பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை.

இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் தடுத்திருந்தார்கள் என்று தௌராத்தில் வருகிறது. மனிதன் இத்தகைய அமல்களைச் செய்வதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறான் என்றும் அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அனைத்து நபிமார்களின் மார்க்கமும் ஒன்றே. ஆனால் நடைமுறை விதிகள் சில மட்டுமே ஒவ்வொரு நபிக்கும் வெவ்வேறாக இருக்கும். இந்த உண்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கியபோது, ‘நாங்கள் நபிமார்கள் சமூகம். எங்கள் அனைவரது மதமும் ஒன்றே’ என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். Continue reading பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். Continue reading கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

பாடம் – 12

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றான். அவனே மிக்க மன்னிப்போன். மிகக் கிருபையுடையோன்.” என அல்லாஹ் கூறுகிறான். (10:106-107)

“(தவிர) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான். நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளை) படைத்துக் கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடம் தேடுங்கள். அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (29:17)

“மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவனுடைய அழைப்பை மறந்தவர்களாக உள்ளனர். மேலும் மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால் (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவனுக்கு விரோதிகளாக இருப்பர். இவன் (தங்களை) வணங்கிக்கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரிப்பார்கள். (46:5-6)

“(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கடுந் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவன் அழைத்தால் (அவனுக்குப்) பதில் அளித்து மேலும் (அவனுடைய) துன்பங்களை நீக்கி இப்புவியில் (உங்களைத் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவன் (சிறந்தவனா?) இத்தகைய அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்துக்கு உரியவன் இருக்கின்றானா? நீங்கள் சிந்திப்பது மிகக் குறைவாகும்.” (27:62)

முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலத்தில் விசுவாசிகளுக்கு துன்பமிழைத்துக் கொண்டிருந்த முனாபிக் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதிராக அல்லாஹ்வின் தூதரிடம் உதவி கோருவோம் என விசுவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அந்த மக்களுக்கு ‘யாரும் உதவிக் கோரி என்னைத் தேடக் கூடாது. நிச்சயமாக அனைவரும் அல்லாஹ்விடமே உதவியும், ஒத்தாசையும் தேடவேண்டும்’ என நபி (ஸல்) பதிலளித்ததாக அத்-தப்ரானி ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்கான ஒரு செயலாகும்.

அல்லாஹ்விடம் அளவற்ற பற்றுள்ள மனிதராயினும், பிறருடைய தேவையின் பொருட்டு அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடினால் அவர் பெரும் அநியாயக்காரர் ஆகிவிடுவார்.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதால் இவ்வுலக வாழ்வில் எவ்விதப் பயனும் ஏற்படாதது மாத்திரமின்றி அச்செயல் மனிதரை குஃப்ருடைய வழிக்கு இட்டுச்செல்லும்.

சுவர்க்கத்தை நாடும் யாரும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி கோருவதில்லை. அதே போன்று உணவுகளையும், செல்வங்களையும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் கோரக்கூடாது.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுபவனைவிட வழிகெட்டவன் யாருமில்லை.

அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் ஏனையவைகள் தங்களை மனிதன் வணங்குவதையோ, தங்களிடம் உதவி தேடுவதையோ, ஒரு போதும் அறிய மாட்டார்கள். அவைகளுக்கு அவற்றை அறிவதற்குரிய சக்தியுமில்லை.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதனால் வணங்குபவனுக்கும், வணங்கப்படுபவைகளுக்கும் இடையில் கோபமும், பகையும் தான் வளரும்.

உதவிக்கோரி ஒன்றை அழைக்கும் போது, அச்செயல் அதற்கு செய்யப்படும் வணக்கமாகக் கருதப்படுகிறது.

மறுமை நாளுக்காக அனைவரும் ஒன்று திரட்டப்படும் போது வணங்கப்பட்டவைகளான அவைகள், மனிதன் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததையும் நிராகரிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை அழைப்பவன் மனிதர்களில் மிகவும் வழிகெட்டவன்.

துன்பங்கள் ஏற்படும் போது அவற்றை நீக்கி அருள் புரிபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று விக்கிரகங்களை வணங்குபவர்கள் கூட அறிவார்கள். அதனால் தான் அவர்களும் தாங்கமுடியாத துன்பங்கள் ஏற்படும் போது அல்லாஹ்விடமே உதவிக் கோரி ஏகமனதோடு பிரார்த்தனை புரிகிறார்கள்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

பாடம் – 9

அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என (நபியே!) நீர் கூறுவீராக. அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக.)’ அல்குர்ஆன்:6.162-163.

‘ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.’ அல்குர்ஆன்:108.2.

அலி இப்னு அபிதாலிப் பின்வருமாறு சொன்னார்கள்: ‘அல்லாஹ்வின் நான்கு தீர்ப்புகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் எனக்குத் தெரிவித்தார்கள். அவையாவன:

1. அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றின் பெயரில் அறுத்து குர்பானி செய்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

2. தன் பெற்றோர்களை சபிப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

3. அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய செயலை புகுத்தும் ஒருவனுக்கு அடைக்கலம் கொடுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்;

4. காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்யும் ஒருவனை அல்லாஹ் சபிக்கிறான்;

‘ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!’ என ஸஹாபாக்கள் வினவினார்கள். ‘தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். ‘காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லை’ என அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது ‘மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்’ என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வுக்கன்றி ஏனையவற்றிற்கு தானம் அல்லது குர்பான் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்.

தன் பெற்றோர்களை சபிப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம் (ஒருவர் மற்றவருடைய பெற்றோரை சபித்தால், அவர் கோபம் கொண்டு இவருடைய பெற்றோரை சபிப்பார்).

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புகுத்தும் முஹ்தித் ஒருவருக்கு அடைக்களம் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம். இஸ்லாமிய மதத்தில் மாற்றம் செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளதாகும்.இதில் தலையிட்டு இஸ்லாத்தில் பித்ஆவை புகுத்தும் ஒருவருக்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவருக்கு அடைக்களமும் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்து, அடுத்தவரின் இடத்தை வஞ்சகமாக பிடித்துக் கொள்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

ஒரு அற்ப கொசு எனினும் மகத்தான பாடம்.

ஒரு கொசுவை விக்கிரகத்திற்கு தானம் செய்து, நரகத்திற்குச் சென்ற மனிதன் நாட்டமின்றியே அதனை செய்தார். அதுவும் விக்கிரகங்களை வணங்குபவர்களின் ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அதனை செய்தார்.

வெளிப்படையான ஒரு செயலையே காஃபிர்கள் செய்ய சொன்னாலும் அதனைக் கூட செய்ய மறுத்த மற்ற மனிதர் பொறுமையுடன் மரணத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம். இறை அச்சம் உள்ளவர்களுக்கு ஷிர்க் எவ்வளவு வெருப்பான செயல் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நரகம் புகுந்த மனிதன் ஒரு முஸ்லிமாகும். அந்த மனிதன் காஃபிராக இருந்தால் ஒரு அற்ப கொசுவின் காரணமாக நரகம் புகுந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள்.

‘நீங்கள் காலில் அணியும் காலணியை கட்டும் நாடாவை விட உங்களுக்கு மிக அருகில் சுவர்க்கம் உள்ளது. நரகமும் அதைப் போன்றதே’ என்ற நபிமொழியை இந்த சம்பவம் உறுதிப் படுத்துகிறது.

முஸ்லிமின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே விக்கிரக வணக்கம் புரிபவர்களின் முக்கிய நோக்கமாகும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.