ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-47-48-49)

47, 48, 49. கோபமும் துயரமும்

ஹதீஸ் 47. முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)

ஹதீஸ் 48. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)

ஹதீஸ் 49. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் – அவர்களுடைய உயிர், பிள்ளைகள் மற்றும் செல்வம் ஆகியவற்றில் கஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது! (அவர்களுடைய தவறுகளுக்கு அது பரிகாரமாகி விடுவதால்) இறுதியில் அவர்கள் மீது எவ்வித் தவறும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கிறார்கள்! (நூல்: திர்மிதி)

தெளிவுரை

இம்மூன்று நபிமொழிகளும் பொறுமையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. முதல் ஹதீஸின் கருத்து: நியாயமாக நடவடிக்கை எடுத்து தனது சினத்தைத் தீர்க்க ஆற்றல் பெற்றிருந்தும் ஒருமனிதன் சினத்தை அடக்குகிறான். பொறுமையை மேற்கொள்கிறான் எனில் அதற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான பரிசு உள்ளது!

அரபியில் அல் ஃகைள் – الغيظ என்றால் கடும்கோபம் அதாவது சினம் என்று பொருள். தனது சினத்திற்குப் பழிதீர்க்க வலிமை இல்லாதவன் சினத்தை மென்று விழுங்கினான் என்று சொல்லப்படுவதில்லை! கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே! ஆனால் துயருறுதல் எனும் வார்த்தையில் பலவீனத்தின் பொருள் உள்ளது. அதனால்தான் கோப நிலை – அது தன்னைப் பொறுத்து பூரணமான ஒன்றெனக் கூறப்படுகிறது! இந்த ரீதியில்தான் அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று சொல்வது சரிகாணப்படுகிறது. ஆனால் அல்லாஹ் துயரப்படுகிறான் என்று சொல்லப்படுவதில்லை! ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது! அல்லாஹ்வோ எல்லா ஆற்றல்களும் கொண்டவன்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-47-48-49)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-45-46)

45, 46. வீரமும் கோபமும்

ஹதீஸ் 45. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி! நூல்: புகாரி, முஸ்லிம்

அரபுகளிடத்தில் அஸ் ஸுரஆ என்பதன் அசல் பொருள், மக்களை அதிகமாக கீழே வீழ்த்துபவன் என்பதாகும்.

ஹதீஸ் 46.
ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது இரு மனிதர்கள் பரஸ்பரம் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டது. அவருடைய நரம்புகள் புடைத்து விட்டன. அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் ஒரு வார்த்தையை அறிவேன். அதை அவர் சொன்னரெனில்அவரது கோபம் அகன்றுவிடும். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அவர் சொன்னால் இவரது கோபம் போய்விடும்! அப்பொழுது மக்கள் அந்த மனிதரை நோக்கிச் சொன்னார்கள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் நீ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் சொல்கிறார்கள்’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

கோபம் கொண்ட மனிதனின் உள்ளத்தில் ஷைத்தான் தீ மூட்டிச் சூடேற்றுகிறான்! அதனால் கோபம் கொண்டவனின் முகம் சிவந்து விடுகிறது. நரம்பு – நாளங்களெல்லாம் புடைத்துப் பருத்து விடுகின்றன! அப்பொழுது நிதானமிழந்து போகிறான்! என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரிவதில்லை!

இதனால்தான் ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுது நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். அவர் மீண்டும் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றார். அதற்கும் நபியவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றார்கள். மூன்றாவது தடவையும் அந்த மனிதர் எனக்கு அறிவுரை பகருங்கள் என்றபொழுதும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே என்றே சொன்னார்கள்! (நூல்: புகாரி)

சண்டை – தகராறு என்று வரும்பொழுது மக்களை கீழே வீழ்த்தி விடுபவன் வீரன் அல்லன் என்று இங்கே விளக்கப்படுகிறது. ஆனால் வீரன் – பலசாலி என்று மக்கள் புகழ்வதோ அந்த மனிதனைத்தான்! உண்மையில் வீரன் யாரென்றால், கோபத்தின்பொழுது தன் மனத்துடன் போராடி கோபத்தை அடக்குகிறானே அவன்தான்! உண்மையில் அதுதான் வீரச்செயல்! அதுதான் பாரதூரமான – கஷ்டமான காரியம்! எல்லோராலும் அது முடியாது. மனத்தை வென்றடக்கி அதன் தீய தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளானே அவனால்தான் அது முடியும்! அப்படிப்பட்ட மனிதனைத் தான் வீரன் என்று புகழவேண்டும் என நபியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-45-46)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-44)

44. பெண் குலத்தின் முன்மாதிரி!

ஹதீஸ் 44. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: ‘என் மகனின் நிலை என்ன?’

அதற்கு ‘அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்’ என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை அவர்கள் முன்னால் வைத்தார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் உணவு உட்கொண்டார்கள். பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவும் கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபொழுது உம்மு ஸுலைம் சொன்னார்கள்:

‘எல்லோரும் சிறுவனை அடக்கம் செய்யுங்கள்!’

பொழுது விடிந்ததும் அபூதல்ஹா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் செய்தி சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்:

‘இன்று இரவு நீங்கள் வீடு கூடினீர்களா?’

அதற்கு அபூ தல்ஹா ‘ஆம் ‘ என்றார்கள்.

அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘யா அல்லாஹ்! இவ்விருவருக்கும் அருள்பாக்கியம் புரியாயாக! ‘ என்று பிரார்த்தனை செய்தார்கள் – அவ்வாறே உம்மு ஸுலைம் அவர்கள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள்.

அனஸ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:’அபூ தல்ஹா அவர்கள் என்னிடம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நபி(ஸல்)அவர்களிடம் செல்லும்’ என்று சொன்னார்கள்! அதனுடன் சில பேரீத்தம் பழங்களையும் அனுப்பினார்கள்.

நபி(ஸல்)அவர்கள் ஏதேனும் உண்டா, அதனிடம்? என்று கேட்டார்கள். ‘ஆம்! பேரீத்தம்பழங்கள் உள்ளன’என்று சொன்னார்கள் அபூதல்ஹா. அவற்றை எடுத்துத் தங்கள் வாயில் போட்டு மென்றார்கள் நபியவர்கள். பிறகு தங்கள் வாயிலிருந்து எடுத்து குழந்தையின் வாயில் வைத்தார்கள். பிறகு அதை அதன் மேல் வாயிலும் இரு உட்பகுதிகளிலும் தடவினார்கள். அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்’ (புகாரி, முஸ்லிம்)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில் வருகிறது: இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அன்ஸார்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்: நான் ஒன்பது பிள்ளைகளைப் பார்த்துள்ளேன். அனைவரும் குர்ஆனை கற்றறிந்த அறிஞராகத் திகழ்ந்தார்கள். அதாவது அந்த ஒன்பது பேரும் (உம்மு ஸுலைமுக்கு பிறந்த) இந்த அப்துல்லாஹ்வின் பிள்ளைகளே! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-44)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)

43. சோதனையின் ரகசியம்!

ஹதீஸ் 43. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய ஓர் அடியாருக்கு நலன் நாடினால் அவனுக்கு (அவனுடைய பாவங்களின்) தண்டனையை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுத்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனது பாவத்திற்குரிய தண்டனையை (உலகில்) அவனை விட்டும் தடுத்துக் கொள்கிறான். அந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டே மறுமை நாளினை திடுமென அவனை சந்திப்பதற்காக வேண்டி!

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூலியை அதிகப்படுத்துவது சோதனையின் அதிகரிப்புடன் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினரை நேசிக்கிறான் எனில் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்குகிறான். எவர் அதில் மனதிருப்தி கொள்கிறாரோ அவருக்கு (இறைவனின்) திருப்பொருத்தம் உண்டு. எவர் அதிருப்தி அடைகிறாரோ அவருக்கு (இறைவனின்) அதிருப்தியே உண்டு. (நூல்: திர்மிதி, இது ஹஸன் தரத்திலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)

தெளிவுரை

அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ளன. அவனது நாட்டப்படியே எல்லாம் நடைபெறுகின்றன. இது குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

‘நிச்சயமாக உம் இறைவன் தான் நாடுவதைச் செய்பவனாக இருக்கிறான்’ (11 : 107) – மற்றோரிடத்தில்,

‘திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவதைச் செய்யக் கூடியவனாக இருக்கிறான்!’ (22 : 18)

எந்த மனிதனானாலும் சரியே! ஏதேனும் தவறுகள், பாவங்கள் இல்லாமல் இருக்காது. கடமையில் குறைபாடு என்பதாவது அவனிடம் இருக்கத்தான் செய்யும்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-42)

42. பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி!

ஹதீஸ் 42. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஹுனைன் யுத்தம் நடைபெற்றபொழுது ஃகனீமத் (அதாவது, போரில் கைப்பற்றப்பட்ட) பொருட்களின் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்கள் சில மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் என்பாருக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். உயைனா பின் ஹிஸ்ன் என்பாருக்கும் அதுபோல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த வேறு சிலருக்கும் வழங்கினார்கள். அந்நாளின் பங்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். (இது குறித்து) ஒருவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நீதி கடைப்பிடிக்கப்படாத பங்கீடாகும். இறை உவப்பு இதில் நாடப்படவில்லை.

நான் சொன்னேன்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதனை நிச்சயம் நான் தெரிவிப்பேன்’ அவ்விதமே நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அந்த மனிதர் சொன்னதைத் தெரிவித்தேன்.

அப்பொழுது நபியவர்களின் முகம்-சிகப்புச் சாயம் போல் மாறிவிட்டது! பிறகு நபியவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி செலுத்தவில்லையானால் பிறகு யார்தான் நீதி செலுத்துவார்? பிறகு சொன்னார்கள்: மூஸாவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அவருக்கு இதனை விடவும் அதிகமாகத் துன்பம் இழைக்கப்பட்டது., ஆயினும் அவர் பொறுமை காத்தார்!

(எனக்குள்) நான் சொல்லிக்கொண்டேன்: நிச்சயமாக! இனி எந்த விவகாரத்தையும் நபியவர்களிடம் கொண்டு செல்லமாட்டேன், நூல்: புகாரி, முஸ்லிம் – அஸ் ஸிர்ஃப்: சிகப்புச் சாயம்

தெளிவுரை

ஹுனைன் யுத்தம் என்பது தாயிப் வாசிகளுடன் மேற்கொள்ளப்பட்ட போராகும். இது மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்தது. இதில் வெற்றி பெற்றது நபியவர்களும் முஸ்லிம்களுமே! இந்தப் போரில் எதிரிகளிடம் இருந்து நிறைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஒட்டகங்கள், ஆடுகள், தங்கம் – வெள்ளி நாணயங்கள் எனப் பலவகைப் பொருள்கள் முஸ்லிம்களுக்குக் கிடைத்தன. Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-42)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-41)

41. அதோ! வெற்றி, வெகு தூரத்தில்…!

ஹதீஸ் 41. கப்பாப் பின் அல்-அரத்து(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘(இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைத்த கொடுமை குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். அப்பொழுது அவர்கள், கஅபாவின் நிழலில், தங்களது சால்வையைத் தலையணையாக வைத்துக்கொண்டு (ஓய்வாக) சாய்ந்திருந்தார்கள். நாங்கள் சொன்னோம்: ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) தாங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினரின் நிலைமை எவ்வாறு இருந்ததெனில், அவர்களில் ஒருவர் (இறைவன் மீது விசுவாசம் கொண்டதற்காக) பிடிக்கப்படுவார். அவருக்காகப் பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் அவர் நிறுத்தப்படுவார். பிறகு ரம்பம் தருவிக்கப்பட்டு அதை அவரது தலையில் வைத்து அறுத்து இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்படுவார். மேலும் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளைக் கொண்டு ஒருவரது மேனி கோதப்பட்டு அவரது சதையின் உட்பகுதி பிய்க்கப்பட்டு எலும்புவரை அது சென்றடையும்! அப்படியெல்லாம் செய்வது அவரை அவரது இறைமார்க்கத்தில் இருந்து பிறழச் செய்திடாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் இந்த மார்க்கத்தை நிச்சயம் வெற்றிபெறச் செய்வான். எந்த அளவுக்கெனில், ஒரு பயணி (யமன் தேசத்து) ஸன்ஆவில் இருந்து ஹளரமௌத் என்ற ஊர் வரை நடைபயணமாகச் செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது அவரது ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறுயாருக்கும் அவர் அஞ்ச வேண்டியதிருக்காது! ஆயினும் நீங்கள்தாம் (பொறுமை காக்காமல்) அவசரப்படுகிறீர்கள்!’ நூல்: புகாரி

மற்றோர் அறிவிப்பில்: அப்பொழுது அவர்கள் சால்வையைத் தலைக்கு வைத்து (ஓய்வாகச்) சாய்ந்திருந்தார்கள். இறைவனுக்கு இணைவைத்து வணங்குவோரிடம் இருந்து கடும் துன்பங்களை நாங்கள் சந்தித்து வந்தோம் என உள்ளது.

தெளிவுரை

இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பாளர்கள் இழைத்த அநீதிகளும் கொடுமைகளும் அளவிட முடியாதவை! அவை தாங்கிக்கொள்ள முடியாத அளவு கடுமையாகவும் கொடுமையாகவும் இருந்தன! அதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் பலதடவைகள் முறையிட்டு, அதற்கு நபியவர்கள் ஆறுதல் அளித்த நிகழ்ச்சிகள் பல! அவற்றுள் ஒன்றுதான் இது.

கப்பாப்(ரலி) அவர்கள் முறையிட்டபொழுது, முந்தைய காலத்தில் இறைவிசுவாசிகள் சந்தித்த – இதனினும் கொடுமையான சில துன்பங்களை எடுத்துக் கூறித் தம் தோழர்களின் உள்ளங்களைத் தேற்றுகிறார்கள் நபி(ஸல்) அவர்கள்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-41)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-39-40)

39, 40. தற்கொலை செய்தால் மட்டும் தொல்லை தீர்ந்துவிடுமா, என்ன?

ஹதீஸ் 39. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான்’ நூல்: புகாரி

(இமாம் நவவி அவர்கள் சொல்கிறார்கள்) :يصب என்பதிலுள்ளالصاد க்கு فتح கொடுத்தும்كسر கொடுத்தும் இருவிதமாகவும் உச்சரித்திருக்கிறார்கள்.

ஹதீஸ் 40. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உங்களில் யாரும் தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு விரும்பிடத்தான் வேண்டுமெனில் அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்யட்டும்: யா அல்லாஹ்! உயிர் வாழ்வது எனக்கு நலமுடையதாக இருக்கும் காலமெல்லாம் என்னை உயிர் வாழச் செய். மரணம் எனக்குப் பயனளிப்பதாக இருந்தால் என்னை மரணம் அடையச் செய்!’ நூல் : புகாரி

தெளிவுரை

வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது கடமை என்பதை இந்நபிமொழிகள் விளக்குகின்றன.

முதல் ஹதீஸில்يصب எனும் அரபிச் சொல் ஆளப்பட்டுள்ளது. இதனைச் செய்வினையாகவும் செயப்பாட்டு வினையாகவும் பயன்படுத்தலாம். இமாம் நவவி (ரஹ்) அவர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். செய்வினை எனில் அதற்கு இவ்வாறு பொருள் அமையும்: அல்லாஹ் அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான். -அதாவது, அந்த மனிதனின் விதியில் துன்பத்தை ஏற்படுத்தி, அவன் பொறுமை கொள்கிறானா? அல்லது பொறுமை இழந்து பதறிப் பரிதவிக்கிறானா? என்று அல்லாஹ் அவனைச் சோதிப்பான். Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-39-40)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-37-38)

37, 38.  ஏன் இந்தத் துன்பங்கள்?

ஹதீஸ் 37. அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’ -: புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: நோய்)

ஹதீஸ் 38. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;: நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்தார்கள். நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதே?’ அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஆம்! உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்பட்டுள்ளது!’

நான் கேட்டேன்: ‘அதற்கு பகரமாக உங்களுக்கு இருமடங்கு கூலி உண்டு அல்லவா?’ – நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ஆம்! அது அப்படித்தான்! எந்த ஒரு முஸ்லிமானாலும் சரி, அவருக்கு ஒரு தொல்லை வந்தால் – ஒரு முள்ளோ அதை விடவும் பருமனான ஒன்றோ அவரது உடலைக் குத்தினால்கூட அதனை அவருடைய தீமைகளுக்குப் பரிகாரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை. மேலும் மரம் தன்னுடைய இலைகளை உதிர்ப்பதுபோன்று அந்த முஸ்லிமின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டும் களையப்படுகின்றன!’ நூல்: புகாரி

மூலத்தில் அல்வஅக் எனும் வார்த்தை ஆளப்பட்டுள்ளது. அதன் பொருள்: காய்ச்சலின் தாக்கம் அல்லது காய்ச்சல்.

தெளிவுரை

உலகில் ஒருமனிதனுக்கு ஏற்படுகிற துன்பங்கள் அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகின்றன. மேற்சொன்ன இரண்டு நபிமொழிகளிலும் இது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கும் அருட்கொடை என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். துன்பங்களைக் கொடுத்து மனிதனைச் சோதிப்பதும் சோதிக்காதிருப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே! அப்படி இருக்க அந்தத் துன்பங்களின் மூலம் பாவங்களைப் போக்குகிறான், பரிகாரம் அளிக்கிறான் என்றால்அது அவனது அருட்கொடை அன்றி வேறென்ன! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-37-38)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)

36.  இதனினும் மேலான பொறுமை உண்டா?

ஹதீஸ் 36. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத் தூதர்(ஸல்) அவர்கள், நபிமார்களில் ஒரு நபியின் நிலையை (அவர்களின் மீது அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் சாந்தியும் பொழியட்டுமாக) எடுத்துரைத்தது, இப்பொழுதும் என் கண்முன் உள்ளது போன்று இருக்கிறது: அந்நபியை அவருடைய சமூகத்தார் அடித்தார்கள். இரத்தம் வடியும் அளவு அவரைக் காயப்படுத்தினார்கள். அவர் தமது முகத்தில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பிராத்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சமூகத்தாருக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக! நிச்சயமாக இவர்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள்’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

முற்காலத்து நபிமார்களில் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இங்கு இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

நபிமார்கள் என்றால் யார்? அல்லாஹ்வின் திருத்தூதர்கள். இறைவனின் தூதுச் செய்தியை இவ்வுலக மக்களிடம் சேர்ப்பிக்கும் பணி அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்தது! அந்தப் பணிக்கு அவர்கள்தாம் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதால் அல்லாஹ் அவர்களைத் தூதர்களாகத் தேர்வு செய்தான்! அல்லாஹ் குர்ஆனில் சுட்டிக்காட்டுகிறான்:

‘தனது தூதுத்துவப் பொறுப்பை யார் மீது சுமத்த வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்’ (6: 124)

ஆம்! அந்தப் பொறுப்பை ஏற்று இறைமார்க்கத்தைத் தொய்வின்றிப் பிரச்சாரம் செய்திட, அதன் பக்கம் உலக மாந்தர்களை அழைத்துக் கொண்டு வந்திட, நன்மை புரியும்படி ஏவித் தீமைகளைத் தடுத்திட, அவ்வழியில் எதிர்படும் இன்னல்களைப் பொறுமையுடன் சகித்திட அந்நபிமார்களே தகுதியும் ஆற்றலும் மிக்கோராய்த் திகழ்ந்தார்கள்! கற்களாலும் சொற்களாலும் தாக்கப்பட்டபோதும் கொண்ட கொள்கையிலிருந்து எள்ளளவும் அவர்கள் பின்வாங்கிடவில்லை. கடமையை கண்ணும் கருத்துமாய் நிறை வேற்றினார்கள்! அவ்வழியில் எதிர்பட்ட துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்! ஆனாலும் எதிரிகளின் எதிர்ப்பு எந்த அளவுக்கு கடுமையாக இருந்ததெனில், அந்நபிமார்களைக் கொலை செய்யவும் அக்கொடியவர்கள் துணிந்தார்கள்!

குர்ஆன் ஓரிடத்தில் இதனை இவ்வாறு வர்ணிக்கிறது: Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-35)

35 பொறுமையும் நற்செய்தியும்

ஹதீஸ் 35. அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: ‘சுவனவாசிகளுள் ஒருவரான ஒரு பெண்மணியை உனக்குக் காண்பித்துத் தர வேண்டாமா?’ அதற்கு நான், ‘வேண்டும்’ என்றேன். அவர்கள் சொன்னார்கள்:

‘இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான்! இவள் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னாள்: ‘சிலபொழுது நான் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன். என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனக்காக அல்லாஹ்விடம் துஆ- பிரார்த்தனை செய்யுங்கள்’

அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீ விரும்பினால் இதனைப் பொறுத்துக்கொள். உனக்குச் சுவனம் கிடைக்கும். அல்லது அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்யத்தான் வேண்டுமென நீ விரும்பினால் உனக்கு நிவராணம் அளிக்க (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்கிறேன்’

அதற்கு அவள்- ‘(அப்படியாயின்) நான் பொறுத்துக் கொள்கிறேன். என்றாள். மேலும் சொன்னாள்: ஆனால் என் ஆடைகள் விலகி விடுகின்றன. அப்படி விலகாதிருக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் – அவ்வாறு அந்தப் பெண்மணிக்காக நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

சுவனத்தைப் பற்றிய நற்செய்தி கிடைக்கப் பெற்ற ஒரு பெண்மணியைக் காண்பித்துத் தரவா என்று கேட்கிறார்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், தம் மாணவர் அதா (ரஹ்) அவர்களிடம்!

சுவனப் பேறு பெற்றவர்கள் இரண்டு வகையில் உள்ளனர். Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-35)