அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)

இறைவனைப் பற்றிய அறிவும், அவன் மீது வைக்கப்படும் நம்பிக்கையுமே இஸ்லாத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இஃது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே இதனை தெளிவுபடுத்திட முழுமையானதொரு விவாதம் தேவைப்படுகின்றது. இங்கே சில எளிய எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. நாம் விவாதத்திற்காக எடுத்துக்கொண்ட பொருள்பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். இவர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அறிவியலின் பெயரால் அல்லது அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லாத காரணத்தால் இறைவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களை ’அறிஞர்கள்’ என்று கூறிக் கொண்டாலும் அவர்களது மனப்பான்மை ஒரு விதமான அமைதியின்மையையே பிரதிபலிக்கின்றது. என்னுடைய கவலையெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியல்ல. அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதுதான்.

பின்வரும் விளக்கங்கள் பெரியவர்களுக்காக அல்லாமல் பெரும்பாலும் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டது போல தோன்றுவதற்கான காரணத்தை இது விளக்கும். இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை முஸ்லிம் இளைஞர்களுக்கு விளக்கிடுவதே இங்கே குறிக்கோள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மதத்திற்காக வக்காலத்து வாங்குகிற முஸ்லிமல்லாதவர்கள், இவர்களிடையே இஸ்லாத்தின் இறைக் கருத்துப் பற்றி தவறான கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. இவர்களுக்கும் இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை எடுத்துச் சொல்வதும் இந்த விவாதத்தின் இன்னொரு நோக்கமாகும்.

இவைகளையெல்லாம் மனதில் கொண்டுதான் சில எளிமையான மிகச் சாதாரணமான விளக்கங்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. சில விளக்கங்களின் எளிமை வயது வந்தவர்களிடம் கூட சில புதிய சிந்தனைகளைத் தூண்டக்கூடும். இது சுவை நிறைந்ததாகவும், நிறைந்த பலனைத் தருவதாகவும் இருக்கும். இதுவே இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நாம் நம்மை சுற்றியிருக்கின்றவைகளை பார்க்கும்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்பத்தலைவர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநகருக்கும் ஒரு மேயர் இருக்கின்றார்; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்கின்றார்; ஓவ்வொரு  நாட்டிற்கும் ஒரு பிரதமர்-தலைவர் இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளரின் தயாரிப்பு, ஒவ்வொரு அழகிய கலையும் ஒரு கலைஞரின் படைப்பு என்பதை நாம் ஐயமற அறிவோம். இவையெல்லாம் மிகத் தெளிவாக இருந்தபோதிலும் உலகிலுள்ள பெரும் ரகசியங்களைப் பற்றிய மனிதனின் அறிவுப் பசியை இவைகளால் திருப்திப்படுத்த முடியவில்லை.

அழகு கலையும், அழகையும் அள்ளித் தெளிக்கும் கவர்ச்சியான காட்சிகள், இயற்கையின் அற்புதம், ஆகாயத்தின் முடிவற்ற அடிவானம், ஆகாயத்தின் நீண்டு விரிந்த பரப்பு, மிக ஒழுங்கான முறையில் இரவு, பகல் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும் நுணுக்கம், சூரியன், சந்திரன், இதர தாரகைகள் ஆகியவற்றின் போக்கு, உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் உலகம், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் மனித வளர்ச்சியின் தொடர்ச்சி இவற்றைப் பார்த்து மனிதன் அடிக்கடி ஆச்சரியப்படுகின்றான். நாம் பார்த்து அனுபவித்து வருகின்ற இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வருபவன் யார் என்பதை அவன் அறிந்து கொள்ள விரும்புகின்றான்.

நாம் காணும் இப்பிரமாண்டமான பிரபஞ்சத்திற்கு ஒரு விளக்கம் காண முடியுமா? ஜீவிதத்தின் ரகசியத்திற்கு நம்பத்தகுந்த விளக்கங்கள் ஏதேனும் இருக்கின்றதா? பொறுப்புள்ள ஒரு தலைவரின்றி எந்த குடும்பமும் சரிவர இயங்க முடியாது, சிறியதொரு நிர்வாகமின்றி எந்த மாநகரமும் செழிப்பாக இருக்க முடியாது, ஏதாவது ஒரு தலைவர் இல்லாமல் எந்த நாடும் இயங்க முடியாது, இவைகளையெல்லாம் நாம் உணர்ந்திருக்கின்றோம். எந்த ஒரு பொருளும் தானே தோன்ற முடியாது என்பதையும் கூட நாம் உணர்கின்றோம். Continue reading அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)