நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்!

நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய பேச்சையும் கேட்கிறான்! கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் மிக்கவன். பழி வாங்குவதில் கடுமையானவன். உலகிலுள்ள எல்லாவற்றையும் சரியாக நிர்ணயிப்பவன். அழகிய முறையில் அவற்றை இயக்குபவன். சட்ட நெறிகளை வகுத்தவன்! ஆகா! அந்தச் சட்டங்களைத் தான் எத்தனை சிறந்த முறையில் உறுதிப்படுத்தி இருக்கிறான்!

அவனது ஆற்றல் கொண்டு தான் காற்று சுழல்கிறது! மேகம் செல்கிறது. அவனது நுண்ணறிவு மற்றும் கருணையினால் தான் இரவு – பகல்கள் மாறி மாறிச் சுழன்று வருகின்றன!

இறைவனை – அவனுடைய மாட்சிமை மிக்க ஆற்றல்களுக்காகவும் அழகிய அருட்கொடைகளுக்காகவும் புகழ்கிறேன். அதிக அளவில் அருளை வேண்டுபவன் போல் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்!

அறிவு மற்றும் கற்பனையினால் கூட அவனைச் சரியாக அறிந்திட முடியாதே அப்படிப்பட்ட அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்கிற முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி அளிக்கிறேன்.

அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! இஸ்லாத்தை முதன் முதலில் தழுவிய நபித்தோழர் அபூபக்ர் மீதும் – ஷைத்தான் யாரைக் கண்டால் விரண்டோடுவானோ அப்படிப்பட்ட உமர் மீதும் – துன்பம் சூழ்ந்த நேரத்தில் படை வீரர்களைத் தமது செல்வத்தால் அனுப்பி வைத்து வீரத்தில் நிலைத்து நின்ற உஸ்மான் மீதும் – பரந்து விரிந்த கடலாகவும் சினம்கொண்ட சிங்கமாகவும் திகழ்ந்த அலீ மீதும் ஸலவாத் பொழிவானாக! மேலும் நபியவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் வாய்மையுடன் அவர்களைப் பின்பற்றி வந்தோர் அனைவர் மீதும் என்றென்றும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!

அல்லாஹ்வின் அடியார்களே! அறிந்து கொள்ளுங்கள்: தன் படைப்பினங்களின் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நிறைவான அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவனுடைய படைப்புகளிலும் நெறிமுறைகளிலும் உள்ள நிறைவான தத்துவங்களை அவன் மட்டுமே அறிவான். படைப்பதிலும் நெறிமுறைகளை வகுப்பதிலும் அவன் விவேகமானவன்.

மனிதர்களை விளையாட்டுக்காக அவன் படைக்கவில்லை. அவர்களை வெறுமனே விட்டு விடவுமில்லை. ஷரீஅத் – நெறி முறைகளை அவர்களுக்கு வகுத்து அளித்திருப்பது வீணுக்காக அல்ல! உண்மையாதெனில், பெரியதோர் இலட்சியத்திற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான். ஒரு மகத்தான காரியத்திற்காகவே அவர்களை உலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறான்! நேரான வழியை அவர்களுக்கு விளக்கிக் கொடுத்திருப்பதும் ஷரீஅத் – நெறிமுறைகளை அவர்களுக்கு வகுத்தளித்திருப்பதும் எதற்காக எனில், அவர்களின் ஈமான் – இறைநம்பிக்கை அதிகரிக்க வேண்டும். அவற்றின் மூலம் அவர்களின் வழிபாடு முழுமை அடைய வேண்டும் என்பதற்காகத் தான்!

ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வகுத்தளித்த எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் ஒரு நிறைவான தத்துவம் உண்டு. அதனை அறிந்தவர்கள் அறிந்தார்கள். அறியாதவர்கள் அறியாமல் போயினர்! ஏதேனும் வழிபாட்டின் தத்துவத்தை நாம் அறியா திருப்பதன் பொருள், அந்த வழிபாட்டிற்கு எந்த தத்துவமும் இல்லை என்பதல்ல. மாறாக அல்லாஹ் அதில் வைத்துள்ள தத்துவத்தை அறிவதில் நம்மிடம் குறைபாடு உள்ளது என்பதைத் தான் அது காட்டுகிறது.

உங்களுக்கு மிகக் குறைவான ஞானமே வழங்கப்பட்டுள்ளது. (17 : 85)

திண்ணமாக அல்லாஹ் வழிபாடுகளை வகுத்தளித்திருப்பதும் நடைமுறை விவகாரங்களை ஒழுங்குபடுத்தி இருப்பதும் – மனிதர்களைச் சோதனைக்கு உள்ளாக்க வேண்டுமெனும் நோக்கத்தில் தான்! அதாவது யார் இறைவனை வழிபடுகிறார், யார் தன் மன இச்சையை வழிபடுகிறார் என்று அதன் மூலம் தெளிவாக வேண்டும் என்பதற்காகத்தான்!

இந்த வணக்க வழிபாடுகளையும் அந்த நெறிமுறைகளையும் திறந்த உள்ளத்துடனும் மன நிம்மதியுடனும் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவர்தான் தன் இறைவனை வழிபடக்கூடியவர். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்படுவதற்காக மன இச்சையைத் துறந்தவர்!

எவர் வணக்க வழிபாடுகளில் தான் விரும்பும் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரோ – தனது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஒத்துவரும் நெறிமுறைகளை மட்டும் பின்பற்றுகிறாரோ அவர் தனது மன இச்சையை வழிபடக் கூடியவராவார். அல்லாஹ்வின் ஷரீஅத்தை வெறுத்தவராவார். தன் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் புறக்கணித்தவராவார்! அத்தகையவர் தனது மன இச்சையைத் தன் தலைவராக ஆக்கினாரே தவிர மனத்தைத் தனக்குக் கீழடங்கிப் போகக் கூடியதாய் ஆக்கவில்லை! தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும் எனும் வகையில் அல்லாஹ்வின் ஷரீஅத்தை ஆக்கி விட்டார். அவரது அறிவு குறைபாடு உடையதாக இருந்தும் – அதன் விவேகம் குறைந்திருப்பதுடனும் அவர் இப்படி விரும்பி விட்டார்! அல்லாஹ் கூறுகிறான்:

மேலும் சத்தியம் அவர்களின் மன இச்சையைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானம், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் – உண்மை என்னவெனில் அவர்களுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கிறோம். அவர்களோ தங்களது நல்லுரையைப் பறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்! (23:71)

அல்லாஹ்வுடைய விவேகத்தின்பாற்பட்டது தான் இதுவும். அதாவது, வணக்க வழிபாடுகளை பல வகைகளாக அவன் ஆக்கியுள்ளான் என்பது! அதன் நோக்கம் ஏற்றுக்கொள்வதும் திருப்தி அடைவதும் தெளிவுபட வேண்டும் என்பதே!

(இவ்வாறெல்லாம் சோதனை செய்வது) நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பிரித்தறிவதற்காகத்தான்.. ? (3 : 143)

மக்களில் சிலர் உள்ளனர். அவர்கள் வழிபாடுகளில் ஒரே ஒரு வகையை மட்டும் பொருந்திக் கொள்கின்றனர். அவற்றை மட்டும் நிறைவேற்றுகின்றனர்! ஆனால் அவர்கள் வேறு சில வழிபாடுகளை வெறுக்கின்றனர். அதில் அலட்சியம் செய்கின்றனர்!

அல்லாஹ் சில வழிபாடுகளை உடலுறுப்புகளுடன் தொடர்பு உடையவையாக ஆக்கினான். தொழுகையைப் போன்று! ? வேறு சிலவற்றை மனத்திற்கு உகந்த செல்வத்தைச் செலவு செய்வதுடன் தொடர்புடையவையாக ஆக்கினான். ஜகாக்தை போன்று! – வேறுசில வழிபாடுகளை உடலுறுப்புகள், செல்வம் ஆகிய இரண்டுடனும் தொடர்பு உடையவையாக ஆக்கினான். ஹஜ் மற்றும் ஜிஹாத் போன்று! – இன்னும் சில வழிபாடுகளை, பிரியமானவை, ஆசைக்குரியவற்றை விட்டும் மனத்தைக் கட்டுப்படுத்துவதோடு தொடர்புடையவையாக ஆக்கினான். நோன்பைப் போன்று!

ஒரு மனிதன் இப்படிப்பட்ட வணக்கவழிபாடுகளைச் செயல்படுத்தினால், எந்த முறையில் நிறைவேற்ற வேண்டுமென உள்ளதோ அந்த முறையில் – எவ்வித வெறுப்பும் குறைபாடுமின்றி முழுமையாக அவற்றை நிறைவேற்றினால் – அவ்வழியில் களைப்பையும் கடும் சிரமத்தையும் தாங்கிக் கொண்டால் அதாவது, அவனுக்கு விருப்பமான செல்வத்தைப் பிறருக்கு வழங்கிடவும் மேலும் தன் மனத்தை – அதன் ஆசைகளை விட்டும் தடுத்திடவும் செய்தால் (இவை அனைத்தையும்)தன் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டவனாகவும் அவனது ஷரீஅத்தில் விருப்பம் கொண்டவனாகவும் நிறைவேற்றினால் அது, தன் இறைவனுக்கு அவன் முழுமையாக அடிமைப்பட்டவன் என்பதற்கான அடையாளமாகும். மேலும் தன் இறைவனுக்கு அவன் முழுமையாகக் கீழ்ப்படிகிறான். அவனை நேசிக்கிறான் என்பதற்கும் அடையாளமாகும் – ஆம்! இதன் மூலம், அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாய் அடிமைப்பட்டிருக்கும் தன்மை அவனில் உறுதியாகி விடுகிறது! – இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் தெளிவாகி விட்டதெனில் இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: நோன்புக்கு அநேகத் தத்துவங்கள் உள்ளன. நோன்பை இஸ்லாத்தின் கடமையாகவும் அதன் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் ஆக்கியது அந்தத் தத்துவங்கள் தாம்!

நோன்பின் தத்துவங்களில் ஒன்று என்னவெனில், அது அல்லாஹ்வுக்குரிய ஒரு வழிபாடு. அதை மேற்கொள்ளும் மனிதன் தன் இரட்சகனின் பக்கம் நெருங்கிச் செல்கிறான். உணவு – பானம், உடலுறவு ஆகியவை – அவனுக்கு விருப்பமானவையாகவும் ஆசை கொள்ளத் தக்கவையாகவும் உள்ள நிலையில் அவற்றைத் துறப்பதன் மூலம் இறையண்மை அவனுக்குக் கிடைக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் அவனது இறைநம்பிக்கையின் உண்மை நிலை வெளிப்படுவதுடன் அல்லாஹ்வுக்கு அவன் அடிமைப்பட்டிருப்பதும் அல்லாஹ்வின் மீது அவன் கொண்டுள்ள அன்பின் வலிமையும் – அல்லாஹ்விடமுள்ள மறுமைப் பேறுகளை அவன் ஆதரவு வைத்திருப்பதும் தெரிய வருகிறது!

ஏனெனில் ஒருமனிதன் தன் மனத்திற்குகந்ததை விட்டு விடுகிறான் எனில் அவனிடத்தில் அதை விட முக்கியமாக உள்ள ஒன்றைக் கருத்தில் கொண்டு தான் அப்படிச் செய்வான்!

எந்தப் பொருள்களின் ஆசை இயற்கையாக மனிதனின் உள்ளத்தில் படைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருள்களின் ஆசையைத் துறந்து விட வேண்டும். இதுதான் நோன்பின் மூலம் இறைவன் விரும்புவது என்பதை அறிந்து கொண்ட ஓர் இறைநம்பிக்கையாளன் தனது மனவிருப்பத்தை விடவும் தன் எஜமானனின் – இறைவனின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்தான் எனில் மேலும் அந்தப் பொருள்களின் மீது அதிக அளவில் அவன் ஆசை கொண்டிருந்த நிலையில் அவற்றை அவன் விட்டு விட்டான் எனில் – எதற்காக அப்படிச் செய்தான்? ஆம்! அல்லாஹ்வுக்காக அவற்றைத் துறப்பதில் தான் தனக்கு இன்பமும் மனஅமைதியும் உள்ளன என்று அறிந்ததால் தான் அப்படிச் செய்தான்!

இதனால்தான் முஸ்லிம்களில் பெரும்பாலோரைக் காணலாம்: ரமளான் மாதத்தின் ஒரே ஒருநாள் நோன்பைக் கூட தக்க காரணமின்றி விட்டு விடுமாறு அவர்களை வற்புறுத்தினால் கூட- அவர்களை அடித்தாலும் கூட – சிறைப்பிடித்தாலும் கூட அதற்கு அவர்கள் உடன்படுவதில்லை! -இதுதான் நோன்பின் தத்துவங்களில் மிகப்பெரிய – முக்கியத்துவம் வாய்ந்த தத்துவமாகும்!

நோன்பின் மற்றொரு தத்துவம் – அது இறையச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் கொள்ளக்கூடும் என்பதற்காக! (2: 183)

ஏனெனில் நோன்பு நோற்பவன் வணக்க வழிபாடு செய்ய வேண்டும் என்றும் பாவங்களை விட்டும் விலக வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளான். நபியவர்கள் கூறியது போன்று:

எவர் பொய் பேசுவதையும் பித்தலாட்டம் செய்வதையும் அபத்தமாக நடப்பதைம் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமல் – பருகாமல் இருப்பது குறித்து அல்லாஹ்வுக்கு எந்த அக்கரையும் இல்லை! (நூல்: புகாரி)

நோன்பாளி நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் பாவச் செயல் செய்ய நாடும் போது, தாம் ஒரு நோன்பாளி என்பதை நினைவு கூர்கிறார். உடனே அந்தப் பாவச்செயலை விட்டும் விலகி விடுகிறார். இதனால் தான் தன்னைத் திட்டக் கூடிய – ஏசக்கூடிய மனிதனிடம் ‘நான் நோன்பாளி’ என்று கூறவேண்டும் என்று நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள், இதன் நோக்கம் திட்டுவதையும் ஏசுவதையும் விட்டு விலகியிருக்க நோன்பாளிக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது என்று தன்னை ஏசுபவனுக்கு எச்சரிக்கை செய்வதாகும். மேலும் நோன்பாளி – தாம் நோன்பு வைத்திருப்பதைத் தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்வதுமாகும். அப்போது பதிலுக்குப் பதில் திட்டுவதையும் ஏசுவதையும் தவிர்த்துக் கொள்வார்!

நோன்பின் மற்றொரு தத்துவம் யாதெனில், சிந்திப்பதற்கும் (இறைவனை திக்ர்) நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்குத் தனிமை கிடைக்கிறது என்பதாகும். ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்லாம் உண்பதென்பது மெய்மறதியை உண்டாக்கும். சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கிவிடும். இதனால் தான் உணவையும் குடிப்பையும் குறைத்துக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஆதத்தின் மகன் மிகவும் கெட்ட பை ஒன்றை நிரப்புகிறான் எனில் அது வயிறுதான். ஆதத்தின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்துவதற்கு ஒரு சில கவளங்களே போதும். அதிகம் உண்ணத்தான் வேண்டுமெனில் (வயிற்றின்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும் மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும் இன்னொரு பகுதியைத் தனக்காகவும் ஆக்கிக் கொள்ளட்டும்! (அஹ்மத், இப்னு மாஜா) (இமாம் திர்மிதி அவர்கள் இதனை அறிவித்துவிட்டு இது ஹஸன் – ஸஹீஹ் என்று சொல்லியுள்ளார்கள். ஹாகிம் அவர்களும் இதனை ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள்.)

நபி (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா – அல் உஸைதி (ரலி) என்பார் நபியவர்களிடம் சொன்னார்: ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான் என்று! -அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன இது? என்று கேட்டார்கள்! அவர் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! தங்களது சமூகத்தில் நாங்கள் இருக்கும் போது நரகம் – சொர்க்கம் பற்றி எங்களுக்கு நல்லுரை கூறுகிறீர்கள். அப்படியே நாங்கள் அவற்றைக் கண்ணெதிரில் காண்பது போல் உள்ளோம்! ஆனால் தங்களை விட்டும் நாங்கள் சென்று விடும்பொழுது மனைவி – மக்கள் தோட்டந் துரவு விஷயத்தில் மூழ்கி பெரும்பாலான அறிவுரைகளை மறந்து விடுகிறோம். (இந்த ஹதீஸ் இன்னும் தெடர்கிறது)அதில் வருகிறது: ஹன்ழலாவே! அப்படியும் ஒரு நேரம்! இப்படியும் ஒரு நேரம்! என்று மூன்று தடவை நபியவர்கள் கூறினார்கள்!? (முஸ்லிம்)

அபூ ஸுலைமான்-அத்தாரானி அவர்கள் சொல்கிறார்: ?உடல் பசித்தும் தாகித்தும் இருந்தால் தான் இதயம் தெளிவடையும். மென்மை பெறும். வயிறு நிறைந்து விட்டால் இதயம் குருடாகி விடுகிறது!?

நோன்பின் இன்னொரு தத்துவம் என்னவெனில், ஒரு செல்வந்தனுக்குச் செல்வத்தின் மூலம் அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடையை அந்தச் செல்வந்தன் அறிந்து கொள்வதாகும். உணவு, பானம் மற்றும் மனைவியுடன் கூடி வாழும் பேறு ஆகியவற்றை அவனுக்கு வழங்கி அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அதே நேரம் மக்களில் பலர் இவை கிடைக்காமல் உள்ளனர்! எனவே இத்தகைய அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வை அவன் புகழ்கிறான்! இந்த வசதியை வழங்கியமைக்காக அவனுக்கு நன்றி செலுத்துகிறான்! மேலும் உணவின்றி வெறும் வயிறுடன் இரவைக் கழிக்கும் தன் ஏழை சகோதரனை நோன்பின் பயனாக அந்தச் செல்வந்தன் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குச் செல்வத்தைத் தர்மம் செய்கிறான். அந்த ஏழை, அந்தப் பணத்தைக் கொண்டு ஆடைகள் வாங்கி தன் மானத்தை மறைக்கிறான். உணவு வாங்கித் தனது பசியைப் போக்குகிறான்!

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மக்களிலெல்லாம் அதிகம் வாரி வழங்கும் வள்ளலாய்த் திகழ்ந்தார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளது! அதுவும் ரமளான் மாதத்தில் – அவர்களை ஜிப்ரீல் சந்தித்து குர்ஆனை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் நேரத்தில் இன்னும் அதிகமாக கொடை வழங்குபவர்களாய் இருந்தார்கள்!

நோன்பின் மற்றெரு தத்துவம் மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை அடக்குவதற்கும் பயிற்சி தருவதாகும். மனத்தின் கடிவாளத்தைக் கைப்பற்றும் ஆற்றல் பெறுவதுமாகும். அப்போது தான் மனிதன் தன் மனத்தின் மீது அதிகாரம் செலுத்தி மனத்தை வென்றடக்க முடியும்! அதன் நன்மையும் நற்பேறும் எதில் உள்ளதோ அதன் பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும். ஏனெனில் மனித மனம் தீமை செய்யுமாறு அதிகம் தூண்டக்கூடியது. ஆனால் எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவரது மனம் அவ்வாறு தூண்டாது! தவிர மனிதன் தனது மனத்தின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின் பால் -உயர்ந்த குறிக்கோள்களின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்ல முடியும்.

நோன்பின் இன்னொரு தத்துவம் மனத்தின் வேகத்தைத் தணிப்பதாகும். சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் – மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதுமாகும். ஏனெனில் வயிறு நிரம்ப உண்பதும் – பருகுவதும் பெண்ணிடம் உடலுறவு கொள்வதும் – இவை அனைத்தும் தற்பெறுமை கொள்ளும்படி மனத்தைத் தூண்டி விடுகின்றன! மேலும் சத்தியத்தை ஏற்காமல் ஆணவம் கொள்ளும்படியும் மக்களிடம் ஆணவத்துடன் – வரம்பு மீறி நடக்குமாறும் செய்கின்றன! அப்படிச் செய்வதற்குக் காரணம் – உணவு, பானம், உடலுறவு ஆகியவற்றின் பக்கம் மனிதன் தேவையாகும் பொழுது அவற்றைப் பெறும் வழிகளில் ஈடுபடுகிறான். அவ்வாறு ஈடுபட்டு அவற்றைப் பெற்று விட்டால் தனது நோக்கத்தில் தாம் வெற்றி அடைந்து விட்டதாகக் கருதுகிறான். அதனால் அளவு கடந்த பூரிப்பும் தற்பெறுமையும் அடைகிறான். அவையே அவனது அழிவுக்குக் காரணமாகி விடுகிறது! அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்.

இதுவும் நோன்பின் தத்துவங்களில் ஒன்றாகும். அதாவது பசி, தாகத்தின் காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்குகின்றன! அப்படிச் சுருங்குவது உடலில் ஷைத்தான் ஓடும் இடங்களை நெருக்குதலுக்குள்ளாக்குகிறது.ஏனெனில் மனிதனின் உடலில் இரத்தம் ஓடும் எல்லா இடங்களிலும் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக புகாரி – முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஆக! நோன்பின் பயனாக ஷைத்தானின் ஊசாட்டங்கள் அடங்குகின்றன. இச்சை மற்றும் கோபத்தின் வேகம் தணிகிறது! இதன் அடிப்படையில் நபியவர்கள் கூறினார்கள்: ? ஓ! இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமணம் செய்ய சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக்கூடியது. வெட்கத் தலத்தைப் பாதுகாக்கக் கூடியது. எவர் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்! திண்ணமாக நோன்பு அவருக்கொரு கேடயமாகும்! (புகாரி, முஸ்லிம்)

– திருமண ஆசைக்கு நோன்பு ஒரு கேடயம் என்றார்கள். அதன் வேகத்தை முறிக்கக் கூடியதாக அதைக் குறிப்பிட்டார்கள் நபியவர்கள்!

நோன்பினால் கிடைக்கும் ஆரோக்கிய ரீதியான பயன்களும் நோன்பின் தத்துவங்களில் அடங்கும். உணவைக் குறைப்பதால் – ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜீரண உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால் உடலுக்குத் தீங்கு அளிக்க்கூடிய சில கழிவுளும் ஈரத் தன்மைகளும் வெளியேறுவதன் மூலம் இத்தகைய பயன்கள் கிடைக்கின்றன!

அல்லாஹ்வுடைய அறிவு நுட்பத்தின் மகத்துவம்தான் என்ன! அது எத்துணை நிறைவாய் உள்ளது! அவனுடைய ஷரீஅத் சட்டங்கள் மக்களுக்கு எத்துணை பயன்மிக்கவை! நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவை! எளிமையானவை!

யா அல்லாஹ்! உனது தீனில் எங்களுக்கு ஞானம் வழங்குவாயாக! உனது ஷரீஅத்தின் இரசியங்களை அறிந்து கொள்வதற்கு எங்களுக்கு நல்லுணர்வு அளிப்பாயாக! எங்கள் மார்க்கம் மற்றும் உலக விவகாரங்களை எங்களுக்குச் சீர்படுத்துவாயாக! கருணையாளர்களிலெல்லாம் கருணை மிக்கோனே! உனது கருணையால் – எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!

மூல நூலாசிரியர் – மேன்மைமிகு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)

தமிழில் – கே. ஜே. மஸ்தான் அலீ பாகவி, உமரி, (அபூ காலித்) இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவூதி அரேபியா

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply