89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்தித்தல்

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6940

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய (பஞ்சமான) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளை அனுப்புவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 89, எண் 6941

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது என அனஸ்(ரலி) அறிவித்தார். Continue reading 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்தித்தல்

விபச்சாரம் புரிந்தோர்க்கு கல்லெறி தண்டனை.

1104. யூதர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) ‘நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் ‘விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்’ என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி), ‘உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.

புஹாரி :3635 இப்னுஉமர் (ரலி).

1105. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், ‘(குர்ஆனின் 24 வது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?’ என்று கேட்டேன். அவர்கள் ‘எனக்குத் தெரியாது” என்றார்கள்.

புஹாரி :6813 அஷ்ஷைபானி (ரலி).

1106. ”ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவது விற்று விடட்டும்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2152 அபூஹுரைரா (ரலி)

1107. ”ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்தால்… (என்ன செய்ய வேண்டும்?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘அவள் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; (அதற்குப்) பிறகும் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; மீண்டும் விபச்சாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடுங்கள்!” என்றார்கள்.

புஹாரி :2153 அபூஹூரைரா (ரலி).

54.நிபந்தனைகள்

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2711-2712

மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றா இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல்(ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி(ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவார். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும். Continue reading 54.நிபந்தனைகள்

39.கஅபாலா (பிணையாக்கல்)

பாகம் 2, அத்தியாயம் 39, எண் 2290

ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.

இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ‘இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.

பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.

பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார். Continue reading 39.கஅபாலா (பிணையாக்கல்)

34.வியாபாரம்

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2047

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஜாஹிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் ‘என் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!’ எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!” Continue reading 34.வியாபாரம்