ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.

1197. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து” என்றார்கள்.

புஹாரி : 6622 அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி).

1198. நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூ மூஸாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்றார்கள். நான், ‘சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்க மாட்டோம்’. எனவே, ‘அபூ மூஸாவே’ அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்” என்றார்கள். (அவ்வாறே அபூ மூஸா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா (ரலி) அவர்கள் எடுத்து வைத்து ‘வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்றார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, ‘இவர் யார்?’ என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் ‘இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்” என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) ‘அமருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)” என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா (ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்) ‘நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.

புஹாரி : 6923 அபூபுர்தா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , . Bookmark the permalink.