72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5475

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)’ என்று பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் ‘உங்களின் நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பிய போதுதான் வேறொரு நாய்க்காக அல்ல’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5476

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று கூறினார்கள். நான், ‘என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்து விட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்து விட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்…?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.

‘நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்… (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை’ என்று பதிலளித்தார்கள். Continue reading 72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி….

1687. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5534 அபூ மூஸா (ரலி) .

56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2782

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மௌனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2783

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஜிஹாத் (இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். Continue reading 56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்

30.நோன்பு

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1891

தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!” என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். ‘இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!” என்றோ ‘இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!” என்றோ கூறினார்கள். Continue reading 30.நோன்பு

8. தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 349

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.

இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். Continue reading 8. தொழுகை