92. குழப்பங்கள் (சோதனைகள்)

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7049

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான், ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், ‘இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது’ என்று கூறுவான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Continue reading 92. குழப்பங்கள் (சோதனைகள்)

65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்’ என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தை விட்டு பீதி அகற்றப்படும் போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், ‘நம் இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், ‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்கள் செவியேற்று விடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.

சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.

அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்து விடுகிறார்கள்.

சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘கடைசியில் அது பூமிக்கு வந்து சேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், ‘இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?’ என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக் கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்’ என்று இடம் பெற்றுள்ளது. அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், ‘சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது’ எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி(ரஹ்) கூறினார்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?’ என வினவினேன். அதற்கு சுஃப்யான் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம் ‘இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘ஃபுஸ்ஸிஅ’ (பீதி அகற்றப்படும் போது) எனும் சொல்லை நபி(ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (‘ஃபுஸ்ஸிஅ’ என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)’ என்று வினவினேன். அதற்கு அன்னார் ‘அம்ர் இப்னு தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவிமடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே, எங்களின் ஓதல் முறையாகும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4702

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ர்’ வாசிகளைக் குறித்து, ‘இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லாதீர்கள்’ என்று கூறினார்கள். Continue reading 65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை

ஹவ்ளுல் கவ்ஸர் பற்றி….

1475. நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6589 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

1476. நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்து கொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6583 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி).

1477. (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் ‘இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்” ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்”என்று நான் கூறுவேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் ‘எனக்குப் பின்னால்(தம் மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6584 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

1478. (‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) .

1479. நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6593 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி).

1480. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடம் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, ‘நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (என்னுடைய மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொவருர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

புஹாரி :4042 உக்பா பின் ஆமிர் (ரலி).

1481. ”நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறப்படும்.

புஹாரி :6575-6576 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1482. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 6591 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1483. ” (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம் ‘அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள் ‘(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என (நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள்.

புஹாரி : 6592 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1484. (மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6577 இப்னு உமர்(ரலி) .

1485. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2367 அபூஹூரைரா (ரலி).

1486. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6580 அனஸ்(ரலி).

1487. (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்போது என்னைவிட்டுஅவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :அனஸ்(ரலி).