபத்து காலங்களில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை!

(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?… (அல்குர்அன் 27:62)

யா முஹ்யித்தீன் என்றோ அல்லது யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே! என்றோ அல்லது வேறு எந்த அவுலியாவின் பெயரை அழைத்தவாறே ஒருவர் மரணித்தாரானால் அவரின் இருப்பிடம் நரகமே!

“யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்” (ஸஹீஹுல் புகாரி)

துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை!

அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது…. (அல்குர்அன் 10:107)

அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்!

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)

“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்…… (அல்குர்அன் 4:48)

சத்தியமார்க்கமான இஸ்லாம் தெளிவானது. இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை! அல்லாஹ் அவனது திருமறையில் இணை வைப்பின் பயங்கர விளைவுகளையும் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அழைத்து உதவி தேடுபவர்கள் எல்லாம் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும்போது அற்ப உலகாதாயத்திற்காக இந்த உண்மையை மூடிமறைத்து அல்லாஹ்வின் பள்ளியிலேயே முஹ்யித்தீனை அழைத்து உதவி தேடுவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலிம்களே! அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை மறைப்பவர்களை இறைவன் எச்சரிக்கும் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் அல்குர்ஆனின் போதனைகளை மார்க்கமறிய பாமரர்களிடம் மறைத்தற்காக அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: –

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்” (அல்-குர்ஆன் 2:159)

“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?” (அல்-குர்ஆன் 3:71)

ஆக்கம்: புர்ஹான்

சவூதி அரேபியா

முடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

1980 களுக்கு முன்னர் தமிழகம் – ஓர் பார்வை!: –

ஊருக்கு ஒரு தர்ஹா, மாதத்திற்கு ஒரு கந்தூரி விழா, வீட்டுக்கு ஒரு குல அவுலியா, ஒவ்வொரு வீட்டிலும் ‘தமிழகத்தின் தர்ஹாக்களைக் காண வாருங்கள்’ என்ற சங்கை மிக்க பாடல் ஓசைகள், அவுலியாக்களுக்கு கோழி, ஆடு போன்ற குர்பானிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பாஸ்போர்டுகளை அவுலியாவின் கப்ருடைய சன்னிதானத்தில் வைத்து எடுத்தல், வீட்டுக்கு வீடு மவ்லிது மஜ்லிஸ்கள், தர்ஹாக்கள் தோறும் பேய் பிடித்தவர்களின் கூட்டம் இப்படியாக பலவித அனாச்சாரங்கள் பல்கிபெருகி இருந்தன.

ஆனால் இன்று அந்த சூழ்நிலைகளில் இருந்து தமிழகத்தில் உண்மையான மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்கம் மறுமலர்ச்சி பெற்றுவிட்டது என்று நாம் கூறுவதற்கில்லை. ஏனென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் எளிமையான தமிழ் மொழியில் இன்றைய காலக் கட்டத்தில் கிடைக்கப் பெற்றும் இவற்றைப் படித்தால் பாமர முஸ்லிம்களுக்கு புரியாது என்று கூறி அவர்களை இணை வைப்பு மற்றும் பித்அத்துகளில் மூழ்கியிருக்கச் செய்யும் போலி புரோகித மவ்லவிகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுவும் அவர்கள் முன்பை விட தீவிரமாக செயல்படுகிறார்கள். தவ்ஹீதை போதிக்கும் ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை வைத்துக் கொண்டு ‘பார்த்தீர்களா இவர்களை’ என்று அவர்களை உதாரணம் காட்டியே பாமர மக்களை வழிகெடுத்து வருகிறார்கள் இந்த மாபாதக புரோகிதர்கள். சில முஸ்லிம் ஊர்களில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாநாடு இன்றளவும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவ்வகை மாநாடுகளில் ஏக இறைவனை மட்டுமே வழிபடக் கூடியவர்களை கடுமையாக விமர்சித்துக் கொண்டுதானிக்கின்றனர்.

தமிழகத்தின் பல முஸ்லிம் ஊர்களின் ஜமாஅத்கள் இன்னும் ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது. அவர்களை மீறி ஒன்றும் செய்ய சக்தியற்றவர்களாகவே இன்றைய ஏகத்துவப் பிரச்சாரர்களும் அதைப் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள். தவ்ஹீதின் வளர்ச்சியில் 1980 மற்றும் 1990 களில் இருந்த வேகங்கள் 2000 களில் பெருமளவு குறைந்து விட்டது. காரணம் ஏகத்துவத்தைப் போதிப்பவர்களே சுய நலத்தின் காரணமாக சிறு சிறு பிரச்சனைகளுக்காக ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து ஏகத்துவப் பிரச்சாரத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர்.

இணை வைப்பவர்களிடம் தவ்ஹீதைப் பற்றி எடுத்துக் கூறினால், ‘முதலில் உங்களுக்கிடையில் கொள்கையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டு பிறகு எங்களுக்கு அறிவுரை கூறவாருங்கள்’ என்று அவர்கள் கூறும் அளவிற்கு தற்போது நிலைமை மோசமாகிவிட்டது.

ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைத் தவிர வேறு யாருடைய வழிமுறைகளையும் பின்பற்ற மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்திருக்கும் என தருமை சகோதர சகோதரிகளே! இதுவே நாம் ஒன்றுபடும் தருணம். அற்ப உலகாயாதங்களுக்காகவும் பதவி சுகத்துக்காகவும் இயக்க தலைமைப் பதவிக்காகவும் மார்க்கத்தை விட்டுக்கொடுக்காமல் அல்லாஹ்வுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தேயாக வேண்டும்.

இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமான ஷிர்க் எனனும் இணைவைத்தலிலும் மார்க்கத்தைப் பல கூறு போடக் கூடிய பித்அத்களிலும் இன்றளவும் உழன்றுகொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை அவற்றிலிருந்து விடுவிக்கவும், முஸ்லிம் சமுதாயத்தை வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” (அல்-குர்ஆன் 103:1-3)

நமக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை அல்லாஹ்வுக்காக விட்டுக்கொடுத்து பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் நாம் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு அதற்குரிய ஆற்றல்களை தந்தருள போதுமானவன்.

ஆக்கம்: புர்ஹான்