45.கண்டெடுக்கப்பட்ட பொருள்

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2426

உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்:

அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) ஸலமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘(நான் அறிவித்த ஹதீஸில்) நபி(ஸல்), அவர்கள், ‘மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது ‘ஓராண்டுக்காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறியமாட்டேன்” (அதாவது ‘எனக்கு நினைவில்லை”) என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2427

ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப்பவர் எவராவது உன்னிடம் வந்தால் (அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென்றால் அதை உன் செலவுக்கு எடுத்துக்கொள்” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி, ‘இறைத்தூதர் அவர்களே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, ‘வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி(ஸல்) அவர்களின் திருமுகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறிவிட்டது. பிறகு, ‘உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடனே அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப்பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கிறது; மரத்திலிருந்து தின்கிறது” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2428

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு, ஓராண்டுக் காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள்.

பின்னர் அறிவிப்பாளர் யஸீத்(ரஹ்) கூறினார்.

அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடம் அடைக்கலப் பொருளாக இருக்கும்.

இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும் அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்களின் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), ‘வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் யஸீத்(ரஹ்), ‘அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.

பிறகு அந்த நபர், ‘வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அதை (அப்படியே)விட்டுவிடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கிறது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கிறது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும்வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கிறது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரங்களிலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது” என்று பதில் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2429

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்” என்றார்கள். அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது.” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2430

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ‘அந்த மனிதர் கடலில் தன்னுடைய செல்வத்துடன் வாகனம் ஏதும் வருகிறதா என்று கவனிப்பதற்காகப் புறப்பட்டார். அப்போது ஒரு மரத்துண்டை (கரையில் ஒதுங்கக்) கண்டார். அதைத் தன் குடும்பத்தினருக்கு விறகாகப் பயன்படட்டும் என்று எடுத்தார். அதை அவர் பிளந்துபோது தன் செல்வத்தையும் (அதை வைத்து அனுப்பியவரின்) கடிதத்தையும் (அதனுள்) கண்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) ஹதீஸ் முழுவதையும் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2431

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். ‘இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2432

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது; உடனே அதைப் போட்டு விடுகிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2433

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அதன் (மக்காவின்) மரங்களை வெட்டக்கூடாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டியடிக்கக் கூடாது. அதில் கண்டெடுக்கப்படும் (கேட்பாரற்ற) பொருள் அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. அதன் புல்பூண்டுகளைக் கிள்ளவும் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இத்கிரைத் தவிரவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிரைத் தவிரத் தான்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2434

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அப்பாஸ்(ரலி), ‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் புல்லைத் தவிரத்தான்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறினார்:) நான் அவ்ஸாயீ(ரஹ்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூ ஷாஹ்(ரலி) அவர்களின் சொல் எதைக் குறிக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத்தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2435

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, எவரும் ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2436

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனி(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக் கொள். அதன் உரிமையாளர் வந்து அடையாளம் (சரியாகக்) கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்திவிடு” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க் குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன் அல்லது அவர்களின் முகம் சிவந்துவிட்டது. பிறகு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் எஜமான் அதைச் சந்திக்கும் வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள (அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கிறதே” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2437

சுவைத் இப்னு கஃபலா(ரஹ்) கூறினார். நான் சல்மான் இப்னு ரபீஆ அல்பாஹிலீ(ரலி) அவர்களுடனும் ஸைத் இப்னு ஸூஹான்(ரலி) அவர்களுடனும் ஒரு போரில் பங்கெடுத்தபோது சாட்டை ஒன்றைக் கண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதைப் போட்டு விடு” என்று கூறினார்கள். நான், ‘இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்து விடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பியபோது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள். நான், நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். ஒரு வருடகாலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன். பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்க அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கையையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்து கொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2438

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை (உறை)யையும் முடிச்சையும் (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென்றால் அதைச் செலவழித்துக் கொள்” என்று கூறினார்கள். பிறகு, அவர் நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம்பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கே தாகம் தணித்துக் கொள்கிறது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது. அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அதைவிட்டு விடு” என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டதற்கு, ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2439

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘நீ யாருடைய பணியாள்” என்று சொல்லி அவரின் பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், ‘உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம், இருக்கிறது” என்று பதிலளித்தான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துத் தொடைகளுக்கிடையே அழுத்தினான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளையிட்டேன். பிறகு, அவனுடைய இருகைகளையும் (தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். ‘இப்படி உதறும்படி” என்று அபூ பக்ர்(ரலி) ஒரு கையை மற்றொரு கை மீது அடித்துக் காட்டினார்கள். (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்தினான்.) பிறகு சிறிதளவும் (ஒரு சொம்பு) பால் கறந்தான். நான் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அருந்துங்கள்” என்று கூறினேன். நான் திருப்தியடையும் வரை (அதை) அவர்கள் அருந்தினார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.