73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்று கூறினார்கள்.

உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என மற்றோர் அறிவிப்பில் உள்ளது. இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5546

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்’ என்று கூறினார்கள். Continue reading 73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

54.நிபந்தனைகள்

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2711-2712

மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றா இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல்(ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி(ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவார். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும். Continue reading 54.நிபந்தனைகள்

13.இரு பெருநாட்கள்

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 948

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.

இதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 949

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து ‘நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர். Continue reading 13.இரு பெருநாட்கள்