அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-1

ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியர். (PLURALITY OF WIFES)

பலதார மணம் என்பதற்கு ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுக்குக் கணவனாக இருத்தல் என்று பொருள். இங்கே நாம் பலதார மணம் எனக் குறிப்பிடுவது ஒரு ஆண் பல பெண்களை மணந்திருத்தலைத்தான்.

ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்து கொள்ளும் வழக்கமும் மனித வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலே இருந்து தான் இருக்கிறது.

பல பெண்களும், பல ஆண்களும் கூட்டு முறையில் திருமண உறவுகள் வைத்துக் கொள்ளும் வழக்கமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது.

இந்த மூன்று முறைகளில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்ளும் முறைதான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக்கின்றது. எனினும் பல்வேறு காரணங்களினால் இந்தப் பழக்கம் மிகக் குறுகிய மக்களிடையே தான் இருந்திருக்கின்றது. இஸ்லாம் இதை மட்டும்தான் அனுமதித்திருக்கின்றது. ஏனைய இரண்டு பழக்கங்களான ஒரு பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்வது, பல ஆண்கள், பல பெண்களை கூட்டு முறையில் மணந்து கொள்வது போன்றவற்றை இஸ்லாம் முழுமையாக தடை செய்துள்ளது.

யூத மதமும், கிறிஸ்தவ மதமும் எப்போதும் ஒருதார முறையைத்தான் செயல்படுத்தின. பலதார மணத்தை செயல்படுத்தியதே இல்லை என்று கூறுவது உண்மையல்ல. இன்றும் அவர்கள் பலதார மணத்தை செயல்படுத்தவில்லையெனக் கூறுவது சரியல்ல. ‘இஸ்ரேலிய வீட்டுவசதி அதிகாரிகளுக்குப் பல தாரங்களை மணந்துகொண்ட இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்து வந்து தொல்லைகளைக் கொடுத்தனர்’ என புகழ்பெற்ற யூத அறிஞர்கள் பலர் எழுதக் காண்கிறோம். (ஆதாரம்: Goiterin P P 184-185)

கிறிஸ்தவ மார்மோன்களின் (CHRISTIAN MORMONS) நிலை உலகறிந்த ஒன்றாகும். ஆசிய ஆப்பிரிக்க மதத் தலைவர்களின் (பாதிரிகள்) கருத்து நாம் அறிந்ததாகும். அவர்கள், வாழ்க்கைத்துணையை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருத்தல், ஒழுக்கத் தவறுகள், விபச்சாரம் ஆகியவற்றிற்கு பதிலாக பலதார மணமே சிறந்தது எனக் கருதுகின்றார்கள். அமெரிக்காவில் வாழ்க்கைத்துணையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு தாரமணத்தை கட்டாயப்படுத்தித் திணிப்பதையும், இதனால் நாட்டில் இடம்பெறும் திருட்டு உறவுகள், விபச்சாரம், ‘ஒரு பால் புணர்ச்சி’ (Homosexuality) ஆகியவற்றையும் ஊன்று கவனித்தால் பல உண்மைகள் வெளிப்படும். இன்னும் கிரேக்க – ரோமானிய மற்றும் யூத- கிறிஸ்தவ சமுதாயங்களின் வரலாற்றைப் புரட்டினால் இது குறித்தும் பல உண்மைகள் புலப்படும். *

*S.D. Goiterin, Jews and Abab; Their Contacts Thbough the Ages. (New Jobk Schoken Books) 1964; L.T. Hobhouse Mobals in Evolotion; A Study of Comparative Ethics. (London Chapman and Hall). 151; E.A. Westerhark, A Short History of Marriage. (New Yourk: The Macmillan Co) 1926.    

இனி நமது பார்வையை இஸ்லாத்தின் பக்கம் திருப்புவோம்.  மேலைநாட்டவர்களில் பலர் முஸ்லிம் பலமான உடல் இச்சைகளை உடையவராக இருப்பார் எனவும், அவர் பல பெண்களை மணந்திருப்பார் என்றும் நம்புகின்றார்கள். இவர்களில் அநேகர் திருமணமாகாத முஸ்லிமையோ, அல்லது ஒரே ஒரு தாரத்தைக்கொண்ட முஸ்லிமையோ பார்த்திடும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொள்கின்றனர்.

ஆடைகளை மாற்றுவதைப்போல, வாடகை வீடுகளை மாற்றுவதைப்போல முஸ்லிம்களுக்குத் தங்களது மனைவியை அல்லது மனைவியரை மாற்றிக்கொள்ள அனுமதி இருக்கின்றது என மேலைநாட்டவர்கள் நம்புகின்றனர். அம்மக்களிடையே இத்தகையதொரு மனநிலை வளர்வதற்கு அம்மக்களிடம் பரவிகிடக்கும் பாலுணர்வைத் தூண்டக்கூடிய இலக்கியங்களும் திரைப்படங்களுமே காரணம். சில பொறுப்பற்ற முஸ்லிம்களும் இந்த எண்ணம் பரவுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதுபோன்ற தவறான கருத்துக்கள் வேரூன்றியதன் தவிர்க்க முடியா விளைவு அம்மக்கள் உண்மையை கண்டுகொள்ள முடியவில்லை. இஸ்லாம் குடும்ப அமைப்பிற்கும், சமுதாய வாழ்விற்கும் தரும் உயர்ந்த வழிகாட்டுதலை அவர்கள் அறியமுடியவில்லை. ஏற்கனவே பரப்பப்பட்ட தவறான கருத்துக்கள் அவர்களின் அறிவுக்கண்களை மறைத்து விட்டன. இப்படித் தாங்கள் செவிமடுத்த வதந்திகளை நம்பி தங்களது அகக்கண்களைக் குருடாக்கிக் கொண்டவர்களுக்காகத் தான் இந்தப் பகுதியில் சில உண்மைகளை எடுத்து வைக்கின்றோம். நடுநிலையிலிருந்து சிந்தித்து பார்த்தப் பின்னர் ஒரு முடிவுக்கு வரும்படி அவர்களை வேண்டுகிறோம்.

மனித வரலாறு முழுவதும் பலதார மணம் பரவலாகக் கிடக்கக் காணலாம். இறைத்தூதர்களான இப்றாஹீம் (அலை), யாகூப் (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை) ஆகியவர்கள் பலதார மணத்தைச் செயல்படுத்தியவர்களாக இருந்திருக்கின்றார்கள். அன்று ஆட்சி செலுத்திய ஆளுனர்கள், அரசர்கள், மேற்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த மக்கள், மன்னர்கள் ஆகியோர் பலதார மணம் செய்தவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். அன்றுபோல் இன்றும் இது பல்வேறுபட்ட மக்களிடையையேயும் பழக்கத்திலிருந்து வருகின்றது. இன்னும் கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் வாழ்ந்துவரும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பலதாரங்களை மணந்து கொள்கின்றனர். இவைகளில் பல சட்டப்படி நிறைவேறிய திருமணங்களாக இருக்கின்றன. சில சட்டப்படி நிறைவேறாததாக இருக்கின்றன. சில வெளிப்படையாக இருக்கின்றன. இன்னும் சில மறைவாக பழக்கத்தில் இருக்கின்றன.

எத்தனைப்பேர் தங்களுக்கென தனியான ஆசைநாயகிகளை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது தங்களது அன்பரசிகளை இதயத்திலே வைத்து ஆட்சி செலுத்தி வருகின்றார்கள். அல்லது அடிக்கடி ’தரிசித்து ’ வரும் சின்ன வீடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். எத்தனையே பேர் சட்டத்தின் பாதுகாப்புப் பெற்று ஏனைய மகளிருடன் உலா வந்து  கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாம் சாதாரண பொது அறிவுடையோர் அனைவரும் அறிவார்கள். இதற்கெல்லாம் பெரியதொரு விளக்கமோ, அத்தாட்சிகளோ தேவையில்லை. ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என உரக்க முழங்கும் ஒழுக்க வல்லுனர்கள் விரும்புகின்றார்களோ இல்லையோ இவைகளெல்லாம் எங்கும் பரவலாக நடந்து கொண்டிருப்பவை. அதுபோல் இவற்றை மனித வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் காணலாம்.

பைபிள் வெளிப்படுத்தப்பட்ட காலத்திலும் பலதார மணம் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. பலதார மணம் அன்று மதத்தின் அளவிலும், சமுதாய பழக்கம் என்ற விதத்திலேயும் வழக்கத்தில் இருந்த ஒன்றாகும். ஒழுக்க பலத்திற்கு அது உகந்தது என சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்திருக்கின்றது. இதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. இதனால்தான் பைபிள் இது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அப்போது இது எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பரவலாக பழக்கத்திலும் இருந்தது. பைபிள் இதை தடை செய்யவோ, சில வரையறைகளை வரையவோ இல்லை.

பைபிள் கூறும் ‘பத்து கன்னியர்கள் கதை’ பலதார மணத்திற்கு அனுமதி தருவதாகும் என சிலர் விளக்கம் தருகின்றார்கள். பத்து மனைவியர் வரை மணந்துக் கொள்ளத் தரப்பட்ட அனுமதி என்றே அந்தக் கதைக்கு விளக்கம் தருகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மீண்டும் எடுத்துரைக்க வந்தபோது பலதார மணம் சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடந்தது. திருக்குர்ஆன் இந்தப் பழக்கத்தை மறக்கவுமில்லை, புறக்கணிக்கவுமில்லை. அதேநேரத்தில் மக்களின் ’மனம் போல்’ விட்டு விடவுமில்லை. இதுகுறித்து திருக்குர்ஆன் தெளிவான சில வழிகாட்டுதல்களை தரவே செய்தது. பல பெண்களை மணந்திருக்கின்ற ஆண்கள் குடும்ப சுமைகளில் பொறுப்பற்றவர்களாக இருந்திடுவதை இஸ்லாம் சகித்துக் கொள்ள தயாராக இல்லை.

பலதார மணத்தோடு விரவிக் கிடந்த பல்வேறு சமூக அநீதிகளையும், தீமைகளையும் களையெடுத்து அதனால் விளையும் நன்மைகளை அதிகப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டது திருக்குர்ஆன். பலதார மணம் என்ற பழக்கத்தில் தலையிட்டு அதை முறைப்படுத்தியது திருக்குர்ஆனின் இயல்பான தன்மைகளுள் ஒன்றாகும்.  எந்த சமுதாயப் பிரச்சினையிலும் திருக்குர்ஆன் அநீதிகளை அனுமதித்திட தயாராக இல்லை. குடும்பம் என்பது சமுதாய வாழ்வின் ஒரு முக்கியமான பகுதி. ஆகவே குடும்பத்தில் ஏற்படும் அநீதிகள் சமுதாய அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அது ஒட்டுமொத்தமான வேறு அநீதிகளுக்கு இட்டுச் செல்லும். ஆகவே திருக்குர்ஆன் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் உற்ற வழியைக் காட்டியதைப்போல் இதிலும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது குறித்து இஸ்லாம் பின்வரும் நியதிகளை வகுத்துத் தந்துள்ளது.

1. பலதார மணம் சில நிபந்தனைகளின் கீழும் சில சூழ்நிலைகளின் கீழுமே அனுமதிக்கப்படும். இந்த அனுமதி நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதியே! இது நம்பிக்கையின் ஒரு பிரிவுமல்ல. தவிர்க்க முடியாத தேவையுமல்ல.

2. நான்கு துணைவியர் வரைதான் இந்த அனுமதி. இஸ்லாம் இந்த நியதியைக் கொண்டு வருவதற்கு முன்னர் எத்தனை பெண்களை மணந்து கொள்வது என்பதற்கு எல்லையே இல்லாதிருந்தது.

3. இரண்டாவது மனைவி அல்லது மூன்றாவது மனைவி ஆகிய எல்லா மனைவியருக்கும் முதல் மனைவின் அளவிற்கு சம உரிமைகள் உண்டு. மனைவியரின் பாதுகாப்பு, மனைவியரின் தேவைகளைக் கவனித்தல் ஆகியவைகள் நிறைவாக நிறைவேற்றப்பட்டாக வேண்டும். முதல் மனைவிக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ, என்னென்ன சலுகைகள் உண்டோ அவற்றில் அணுவும் குறைந்திடாமல் அடுத்த மனைவியருக்குத் தரப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான நிபந்தனையாகும். எல்லா நிலைகளிலேயும் மனைவியருக்கிடையில் பாரபட்சம் இன்றி நடந்து கொள்வது கணவனின் அகத்தன்மைகளைப் பொறுத்ததாகும்.

4. பலதார மணத்திற்கு தரப்படும் அனுமதி சாதாரண சூழ்நிலையிலிருந்து மாறுபட்ட அசாதாரண சூழ்நிலைக்கேயாகும். தவிர்க்க முடியாத சில ஒழுக்கப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிடவும், சில சிக்கலான சமுதாயப் பிரச்சினைகளை அவிழ்த்திடவும் இறுதித் தீர்வாக தரப்பட்டதே இந்த பலதார மணம் என்ற அனுமதி. சில குடும்ப பிரச்சினைகளைத் தீர்த்திட இருக்கின்ற எல்லாத் தீர்வுகளும் தோற்றிடும்போது இறுதி மார்க்கமாக மேற்கொள்ளப்படுவதே பலதார மணம்! சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு நெருக்கடியான நேரத்தின் நெருக்கத்தைக் குறைத்து, வாழ்வின் ஓட்டத்தை நிலைப்படுத்தக் கிடைத்த ஒரு வழியேயன்றி, களித்து மகிழும் களிப்பாட்டத்தின் ஒரு பகுதியல்ல.

திருக்குர்ஆன் இதுகுறித்துப் பின்வருமாறு கூறுகின்றது.

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்குநான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண்ணையே (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும். (திருக்குர்ஆன்: 4:3)

திருமறையின் இந்த திருவசனம் உஹது போருக்குப்பின் அருளப்பட்டதாகும். உஹது போரின்போது பல முஸ்லிம்கள் இறந்து விட்டனர். இதனால் பல பெண்கள் அநாதைகளாகவும், விதவைகளாகவும், காப்பாளர்கள் அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காத்திட வேண்டியது எஞ்சிய முஸ்லிம்களின் கடமையாக இருந்தது. அப்போது தான் திருக்குர்ஆன் இந்த வசனத்தின் வழி வாழ்விழந்தோருக்கு பாதுகாப்பு வழங்கியது. ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள் அநீதிகளை இழைத்திடாமல் தடுத்திடவே இந்த இறை வசனம் அருளப்பட்டது.

இந்தத் திருமறை வசனத்தை ஊன்றி கவனித்தால் பல உண்மைகள் புலப்படும். முதலில் பலதார மணத்தை இஸ்லாம் கண்டுபிடித்து திணிக்கவில்லை. இரண்டாவது மேலே சொன்ன நிபந்தனைகளை விதித்ததின் மூலம் அது பலதார மணத்திற்கு (ஒரு விதி என்ற வகையில்) ஊக்கம் தரவில்லை.   மூன்றாவதாக இஸ்லாம் பலதார மணத்தை தடை செய்யவில்லை.  ஏனெனில் அவ்வாறு தடை செய்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. தடை விதித்தால் அது நடப்புக்குதவாத ஒரு கோட்பாடு என்றுதான் ஆகிவிட்டிருக்கும். மக்கள் தொடர்ந்து பலதார மணங்களை நிறைவேற்றிக் கொண்டுமிருந்திருப்பார்கள். இஸ்லாம் இதுபோன்ற நடப்பிற்கு வராத கோட்பாடுகளின் குவியலல்ல. அது வாழ்வில் நடைமுறைப்படுத்த தகுந்தது. நடத்திக் காட்டிடத்தான் இஸ்லாம் அருளப்பட்டது.

இன்றைய உலகிலே இருக்கும் பல்வேறு மதங்களும், சட்டங்களும் பலதார மணத்தைத் தடை செய்துள்ளன. ஆனால் அந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள், அந்த சட்டங்களின்கீழ் வாழ்பவர்கள் பெரும்பாலோர் தங்களது வாழ்வில் பல பெண்களோடு உறவு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் இதை வெளிப்படுத்துவதில்லை. இதை நாம் நமது வாழ்வில் பரவலாகப் பார்க்கின்றோம். இஸ்லாம் பலதார மணத்திற்கு தடை விதித்திருந்தால் நிலைமை இப்படித்தான் ஆகியிருக்கும். இஸ்லாம் ஒரு நடைமுறை செயல்திட்டம். ஆகவே அது பலதார மணத்தை தடை செய்யவில்லை.

அதேநேரத்தில் மனிதர்கள் இதில் அத்துமீறிடாவண்ணம் தடுத்திட சில நிபந்தனைகளையும் விதித்தது இஸ்லாம். பலதார மணத்தை அனுமதிப்பதால் தீமைகளே மிகைத்திடும் என்பது உண்மையாக இருந்தால், அனைத்தும் அறிந்த இறைவன் அதை அனுமதித்தே இருக்கமாட்டான். தடை செய்திருப்பான். அவனைவிட அதிகமாக மனித நலனில் அக்கறையுடைவர்கள் யார்? அவனே பூரணமானவன், ஞானம் நிறைந்தவன்.

இஸ்லாம் பலதார மணத்தை ஏன் அனுமதித்தது என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. இந்தக் காரணங்களை நாம் கற்பனை செய்து கண்டுபிடித்திட தேவையில்லை. சில அனுமானங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவைகள் இந்த உலகில் நடப்பிலிருப்பவை, நாள்தோறும் நாம் நம்மைச்சுற்றி வாழ்வோரின் வாழ்க்கையில் காணும் உண்மை. இந்த எண்ணற்ற காரணங்களுள் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.

1. சில சமுதாயங்களில் பெண்கள் எண்ணிக்கையில் ஆண்களை விட அதிகமாக இருக்கின்றார்கள். தொழில் வளத்திலும், வணிகம் வளர்ந்து நிற்கும் இடங்களிலும் இது மிகவும் பொருத்தமாக அமையும். போர்களில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் ஆண்கள் போர்களில் மடிந்திடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பெண்கள் மிகைத்து விடுகின்றனர். இந்த நாடுகளில் பலதார மணத்தை அனுமதிப்பதைத் தவிர வேறுவழி இருக்க முடியாது.

இப்போது மேலே சொன்ன சூழ்நிலையில் ஒரு இஸ்லாமிய நாடு இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். பெண்கள் எண்ணிக்கையில் ஆண்களை மிகைத்து நிற்கின்றார்கள் எனக் கொள்வோம். இந்நிலையில் இஸ்லாம் ஒருதார மணத்தை மட்டும் அனுமதிப்பதாக இருந்தால் எண்ணிக்கையில் மிகைத்து நிற்கும் பெண்கள் என்ன செய்வார்கள்? வாழ்க்கைக்கு இயற்கையாக தேவைப்படும் துணைக்கு அவர்கள் எங்கு போவார்கள்? இயற்கையாக உடலில் உறையும் உணர்வுகளுக்கு அவர்கள் எங்கே வடிகால் தேடிக்கொள்வார்கள்? அன்பு, இரக்கம், அனுதாபம், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு துன்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய இயற்கையான உந்துதல்களை அவர்கள் எப்படி ஆற்றிக் கொள்வார்கள்? உள்ளத்தில் ஊற்றெடுத்து பிராவகமெடுத்து ஓடும் அன்பு சங்கமிக்கும் இன்னொரு உள்ளத்தை அவர்கள் எங்கே தேடுவார்கள்? ஆண்களின் துணையில் பெண்களும், பெண்களின் துணையில் ஆண்களும் தங்களது ஆற்றாமைகளை ஆற்றிக் கொள்கின்றார்கள் என்பது உண்மையில்லையா? பெண்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் தேவைப்படும் பாதுகாப்பினை அவர்கள் எங்கே தேடிக் கொள்வார்கள்?

ஆண் பெண் துணையில் வெறும் உடல் இச்சைகள் தான் நிறை பெறுகின்றன என எவரேனும் எண்ணிடுவாரேயானால் அவர் தனது சிந்தனையை தயைகூர்ந்து திருத்திக் கொள்ளட்டும். ஆண் பெண் துணையில் பல அபூர்வ உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. ஒருவன் ஒழுக்கப் பலத்தைத் திரட்டிக் கொள்வதற்கு பெண் துணை தவிர்க்க முடியாதது. ஒரு பெண் தன்னையும் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்தையும் காத்திட – தனது கற்பை காப்பாற்றிட ஆண் துணை அவசியமாகும்.

உயர்ந்த பதவிகளிலே இருக்கும் பெண்களும் சரி, செல்வ செழிப்பிலே செழித்து வளரும் பெண்களும் சரி, வறுமையில் வாடிடும் பெண்களும் சரி அத்தனை பேரும் தங்கள் மீது அன்பு செலுத்திடும் ஆண் துணை ஒன்று வேண்டுமென எண்ணுகின்றனர். தங்களது அன்புக்குரியவர் ஒருவர் இருந்திட வேண்டுமென விழைகின்றனர். தங்களது அன்பின் காணிக்கையாக மழலைகள் மலர வேண்டும் என மனதால் ஏங்குகின்றனர். இந்த ஏக்கத்தைப் போக்கிட சட்டப்படி தங்களால் ஒரு ஆண் துணையை கண்டுகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் நிச்சயமாக அதை வேறு வழிகளில் தேடிக்கொள்ளவே முற்படுவார்கள். ஆண் துணையின்றி ஆயுளை ஓட்டிக் கொண்டிருக்கும் பெண்கள் அரிதினும் அரிது. அப்படியே ஆனாலும் அவர்கள் ஏக்கத்தை மறைத்துக் கொண்டுதான் வாழ்கின்றார்கள் என்பதே உண்மை!.

ஆண், பெண் உறவுகள் அனைத்தும் உடல் இச்சையின் அடிப்படையில் அமைந்ததே என்பதை ஒரு வாதத்திற்காக ஒத்துக் கொண்டாலும் அதுவும் மறக்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையல்ல. பொங்கிப்பாயும் உணர்வுகள் உரிய உறைவிடத்தை அடையாவிட்டால் விபரீதங்கள் விளையும் என்பதில் ஐயமில்லை. மனம் உடைந்து மருத்துமனையில் வாழும் மாதர்கள் அனேகர். அது குறித்து மருத்துவக் குறிப்புகள் தரும் ஆதாரங்கள் ஏராளம்.

இயற்கையிலேயே எழும் அந்த ஆசைகளும் உணர்வுகளும் மதிக்கப்பட்டாக வேண்டும். ஒருவருக்குச் சொந்தமாகிட வேண்டும் என்ற உணர்வு, தன்னைக் காப்பவர் ஒருவர் இருந்திட வேண்டும் என்ற மன உந்துதல், ஒருவருக்குத் துணையாக இருந்திட வேண்டும் என்ற ஆவல், ஆகிய இத்தனை இயற்கை உந்துதல்களும் நிறைவு செய்யப்பட்டாக வேண்டும். இயற்கையாக எழும் இத்தனை உணர்வுகளை ஒதுக்கிவிட்டுப் பெண்கள் வானவர்களைப்போல் ‘பற்றற்ற’ ஒரு வாழ்க்கையை வாழ்ந்திடுவார்கள் என எதிர்பார்ப்பதற்கில்லை. இந்த ஆசைகளையும், உணர்வுகளையும் நிறைவு செய்கின்ற உரிமை தங்களுக்கு இருக்கின்றது என எண்ணுகின்றனர் பெண்கள். இந்த உணர்வுகளை இயல்பாகவும், நியாயமாகவும், சட்டப்படியும் தனித்திட முடியவில்லை என்றால் அவர்கள் அதை வேறுவிதமாக பெற்றிட முயல்கின்றனர். நேர்மையான முறையில் தங்களது உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்கவில்லையென்றால் அதை வேறு விதத்தில் பெற முற்படுகின்றனர்.

பெண்கள் எண்ணிக்கையில் ஆண்களை விட அதிகமாக உள்ள சமுதாய அமைப்பில், நேர்மையான முறையில் தங்களுக்கு ‘உரியவர்’ கிடைக்கவில்லை என்றால் மறைமுகமான வழியில் ‘ஒருவரை’ சந்திக்க முயலுகின்றனர் பெண்கள். இதற்காக அவர்கள் பெரிய விருந்து உபசாரங்களை ஏற்பாடு செய்து அவற்றிற்கு ஆண்களை அழைக்கின்றனர். அதுபோலவே சாலையோரங்களிலும் இன்னும் இதுபோன்ற ஆண்கள் கூடும் இடங்களிலும் தங்களது பார்வையைப் பாய்ச்சிய வண்ணமிருக்கின்றனர். விரக்தியில் அவர்கள் மேற்கொள்ளும் இந்த வேட்டையின் விளைவு எல்லா நேரங்களிலும் ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டிருப்பதில்லை.

ஏற்கெனவே திருமணமான ஒரு மனிதன் ஒரு பெண்ணுக்குப் பிடித்துப் போகலாம். அவள் அந்த ஆண்மகனை எப்படியாவது எட்டிப்பிடித்திட வேண்டும் எண எண்ணலாம். அதுபோலவே சில பெண்கள் ஒரு மனிதனுக்குக் கவர்ச்சியாக இருக்கலாம். அந்த மனிதன் ஏதேனும் சில காரணங்களுக்காக ஒழுக்கத்தில் நிலையற்றவராக அல்லது விரக்திகளுக்கு ஆட்பட்டவராக இருந்து விடலாம். இதுபோன்ற மனிதன் தான் விரும்பும் பெண்களோடு ஏதேனும் ஒருமுறையில் நெருங்கிய உறவுகொள்ள ஆரம்பிக்கலாம். இது நிச்சயமாக அந்தத் திருமணமான மனிதனின் குடும்ப வாழ்வில் பலகுழப்பங்களை விளைவிக்கலாம். அவர் தனது மனைவியையும், குழந்தைகளையும் புறக்கணிக்கலாம். இவ்வாறு குடும்ப அமைப்புகளை உடைப்பதன் மூலம் சமுதாயத்தில் பல ஒழுக்கக் கேடுகளுக்கு வித்திடலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆண்களை இரகசியமாக சந்திக்கின்ற பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருப்பதில்லை. அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த உத்திரவாதமும் இருப்பதில்லை. சமுதாயத்தில் அவர்கள் தங்களது கண்ணியத்தையும் இழந்து விடுகின்றனர். அந்தப் பெண்களின் ஆசைநாயகன் வீட்டுக்கு வருவான் விருந்துண்பான், சில பரிசுப் பொருட்களைத் தருவான். ஆனால் அந்தப் பெண்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் அல்லது பாதுகாப்பிற்கான உத்திரவாதங்கள் எதுவுமிருப்பதில்லை. சில அசாதாரண சூழ்நிலைகளில் அந்தப் பெண்கள் தங்களது ஆண்துணையை அதிகம் விரும்புகின்றனர். சில சிக்கலான சூழ்நிலைகளில் அந்த ஆண்மகனின் துணை கிடைக்கும் என ஏங்கி நிற்கிறார்கள். ஆனால் அவனோ கைவிட்டு விடுகிறான். இந்த நிலையில் அவனைக் கட்டுப்படுத்தி அவளது துணைக்கு அழைத்து வருவது எது? இதுபோன்ற சூழ்நிலைகளில் அவளது பாதுகாப்பிற்கு என்ன பரிகாரம்? இந்த இரகசிய அன்பிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொண்டால் அவனைக் கட்டுப்படுத்துவது எது? பொதுவான ஒழுக்கம் அவனைக் கட்டுப்படுத்திடுமா? அல்லது நாட்டிலே பரவலாக நடப்பில் இருக்கும் சட்டம் அவனைக் கட்டுப்படுத்திடுமா? அல்லது அவனது மனசாட்சி அவனை கட்டுப்படுத்திடுமா? இவைகளில் எதுவும் அவனைக் கட்டுப்படுத்திடாது. எப்போது அவர்கள் இரகசியமாக அன்பு செலுத்த ஆரம்பித்தார்களோ அப்பொழுதே ஒழுக்கம் மரணஅடி வாங்கிவிட்டது என்றே பொருள். எப்போது அந்த ஆண்மகன் இறைவன் வகுத்துத்தந்த நியதிகளையும், சமுதாயத்தில் பொதுவாக பேணப்பட்டுவரும் ஒழுக்க நியதிகளையும் உடைத்து விட்டு இதுபோன்ற உறவுகளை ஆரம்பித்தானோ அப்போதே அவனது மனசாட்சி மரித்துவிட்டது என்றே பொருள். நாட்டிலே நடப்பிலிருக்கும் சட்டம், அவன் சட்டப்படி மணந்துகொண்ட மனைவியரைத் தவிர வேறு யாரையும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

ஆக, ஆண்கள் இதுபோல் இரகசியமாகக் கிடைக்கும் கள்ளத் தொடர்புகளைத் தாங்கள் விரும்பும்வரை அனுபவிக்கலாம். பின்னர் எத்தகைய சுமையுமின்றி பிரிந்து விடலாம். அத்துடன் வேறொரு பெண்ணின் துணையைத் தேடலாம். பின்னர் அங்கேயும் அதே நிலையைத் தொடரலாம்.

இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றப் பெண்கள் இன்னொருமுறை ஒரு நல்ல ஆண்மகனைக் கண்டெடுக்க முயற்சிக்கலாம். தன்னுடைய வாழ்க்கையை இன்னொருமுறை சோதனை செய்து பார்க்கலாம். ஆனால்! இந்தச் சோதனைகள் அவளுக்கு ஏதாவது பாதுகாப்பினைப் பெற்றுத்தருமா? அவள் இந்த வேட்டையினைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க முடியுமா? அல்லது தான் வேட்டையாடப்படுவதை அனுமதித்துக் கொண்டுதான் இருக்க முடியுமா? இதைப்போன்ற ஒரு பெண்ணுக்கு ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் இருப்பின் அவளது அல்லல்லளுக்கு அளவிருக்க முடியுமா?

இதுபோன்ற சூறாவளிகளால் தாக்கப்படுகின்ற பெண்கள் மூளைக் கோளாறுகளுக்கும், நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய வியாதிகளுக்கும் ஆளாவார்கள். அல்லது விரக்தியால் ஊட்டம் பெற்று அவர்கள் வெகுளிப்பெண்களாக மாறி, ஒழுக்கத்தைத் துறந்து சமுதாய சுமூக நிலைக்கு உலைவைப்பவர்களாக மாறி விடுவார்கள்.

இந்தப் பிரச்சினையின் இன்னொரு பகுதியையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply