79. பிரார்த்தனைகள்

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6227

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, ‘நீங்கள் சென்று, அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். ‘சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)’ என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6228

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பி விட்டார்கள். அப்போது அப்பெண், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நிறைவேறும்)’ என்று பதிலளித்தார்கள். Continue reading 79. பிரார்த்தனைகள்

சாலையில் தடை ஏற்படுத்தாதே.

1374. ”நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

46.அநீதிகளும் அபகரித்தலும்

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2440

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2441

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு, அவன் ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்’ என்று கூறுவார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். Continue reading 46.அநீதிகளும் அபகரித்தலும்