அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-2

திருமணமான எல்லா ஆண்களும் முழுமையான திருப்தியைப் பெற்றவர்களாகவும், முழுமையான நிம்மதியைப் பெற்றவர்களாகவும் இருப்பதில்லை என்பதை நாம் அறிவோம். சில பல காரணங்களால் அவர்கள் குடும்ப வாழ்வின் சுகத்தை இழந்திருக்கின்றார்கள். இதற்கெனக் காரணங்களைக் கண்டறியுமுன், இந்த உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். இப்படி நிம்மதியிழந்து தவித்திடும் ஆண்கள் இந்த நிம்மதியை வெளியே தேடிட முயற்சிக்கின்றனர். பெண்கள் எண்ணிக்கையில் மிகைத்து நிற்கும் ஒரு சமுதாய அமைப்பில் இந்த நிம்மதி தேடும் வேலை மிக எளிதாக நிறைவேறி விடுகின்றது. சட்டப்படி இதனைப் பெற்றிட முடியவில்லை என்றால் இதனை வேறு உபாயங்களில் வழிதேட முயற்சிக்கின்றான். இதன் விளைவாக தகாத உறவுகள், கற்பழிப்புகள், இன்னும் இவைபோன்ற முடிவற்ற துயரங்கள் பல சமுதாயத்தில் தலையெடுக்கின்றன.

இந்த உண்மைகளைக் காகிதத்தில் வடிப்பது கசப்பாக தெரியலாம். ஆனால் இவை சமுதாயத்தில் தலைவிரித்துத் தாண்டவமாடும் கசப்பான உண்மைகளில்லையா? இந்தப் பிரச்சினைகளை எல்லோருக்கும் இதமளிக்கும் விதத்தில் தீர்த்திட வேண்டாமா? சமுதாயம் இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஆட்பட்டு உடைந்துவிடாமல் பாதுகாத்திட வேண்டாமா?

இதுகுறித்து இஸ்லாம் தரும் தீர்வு அறிவுப்பூர்வமானது. வாழ்வில் நிம்மதியை இழந்து நிற்கும் கணவன் இன்னொரு மணம் செய்து கொள்வதன் மூலம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துகொள்ள முடியுமென்றால் அவன் அவ்வாறு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றான். அவன் நிம்மதியைப் பெறுவதோடு மணந்து கொள்ளும் பெண்ணின் தேவைகளை நிறைவு செய்கின்ற பொறுப்பையும் சுமக்க வேண்டியவனாகின்றான். அதே நேரத்தில்  அவன் தனது முதல் மனைவியை புறக்கணித்து விடவும் முடியாது. அவளுடைய தேவைகளையும் நிறைவு செய்தாக வேண்டும். இந்த ஏற்பாடு திருமணம் ஆகாத பெண்களின் தேவைகளையும், இயற்கையான  உணர்ச்சிகளையும் நிறைவு செய்வதாகவும் இருக்கின்றது. அவர்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்திடவும் அது வகைசெய்கின்றது. அவர்கள் சட்டப்படி ஒரு மனைவிக்குரிய உரிமைகள் அனைத்தையும் பெறுகின்றார்கள். இந்தப் பிரச்சினைகளை இஸ்லாம் சிறந்த முறையில் தீர்த்திடுகின்றது. இதன் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளில் இஸ்லாம் பாராமுகமாக இருக்கவில்லை என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இஸ்லாம் பிரச்சினைகளை ஒளிவுமறைவின்றி அணுகுகின்றது. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற வகையிலேயே எல்லாப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்டுகின்றது.

இஸ்லாம் வழங்கும் தீர்வுகள் ஆரோக்கியமான குடும்ப வாழ்வை அமைத்துத் தருவனவாகும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஸ்லாம் தீர்வுகளைத் தருவதற்கான காரணம் குடும்ப உறவுகளில் கணவன் மனைவியிடத்தில் நயவஞ்சகமாக நடப்பதை இஸ்லாம் விரும்புவதில்லை. குடும்ப உறவில் மட்டுமல்ல மனித உறவுகளில் எதிலும் நயவஞ்சகத்தை அனுமதிக்கத் தயாராக இல்லை. திருமணமான ஒரு மனிதன் வெளியே ‘இரகசிய உறவு’களை வைத்துக்கொள்ள வகைசெய்யும் ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அங்கீகரிக்க இஸ்லாம் தயாராக இல்லை. விபச்சாரத்தை அது எந்த உருத்திலே தலைகாட்டினாலும் அனுமதிக்க அல்லது சகித்துக்கொள்ள இஸ்லாம் தயாராக இல்லை. விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் பெறும் தண்டனை மரணதண்டனைக்கு ஒப்பாக அமையும். குடும்ப உறவில் ‘துரோகம்’  செய்கின்ற ஆண் அல்லது பெண் பெறும் தண்டனை நூறு கசையடி அளவில் கடினமானதாக இருக்கும்.

குடும்ப வாழ்வில் ‘வஞ்சகத்தை’ தடைசெய்துவிட்ட பின்னர், விபச்சாரத்தை தடைசெய்துவிட்ட பின்னர், மனிதன் ‘வெளியே’ போகும் எல்லா வாயில்களையும் மூடிவிட்டபின்னர், பலதாரமணத்தை சட்டப்படியானதாக ஆக்கிவிடுவதே அறிவுடமை!. இதைத்தான் இஸ்லாம் செய்திருக்கின்றது.

இஸ்லாம் சொல்லும் இந்த அறிவுபூர்வமான தீர்ப்பினை சிலர் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்களேயானால் அவர்கள் கீழ்த்தரமான சில மாற்றுவழிகளுக்குப் போக வேண்டியதிருக்கும். நிச்சயமாக இஸ்லாம் அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சிலர் தங்களால் இச்சைகளைக் கட்டுப்படுத்திட முடியும் என எண்ணுவார்களேயானால் அவர்கள் நிச்சயமாக அப்படிச் செய்யலாம். அவர்களை இஸ்லாம் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் வேறு மணங்களைச் செய்துகொள்ள வேண்டியதில்லை. இஸ்லாம் கருத்தில் கொள்வதெல்லாம் மனிதனின் ஒழுக்கம் பேணப்பட வேண்டும், அதன்மூலம் குடும்ப வாழ்க்கை சுமூகமாக இருந்திட வேண்டும், அதன்வழி சமுதாய வாழ்வில் அமைதி நிலவிட வேண்டும் என்பதைத்தான். அதேநேரத்தில் சில அசாதாரண மனிதர்களை மனதில் வைத்துக்கொண்டு சாதாரண மனிதனின் பிரச்சினைகளைப் புறக்கணித்திட இஸ்லாம் தயாராக இல்லை.

இப்போது இதை நடுநிலையோடு, மாச்சரியங்களுக்கு அப்பால் நின்று ஆராய்ந்துப் பாருங்கள். எது சிறந்தது என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம். மேலே குறிப்பிட்டதுபோல் குழப்பங்கள் சமுதாயத்தைக் குடிகொண்டு, வாழ்வை அலைக்களிக்கட்டும் என்று விட்டுவிடுவது சிறந்ததா? அல்லது இஸ்லாம் தரும் தீர்வைச் செயல்படுத்திடுவது சிறந்ததா?  இதுபோன்ற பிரச்சினைகள் சமுதாயத்தின் தலைக்குமேல் தொங்கும் ‘கத்தி’ என்பதைத் தெரிந்த பின்னரும் அவற்றைப் புறக்கணித்திடுவது நியாயமா?  இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது சிறந்ததில்லையா?  வீட்டுக்குள் நயவஞ்சகம், வெளியில் விபச்சாரம், சமுதாயத்தில் ஒழுக்கச்சிதைவு இவற்றை அனுமதிப்பதுதான் சிறந்ததா? இவற்றைத் தலையெடுக்க அனுமதிக்காமல்  தக்க முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது சிறந்ததில்லையா?

ஆண்கள், பெண்கள் இவர்களின் இயல்பான உணர்ச்சிகளை வடிகால்கள் ஏதுமின்றி அமுக்கிட முயல்வது நியாயம்தானா? அந்த முயற்சிதான் பலிக்குமா? இந்த முயற்சி விபரீதங்களுக்கு வழிவகுக்காதா? சம்பந்தப்பட்டவர்கள் ஒழுக்கத்தில் தவறிட வழிவகுக்காதா?  இந்தக் கேள்விகளை ஒழுக்கத்தின் பார்வையில் பாருங்கள். மனிதாபிமானத்தின் அடிப்படையில் சிந்தியுங்கள். சமுதாயத்தின் நல்வாழ்வு என்ற கண்ணோட்டத்தில் அணுகுங்கள். ஆன்மீகத்தின் அடிப்படையில் சிந்தியுங்கள். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் இஸ்லாம் தரும் தீர்வே சிறந்தது என்பது புலப்படும்.

இனி இந்தப் பிரச்சினையை பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கலாம். இஸ்லாம் தரும் தீர்வு அல்லது இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்திருப்பது பெண்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுத் தருகின்றது. அவர்களுக்கு இயல்பாகத் தேவைப்படும் ஆண்துணைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. அவர்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்கின்றது. தங்கள் மீது அன்பு செலுத்தும் ஆண்துணை வேண்டும், அதுபோலவே தான் அன்பு செலுத்த ஆண்துணை வேண்டும் என்ற இயல்பான உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துத் தருகின்றது இஸ்லாம்.

ஒருவேளை பலதாரமணம் என்பது திருமணமாகி கணவனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்குச் சற்று கசப்பாக இருக்கலாம். தங்களுக்குச் சொந்தமானவரை இன்னொருத்தி உரிமை கொண்டாடுவதா?  என அவர்கள் எண்ணலாம். தன்னிடம் மட்டுமே கருணை காட்டுபவராக இருந்திட வேண்டியவர்  இன்னொருத்திக்குக் காப்பாளராக அமைவதா? என அவர்கள் எண்ணலாம். ஆனால் கணவனோ, துணையோ இல்லாத பெண்களின் மனம் என்ன பாடுபடும்? அவர்களின் இதயக்குமுறலை நாம் மறந்திட முடியுமா? அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பினையும் பெற்றிடும் உரிமை இல்லை என நாம் எண்ணலாமா? தங்களது  தேவைகளையும் ஆசைகளையும் திருப்தி செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையா?  நாம் அவர்களின் பிரச்சினைகளை மறந்து விட்டால் அல்லது அவர்களையே மறந்து விட்டால் அவர்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? திருமணமாகாத பெண்களின் நிலையில் திருமணமான பெண்கள் இருந்திட்டால் அவர்கள் அத்தருணத்தில் என்ன செய்வார்கள்? தங்களை மணமுடிக்க ஆண்களே இல்லை என்ற நிலையில் இருந்தால் அவர்களின் மனம் எந்த அளவுக்குக் குமுறும். அந்நிலையில் தாங்கள் சொந்தம் கொண்டாடிட – தன்னைச் சொந்தம் கொண்டாடிட- ஒரு ஆண் வேண்டும் என எண்ணிட மாட்டார்களா? அவர்கள் முழுக்கோப்பையாக கிடைக்காவிட்டாலும் அரைக்கோப்பையாவது கிடைக்காதா என எண்ணிட மாட்டார்களா? அவர்கள் தங்களுக்கு ஓரளவாவது பாதுகாப்பும், பாதுப்பிற்கான உத்திரவாதமும் கிடைக்காதா என ஏங்கிடமாட்டார்களா? தனக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்திட வேண்டும் என அவர்கள் எண்ணும் கணவன், எண்ணிக்கையில் அதிகமாகி ‘திக்கற்று’ நிற்கும் பெண்களில் ஒருத்தியால் இரகசியமாகக் கவரப்பட்டால் அவர்களது நிலையென்ன? அவர்களது குழந்தைகளின் நிலையென்ன? என் கணவன் என்னிடம் ‘பாதி’ அளவுக்குக்கூட அன்பு செலுத்தவில்லை என்றும், அவன் என்னிடம் காட்டுவதெல்லாம் நயவஞ்சகமே எண்ணத் தோன்றாதா? ஒரு கணவன் அல்லது மனிதன் இந்த இரகசிய உறவுக்கு ஆட்பட்டுவிட்டால் அவன் சமுதாயத்தின் ஒழுக்க வரம்புகளை உடைத்திடலாம் அல்லவா? இது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் சேர்ந்த மொத்தமான அபாயம் அல்லவா? அவன் செய்யும் தவறுகளுக்குகாக மன்னிக்கப்படலாம் அல்லது தண்டிக்கப்படலாம். ஆனால் இது யாருக்காவது பலன் தருமா? முறைப்படி மணம் செய்துகொண்ட மனைவிக்கும், பின்னால் அபகரித்துக்கொண்ட பெண்ணுக்கும் பாதுகாப்பும் உதவியும் இல்லாமல் ஆகிவிடாதா? இதற்குமாறாக, இரண்டு பெண்களுமே அந்தக் கணவனின் துணையையும், பாதுகாப்பையும், கருணையையும் பகிர்ந்துக் கொள்வது சிறந்ததில்லையா? இதைத்தான் இஸ்லாம் பலதாரமணம் என்பதன் மூலம் பெற்றுத்தருகின்றது. சூழ்நிலைகள் நிர்பந்திக்கும்போது அல்லது தகுந்த காரணங்கள் இருந்திடும்போது அல்லது கணவனின் பக்கம் நியாயம் இருந்திடும்போது ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்டு நான்கு பெண்களுக்குட்பட்டு மணம் முடித்துக் கொள்ளலாம் என்ற இஸ்லாத்தின் வழிகாட்டுதல் நன்மைப்பல பயப்பதாகும்.

2. சில குடும்பங்களில் மனைவி கருவுறும் பெரும்’பேறு’ இல்லாதவளாகி விடுகின்றாள். இதனால் குழந்தை ‘பாக்கியம்’ என்ற பெறற்கறிய பேறு கணவனுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றது. குழந்தைகளைப் பெற்று அவர்களைக் கண்குளிரக் கண்டிடும் போதே ‘குடும்ப வாழ்க்கை’ என்பதன் முழுப்பொருளையும் உணர முடிகின்றது. குழந்தைகளைப் பெறுவது மனிதன் இனத்தின் பாதுக்காப்பிற்குச் செய்யும் சேவையுமாகும். இன்னும் சொல்வதானால் திருமணம் செய்து கொள்வதின் நோக்கங்களுள் மிகவும் அடிப்படையானது குழந்தைகளை ஈன்றிடுவது.

தனது பெயர் சொல்ல செல்லப் பிள்ளைகள் வேண்டும். அந்தப் செல்லப்பிள்ளைகளின் செல்வாக்கில் குடும்பம் பிணைக்கப்பட வேண்டும் என்பவை கணவனின் இயற்கையான வாஞ்சையாகும். இந்தப் பெரும்’பேறு’ கிடைக்காதுபோனால் கணவனுக்கு மூன்று வழிகளே உண்டு.

1. குழந்தைகள் என்பதை மறந்து விடுவது. அத்துடன் தன்னுள் எழும் இயற்கையான ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். 2. கருவுற முடியாத தன் மனைவியை விவாகரத்துச் செய்து விடுவது. 3. வேற்றுக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டு தனது பெயரை அந்தக் குழந்தைக்கு வைப்பது.

இந்த வழிகளில் எதுவும் வாழ்க்கைக் குறித்த உயர்ந்த கொள்கைகளுக்கு உகந்தவைகளாக அமைந்திடாது. யாருடைய நியாயமான, இயற்கையான ஆசைகளையும், உணர்வுகளையும் அடக்கிடுவதை அல்லது அமுக்கிடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இயற்கைக்கு எதிராக செயல்பட்டு மன உந்தல்களை முடக்கிப் போடுவதை இஸ்லாம் அனுமதிப்பதே இல்லை. இஸ்லாம் மனிதன் தன் இயற்கைக்கு ஏற்ற வகையில் – தன் இயல்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்திட வழிகாட்டும் ஒரு இயற்கை மார்க்கம்.

மகப்பேறு இல்லை, என்பதைக் காரணங்காட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை குழப்பி அவளை விவாகரத்துச் செய்வது முறையாகாது. ஏனெனில் இது அவளது தவறல்ல. விவாகரத்து என்பது இறைவனின் பார்வையில் மிகவும் வெறுப்பிற்குரிய ஒரு செயல். வேறு வழியே இல்லை என்றாகும்போது இறுதியாக மேற்கொள்ளப்படும் கசப்பான நடவடிக்கையே விவாகரத்து. ஆகவே இதுபோன்ற காரணங்களுக்காக விவாகரத்துச் செய்வது நியாயமாகாது. மறுபுறம் மனைவி கணவனின் துணையையும், பாதுகாப்பையும் பெற வேண்டியவளாவாள். அவள் கருவுற முடியாதவள் என்பதைத் தெரிந்த பின்னர், யாரும் அவளை ‘கைப்பிடிக்க’ வரமாட்டார்கள் என்பதைத் தெரிந்திருந்தும் அவளைக் ‘கைவிடுவது’ முறையல்ல. அவளுக்கு உரிய பாதுகாப்புத் தரப்பட்டே ஆகவேண்டும்.

‘தத்தெடுத்தல்’ என்பதும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்திடாது. இஸ்லாம் இதை அனுமதிப்பதே இல்லை. ஒவ்வொரு குழந்தையும் அதன் உண்மையான தந்தையின் பெயரால்தான் அழைக்கப்பட வேண்டும். அப்படித் தந்தையின் பெயர் தெரியவில்லையென்றால் நம்பிக்கைக் கொண்ட சகோதரன் என அழைக்கப்பட வேண்டும் என்று பணிக்கின்றது இஸ்லாம். (அல்குர்ஆன்: 33:4-5 ஆகிய வசனங்களைக் காணவும்.)

இப்படிச் சொல்வதால் தந்தையில்லாமல் அநாதை ஆக்கப்பட்டவிட்ட குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடச் சொல்லுகின்றது இஸ்லாம் என எவறும் தவறாகப் பொருள் கொண்டு விட வேண்டாம். இஸ்லாம் அப்படிச் சொல்லவே இல்லை. குழந்தைகள் இல்லாதக் குடும்பத்திற்குத் தத்தெடுத்து வளர்ப்பது தகுந்த பரிகாரம்தானா? என்பதே இங்குப் பிரச்சினை. இன்றைய நாட்களில் மேற்கொள்ளப்படும் தத்தெடுப்பு முறைகள் குழந்தைகளின் நலனுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை. தத்தெடுத்தவர்களுக்கு திருப்தி தருவதில்லை. உண்மையான பெற்றோர் இதில் மகிழ்ச்சியாய் இல்லை. தத்தெடுப்பவர்கள் எந்த விதத்திலேயும் உண்மையான தாய், தந்தையருக்கு ஈடாகி விடமுடியாது. நம்மைச்சுற்றி நடக்கும் வழக்குகள், குடும்பங்களுக்கிடையே நடக்கும் சண்டை சச்சரவுகள் இவைகளெல்லாம் தத்தெடுத்தவர்கள் உண்மையான தாய் தந்தையருக்கு ஈடாகி விட மாட்டார்கள் என்பதன் எடுத்துக் காட்டுகள். தத்தெடுப்பது குழந்தைகள் இல்லாத குடும்பங்களின் குறைகளைத் தீர்த்திடாது என்பதற்கும் இவைகளே எடுத்துக் காட்டுகளாகும்.

பிற குடும்பங்களுக்குத் ‘தத்தாக’ தங்கள் குழந்தைகளை தந்துவிட்டுப் பின்னர் தங்கள் குழந்தைகளைத் திரும்பக்கேட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருப்போர் ஏராளம். இன்று நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் இதனை தெளிவுபடுத்தும். தங்கள் குழந்தைகள் அந்நிய இல்லங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பதையும், தங்கள் மழலைகள் வேற்றுச் சூழ்நிலைகளில் வளர்வதையும் அவர்கள் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? அடுத்தவர்கள் தங்களது குழந்தைக்கு போதிய கவனம் செலுத்துகின்றார்களா? இல்லையா? என்பதைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வாறு அமைதியுடன் இருக்க முடியும்? எந்த அளவிற்கு அவர்கள் அடுத்தவர்களை இதில் நம்பிக்கைக் கொள்ள முடியும்?

குழந்தை வளர்ந்து வயதுக்கு வந்திடும்போது அது உண்மைகளை அறிந்திடத்தான் செய்யும். தன்னைப் பெற்றவர்கள் அடுத்தவர்களிடம் தன்னை ஒப்படைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்திடும்போது அக்குழந்தையின் மனம் என்ன பாடுபடும்? தன்னைப்பெற்ற உண்மையான பெற்றோர்கள் வறுமை அல்லது அவமானம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற காரணங்களுக்காகத் தன்னை அடுத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டார்களே என்பதை அறிந்திடும்போது அந்தக் குழந்தையின் மனம் கொந்தளிக்காதா?

தத்தெடுத்துக்கொண்ட குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்கள் அந்தக் குழந்தையிடம் எந்த அளவிற்கு அன்பு செலுத்துவார்கள்? தங்கள் குடும்பத்தோடு தொடர்பில்லாத ஒரு அந்நியக் குழந்தை தங்கள் குடும்பத்தின் பெயரில் வளருவதையும், தங்களது குடும்ப சொத்துக்களில் உரிமைக் கொண்டாடுவதையும், குடும்ப கண்ணியத்தில் பெருமை பாராட்டுவதையும் எந்த அளவிற்கு விரும்புவார்கள்?

ஒரு காலகட்டத்தில் குழந்தை உண்மையான பெற்றோர்களிடத்தில் போய் சேர்ந்திட விரும்பினாலோ, அதன் உண்மையான பெற்றோர்கள் குழந்தையை திரும்பக் கேட்டாலோ தத்தெடுத்து வளர்த்தவர்களின் கதியென்ன? தத்தெடுத்துக் கொள்வதில் இதுபோன்ற எண்ணற்ற குழப்பங்கள் உண்டு. இந்தக் குழப்பம் அந்தக் குழந்தை, தத்தெடுத்தவர்கள், உண்மையான பெற்றோர் ஆகிய அனைவருக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்துவது, இது சமுதாயத்திலும் சில குழப்பங்களை ஏற்படுத்திடும் சாத்தியங்களும் உண்டு. பல மனிதர்கள் விரும்பத்தகாத, பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு இந்தப் பழக்கம் ஒரு காரணமாக அமையும். பத்திரிக்கைகளும் ஏனைய செய்தி நிறுவனங்களும் தரும் தகவல்களின்படி சில மனிதர்கள் குழந்தை திருட்டிலேயும், குழந்தை விற்பனையிலும் ஈடுபடுவதற்கு இந்தத் தத்தெடுக்கும் பழக்கமே காரணம். இன்றைய தினம் இது ஒரு வியாபாரமாகவே வளர்ந்து விட்டது. இது ஆப்பிரிக்காவிலோ, ஆசிய காடுகளிலோ நடக்கும் வியாபாரமல்ல. முன்னேற்றத்தின் உச்சியிலிருக்கும் நாடுகள் எனக்கருத்தப்படும் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நடந்து கொண்டிருப்பவையாகும்.

மேலே சொன்ன இந்தக் காரணங்களினால் தான் இஸ்லாம் தத்தெடுப்பதைத் தடை செய்துள்ளது. முஸ்லிம்கள் இந்தப் பழக்கத்தில் ஈடுபடவே மாட்டார்கள். (சான்றாக திருமறையின் 3:4-6 வசனங்களைக் காணவும்.)

மகப்பேறு இல்லாத குடும்பங்களுக்கு மேலே விவாதித்த மூன்று தீர்வுகளில் எதுவும் பலன் தராது என்பதினால்தான் இஸ்லாம் தனக்கேயுரிய பரிகாரத்தைத் தந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என இஸ்லாம் அனுமதி தந்துள்ளது. இந்தத் திருமணத்தின் மூலம் குழந்தை இல்லை என்ற குறை போக்கப்படும். இரண்டு மனைவியரும் கணவனின் பாசத்திற்கும் பாதுகாப்பிற்கும் உரியவராவார்கள். குழந்தைகள் இல்லை என்ற ஏக்கத்திற்கு ஆளாகி நிற்கும் மனிதர்கள் அனைவரும் இந்த அனுமதியால் மாத்திரமே திருப்தி அடைவார்கள், அவர் மீது அக்கறைக்கொண்ட (முதல்) மனைவியரும் இதை வரவேற்கவே செய்வார்கள்.

விவாகரத்து அல்லது இயற்கையான மன உந்தல்களை அடக்கிப்போடுவது ஆகியவைகளுக்குப் பதிலாக இஸ்லாம் சொல்லும் இந்தப் பரிகாரமே மிகச்சிறந்தது என்பதை அறிவுடைய எவரும் மறுக்கமாட்டார்கள்.

பலதாரமணம் சமுதாயத்தின் சில பிரச்சினைகளுக்கு எவ்வாறு சிறந்த பரிகாரமாக அமையும் என்பதற்கு மேலே சொன்ன விவாதம் இன்னொரு விளக்கமாகும்.

3. சில சூழ்நிலைகளிலும், சில சந்தர்ப்பங்களிலும் மனைவி தன்னுடைய கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில்லை அல்லது நிறைவேற்ற முடிவதில்லை. சில நேரங்களில் அவள் எந்த அளவிற்கு மகிழ்ச்சிகரமான துணையாக இருந்திட வேண்டுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருபவளாக இருந்திட முடிவதில்லை. சில நேரங்களில் அவள் எவ்வாறு இருந்திட வேண்டும் என எண்ணுகின்றாளோ அவ்வாறு இருந்திட முடிவதில்லை. சில நேரங்களில் அவள் தன் கணவன் தன்னிடம் எதிர்பார்க்கும் எல்லா ’சுகத்தையும்’  தந்திட முடிவதில்லை. இவை பொதுவாக எல்லா குடும்பங்களிலும் நடப்பதல்ல. ஆனால் வருந்தத்தக்க விதத்தில் சில குடும்பங்களில் நடந்து விடுவதுண்டு. எல்லா நேரங்களிலும் இது மனைவின் தவறாக இருந்து விடுவதில்லை. சில நேரங்களில் இயல்பாகவும் நிகழ்ந்து விடுவதுமுண்டு. சில நேரங்களில் மனைவியின் கட்டுப்பாட்டில் இல்லாத சில புறச் சூழ்நிலைகளால் நடந்து விடுவதுமுண்டு.

சில சந்தர்ப்பங்களில் மனைவி மீள முடியாத பெரிய நோய்களால் பீடிக்கப்பட்டு விடுகின்றாள். மகப்பேறு காலங்கள், மாதவிடாய் நாட்கள் இன்னும் இதுபோன்ற சூழ்நிலைகளில் கணவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வானவர்களைப்போல் வாழ்ந்திடுவான் என எதிர்பார்ப்பதிற்கில்லை. சில மனிதர்கள் இதுபோன்ற நேரங்களில் ஒழுக்கத்தில் தவறி விடுவதுமுண்டு. நோயால் பீடிக்கப்பட்டு உழன்று கொண்டிருக்கும் மனைவியை கவனிக்க வரும் மனைவியின் சகோதரிகள் பலியாக்கப்படும் சம்பவங்களை நாம் ஆங்காங்கே கேள்விபடவே செய்கின்றோம். குழந்தைகளைக் கவனிக்க வரும் தாதிப்பெண்களும் சிலரின் இலக்காக ஆக்கப்பட்டு விடுகின்றார்கள்.

மனைவி கொடுமையான பிரசவ வேதனையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்டு அல்லலுறும்போது கணவன் வேற்றுப் பெண்களோடு புதிய உறவுகளின் உல்லாசத்தை அனுபவிக்கின்ற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. கணவன் நடத்தும் இதுபோன்ற நாடகங்களில் மனைவியின் சகோதரிகள் நாயகிகளாக ஆக்கப்பட்டு விடுகின்றார்கள். தன சகோதரி இயலாமையில் இருந்திடும்போது அவளைக் கவனித்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் முதலில் இல்லத்தில் அடியெடுத்து வைக்கின்றார்கள். இதன்பிறகு அங்கே உறவுகள் அனுதாபத்தில் ஆரம்பித்து, அன்பாக மாறி, அமளியாக உருவெடுத்து விடுகின்றன. மனைவி படுக்கையிலிருந்து எழ முடியாத நோயாளியாக மாற்றப்பட்டு விடும்போது, மருத்துவமனைகள் அவள் நிரந்தரமாக வாழும் இடமாக ஆக்கப்பட்டு விடும்போது, கணவன் விரக்தியாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்டு விடுகின்றான். இந்த நிலையில் அந்த மனைவிக்குத் துணையாக அவளது சகோதரியோ, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களோ துணைக்கு அல்லது உதவிக்கு வருகின்றனர். அந்த உதவியில் ஒரு பகுதியாக அந்தக் கணவன் மீது சிறிது அனுதாபமும், பரிவும் காட்டுகின்றனர். சில ஆண்கள் இந்த சிறிய அனுதாபத்தை அவர்களின் விருப்பமாக மாற்றி அதில் முடிந்ததை சாதித்து விடுகின்றனர். விளைவு, இதயங்கள் உடைந்து போகும் அளவிற்கு போய் விடுகின்றது. இது குடும்பங்களை உடைத்து சமுதாயத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

மேலே நாம் சித்தரித்திருப்பவைகள் கற்பனை கதையல்ல. இவை மிகவும் அரிதாக நடப்பவை என்றுகூட சொல்லிட முடியாது. இவை சமுதாயத்தில் பரவலாக நடப்பவையே! செய்தித்தாள்கள் இதுபோன்ற சம்பவங்களை அவ்வப்போது செய்திகளாக தந்துக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் இவற்றிற்கு தகுந்த சாட்சியங்களாகும். இதில் ஈடுபடும் ஆண்கள் மனசாட்சியே இல்லாதவர்கள், மனிதாபிமானத்தை மறந்து விட்டவர்கள், சமுதாய வாழ்விற்கு தகுதியற்றவர்கள் என்றெல்லாம் அவர்களை ஏசிடலாம். ஆனால் இது உண்மையையோ, மனித இயல்பையோ மாற்றிடுமா?

இவைபோன்ற சம்பவங்கள் நாளும் நடந்து கொண்டிருக்கும் உண்மை. மனித இனத்தின் பலவீனத்தின் பாற்பட்டது. இதற்கொரு தெளிவான பரிகாரத்தைக் காண வேண்டியது இன்றியமையாததாகும். சட்டத்தை இயற்றும் அதிகாரத்திலே அமர்ந்திருப்பவர்கள் இதுபோன்ற அவலங்களை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா? இதுபோன்ற சம்பவங்கள் நடந்திடும் போதெல்லாம் ‘கண்டிக்கத்தக்கது’ எனக் கண்டனக்குரல் எழுப்பி விட்டு முடங்கிக் கிடந்திட்டால் போதுமா? தனிமனிதன் ஒழுக்கத்தில் நிலைகுழைந்து போவதையும், சமுதாயத்தின் ஒழுக்க நியதிகளை அவன் உடைத்திடுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் நியாயமா? கண்டனங்களை எழுப்பிடுவதும், தண்டனை தரவேண்டும் என கர்ச்சித்திடுவதும் மனிதனை திருத்தி விடப்போவதில்லை. அவனது மனசாட்சியை செப்பனிடப் போவதில்லை. சட்டங்களை ஏய்த்திட, நீதியின் கண்களை மறைத்திட இந்த மனிதர்களால் நிச்சயமாக முடியும். இவர்களைத் திருத்திட நீதியும், சட்டமும் எந்த உதவியையும் செய்திடாது.

இஸ்லாம் இதுபோன்ற பிரச்சினைகளில் எப்போதும் பாராமுகமாக இருப்பதே இல்லை. ஒழுக்க நியதிகளை மனிதன் தன் விருப்பங்களுக்கு ஏற்ப வளைத்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அது தான் வகுத்துத் தந்துள்ள நியதிகளைத் தளர்த்துவதுமில்லை. குடும்ப வாழ்வில் ‘உள்ளொன்று புறமொன்று’ வைத்து வாழும் மனிதர்களின் நயவஞ்சகத்தை அனுமதிக்கவும் தயாராக இல்லை. இவைகளெல்லாம் தவறு என உரக்கக் குரலெடுத்து முழங்கிவிட்டு, பரிகாரங்களைப்பற்றி கவலைப்படாமல் இருந்திடுவதுமில்லை. சில வெறும் வெற்றுக் கணடனங்களை மட்டும் எழுப்பிவிட்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளவும் தயாராக இல்லை.

இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதனைக் காத்திடவும், இதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்குச் சிறந்த பரிகாரங்களைத் தந்திடவும், சமுதாயத்தின் ஒழுக்கம் சீரழிந்திடாது தடுக்கவும், தீமைகளைத் தடுத்திடவும் இஸ்லாம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இந்த அனுமதி மேலே நாம் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டதேயாகும். இந்த அனுமதியை ஒரு நெருக்கடிநேர பரிகாரமாக கொள்ள வேண்டுமே தவிர, வாழ்வின் நித்திய நிகழ்ச்சிகளாக மாற்றிடக் கூடாது.

இஸ்லாம் தந்துள்ள தீர்வு நிச்சயமாக நடப்பிலிருக்கும் கட்டாய ஒருதார மணத்தை விட சிறந்ததேயாகும். அத்துடன் அது ஆண் பெண் உறவுகளில் நடக்கும் அத்துமீறல்களுக்குச் சிறந்த மாற்று வழியுமாகும். இக்கட்டானதொரு இடறில் மாட்டித் தவிக்கும் பெண்களும் ஆண்களும் இந்தப் பரிகாரத்தால் பயன் பெறலாம். ஆனால் இதுபோன்ற உறவில் சம்பந்தப்பட்டவர்கள் மனைவியர்கள் அனைவரிடத்தும் நியாயமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றால் ஒருதாரமணமே சிறந்தது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.