28.(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1821

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.

“அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணிருந்த வேளையில், ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!” என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!” என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1822

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா (ஒப்பந்தம் நடந்த) ஆண்டில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அவர்களின் தோழர்கள் இஹ்ராம் அணிந்திருந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. ‘கைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது; நாங்கள் அவர்களை எதிர்கொள்ளச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் அதைப் பார்த்து, அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திப் பிடித்தேன். நான் என் தோழர்களிடம் உதவி தேடியபோது, அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு, அதை நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று சேர்ந்து விட்டேன். நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோம் என்று அஞ்சி, என் குதிரைய விரைவாகவும் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனும்ஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். ‘நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்திருக்கிறீர்?’ என்று கேட்டேன். ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில் ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!” என்று அவர் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களை அடைந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு ஸலாம் கூறி அனுப்பினார்கள்: உங்களிடமிருந்து அவர்களை எதிரிகள் பிரித்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்: எனவே, அவர்களுக்காக எதிர்பார்த்திருங்கள்!” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) மீதமும் உள்ளது!” என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களிடம் ‘உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1823

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் ‘நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!” என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் ‘உண்ணுங்கள்!” என்றனர். மற்றும் சிலர் ‘உண்ணாதீர்கள்!” என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1824

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பிவைத்தார்கள். ‘கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’ என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் ‘இல்லை!” என்றனர். ‘அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1825

ஸஅபு இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். ‘நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1826

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!”
இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1830

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்” எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அதன் தீங்கிலிருந்து நீங்கள் தப்பித்ததுபோல் உங்கள் தீங்கிலிருந்து அது தப்பித்தது!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1831

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பல்லி தீங்கிழைக்கக் கூடியது!” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஆனால், ‘அதைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!” என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1832

ஸயீத் இப்னு அபீ ஸயீத்(ரஹ்) அறிவித்தார். (மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் இப்னு ஸயீத். (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு எதிராக), மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூ ஷுரைஹ் அல் அதவீ(ரலி) பின்வருமாறு கூறினார்கள்.

“தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உமக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன் என் உள்ளம் அதை மனனம் செய்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘மக்காவை அல்லாஹ் புனிதப்படுத்தியிருக்கிறான்: மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை; இறைத்தூதர் போரிட்டதால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால். ‘அல்லாஹ், தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை!” என்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்யை அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது! (இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள்.

அபூ ஷுரைஹ்(ரலி) அவர்களிடம் ‘இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘அபூ ஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன்! குற்றவாளிக்கும். கொலை செய்துவிட்டு ஓடுபவனுக்கும், திருடிவிட்டு ஓடுபவனுக்கும் ‘ஹரம்’ நிச்சயம் பாதுகாப்புத் தராது!’ என்று அம்ர் கூறினார்” என பதிலளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1833

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது; எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது; இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது; இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது; யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் மண்ணறைகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1834

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “இனி (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்றாலும் அறப்போரிடுதல் அதற்காக (வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது! நீங்கள் போருக்காக அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்! வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போரிட அனுமதிக்கப்படவில்லை; எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்! இங்குள்ள முட்களை வெட்டக் கூடாது; வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது; பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது; இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைத்தூதர் அவர்களே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!” என்று அப்பாஸ்(ரலி) கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிரைத் தவிர!” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1835

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தபோது இரத்தம் குத்தி எடுத்தார்கள்.”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1836

இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், ‘லஹ்யு ஜமல்’ எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1837

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள்!”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1838

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1839

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரின் உடல் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, ‘அவரைக் குளிப்பாட்டி கபனிடுங்கள்! அவரின் தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்) தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1840

அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்(ரஹ்) அறிவித்தார். ‘அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா(ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!” என்ற மிஸ்வர்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ‘நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். ‘யார் அது?’ என்று கேட்டார்கள். ‘நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! ‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) என்னை அனுப்பினார்கள்!” என்று கூறினேன். அபூ அய்யூப்(ரலி), தம் கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு தண்ணீர் ஊற்றுகிற மனிதரிடம் ‘தண்ணீர் ஊற்றுவீராக!’ என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூ அய்யூப்(ரலி), தம் தலையை இரண்டு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்யப் பார்த்திருக்கிறேன்!” என்றும் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1842

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது! செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம். ஆயினும் கரண்டைக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டி விட வேண்டும்!” என்று விடையளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1843

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் ‘யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1844

பராவு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். மக்காவிற்குள் நுழைய அவர்களை மக்காவாசிகள் அனுமதிக்கவில்லை. (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக் கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1845

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன் அல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கும் ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் அணிவதற்குரிய எல்லையாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் அந்தப் பகுதியினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும், உரியனவாகும்! இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் அணிய வேண்டும்!”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1846

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!’ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவனைக் கொன்று விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1847

யஃலா(ரலி) அறிவித்தார். நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒருவர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற கறை படிந்த (கம்பளியால் ஆன) மேலங்கியை அவர் அணிந்திருந்தார். ‘நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) இறங்கும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?’ என்று உமர்(ரலி) என்னிடம் வினவினார்கள். நபி(ஸல்) அவர்களின் மீது வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) இறங்கி, பின்னர் அது அவர்களைவிட்டு நீங்கியது; (அதை பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய ஹஜ்ஜில் செய்யக் கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.

ஒருவர் இன்னொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் கடித்தவரின் முன் பற்களை உடைத்தார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தர வேண்டியதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1849

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது அவர் தன் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். வாகனம் (ஒட்டகம்) அவரின் கழுத்தை முறித்து அவரைக் கொன்றது. நபி(ஸல்) அவர்கள் ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்குக் கபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரின் தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1850

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது, அவர் தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். வாகனம் அவரின் கழுத்தை முறித்து அவரைக் கொன்றுவிட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்குக் கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; தலையை மூடாதீர்கள்! ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1851

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் தங்கியிருந்தபோது அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்து விட, அவர் மரணித்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்கு கபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரின் தலையை மூடாதீர்கள்! ஏனெனில், கியாமத் நாளில் இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்!” எனக் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1852

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1853

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின்போது வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1855

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்லு(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். ஃபள்லு(ரலி) அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபள்லு(ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள். அப்போது அப்பெண்மணி, ‘அல்லாஹ் விதித்த கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதிர்ந்த வயதுடையவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்!” என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1856

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து (பயணச்) சுமைகளுடன் என்னை இரவிலேயே அனுப்பினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1857

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் பருவ வயதை நெருங்கிய நேரத்தில் பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். நபி(ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்து கொண்டேன். இது கடைசி ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1858

ஸாயிப் இப்னு யஸித்(ரலி) அறிவித்தார். “நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1859

ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். “ஸாயிப் இப்னு யஸித்(ரலி), நபி(ஸல்) அவர்களின் (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்!” என்று உமர்பின் அப்துல் அஸில்(ரஹ்) அவர்கள் கூற கேட்டேன்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1860

அப்துர் ரஹ்மானை இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி), தாம் செய்த கடைசி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களின் மனைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் என்னையும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1861

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர் அவர்களே! (பெண்களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(பெண்களுக்கு) சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ்ஜாகும்!” என்றார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான்விட்டதில்லை!”

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1862

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1863

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், ‘நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, ‘என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1864

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) ‘கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!”

“அபூ ஸயீத்(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்!” என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸ்ஆ கூறுகிறார்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1865

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1866

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்” என்றார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.