55.மரண சாசனங்கள்

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2739

அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோவிட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2740

தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2741

அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)” என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?’ என்று கேட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்” என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)” என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்” என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2743

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2744

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்” என்று கூறினார்கள். ‘நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பாதி அதிகம் தான்” என்று கூறினார்கள். நான் ‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்– அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள்.

எனவே, மக்கள் மூன்றிலொரு பங்கை மரண சாசனம் செய்தார்கள். அது செல்லும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2745

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக் கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்காவை வெற்றி கொண்ட ஆண்டில் ஸஅத்(ரலி) அவனைப் பிடித்தார்கள். அப்போது அவர்கள், ‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதி மொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார். ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) எழுந்து, ‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அவரின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்” என்று கூறினார். இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற அப்து இப்னு ஸம்ஆ(ரலி), ‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான் உரியது” என்று கூறினார்கள். பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா(ரலி) அவர்களிடம், ‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க் கொள்” என்று கூறினார்கள். அவன் தோற்றத்தில் உத்பாவைப் போன்றே இருந்ததைக் கண்டதால் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும் வரை) அன்னை சவ்தா(ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2746

அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், ‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் (‘அவன்தான் இப்படிச் செய்தான்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள். உடனே அந்த யூதன் கொண்டு வரப்பட்டான். அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டான். அவன் ஒப்புக் கொண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2747

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் மரண சாசனம் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றிவிட்டான். இரண்டு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனுடைய பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, ‘இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்” என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2749

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2750

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), ‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்’ என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக!

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2751

‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத்தில் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். தன் பொறுப்பிலுள்ள (எஜமானின்) செல்வத்தைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.

மேலும், ‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன். என உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2752

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘நீ அதை (உன் தோட்டத்தை) உன் உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்து விடுவதை நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘அவ்வாறே செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறிவிட்டு, தன்னுடைய (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தன் தந்தையின் உடன் பிறந்தார் மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்.

“(நபியே!) நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘பனூ ஃபிஹ்ரு குடும்பத்தாரே! பனூ அதீயே!” என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் (கிளையினர்) குடும்பத்தினரை நோக்கி அழைக்கலானார்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

“இந்த (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘குறைஷிக் குலத்தாரே!’ என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்’ என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2753

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்” என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!” என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.

இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2754

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தியாக ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘அதில் நீ ஏறிக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகம்” என்று கூறினார். (இவ்விதம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) (எனவே) நான்காவது முறையில், ‘உனக்குக் கேடுண்டாகட்டும். அல்லது அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். அதில் நீ ஏறிக் கொள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2755

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ஒருவர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டார்கள். உடனே அவரிடம், ‘அதில் நீ ஏறிக் கொள்” என்று கூறினார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி (கொடுக்கப்பட்டவுள்ள) ஒட்டகம்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும் போது), ‘அழிந்து போவாய்! அதில் ஏறிக் கொள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2756

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பயனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), ‘நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2757

கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலம்க் கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வுன் தூதருக்காகவும் தர்மமாகக் கொடுத்து வடுவதை என் தவ்பாவில் (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டதற்காக மன்னிப்புக் கோரிப் பிராயச் சித்தம் தேடும் முயற்சிகளில்) ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘கைபரில் உள்ள என்னுடைய பங்கை (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2758

அனஸ்(ரலி) கூறினார். “நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது” (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது ‘பைருஹா’ (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் – எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! (அப்படியாயின்) அது (மறுமையில் உங்களுக்கு) லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். அவர்களிடையே உபைபின் கஅப்(ரலி) அவர்களும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் கூட இருந்தனர். அதில் தனக்குக் கிடைத்த பங்கை ஹஸ்ஸான்(ரலி) முஆவியா(ரலி) அவர்களுக்கு விற்றுவிட்டார்கள். அப்போது அவர்களிடம், ‘அபூ தல்ஹாவின் தருமத்தையா விற்கிறீர்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஒரு ஸாவு பேரீச்சம் பழத்தை ஒரு ஸாவு திர்ஹம்களுக்காக நான் விற்க மாட்டேனா? (அது போன்றுதான் இதுவும்)” என்று பதில் சொன்னார்கள். அந்த (பைருஹா) தோட்டம் முஆவியா(ரலி) கட்டிய பனூ ஹுதைலா கோட்டை இருந்த இடத்தில் அமைந்திருந்தது.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2759

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மக்கள் சிலர், ‘இந்த (திருக்குர்ஆன் 04:08) இறைவசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டுவிட்டது” என்று கருதுகிறார்கள். இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. ஆனால், மக்கள் இதை இலேசாகக் கருதி (செயல்படுத்தாமல்விட்டு)விட்டார்கள். காப்பாளர்கள் இரண்டு வகைப்படுவர். ஒரு வகையினர் (இறப்பவரின்) காப்பாளராவார். இவர் வாரிசாவார். இந்த (இரத்த பந்தமுள்ள) காப்பாளர் தான் (தூரத்து உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்) கொடுப்பார். மற்றொரு காப்பாளர், இவர் வாரிசாக மாட்டார். (உதாரணமாக, அனாதைகளின் காப்பாளர்.) இவர்தான், (சொத்தைப் பங்கிடும்போது தமக்கும் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதைகளுக்கும்) நல்ல முறையில் (இன்சொல் பேசி அன்புடன்), ‘நான் உனக்கு எதுவும் தர இயலவில்லை” என்று கூறி விடுவார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2760

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம், அவர் சார்பாக தர்மம் செய்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2761

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2762

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?’ என்று கேட்டாh. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘என்னுடைய மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தருமம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2763

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் மேற்கண்ட 4:2,3 வசனத்தைக் குறித்து கேட்டபோது, பின்வருமாறு பதிலளித்தார்கள்.

இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவரின் அழகுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு, அவளை அவளுக்கு ஈடான பெண்களின் மஹ்ருத் தொகையை விடக் குறைவாகக் கொடுத்து மணந்துகொள்ள விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மஹ்ரை முழுமையாகக் கொடுத்து நீதியுடன் நடந்தாலே தவிர அவர்களை மணம் புரிந்து கொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டு, அவர்களைத் தவிரவுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டார்கள். பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் இந்த விவகாரத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், ‘பெண்களின் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (நபியே!) அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான் என்று நீங்கள் கூறுங்கள்” என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அருளினான். அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மஹ்ரை முழுமையாக அவர்களுக்குத் தருவதில்லை. அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருந்து, அதனால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாவிட்டால் அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள். எனவே ‘அவளை விரும்பாதபோது அவளை அவர்கள்விட்டு விடுவதைப் போன்றே, அவளை விரும்பும்போது அவளை மணமுடிக்கவும் அவர்களுக்கும் உரிமை இல்லை. அவளுக்கு உரிய மஹ்ரை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளுடைய உரிமையை அவளுக்குக் கொடுத்தாலே தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது’ என்று இந்த (திருக்குர்ஆன் 04:127) வசனத்தில் அல்லாஹ் விளக்கிக் கூறினான்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2764

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) ‘தம்ஃக்’ என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு” என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. ‘நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை’ என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2765

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “வசதியுள்ளவர் (அதிலிருந்து எடுத்து உண்ணாமல் தம்மைத்) தற்காத்துக் கொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமான அளவு உண்ணட்டும்” என்னும் (திருக்குர்ஆன் 04:06) இறைவசனம் அனாதையின் பராமரிப்பாளரின் விஷயத்தில், அவர் தேவையுள்ளவராக இருந்தால் அனாதையின் செல்வத்திலிருந்து, அந்த (அனாதையுடைய) செல்வத்தின் அளவிற்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக் கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2766

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை எவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதும்ட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2767

‘இப்னு உமர்(ரலி) எவராவது தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து மரண சாசனம் செய்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை” என்று நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

ஓர் அநாதையின் செல்வத்தின் விஷயத்தில் இப்னு சீரின்(ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும்.

தாவூஸ்(ரஹ்) அவர்களிடம் அநாதைகளைக் குறித்து எதுவும் கேட்கப்பட்டால், ‘அல்லாஹ் நன்மை செய்பவரையும் தீமை செய்பவரையும் (பிரித்து) அறிகிறான்” என்னும் (திருக்குர்ஆன் 02:220) இறைவசனத்தை ஓதுவார்கள். சிறுவயதுடைய அநாதைகள் குறித்தும் அதாஉ(ரஹ்), ‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2768

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பயணத்திலும் ஊரிலிருந்தும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எச்செய்கைக்காகவும், ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2769

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த ‘பைருஹா’ தோட்டம் தான் அவரின் சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்னும் (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது” என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகிற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘ஆகா! அது (மறுமையில்) லாபம் தரும் செல்வமாகி விட்டதே! அல்லது அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (நல்ல காரியத்தில் தான் போகட்டுமே!) …இப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா(ரஹ்) சந்தேகத்துடன் கூறினார். நீ கூறியதை கேட்டேன். அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீ பங்கிட்டு விடுவதையே நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘அவ்வாறே நான் செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் உடன்பிறந்தார் மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டுவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பிலும், ‘(அழிந்து) போய் விடும் செல்வம் தானே” என்று வந்துள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2770

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, ‘அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பலனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு, தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2771

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்திரவிட்டபோது, ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2772

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதை விட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை நீங்களே வைத்துக் கொண்டு அதன் வருவாயை தர்மம் செய்து விடலாம்” என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), ‘அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் எவருக்கும் தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது’ என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காவும், இறைவழியில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2773

உமர்(ரலி) கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தருமம் செய்துவிடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்கள். எனவே, அதை ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் (அதன் வருவாயைச்) செலவிடும்படி தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2774

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டுவிட்டு, ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், ‘நாங்கள் விலைகூற மாட்டோம். அல்லாஹ்வின் மீதானையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2775

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி இறைவழியில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அந்த குதிரையைத் தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; உங்கள் தருமத்தை ஒருபோதும் திரும்பப் பெற வேண்டாம்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2776

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2777

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமுறைகள் நிர்ணயித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2778

அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். ‘ரூமா’ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் ‘பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார் படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர்.

உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, ‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2779

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2780

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பனூ சஹ்கி குலத்தைச் சேர்ந்த ஒருவர் தமீமுத் தாரீ, அதீ இப்னு பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார், அந்த சஹ்கி குலத்தவர் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும், அதீயும் அவர்விட்டுச் சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக் கொண்டு வந்தபோது (அவற்றில்) தங்கத்தால் செதுக்கிய வேலைப்பாடுகள் கொண்ட வெளிப்பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவ்விருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் சிலரிடம் காணப்பட்டது. அவர்கள், ‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்” என்று கூறினர். அப்போது (இறந்த) சஹ்கி குலத்தவரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவருடைய சாட்சியத்தை விட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; (ஏற்கத் தக்கதாகும்)” என்றும், ‘அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே” என்றும் கூறினர். அவர்களின் விவகாரத்தில் தான் இந்த (திருக்குர்ஆன் 05:106, 107) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2781

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும்விட்டுச் சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன்விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதன்னுடையன் இடத்தில் குவித்து வை” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்தார்கள். பிறகு, உன் கடன்காரர்களைக் கூப்பிடு” என்றார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும்வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சி விட்டன. குறையாமல் இருந்தன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.