அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது.

சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் மனதை இருட்டிலிருந்து மீட்டி, வெளிச்சத்திற்கு கொண்டு செல்கின்றது.

திருக்குர்ஆன் இறைவனின் அருள் வாக்காகும். அது இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வானவர்கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாகும். அது போன்றதொன்றை ஆக்கிடுவதென்பது மனிதனின் கற்பனைக்குக்கூட எட்டாத ஒன்றாகும்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அரபுமொழி வல்லுனர்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து சூழுரைத்துத் திருமறைக்கு இணையானதொரு இலக்கியத்தை யாத்திட முற்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியையே தழுவினர். திருமறையின் வசன அமைப்பும் சரி, அதன் உட்பொருளும் சரி மனிதனின் கற்பனை சக்திக்கு அப்பாற்பட்டது.

இறைவனின் திருத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் கலாசாலைகளில் கல்வி கற்றவர்கள் அல்ல. ஆரம்ப கல்வி நிலையங்களைக்கூட அவர்கள் மிதித்ததில்லை. இதை அவர்கள் எப்போதும் மறைத்துக் கொண்டதுமில்லை.

கல்வி அறிவற்ற மக்களிடையே தோன்றி எந்தக் கல்விக் கூடங்களிலும் கல்வி கற்றிடாமல் கற்றவருக்கும், மற்றவருக்கும் இறைவனின் உண்மைத் தூதைக் கற்றுத்தந்தது அவர்களின் பெருமைகளில் பெருமைக்குரியதாகும். திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கான முதல் அத்தாட்சிகள் இதுவேயாகும்.

திருக்குர்ஆனின் அமைப்பு, பொருளடக்கம் இவற்றின் ஆதாரம் கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாகும். வேறு எந்த நூலுக்கும் இல்லாத தனித்தன்மையாகும். இனிமேலும் எந்த நூலுக்கும் கிடைக்காத தனித்தன்மையாகும். இது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கான இரண்டாவது அத்தாட்சியாகும்.

திருக்குர்ஆன் எல்லா விதத்திலும் ஆதாரங்கள் நிறைந்தது. இதில் எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிமல்லாத அறிஞர்களும் இன்று நாம் பின்பற்றும் இந்தத் திருக்குர்ஆன் தான் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது, அவர்களால் செயல்படுத்திக் காட்டப்பட்டது, மனித இனத்திற்குப் போதிக்கப்பட்டது என்ற பொதுவான முடிவுக்கே வந்துள்ளனர். இதில் அணுவளவேனும் எவரிடமும் சந்தேகமில்லை.

திருக்குர்ஆனுக்கே உரிய இந்தத் தனித்தன்மையைக் குறித்துப் பின்வரும் ஆதாரங்கள் இன்னும் பல தெளிவுகளைத் தரும்.

1. திருக்குர்ஆன் அவ்வப்போது சிறு சிறு பகுதிகளாக அருளப்பட்டதே. எனினும் ஒரு குறிப்பிட்ட அமைப்போ, தொடர்ச்சியோ இல்லாமல் இருக்கவில்லை. திருக்குர்ஆனின் பெயரே அது ஆரம்பம் முதலே ஒருநூல் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. (சான்றாக திருமறையின் 2:2, 41:41-42 ஆகிய வசனங்களைக் காணவும்.) திருக்குர்ஆனின் அமைப்பு, தொகுப்பு, அது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்ட விதம் இவை இறைவனின் திட்டமும், விருப்பமுமேயாகும். இந்தத் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் இறைவனின் இறுதி இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருப்பமுடன் பணிந்து நடந்தார்கள். (சான்றாக திருமறையின் 25:32, 75:17 ஆகிய வசனங்களைக் காணவும்.)

2. அரபுமக்கள் தங்களது அலாதியான இலக்கிய அறிவுக்கும் அதன்பால் கொண்ட ஈடுபாட்டிற்கும் பெயர் பெற்றவர்கள். இது அவர்களுக்குச் சிறந்த இலக்கியங்களின்பால் நிறைந்த ஈடுபாட்டைக் கொண்டு வந்தது. அவர்களின் பார்வையில் திருக்குர்ஆனே மிகபெரிய ஈடுஇணையற்ற இலக்கியமாகும். இதயத்தைத் தொட்டு அது பேசிடும் போதும், அது வெளிப்படுத்தும் அழகும் வனப்பும் அவர்களை அப்படியே அதன்பால் ஈர்த்து செயல்படத் தூண்டியது. அவர்கள் அதில் மிகையான ஈடுபாடு கொண்டார்கள். அதை அடிக்கடி ஓதுவதில் மனதிருப்தியை மட்டுமல்ல மன எழுச்சியையும் கண்டார்கள். உலக மக்களின் எழுச்சிக்கு உழைத்திட வேண்டும் என்ற உணர்ச்சியையும் பெற்றார்கள். அதனை மனம் நிறைய மனனம் செய்து மகிழ்ச்சியும், மாட்சியுமடைந்தார்கள். அன்றுபோல் இன்றும், அது முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் ஆகியோர்களின் மனங்களில் ஊடுருவி செயல்பட ஊக்கம் தந்து கொண்டிருக்கின்றது. இன்றுபோல் என்றும் இருந்து வரும்.

3. நாள்தோறும் தொழுகையின் போது திருக்குர்ஆனின் சில பகுதிகளை ஓதிட வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஆண்கள் மீதும், பெண்கள் மீது இது கடமையாகும். இரவு நேரங்களில் முஸ்லிம்கள் திருமறையை ஓதுவதன் மூலம் தங்களது ஈமானை (நம்பிக்கையை) வலுப்படுத்திக் கொள்கின்றனர். திருக்குர்ஆனை ஓதுவது முஸ்லிம்களுக்கு ஒரு இறை வணக்கமேயாகும். அது நித்திய பழக்கமுமாகும்.

4. அன்று அரபு மக்கள் எழுத்தறிவை மிகையாகப் பெற்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் மனனம் செய்வதையே பெரும்பாலும் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் மனனம் செய்யும் ஆற்றலில் சிறந்து விளங்கினார்கள். பெரிய பெரிய இலக்கியங்களையும் அவர்கள் தங்களது மனம் எனும் நூலகத்தில் தான் பாதுகாத்து வைத்திருந்தார்கள். திருக்குர்ஆனை மனனம் செய்வதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமை என எண்ணினர். ஆகவே அவர்கள் அதை மனனம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். அவர்கள் அதை வெறும் மனனம் செய்யும் இலக்கியமாக அதைக் கொண்டிடவில்லை என்பது இன்னும் கொஞ்சம் இதமளிக்கும் செய்தியாகும். அவர்கள் அதன் மூலம் இறை உணர்வைப் பெற்றார்கள். இந்த உணர்வால் ஊட்டம் பெற்று விரைந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

5. இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், வாழ்ந்த காலத்தில் எழுத்துக்கலையில் தலைசிறந்தவர்களும் வாழவே செய்தார்கள். இறை வெளிப்பாடுகளை அவ்வப்போது பதிக்கின்ற பதிவாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இறை வெளிப்பாடும் தங்களுக்கு அருளப்பட்டவுடன் தங்களது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பதிவு கொள்ளச் சொல்வார்கள். பதிவ்ய் செய்தவைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் சரிபார்த்து சம்மதம் தெரிவிப்பார்கள். ஒவ்வொரு வார்த்தையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் சரியாகத் தொகுக்கப்பட்டது.

6. இறை வெளிப்பாடுகள் நிறைவு பெற்றவுடன், முஸ்லிம்கள் முழுமையான பல பதிவேடுகளைப் பெற்றிருந்தார்கள். அவைகள் பலமுறைத் திரும்பத் திரும்ப ஓதப்பட்டன. மனனம் செய்யப்பட்டன. தினமும் அவர்கள் அதைச் செயல்படுத்தி வந்ததால் அவர்கள் திரும்பத் திரும்ப அதனை ஓதிவந்தார்கள். ஏதேனும் ஐயங்கள் எழுந்தால் உடனேயே அது பெருமானார் (ஸல்) அவர்களிடன் கவனத்திற்குக் கொண்டு வரப்படும். உடனேயே தெளிவு செய்யப்படும். இந்த ஐயங்கள் வசனங்களின் அமைப்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அல்லது அதன் அழுத்தந் திருத்தங்களைப் பொறுத்ததாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இறைவனின் தூதரவர்களின் கவனத்திற்கு உடனேயே கொண்டு வரப்படும். விளக்கம் பெறப்படும்.

7. பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்தபோது திருக்குர்ஆன் பல முஸ்லிம்களின் மனங்களில் பதிந்திருந்தது. எழுத்து வடிவிலும் பல ஏடுகளில் இருந்தது. எனினும் முஸ்லிம்களின் முதல் கலீபாவான அபூபக்கர் (ரலி) அவர்கள் அத்துடன் திருப்தி கொள்ளவில்லை. அப்போது நடைபெற்ற போர்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பலர் இறந்து கொண்டிருந்ததால், பின்னால் அதில் ஏதேனும் குழப்பங்கள் வந்திடுமோ என பயந்தார்கள்.

ஆகவே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒப்புதல் அளித்த வண்ணம், ஒரு பூரண திருக்குர்ஆனை தொகுத்திடுவது எனத் திட்டமிட்டார்கள். இந்தப் பணியை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறை வெளிப்பாடுகள் அருளப்பட்டபோது தலைமை பதிவாளராக இருந்து அவைகளைப் பதிந்து வந்த இப்னு தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இந்தப் பணியை ஆரம்பிக்கும் முன் அவர்கள் அங்கிருந்த சான்றோர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தார்கள். பின்னர் அன்றிருந்த நாயகத் தோழர்களின் உதவியோடும், அவர்களின் கண்காணிப்பின் கீழும் இப்பெரும்பணி நிறைவு செய்யப்பட்டது. இறுதியான முழுமையான திருக்குர்ஆன் தொகுத்து முடிக்கப்பட்டவுடன், அது பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக திருக்குர்ஆனைக் கேட்டு மனனம் செய்து கொண்டவர்களால் ஒத்துப் பார்க்கப்பட்டது. இத்தனையும் பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்த இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே நிறைவேற்றப் பட்டுவிட்டன. அப்போது இறை வெளிப்பாடுகளை மனனம் செய்து, பசுமையாகத் தங்கள் மனதில் பதிய வைத்திருந்தவர்கள் பலர் இருக்கவே செய்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவேடுகளும் இருக்கவே செய்தன. ஆகவே திருக்குர்ஆன் பல கோணங்களிலிருந்தும் சரிபார்க்கப்பட்டது.

8. பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு உதுமான் (ரலி) அவர்கள் கலீபா பொறுப்பை ஏற்றிருந்தபோது திருக்குர்ஆனின் பிரதிகள் அப்போது இஸ்லாம் தொடர்புக் கொண்டிருந்த இடங்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டன. அந்தப் புது இடங்களில் வாழ்ந்தவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பார்த்ததில்லை, சூழ்நிலைகள், பிராந்தியம் இவை வேறுபட்டிருந்ததால் அவர்கள் அரபியை உச்சரிக்கும் விதமும் சற்று மாறுபட்டிருந்தது. இதனால் அவர்கள் திருக்குர்ஆனை உச்சரிக்கும் விதமும் சற்று மாறுபட்டிருந்தது. இந்த அடிப்படையில் அவர்களுக்கிடையில் சில சிறு பிரச்சினைகள் தலைதூக்கின. செய்தியை கேள்விப்பட்ட உடனேயே உதுமான் (ரலி) அவர்கள் தீவிரமாகவும், பொறுப்புடனும் செயல்பட்டார்கள். அப்போதிருந்த சான்றோர்கள் அனைவரையும் கலந்து அவர்கள் ஆலோசனைகளைப் பெற்றார்கள். முன்னால் திருமறைப் பதிவாளர்கள் நான்குபேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார்கள்.

முடிவாக அப்போதிருந்த திருமறைப் பிரதிகள் அனைத்தும் வரவழைக்கப்பட்டன. அப்போது குறைஷியர்கள் கொண்டிருந்த உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரே ஒரு பிரதி அமுலில் கொண்டு வரப்பட்டது. இந்த உச்சரிப்பு பெருமானார் (ஸல்) அவர்களின் உச்சரிப்பேயாகும். இந்த உச்சரிப்பைத்தான் நிலையானதாக ஆக்கினார்கள். ஏனெனில் திருமறை அருளப்பட்டதே இந்த உச்சரிப்பில்தான். பெருமானார் (ஸல்) அவர்கள் உச்சரித்து வந்ததும் இந்த உச்சரிப்பைத்தான். இவ்வாறாக திருக்குர்ஆன், உச்சரிப்பு முதற்கொண்டு அதன் எல்லா அம்சங்களிலும் அது இறக்கப்பட்ட அதே வடிவில் பேணிப் பாதுகாக்கப்பட்டது. அதன் நிறுத்தக் குறிகளில்கூட அணுவளவும் மாற்றமில்லாமல், அருளப்பட்ட அதே வடிவத்தில் காப்பாற்றப்பட்டு வருகின்றது.

நாம் மேலே தந்துள்ள விளக்கங்களை கருத்தில் கொண்டு தான், இன்று நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் திருமறை அது அருளப்பட்ட அதே வடிவில் அணிவளவும் பிசகிடாமல் அப்படியே இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள் அறிஞர்கள். அது என்றென்றும் இவ்வாறே இருந்து வரும். அதோடு எதுவும் சேர்க்கவோ, இணைக்கவோ படவில்லை. அதில் விட்டுப்போனவைகள் எதுவுமில்லை. அதிலிருந்து விலக்கப்பட்டவைகள் என்று எதுவுமில்லை. அதனுடைய வரலாறு பகலவனின் வெளிச்சத்தைப் போன்று தெளிவானது. அதன் ஆதாரம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.

திருக்குர்ஆன், முழுமையான ஈடுஇணையற்ற ஞானத்தின் வெளிப்பாடேயாகும். திருக்குர்ஆன் வெளிப்படுத்தும் அறிவின் தெளிவு அதனை அருளிய ஆசிரியனின் அறிவுச்செறிவிலிருந்து பெறப்படுவதாகும். அதன் ஆசிரியன் இறைவனேயல்லாமல் வேறு எவருமில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகளை அது யதார்த்தமாக அணுகிடும் முறை, அது வாழ்க்கைப் பிரச்சினைக்குத் தரும் மிகவும் ஏற்புடைய தீர்வுகள், மனித வாழ்வின் இலக்காக அது அமைத்துத்தரும் உயர்ந்த இலட்சியங்கள் இவைகள் அனைத்தும் திருக்குர்ஆனின் ஈடுஇணையற்ற பூரணத்துவத்தின் அத்தாட்சிகளாகும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply