90. தந்திரங்கள்

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறவருடைய ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும். இதை உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும் போது அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6954

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6955

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது, ‘ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது’ என்று குறிப்பிட்டார்கள். Continue reading 90. தந்திரங்கள்

54.நிபந்தனைகள்

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2711-2712

மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றா இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல்(ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி(ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவார். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும். Continue reading 54.நிபந்தனைகள்

51.அன்பளிப்பும் அதன் சிறப்பும்

பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2614

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.

பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2615

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்” என்று கூறினார்கள். Continue reading 51.அன்பளிப்பும் அதன் சிறப்பும்

49.அடிமையை விடுதலைச் செய்தல்

பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2517

அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். “ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள். Continue reading 49.அடிமையை விடுதலைச் செய்தல்

43.கடன்

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2385

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (விற்று விடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கே அதை விற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2386

அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் ‘ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவதாகக்) கூறி உணவு தானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2387

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Continue reading 43.கடன்