4.உளூச் செய்வது

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 132

‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 133

ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘மதீனா வாசிகள் ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் ‘ஜுஹ்ஃபா’ என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்ன்’ என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.”யமன்’ வாசிகள் ‘யலம்லம்’ என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 134

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 135

‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்” ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 136

‘பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்” நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 137

‘தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்’ என்று அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 138

நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் ‘சுருக்கமாக உளூச் செய்தார்கள்’ என்பதோடு ‘குறைவாக’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் ‘சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)’ என நாங்கள் கேட்டதற்கு, ‘நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்’ என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக” உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 139

(ஹஜ்ஜில்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும்.இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை” என உஸமா இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 140

‘இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்’ என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்” என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 141

‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது ‘அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து’ என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 142

‘கழிப்பிடத்திற்குச் சென்றபோது, ‘இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 143

‘நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் ‘இந்தத் தண்ணீரை யார் வைத்தது?’ என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே ‘இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 144

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 145

நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருந்hள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.இச்செய்தியை அவர்களிடமிருந்து அறிவிக்கும் வாஸிவு இப்னு ஹப்பான் அவர்களை (தொழுது முடித்த பிறகு) நோக்கி இப்னு உமர்(ரலி) ‘நீரும் பிட்டங்களை பூமியில் அழுத்தித் தொழுபவர்களைச் சார்ந்தவர்தாம் போலும்” என்று கூறினார்கள். அதற்கு வாஸிவு, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்கள் குறை சொன்னவாறு தொழுதேனா என்பதை அறிய மாட்டேன்” என்று கூறினார்.

“பூமியுடன் (தன் பிட்டங்களை) அப்பியவராகவும், பிட்டங்களைப் பூமியைவிட்டு அகற்றாதவராகவும் ஸஜ்தா செய்து தொழுபவரைத்தான் (இப்னு உமர்) அவர்கள் குறிப்பிட்டார்கள்” என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இமாம் மாலிக் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146

‘நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), ‘ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்’ என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்” ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 147

(நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.”வெளியே செல்ல’ என்பதற்கு ‘கழிப்பிடம் நாடி’ என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்” என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 148

‘ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 149

‘எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏவினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 150

‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுகூன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 151

‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 152

நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும், ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம். (தேவையை முடித்ததும்) அவர்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.’கைத்தடி என்பது அதன் மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள கைத்தடியாகும்’ என்று ஷுஅபா குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 153

‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். தம் வலக்கரத்தால் சத்தம் செய்யவும் வேண்டாம். (பானங்கள்) அருந்தும்போது குடிக்கும் பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 154

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 155

‘நபி(ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்றபோது அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்களின் அருகில் நான் சென்றபோது, ‘சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களைக் கொண்டு வாரும். எலும்புகளையோ, விட்டையையோ கொண்டு வரவேண்டாம்” என்று கூறினார்கள். நான் (கற்களைப் பொறுக்கி) என்னுடைய ஆடையின் ஓரத்தில் எடுத்துக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களின் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின்னர் அக்கற்களால் சுத்தம் செய்தார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 156

‘நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, மூன்று கற்களைக் கொண்டு வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் இரண்டு கற்களைப் பெற்றுக் கொண்டேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒரு விட்டையை எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் விட்டையை எறிந்துவிட்டு ‘இது அசுத்தமானது’ என்று கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 157

‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 158

‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 159

‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார். பின்னர் ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உஸ்மான்(ரலி) கூறினார்” ஹும்ரான் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 160

உஸ்மான்(ரலி), உளூச் செய்யும்போது (மக்களிடம்) ‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு, ‘ஒரு மனிதன் அழகிய முறையில் உளூச் செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன் என்றார்கள்” ஹும்ரான் அறிவித்தார்.அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது ‘நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்’ (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்” என உர்வா கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 161

‘உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 162

‘உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 163

‘நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களைவிட்டும் பின்தங்கிவிட்டாhக்ள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, ‘இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்’ என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 164

‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 165

‘மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(ரலி) (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல் காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் ‘குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்’ என்று கூறினார்கள்’ என்றார்கள்” என முஹம்மத் இப்னு ஸியாத் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 166

‘உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்’ என்றார். ‘இப்னு ஜுரைஜே! அவை யாவை?’ என இப்னு உமர்(ரலி) கேட்டதற்கு, ‘(தவாஃபின்போது) கஅபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை என்பதை பார்த்தேன். முடியில்லாத தோல் செருப்பை நீங்கள் அணிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதைப் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருந்தபோது (துல்ஹஜ் மாத) பிறையைக் கண்டதுமே மக்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நீங்கள் (துல்ஹஜ் மாதம்) எட்டாவது நாள்தான் இஹ்ராம் அணிந்ததைப் பார்த்தேன்’ என்று இப்னு ஜுரைஜ் கூறியதற்கு, ‘கஅபதுல்லாஹ்வின் மூலைகளைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டை நோக்கியுள்ள இரண்டு மூலைகளைத் தவிர எதையும் தொட நான் காணவில்லை. முடியில்லாத செருப்பைப் பொருத்த வரையில் நபி(ஸல்) அணிந்து முடியில்லாத செருப்பை அணிந்து உளூச் செய்வதை பார்த்தேன். எனவே அதை அணிவதை நான் பிரியப்படுகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை விரும்புகிறேன். இஹ்ராம் அணிவதைப் பொருத்தவரை நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாகனம் அவர்களை ஏற்றிக் கொண்டு (எட்டாம் நாள்) புறப்படும் வரை அவர்கள் இஹ்ராம் அணிவதை நான் பார்த்ததில்லை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்” என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 167

‘நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப்(ரலி)யின் ஜனாஸாவை கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூவின் உறுப்புகளையும் கழுவுங்கள்’ என்று கூறினார்கள்” உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 168

‘நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 169

‘அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர்ம்டைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 170

‘அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற, நபி(ஸல்) அவர்களின் முடி எங்களிடம் உள்ளது என அபீதா என்பவரிடம் கூறினேன். அப்போது அவர், ‘நபி(ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகம் மற்றும் அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிக விருப்பமானதாகும்’ என்று கூறினார்” முஹம்மத் இப்னு ஸீரின் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 171

‘நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா(ரலி) எடுத்தார்” அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 172

‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 173

‘ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 174

‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாய்கள் பள்ளிவாசலின் உள்ளே வந்தும் அதில் சிறுநீர் கழித்தும் சென்று கொண்டிருந்தன. அதற்காக அதில் எவரும் தண்ணீர் தெளிக்கவில்லை” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 175

(நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து (எதையேனும்) சாப்பிட்டிருக்குமானால் அதை நீர் சாப்பிடாதே! ஏனெனில், அது தனக்காகவே அதைப் பிடித்திருக்கிறது’ என்று கூறியபோது, ‘என்னுடைய நாயை அனுப்புகிறேன்; ஆனால் (வேட்டையில்) அதோடு வேறொரு நாயையும் காண்கிறேன்?’ என்று கேட்டேன். ‘அப்படியானால் அதை நீர் சாப்பிடாதே! (ஏனெனில், நீர் உம்முடைய நாயைத்தான் இறைவனின் பெயர் சொல்லி அனுப்பினீரே தவிர வேறு நாய்க்கு நீர் இறைவனின் பெயர் சொல்லவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அதீய் இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 176

‘ஹதஸ்’ ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் ‘அபூ ஹுரைராவே! ‘ஹதஸ்’ என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு அவர் ‘பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம்’ என்று கூறினார்” என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 177

‘காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 178

‘மதி எனும் காம நீர் வெளியாகும் ஆடவனாக இருந்தேன். (அததைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 179

‘ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்’ என உஸ்மான்(ரலி) கூறினார். மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்” ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 180

‘நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழாகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்?’ என்றார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார். ‘நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்தால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூச் செய்ய வேண்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ சயீதுல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 181

‘நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 182

‘நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் தழுவினார்கள். காலுறைகளின் மீது தடவினார்கள்” என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 183

‘நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 184

ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா(ரலி) வானை நோக்கித் தம் கையால் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறினார்கள். அப்போது இது (ஏதாவது) அடையாளமா? என்று நான் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) ‘ஆமாம் அப்படித்தான்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (அதனால்) என் தலை மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம் நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனின் குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) ‘இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?’ என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர், எங்களிடம் நேர் வழியையும் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஏற்று நம்பிப் பின் பற்றினோம்’ என்று கூறுவார். அப்போது ‘நல்லவராய் நீர் உறங்குவீராக!’ என்றும் ‘நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே இருந்தீர் என்றும் அறிவோம்’ என (வானவர்களால்) கூறப்படும். நயவஞ்சகனோ ‘எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்’ என்பான்’ என எனக்கு அறிவிக்கப்பட்டது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அஸ்மா(ரலி) அறிவித்தார்.”அஸ்மா(ரலி) இந்த ஹதீஸை அறிவித்தபோது ‘நிகரான’ என்ற இடத்தில் ‘அடுத்த படியான’ என்று கூறினார்களா? ‘நம்பிக்கையாளர்’ என்ற இடத்தில் ‘உறுதியிலிருப்பவர்’ என்று கூறினார்களா? ‘நயவஞ்சகன் என்ற இடத்தில் ‘சந்தேகத்துடன் இருந்தவன்’ என்று கூறினார்களா? என்பது எனக்கு நினைவில்லை என்று கூறினார்” என்று ஃபாத்திமா கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 185

‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நபி(ஸல்) அவர்கள் எப்படி உளூச் செய்தார்கள்? என்பதை எனக்கு நீர் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ‘ஆம்’ என்று கூறித் தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அதைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார். பின்னர் மூன்று வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன்னே கொண்டு சென்று பின்பு கைகளைப் பின்னே கொண்டு வந்து தலையைத் தடவினார். அதாவது தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வந்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கழுவினார்” என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 186

‘அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்” யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 187

‘நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவினார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு கைத்தடி இருந்தது” என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 188

‘நபி(ஸல்) அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும் தங்கள் முகத்தையும் கழுவினார்கள். அதில் தண்ணிரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும் பிலால் அவர்களிடமும் இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்; உங்களின் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 189

தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்” என இப்னுஷிஹாப் அறிவித்தார்.”நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்” என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 190

‘என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்’ எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது” என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 191

‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்” யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 192

‘அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) என்பவரிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்துத் தம் தலையைத் தடவினார். இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்” என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 193

‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 194

‘நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயநிலையில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?’ என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய (திருக்குர்ஆன் 04:176-வது) வசனம் அருளப்பட்டது” என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 195

தொழுகையின் நேரம் வந்தபோது சமீபத்தில் வீடு உள்ளவர்கள் (உளூச் செய்வதற்காக) தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் தங்கிவிட்டனர். அப்போது, நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய ஒரு கல் தொட்டி கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தங்களின் கையை விரித்துக் கழுவ முடியாத அளவிற்கு (அதன் வாய்) சிறியதாக இருந்தது. எஞ்சியிருந்த அனைவரும் அதில் உளூச் செய்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.”அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள்’ என்று நாம் கேட்டதற்கு ‘எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்’ எனக் கூறினார்” என ஹுமைத் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 196

‘நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 197

‘நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது செம்பினாலான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தோம். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். தங்களின் முகத்தையும் மூன்று முறையும் கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் தங்களின் தலையைத் தடவினார்கள். (தங்கள் கைகளைத் தலையில் வைத்து) முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்துவிட்டு, திரும்ப முன் பக்கம் கொண்டு சென்றார்கள். மேலும் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 198

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் அதிகமாம் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தங்கள் இதர மனைவிகளிடம் அவர்கள் அனுமதி கேட்டதற்கு அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்குமிடையில் (தொங்கியவர்களாக) வெளியில் வந்தார்கள். (அவர்களின் கால்களைச் சரியாக ஊன்ற முடியாததால்) பூமியில் அவர்களின் இரண்டு கால்களும் கோடிட்டுக் கொண்டே சென்றன.நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்குள் சென்று அவர்களின் வேதனை அதிகரித்தபோது ‘வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள். நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஹப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு கல் தொட்டியில் நபி(ஸல்) அவர்களை அமர வைத்து, அவர்கள் ‘போதும்’ என்று சொல்லும் வரை அவர்களின் மீது தண்ணீரை ஊற்றினோம். பின்னர் மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக வெளியில் வந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

“இது பற்றி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களைத் தாங்கிச் சென்ற இருவரில்) இரண்டாமவர் யார் என்பது உமக்குத் தெரியுமா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார். நான் ‘தெரியாது’ என்றேன். ‘அவர் தாம் அலீ(ரலி)’ எனக் கூறினார்” என (இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 199

‘என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்ய நீர் கண்டீர் என்பதை எனக்கு அறிவிப்பீராக’ எனக் கேட்டார். அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு தட்டையான பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அதிலிருந்து தம் கையில் ஊற்றி மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையை அந்தப் பத்திரத்தில் நுழைத்துத் தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கை தண்ணீரால் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையை(ப் பாத்திரத்தில்) நுழைத்துத் தண்ணீர் கோரி மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையால் தண்ணீர் எடுத்துத் தம் தலையின் முன் பக்கமிருந்து பின் பக்கமும் பின் பக்கமிருந்து முன் பக்கம் பின் பக்கமிருந்து முன் பக்கமும் கொண்டு சென்று தலையைத் தடவினார். பின் தம் இரண்டு கால்களையும் கழுவிவிட்டு ‘இப்படித்தான் நபி(ஸல்) உளூச் செய்ய பார்த்தேன்’ என்று கூறினார்கள்” யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 200

‘நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்” அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 201

‘நபி(ஸல்) அவர்கள் நான்கு ‘முத்து’விலிருந்து ஐந்து ‘முத்து’ வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு ‘முத்து’ அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்” அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 202

‘நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை உளூச் செய்தபோது) இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்” என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (தம் தந்தை) உமர்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது ‘ஆம்! நபி(ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை ஸஃது உனக்கு அறிவித்தால் அது பற்றி வேறு யாரிடமும் கேட்காதே’ என்று உமர்(ரலி) கூறினார்” என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 203

‘நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்” என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 204

‘நபி(ஸல்) அவர்கள் (உளூவில்) தங்களுடைய தலைப்பாகையின் மீதும் இரண்டு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்ததை பார்த்தேன்” என அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 206

‘நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதைவிட்டுவிடும். கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன்’ என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்தார்கள்” என முகீரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 207

‘நபி(ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சியைப் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 208

‘நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டுவிட்டுத் தொழுதார்கள்; உளூச் செய்யவில்லை” அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 209

‘கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என ஸுவைது இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 210

‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 211

‘நபி(ஸல்) அவர்கள் பால் குடித்து, வாய் கொப்புளித்துவிட்டு, அதிலே கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 212

‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரைவிட்டும் தூக்கக் கலக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது’ என்று’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 213

‘உங்களில் ஒருவர் தொழுகையில் கண் அயர்ந்தால், தாம் என்ன ஒதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறிந்துகொள்ளும் வரை (தொழுவதை நிறுத்திவிட்டு) தூங்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 214

‘நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள்’ என அனஸ்(ரலி) கூறியபோது, ‘நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?’ என அனஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது’ என்று அனஸ்(ரலி) கூறினார்” அம்ர் இப்னு ஆமிர் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 215

‘கைபர் போர் நடந்தவருடம் நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும் படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்” என ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 216

நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, ‘இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 217

‘நபிஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் செல்வார்களானால் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு செல்வேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்வார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 218

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்டபோது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 219

‘ஒரு கிராமவாசி பள்ளியினுள் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, ‘அவரைவிட்டு விடுங்கள்’ என்று கூறிவிட்டு, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது ஊற்றினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 220

‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 221

‘ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்தார். அப்போது அவரை மக்கள் விரட்டினார்கள். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அம்மனிதர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீரின் மீது ஊற்றப்பட்டது” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 222

‘நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (கொஞ்சம்) தண்ணீர் கொண்டு வரச் செய்து அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 223

‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை” என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 224

‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்” என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 225

‘நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை அவர்களின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்” என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 226

‘அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். ‘இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறுவார். ‘அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே’ என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்’ என்று கூறினார்” என அபூ வாயில் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 227

‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 228

‘அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 229

‘நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 230

‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ‘ நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்’ என்று கூறினார்கள்” என சுலைமான் இப்னு யஸார் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 231

‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ‘நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்’ என்று கூறினார்கள்” சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 232

‘நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருந்த இந்திரியத்தைத் தாம் கழுவியதாகவும் அந்த ஆடையில் ஆங்காங்கே சில இடங்களில் அதன் ஈரத்தைப் பார்த்ததாகவும் ஆயிஷா(ரலி) கூறினார்” என சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 233

உகல்’ அல்லது ‘உரைனா’ கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் சீதோசம்) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகங்களிடத்தில் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர். இச்செய்தி மறு நாள் காலை நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. ‘ஹர்ரா’ என்ற (கரும்பாறை நிறைந்த) இடத்தில் அவர்கள் எறியப்பட்டார்கள். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை” என அனஸ்(ரலி) அறிவித்தார்”இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தாhர்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போருக்குத் தயாராம்விட்டார்கள்” என்று அபூ கிலாபா கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 234

‘பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னர், நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுதார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 235

‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 236

‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 237

‘இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறயம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 238

‘நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 239

‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 240

நபி(ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருந்hர்கள்.பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, ‘யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!’ என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 241

‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 242

‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 243

‘ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) அவர்களிடம் மக்கள் வந்து, ‘நபி(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சை செய்யப்பட்டது?’ என்று கேட்டபோது, எனக்கும் கேள்வி கேட்கப்பட்டவருக்குமிடையில் யாரும் இருக்கவில்லை. ‘இந்த விஷயத்தை என்னை விட அதிகம் தெரிந்தவர் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அலீ(ரலி) தங்களின் கேடயத்தைக் கொண்டு வந்தார். அதில் தண்ணீர் இருந்தது. ஃபாத்திமா(ரலி) அந்தத் தண்ணீரால் நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவினார். ஒரு பாய் எடுக்கப்பட்டு அது கரிக்கப்பட்டது. பின்னர் அந்தச் சாம்பல் நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசப்பட்டது’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) கூறினார்” என அபூ ஹாஸிம் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 244

‘நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள், தங்களின் கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கியபோது ‘உவ் உவ்’ என்றதைக் கண்டேன். குச்சியோ அவர்களின் வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போன்றிருந்தது” அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 245

‘நபி(ஸல்) அவர்கள் இரவு (தூக்கத்திலிருந்து) விழிக்கும்போது தங்களின் வாயைக் குச்சியால் சுத்தம் செய்வார்கள்” என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 246

‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 247

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்” என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.