இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது

(விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183)

இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான தெளிவை இதன் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்போம்.

குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு நோன்பு ஏதும் புதிய கடமையல்ல என்பதனையும், கடந்த காலங்களில் இறைவனால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை சட்டங்களைப் பின்பற்றிய சமூகத்தவர்களுக்குக் கூட கடமையாக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்திற்கும் இன்னொரு மார்க்கத்திற்கும் வேற்றுமை இருந்து வந்திருக்கின்றது. இன்றும்கூட பெரும்பாலான மார்க்கங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தைக் கெடுத்து இருந்தாலும் சரி! மேலும் இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் மனித உள்ளங்கள் ஓய்வு பெறுவதுடன், அதனை ஏற்றுக் கொண்டு அதற்குக் கட்டுப்படுவதும் இலேசாக இருக்கும். மேலும் ஏனையவர்களுக்கும் நோன்பு அனுஷ்டிப்பது கடமையாக்கப்பட்டிருந்தது என்ற மனத் திருப்தியினால் கஷ்டமானதாகத் தோன்றவும் மாட்டாது.

ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு அதனை கடமையாக்கிய இறைவனே தெளிவான பதில் அளிக்கின்றான். அதாவது (நீங்கள் இறைபக்தி உள்ளவர்களாக ஆவதற்கே) என்பதுவே அதுவாகும். எனவே ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் மூலம் இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதையே கருத்திற் கொண்டிருப்பான்.

வெறுக்கப்பட்ட, இழிவான பண்புகளுக்கிடையில் நோன்பு பாதுகாவலாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் வழங்கப்படும் பாதுகாவலாகும். மேலும் இதனால் சமூகத்தில் சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்கள் உருவாகவும் வாய்ப்பேற்படுகின்றது. இதுபற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது (நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் யாராவது நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தீய வார்த்தைகள் பேசவோ, உடலுறவில் ஈடுபடவோ, தீய செயல்களில் ஈடுபடவோ வேண்டாம். யாராவது உன்னுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி எனக் கூறுவீராக!) என்றார்கள். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது பாதுகாப்பாகும். அதன் பொருளாவது நோன்பாளி நான் நோன்பு நோற்பது தனது மிருகத்தனமான தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே என நம்புவதாகும். தான் நோன்பாளி எனக் கூறுவதன் மூலம் தான் மானிடப் பண்புகளுடன் இருப்பதையும், மிருகத்தனமான பண்புகளில் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றான். தன்னை தன் உள்ளத்தின் தீங்குகளை விட்டும் பாதுகாத்து, தனது தீங்குகளை விட்டும் தனது சமூகத்தைப் பாதுகாக்கும் போது இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு இறை பக்தியாளர்களில் நின்றும் ஆகிவிடுவார்.

இவ்வாறு நோன்பாளியின் உள்ளத்தில் தன்னை இறைவன் கண்காணித்துக் கொண்டிருப்பதான உணர்வை ஏற்படுத்தி மனிதன் பசியை, தாகத்தை, ஏனைய உணர்வுகளையும் விட்டுவிடுவது அவனுக்காகவே என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். மேலும் இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் அனைத்து கடமைகளும் அவனுடைய வாழ்வு முழுவதும் இறைவனுக்குச் செய்யப்படுகின்ற இறைவழிபாடாக மாறுமளவு அவனைத் தகுதியுள்ளவனாக ஆக்குகின்றது. இப்போது இதே நோக்கத்தை முன்னால் வைத்து நோன்பு எனப்படும் இந்த இறைவழிபாடு அந்த பெரிய இறைவழிபாட்டுக்கு மனிதனை எவ்வாறு தயார் செய்கிறது என நோக்குவோம்.

நோன்பு ஒரு மறைவான வணக்கம்.

நோன்பைத் தவிர்த்து ஏனைய இறை வழிபாடுகளெல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் நோன்பு ஓர் இரகசியமான இறைவழிபாடாகும். நிறைவேற்றுகின்ற மனிதனையும் ஒரே இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. தனக்கு முன்னால் தனது ஆசைகளை, பசியை, தாகத்தை போக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அவன் இறைவன் ஒருவனின் திருப்தியை நாடியவனாக அவற்றை விட்டும் நீங்கி மறைவான வணக்கமாக அதனை நிறைவேற்றி வருவது எவ்வளவு மேன்மையானது?

நோன்பு – உறுதியான நம்பிக்கையின் அடையாளம்.

நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள். ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கின்றான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதுமில்லை. குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி நீரும் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண்பார்வைக் குன்றிப் போனாலும் அவன் ஒரு கவளம் உணவை உண்ண நினைப்பதுமில்லை. அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்திற்கும் மறைந்து விட்டாலும் இறைவனுக்கு மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!

மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்! மாதம் முழுவதிலும் குறைந்த பட்சம் 360 மணி நேரம் அவன் நோன்பு நோற்கிறான். இந்த இடைக்காலத்தில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வு பற்றி ஒரு வினாடி கூட அவனது மனதில் எவ்வித சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மரணத்திற்குப்பின் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! மரணத்திற்குப்பின் வாழ்வு இருக்குமா? இருக்காதா? அதில் நற்கூலியும், தண்டனையும் உண்டா? இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது. சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைகட்டளையை செயல்படுதுவதற்கென்று எதையும் சாப்பிடக் கூடாது எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது அசாத்தியமான ஒன்று.

ஒரு மாதம் தொடர் பயிற்சி.

நோன்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்குத் தொடர்ந்தார்போல் முஸ்லிம்கள் இறை நம்பிக்கைக்கு இறைவன் தேர்வு வைக்கின்றான். இந்தத் தேர்வுகளில் மனிதன் எந்தளவு வெற்றி பெற்றுக் கொண்டே போகிறானோ, அந்த அளவு தான் அவனுடைய இறைநம்பிக்கை வெற்றி பெற்றுக் கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது. பயிற்சிக்குப் பயிற்சி போன்றது.

அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என முஸ்லிம் உறுதியாக நம்புகின்றான். எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கின்றான். யாரும் அவனைப் பார்க்காது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வின் நினைவு அவனுக்கு வந்து விடுகிறது. அன்றோ அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும். செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை அவர்கள் உணர்கிறார்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறார்கள்.

நீண்டதொரு பயிற்சி.

நோன்புக்கு மற்றொரு சிறப்புண்டு. அதாவது நீண்ட காலம்வரை தொடர்ந்தாற்போல் மார்க்கத்தின் சட்டத்திற்கு மனிதனை உட்படுத்துகின்றது நோன்பு. இஸ்லாத்தின் ஏனைய கடமைகளான தொழுகையின் நேரம் குறிப்பிட்டதொரு நேரத்தில் சில நிமிடங்களுக்கு மேல் போவதில்லை. ஸகாத் என்னும் ஏழைவரி ஆண்டு முழுவதும் ஒரே ஒருமுறை வருகிறது. ஹஜ் வாழ்வில் ஒரு முறை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். இவற்றுக்கு நேர்மாற்றமாக நோன்பானது ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதம் வரை இரவிலும், பகலிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றும் பயிற்சியை அளிக்கின்றது. இந்த ஒரு மாதத்தில் பெற்ற பயிற்சியின் பலன் ஏனைய மாதங்களில் கிடைத்துக் கொண்டிருக்கும்.

சமத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இஸ்லாம போதிக்கும் நோன்பானது ஏழை, பணக்காரர்களுக்கிடையில் சமத்துவத்தைப் போதிக்கக் கூடியதாக உள்ளது. அது மிகச்சரியான நவீன சமதர்ம அமைப்பினது செயல்வடிவமாகக் காணப்படுவது இதன் மூலம் தெளிவாகின்றது. தங்களது வயிற்றுக்குள் கூட சமத்துவமான தன்மையை ஏற்படுத்தும் இஸ்லாம் போதிக்கும் கடமைகளில் ஒன்றாக இது இருக்கிறது. மேலும் இதன் மூலம் செயல் ரீதியான உணர்வை மனித உள்ளத்தில் ஏற்படுத்தி சரியான சமதர்மம் என்பது வெறுமனே உணர்வுகள் வேறுபட்டுக் காணப்படும் நிலையன்று. மாற்றமாக உணர்வுகள் சமமாக இருக்கும் என்பதை உணர்த்தக் கூடியதாகவும், பல்வேறு ஆசைகளை மனதில் வைத்து வாதாடிக் கொண்டிருப்பதை விட ஒரே விதமான உணர்வின்பால் அன்பு பாராட்டுவது தான் சிறந்தது என்பதை நோன்பு உணர்த்தி சமத்துவத்திற்கு வழிகாட்டுகின்றது.

மேற்குறிப்பிட்டுள்ள சமத்துவத்தின் அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது செல்வந்தர்கள் அன்பு, இரக்கம் காட்டுவதற்கு இந்நோன்பு வழிகாட்டுகின்றது. பொதுவாக மனித உள்ளங்களில் அன்பு, இரக்கம் என்பன கஷ்ட, துன்ப நிலைமைகளிலேயே தோன்றுகின்றன. இந்த வகையில் மனித உள்ளங்களில் அன்பை ஏற்படுத்துவதற்கான நடைமுறை ரீதியானதொரு வழிமுறையாக நோன்பு இருக்கின்றது. எப்பொழுதெல்லாம் பசித்த ஏழையின் மீது செல்வந்தனின் அன்பு ஏற்படுத்தப்படுகிறதோ அந்நேரங்களில் மனிதனுக்குள் அதன் செயற்பாட்டைக் காணமுடிகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகவும் கொடை கொடுக்கக் கூடியவராக இருந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

வழமையான பழக்கங்களை விட்டு தூரமாக்குவது.

சிலருக்கு நாளாந்த வழக்க வழக்கங்கள் வணக்க வழிபாடாக மாறி இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்கத் தவறினால் பசியேற்பட்டு அவர்களின் குணங்களே மாறிபோய் விடும். தேனீர், கோப்பி அருந்துதல், புகைத்தல் போன்ற வழக்கங்கள் உணவு உட்கொள்ளும் நிலையைக் கூட தேவையற்றதாக்குகின்றது. இத்தகையவர்கள் தங்களது பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாகக் கணிக்கப்படுகின்றார்கள். யுத்தம் போன்ற ஏதாவது காரணத்தினால் இவர்களின் இந்த நாளாந்த பழக்க வழக்கங்கள் மாறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டால் கூட இவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையற்றவர்களாக இருப்பர். இங்கு நோன்பானது இத்தகையவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் மனிதனின் விருப்பத்தையும், நாட்டத்தையும் உறுதியாக வைத்திருக்கவும் நோன்பு துணையாகின்றது. அதாவது மனிதன் சடத்துவமான போக்குகளுக்கு அடிமையாகாது, தனது உள உணர்வுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து செயல்படுவதற்கு ஒரு சிறந்த பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.

உடல் நலனுக்கு வழிகாட்டல்.

மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கும், உடல் நலத்திற்கும் வழிகாட்டக்கூடியதாக நோன்பு இருக்கின்றது. மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அவன் தொடர்ந்து உணவு உண்பதே காரணமாக அமைகின்றது. சுமார் பதினொரு மாதங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் செரிமான தொகுதிக்கு நோன்பு ஒரு கட்டாய ஓய்வை வழங்கி உடம்பிற்கு ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட நோய்களையும் அது தடுக்கக் கூடியதாக உள்ளது. இதனையிட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் நோன்பு நோற்பதன் மூலம் சுகதேகிகளாக மாறிக் கொள்ளுங்கள்) எனக் குறிப்பிட்டார்கள். எனவே நோன்பின் மூலம் உடலுறுப்புகள் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகின்றது. இவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பேணி முஸ்லிம் பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழ இந்நோன்பு வழிசெய்கின்றது. ஐரோப்பாவிலுள்ள சில வைத்தியசாலைகள் தமது சிகிச்சை முறைகளில் நோன்பு அனுஷ்டிக்கும் முறையைக் கையாள்வது உடல் நலத்திற்கு நோன்பு ஆற்றும் பங்கினை எமக்கு மேலும் தெளிவுபடுத்துகின்றது. எனவே இவ்வாறு நோன்பானது தனி மனித, சமூக, ஆன்மீக, உடல் ரீதியான பல்வேறு பலன்களை பெற்றுத் தருவதைக் காணக்கூடியதாக உள்ளது. மனைதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு இதன் மூலம் நன்மையை நாடி, தன்னை நம்பிக்கைக் கொள்வோர் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் எனக் கட்டளைப் பிறப்பித்துள்ளான். மேலும் இஸ்லாத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் தனமையின் அடிப்படையில் நோன்பு காலங்களில் சிலருக்கு நோற்காதிருக்கவும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புத்தி சுவாதீனமற்றவர்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், கடும் நோயாளிகள், நீண்ட தூரப்பிரயாணிகள், கர்ப்பவதிகள், குழந்தை இருக்கும் தாய்மார்கள் இதில் அடங்குவர். இவர்களுக்குத் தனி சட்டங்களை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இஸ்லாத்தின் தாராளத்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும்.

எனவே இத்தகைய நன்மைகளை, பலன்களைக் கொண்டுள்ள நோன்பினை நோற்பதன் மூலம் இவ்வுலகிலும், மரணத்திற்குப் பின்னான நிலையான வாழ்விலும் நன்மைகளை அடைந்து சிறப்பான வாழ்க்கைக்கு வழியமைத்துக் கொள்வோமாக!

வெளியீடு: Islam Presentation Committee (IPC) Kuwait.

Leave a Reply