72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5475

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)’ என்று பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் ‘உங்களின் நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பிய போதுதான் வேறொரு நாய்க்காக அல்ல’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5476

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று கூறினார்கள். நான், ‘என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்து விட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்து விட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்…?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.

‘நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்… (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை’ என்று பதிலளித்தார்கள். Continue reading 72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

கடலில் உள்ள உயிரினங்களை மரணித்திருந்தாலும் உண்ணலாம்.

1261. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு ‘கருவேல இலைப்படைப் பிரிவு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக ‘அல் அம்பர்’ எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூ உபைதா (ரலி) அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.) மற்றோர் அறிவிப்பில் ‘ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்பு(க் கூடடுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஜாபிர் (ரலி) கூறினார்:அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா (ரலி), ‘(இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்து விட்டார்கள்.

புஹாரி : 4361 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).