17.குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1067

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1068

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1069

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸாத் அத்தியாயம் ஓதப்படும்போது ஸஜ்தாக் கட்டாயமில்லை. (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்ததை பார்த்திருக்கிறேன்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1070

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். அக்கூட்டத்தில் ஒருவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகக் கொல்லப்பட்டதை பார்த்தேன்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1071

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களம் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1072

ஸைத் இப்னு ஸாயித்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1073

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1074

அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேனே என்றேன். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் ஸஜ்தாச் செய்திருக்க மாட்டேன்’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1075

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1076

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1077

ரபீஆ இப்னு அப்தில்லா அறிவித்தார். உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1078

அபூ ராபிவு அறிவித்தார். நான் அபூ ஹுரைரா(ரலி) உடன் இஷாத் தொழுதேன். அவர்கள் இதஸ்ஸமாவுன் ஷக்கத் என்ற அத்தியாயத்தை ஓதி, ஸஜ்தாச் செய்தார்கள். இது என்ன? என்று கேட்டேன். அதற்கு, ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இந்த வசனத்திற்காக நான் ஸஜ்தாச் செய்துள்ளேன். நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வரை நான் செய்து கொண்டே இருப்பேன்’ என்று அபூ ஹுரைரா(ரலி) விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1079

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.