அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)

இரத்தத் தியாகம் செய்து எல்லாப் பாவங்களிலிருந்தும் மொத்தமாக விடுதலை வாங்கித் தருவதல்ல நபி ஈஸா (அலை) அவர்களின் பணி. நபி ஈஸா (அலை) அவர்கள் இதற்காக அனுப்பப்பட்டவர்களும் அல்ல.

மக்களுக்கு இறைவனின் நேர்வழியைக் காட்டி, நல்லொழுக்கத்தைக் கற்பித்து, மரத்துப்போன அம்மக்களின் மனதைப் பண்படுத்தி, அவர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பாவங்களைத் துடைத்திடவே நபி ஈஸா (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மக்களால் மறக்கப்பட்டுவிட்ட இறை வெளிப்பாடுகளையும், இறை வழிக்காட்டுதல்களையும் நினைவுறுத்தி இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்டவே அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டார்கள். இந்தப் பணியை நிறைவேற்றுவதில் அவர்கள் இறைவனின் போதனைகளை மக்களிடையே பரப்பி வந்தார்கள். அத்துடன் தனது புனிதப் பணிக்கு வலுவூட்டுகின்ற விதத்தில் சில அற்புதங்களையும் செய்து காட்டினார்கள்.

அழகிய விவாதங்கள், அறிவுப்பூர்வமான கருத்துக்கள், ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் அழைப்புகள், ‘அற்புதங்கள்’ இவைகள் இறைவனால் நபி ஈஸா (அலை) அவர்களுக்குத் தரப்பட்ட வலிமைகளாகும். இறைச்செய்தியை கடினமனம் படைத்த அந்த மக்களுக்கு எளிதில் புரிந்திடும் வண்ணம் சொல்லிட நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் பல ‘அற்புதமான’ அத்தாட்சிகளை வழங்கினான். ஆக நபி ஈஸா (அலை) அவர்கள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியது உண்மையின் பக்கம் மக்களை அழைத்திடுவதற்கேயன்றி வேறில்லை.

நபி ஈஸா (அலை) அவர்களின் திருப்பணி குறித்தும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் குறித்தும் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

(அச்சமயம் மர்யம்) கூறினார்; “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்; “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான். இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்.”

“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.” (திருக்குர்ஆன்: 3:45-51)

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரர்களையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (திருக்குர்ஆன்: 5:110,116,117)

நாம் மேலே எடுத்துத் தந்துள்ள வசனங்களைப்போல் அனேக வசனங்களைத் திருமறையில் காணலாம். இந்த வசனங்கள் அனைத்தும் நபி ஈஸா (அலை) அவர்கள் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் மைந்தன் என்றோ கூறவில்லை என்றே தெளிவுபடுத்துகின்றன. அவர் தன்னை இறைவனின் தூதர் என்ற வகையில்தான் அறிமுகப்படுத்தினார். இதை திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம். அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (திருக்குர்ஆன்: 5:46)

“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள். ஆனால் மஸீஹ் கூறினார்; “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கி விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (திருக்குர்ஆன்: 5:72-75)

சான்றாக திருமறையின் 4:171,172 ஆகிய வசனங்களையும் காணவும்.

நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு விசித்திரமானது. அதுபோல்தான் அவர்களது முடிவும். அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தனது இறைப்பணியை தயக்கமின்றி தொடர்ந்து செய்து வந்தார்கள். நபி ஈஸா (அலை) அவர்கள் தனக்கு அருளப்பட்ட வேதத்தால் வலுப்பெற்று தனக்கு அருளப்பட்ட ஞானத்தால் உரம்பெற்று, அற்புதங்களால் மக்களைக் கவர்ந்து தன் பணியைத் தொடர்ந்தார்கள். எனினும் மிகச் சிலரே அவரை நம்பி ஏற்றுக் கொண்டார்கள். நபி ஈஸா (அலை) அவர்கள் பொறுமையில் மிகைத்தவர்கள் தான் என்றாலும் அவர்களால் அந்த இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட நயவஞ்சகத்தனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இஸ்ரவேலர்கள் இறைவனின் சட்டத்தை வார்த்தையளவில் பின்பற்றினார்களேயன்றி, அவர்கள் அதை செயலளவில் பின்பற்றிடவில்லை. இதில் அவர்கள் மிகவும் நயவஞ்சகமாக நடந்து கொண்டார்கள். இந்த நயவஞ்சகத்தனத்தை விட்டுவிடும்படி நபி ஈஸா (அலை) அவர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் எடுத்தெறியப்பட்டன. அவர்களை நிராகரித்தவர்கள் அவரை எதிர்த்தார்கள். இறுதியில் அவர்களை கொன்றுவிட ‘சதி’யும் செய்தனர். இறைத்தூதர்கள் சிலரைக் கொன்று விடுவதும், சிலரை நிராகரிப்பதும் அம்மக்களுக்கு வாடிக்கையான ஒரு வழக்கம். அவர்களின் இந்த பொது விதிக்கு நபி ஈஸா (அலை) அவர்களும் ஒரு விதிவிலக்கல்ல. அவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களைச் சிலுவையில் அறைந்து கொன்றிட முயற்சித்தார்கள். சிலுவையில் அறைந்து கொன்று விட்டதாகவே அவர்கள் நம்பவும் செய்தார்கள். இங்கே ஒரு பெரும் திருப்பம் இடம்பெற்றது.

நபி ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றிட உண்மையிலேயே ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஒருவர் உண்மையிலேயே சிலுவையில் அறைந்து கொள்ளவும்பட்டார். ஆனால் அது ஈஸா (அலை) அவர்கள் அல்ல. அவர்களது இடத்தில் சிலுவையில் அறையப்பட்டவர் வேறு யாரோ ஒருவர்.

நபி ஈஸா (அலை) அவர்களைப் பொறுத்தவரை இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். அவர்களை அந்தக் கொலை சதியிலிருந்து காப்பாற்றி வானத்திற்கு உயர்த்தினான். இதன் மூலம் அவர்கள் பூமியில் ஆற்றவந்த அரும்பணியையும் நிறைவு செய்தான் இறைவன். ஈஸா (அலை) அவர்கள் அந்தஸ்த்தில் உயர்த்தப்பட்டார்களா? அல்லது அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? அல்லது அவர்கள் இயற்கையான மரணத்தை அடைந்த பிறகு ‘ஆன்மா’ என்ற அளவில் மட்டும்தான் உயர்த்தப்பட்டார்களா? இந்தக் கேள்விகளுக்கும், முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் அதிகமாக தொடர்பில்லை. முஸ்லிம்களின் நம்பிக்கையை இந்த கேள்விகள் எந்த அளவிலும் பாதிப்பதில்லை. இது நம்பிக்கையின் (ஈமானின்) ஒரு பகுதியல்ல. ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு  முக்கியமானதும், ஒரு முஸ்லிமை கட்டுப்படுத்துவதும் இறைவன் என்ன வெளிப்படுத்துகின்றானோ அதுதான். இறைவன் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், அவர்களைத் தான் அழைத்துக் (உயர்த்திக்) கொண்டதாகவும் வெளிப்படுத்துகின்றான்.

நபி ஈஸா (அலை) அவர்களின் முடிவை இறைவன் திருமறையில் பின்வருமாறு விவரிக்கின்றான்:

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம். இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.

மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் ‘இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்’ என்று சொன்னோம். மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.

அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்.) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டு விட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.  (திருக்குர்ஆன்: 4:153-158)

சான்றாக திருமறையின் 3:52-59 வசனங்களைக் காணவும்.

நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் கொல்லப்பட்டார் என்ற வாதத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை, மறுக்கின்றது. அதுபோலவே இந்த வாதத்திற்கு வலுவாக தரப்படும் ஆதாரங்களையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. இறைவன் திருக்குர்ஆனில் கூறியிருப்பவற்றின் அடிப்படையிலேதான் முஸ்லிம்கள் ‘சிலுவையில் அறையப்பட்டார்கள்’ என்ற வாதத்தை மறுக்கின்றனர். பாவங்களுக்கு இரத்தப்பரிகாரம் செய்வதையும், ஒருவருடைய பாவத்திற்கு அடுத்தவர் பரிகாரம் செய்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலரும் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்பதை நம்பவே இல்லை. ‘பாஸிலிடான்ஸ்’ (BACILIDANS) என்பவர்கள் ஈஸா (அலை) அவர்களின் இடத்தில் வேறு யாரோ தான் சிலுவையில் அறையப்பட்டார்கள் என நம்பினார்கள். ‘டோசிடெய்’ (DOCEDEI) என்ற பிரிவினர் ஈஸா (அலை) அவர்களுக்குச் சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைப் போன்ற உடலைமைப்பு இருந்ததே இல்லை என்றும், அவர் பெற்றிருந்ததெல்லாம் மனிதனைப் போன்றதொரு தோற்றமேயாகும். ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டார், கொல்லப்பட்டார் என்பதெல்லாம் அந்தத் தோற்றத்தை வைத்துக் கொண்டு சொல்லப்படும் வாதங்களேயன்றி உண்மையல்ல. மார்சியோநிட் சுவிஷேசம் (The Marcionite Gospel 138 A.D) ஈஸா (அலை) அவர்கள் பிறந்தார்கள் என்பதையே மறுக்கின்றது. அவர் மனித உருவில் தோன்றினார் என்றேதான் கூறுகின்றது. (Gospel Of Barnabas) பர்னபாஸ் என்ற சுவிஷேசம் ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரே அறையப்பட்டார் எனக் கூறுகின்றது. (இதன் ஆங்கில மொழியாக்கம் வியன்னாவின் அரசு நூல் நிலையத்தில் கிடைக்கும்.)

நபி ஈஸா (அலை) அவர்களின் முடிவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் அவர் பிறந்தார் என்பதில் எவ்வளவு தெளிவாக இருக்கின்றார்களோ அவ்வளவு தெளிவாக இருக்கின்றார்கள், அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்பதிலும். நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவுமில்லை, கொல்லப்படவுமில்லை என்றே முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இறைவன் ஈஸா (அலை) அவர்களை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதே முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை. இந்த முழு விஷயத்தையும் பொறுத்தவரை முஸ்லிம்களின் மனம் மிக்க அமைதியாகவும், தெளிவாகவுமே இருக்கின்றது. நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் திருக்குர்ஆன் முழுமையாக பதில் தந்து விட்டது.

நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்ற கருத்து எண்ணற்ற தவிர்க்க முடியாத பல வினாக்களை எழுப்பியுள்ளது. அவற்றில் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

1. கிறிஸ்தவர்கள் சொல்வதைப்போல் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் எனக்கொண்டால் அது இறைவனின் நீதி, அவனது அளப்பரிய கருணை, எல்லையில்லா சக்தி, அவனது பூரண அறிவு ஆகியவற்றிற்கு ஏற்புடையதாக அமையுமா?

2. ஈஸா (அலை) அவர்கள் ஏளனமான முறையில் சிலுவையில் அறையப்பட்டுக் கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்று நம்புவது இறைவனின் கருணைக்கும், அவனது அறிவுக்கும் பொருந்திப் போவதாக இருக்கின்றதா?

3. ஒருவருடைய பாவங்களுக்காக இன்னொருவரைப் பரிகாரம் காணச்செய்வது, இறைவனுக்கு முறையாகுமா? ஒரு பாவத்தோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒருவரை அந்த பாவத்திற்கு பரிகாரம் காண வைப்பது இறை நியதிக்கு  உகந்ததாகுமா?

4. (இறைவன் தன்னை நம்பியவர்களை பாதுகாப்பேன் என சாதாரணமாக அறிவிக்கக் காண்கின்றோம்) தனது தூதரை எதிரிகள் சிலுவையில் அறைவதை அவன் பாதுகாக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் என நம்புவது அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றியதாகுமா? தன் வாக்குறுதியை காப்பாற்றியதற்கான முன்மாதிரியாக இதைக்கொள்ள முடியுமா?

5. மன்னிப்பதை தனது மாண்புகளில் ஒன்றாகப் பெற்ற இறைவன், கருணையே உருவான இறைவன், ஆதம் (அலை) அவர்கள் செய்த (முதல்) பாவத்தை மன்னிக்கவில்லை, ஈஸா (அலை) அவர்கள் வரும்வரை அவன் காத்திருந்தான் என நம்புவது முறையாகுமா? ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததியினரையும் ஈஸா (அலை) அவர்கள் வரும்வரை குழப்பத்தில் தான் விட்டிருந்தானா? ஈஸா (அலை) அவர்கள் வந்து இரத்தப்பரிகாரம் செய்திடும்வரை அவர்கள் மறக்கப்பட்டா கிடந்தார்கள்?

6. ஆரம்பகால கிரேக்கர்கள், ரோமர்கள், இந்தியர்கள், பாரசீகர்கள் இன்னும் இவர்களைப் போன்றவர்களின் கொள்கைகளிலன்றி வேறு எந்த மதத்திலாவது சிலுவையில் அறையப்பட்டதும், இரத்தப் பரிகாரம் செய்யப்பட்டதும் இடம் பெற்றிருக்கின்றனவா?

பாச்சுஸ் (Bacchus) அப்பல்லோ (Appollo) அடோனிஸ் (Adonis) ஹோரஸ் (Horus)இன்னும் இவை போன்ற புனைந்துரைக்கப்பட்ட பொய்க் கடவுளர்களைத் தவிர உண்மையில் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பின் ‘அற்புதம்’ போன்றதொரு பிறப்பை எங்கேனும் காண முடியுமா?

7. ’அகிலத்தின் ஆதியும் அந்தமும் நானே’ என்றும், ’நான் என்னுடைய இரத்தத்தைக் கொண்டு மனித இனத்தைக் காப்பாற்ற வந்தேன்’ பாச்சுஸ் மொழிந்ததாக புனையப்பட்ட வார்த்தைகளையும், ஈஸா (அலை) அவர்கள் மொழிந்ததாகக் கூறப்படும் வார்த்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்திடும் போதாவது உண்மை புலப்படவில்லையா?

பாச்சுஸ் பகர்ந்ததாகப் பசப்பப்படும் வார்த்தைகளுக்கும், ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக கூறப்படும் வார்த்தைகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைப் பார்த்த பின்னராவது  உண்மையை ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றவில்லையா?

8. ரோமர்களுக்கு எதிராக ஈஸா (அலை) என்ன செய்தார்கள்? ரோமர்களின் ஆதிக்கத்திற்கு அவர் ஒரு அபாயமாக இருக்கவில்லையே! இன்னும் சொல்வதானால் அவர்கள் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையே செய்தார்கள். அவர்கள் தன்னை பின்பற்றியவர்களிடம் சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள். இறைவனுக்கு சொந்தமானதை இறைவனுக்குக் கொடுங்கள் என்றே போதித்தார். அவர் அமைதியாகத்தான் தன்னுடைய போதனைகளை வழங்கினார். ரோம் நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் அவர் ரோமர்களுக்கு பெருமளவில் உதவி செய்தவர். பின்னர் ஏன் அவர்கள் அத்தகையதொரு சிறந்த குடிமகனை, நல்ல உதவியாளரை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும்?

9. பைலேட் (PILATE) என்ற ரோம ஆளுனரின் குணநலன்கள் எல்லோரும் அறிந்த ஒன்றே. அப்போது இருந்த யூதர்கள் அவரை எதிர்த்து ரோமில் முறையிட்டபோது அவர் அந்த யூதர்களோடு சுமூகமான முறையில் நடந்து கொண்டாரா? ஜூடாவில் அவர் நடத்திய ஆட்சி அவரது யூத வெறுப்பினை வெளிப்படுத்தவில்லையா? அவர் லஞ்சம் வாங்குபவராக இருக்கவில்லையா? அப்படியிருக்க அவர் தன்னுடைய வெறுப்பிற்கு ஆளானவர்களின் முறையீட்டை எப்படி உடனே நிறைவேற்றினார்?   ஜோசப் போன்றவர்கள் தந்த லஞ்சங்களை அவர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? ‘லூக்’ தருகின்ற தகவல்களின்படி இந்த ஜோசப் மிகைத்த வசதி படைத்தவர். ஈஸா (அலை) அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். அத்துடன் ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் அறைந்திட வேண்டும் என்ற ஆலோசனை எழுந்தபோது அதை வன்மையாக கண்டித்தவர். கூடாது என மறுத்தவர். ஆலோசனை வழங்கும் அந்தஸ்தில் இருந்தவர். ஆலோசனை அவையில் தான் விரும்பியதை சாதிக்கமுடியாத அவர் லஞ்சம் வாங்கும் பழக்கமுடைய ஆளுனரை லஞ்சம் தந்து சரிகட்ட முயலவில்லையா?

10. எத்தனைச் சீடர்கள் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதை நேரடியாகப் பார்த்தார்கள்? அவர்கள் அதுகண்டு செய்தது என்ன? அத்தனை சீடர்களும் ஈஸா (அலை) அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என மேத்யூ (Mathew) கூறுவது (26:56) உண்மையா? அப்படிப்பட்ட ஒரு பெரிய ’குரு’வின் சீடர்கள் அப்படித்தான் துன்பம் வந்திடும்போது துறந்திடுவார்களா?  அவர்கள் காட்டிய ஈடுபாட்டின் அளவு அவ்வளவுதானா? சிலுவையில் அறைதல் அரங்கேற்றமானபோது ஜான் மட்டும்தான் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால்! அவர் எவ்வளவு நேரம் அங்கே இருந்தார்? அன்றைய நாட்களில் சிலுவையில் அறையப்பட்டதொரு மனிதன் அதில் உயிர் நீத்திட எவ்வளவு நேரமானது? நம்பத்தகுந்த வரலாற்று சான்றுகளின்படி சேம்பர் கலைக்களஞ்சியம்*a தரும் தகவல்களின்படி சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதன் மரித்திட வழக்கமாக சில நாட்களாகும். அப்படியிருக்க ஈஸா (அலை) அவர்கள் மட்டும் சில நாட்களாக அல்லாமல் சில மணி நேரங்களிலேயே எப்படி இறந்தார்கள்? அவர்களுடைய மற்ற இரண்டு சீடர்களும் உயிருடன் இருக்க அவர்கள் மட்டும் ஏன் ‘இறந்தார்கள்’ சிலுவையில் அறையப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அந்த மூன்று மணிநேரமும் அந்தப் பெரும் நிலம் முழுவதையும் மூடியிருந்த இருளைப்பற்றிய கருத்தென்ன?*b இருள் மண்டிக்கிடந்த அந்த மூன்று மணி நேரங்களில் அந்த சிலுவையில் ‘ஆள்மாறாட்டம்’ நடந்ததா? அப்படி இல்லையென்று எவ்வாறு மறுப்பது?

*a (Seethe Article On The Cross, The Chambers Encyclopaedia, 1950.)

*b (Mathlw 27:45, Mark 15:33 Luke 23:44)

11. சிலுவையில் அறைவதற்காக ஈஸா (அலை) அவர்களை சிறைபிடிக்க வந்த ரோமநாட்டு வீரர்கள் ஈஸா (அலை) அவர்களோடு எத்தனை நாட்கள் தொடர்புக் கொண்டிருந்தார்கள்? எந்த அளவிற்கு அவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களைப் பற்றித் தெரியும்? அவர்கள் சரியான ஆளைத்தான் அழைத்து வந்தார்கள் என்பதில் அவர்கள் எந்த அளவிற்கு தெளிவுள்ளவர்களாக இருந்தார்கள்?  அவர்கள் கைது பண்ணபோய் இருந்தபோது ஈஸா (அலை) அவர்களை உண்மையிலேயே அடையாளம் கண்டுகொண்டார்களா? அவர்களை அடையாளங்கண்டு கொள்வதில் அவர்கள் ஏதேனும் தனிக்கவனம் செலுத்தினார்களா? பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில், அதே நேரத்தில் விபரம் நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் கிளர்ந்தெழுவார்கள் என்ற பதற்றம் நிலைபெற்றிருந்த நேரத்தில் அந்த வீரர்கள் ஈஸா (அலை) அவர்களை அடையாளம் காண்பதில் தனிக்கவனம் செலுத்திடும் அவகாசமோ, அக்கறையோ இருந்ததா?

12. ஈஸா (அலை) அவர்களைப் போன்றதொரு இறைத்தூதர் (தீர்க்கமான ஐந்து இறைத்தூதர்களுள் ஒருவரான ஈஸா (அலை) அவர்கள்) சிலுவையில் இருந்துகொண்டு, இறைவனோடு பேசியதாகக் கூறப்படுவது போன்ற வார்த்தைகளால் பேசியிருப்பார்களா? இதை ஒரு உண்மையான ‘நம்பிக்கையாளர்’ நம்பிடத்தான் முடியுமா? சோதனைகள் வந்து வாட்டிடும்போது வேதனையும், விரக்தியும் நிறைந்த தொனியில் ஒரு தீர்க்கமான இறைத்தூதர் பேசிடுவார் என எதிர்பார்த்திட முடியுமா? ஈஸா (அலை) அவர்களைப் போன்றதொரு இறைத்தூதர் “இறைவன் என்னைக் கைவிட்டுவிட்டான்” எனக் கூறுவார் என்பதை கற்பனை செய்துகூடப் பார்த்திட முடியுமா? வேதனைகள் வாட்டிடும்போது இறைவனை எப்படி அணுகிட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?

13. கருணை நிறைந்த இறைவன், மன்னிப்பதில் மிகைத்து நிற்கும் இறைவன், எல்லா வலிமையும் ஒருங்கே நிறைந்த இறைவன் சிலுவையில் அறைவது போன்ற பெரும் ஏளனங்களுக்கு ஆளாகிய பின்னர்தான், தான் படைத்த மனிதனின் பாவங்களை மன்னிப்பானா? சாதாரண மனிதர்களுக்கே இது பொருந்தாதபோது ஈஸா (அலை) அவர்களைப் போன்றதொரு இறைத்தூதருக்கு இது எவ்வாறு பொருந்தும்? இறைவனுக்காக அவனது பணியிலேயே தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்ட இறைத்தூதருக்கு இறைவன் இப்படியொரு ஏளனமான முடிவை வைத்திடுவான் என எண்ணிப்பார்த்திட முடியுமா? இறைவன் கருணை, மன்னிப்பு, அன்பு இவற்றை இப்படித்தான் வெளிப்படுத்துவானா? இது இறைவனின் நியதிக்கு ஒத்துப்போவதாக இருக்கின்றதா?

அப்போதிருந்த சூழ்நிலைகள், ஆட்சியிலிருந்த ‘உலகியல்’ அதிகாரிகள், பொதுமக்களின் கிளர்ச்சி, இறைவனைப் பற்றியக் கொள்கை, மனிதனின் நிலை, வாழ்வின் நோக்கம், மதத்தின் நோக்கம் ஆகியவற்றை ஆராய்ந்திட முனைவோருக்கு நான் மேலே குறிப்பிட்டது போன்ற கேள்விகள் எழாமல் இருக்காது. நான் மேலே தந்துள்ள கேள்விகளுக்குத் திருப்திகரமான பதிலை கண்டறியும்வரை ‘நம்பிக்கை’க் கொண்ட ஒருவர் நிம்மதியாக இருந்திட முடியாது. ஆகவே ஆர்வமுடையோர் அனைவரும் இது குறித்துத் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பல பயக்கும்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதுபோன்ற வினாக்கள் எழுவதேயில்லை. இதுபோன்ற குழப்பங்கள் முஸ்லிம்களைப் பொறுத்தவரை முன்னுக்குப்பின் முரணானதாகும். ஏனெனில் நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்பதிலும், அவர்கள் இறைவனால் கண்ணியப்படுத்தப்ப்ட்டு உயர்த்தப்பட்டார்கள் என்பதிலும் உறுதியுடன் இருக்கின்றது.

கிறிஸ்தவர்களின் இலக்கியங்களில் ஈஸா (அலை) (ஏசுநாதர்) அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் சில சீடர்களுக்கு முன் தோன்றினார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு தோன்றியிருக்கலாம். ஆனால், இது இந்த விதத்திலேயும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குக் குறுக்கே நிற்பதில்லை. அவர்கள் அவ்வாறு தோன்றியது உண்மையானால் அவர்கள் எதிரிகளிடமிருந்து இறைவனின் கட்டளைப்படி மறைந்திருந்த பின்னர் தன்னுடைய சீடர்களின் முன் தோன்றி இருக்கலாம். அவர்களை மறைந்திருக்கும்படி இறைவன் கட்டளையிட்டது எதிரிகள் சதியிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று. ஈஸா (அலை) அவர்கள் எதிரிகளின் திட்டப்படி ஏளனப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்கள் என்பதைவிட, இறைவனின் திட்டப்படி எதிரிகளின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஈஸா (அலை) அவர்களின் உயர்வும், கண்ணியமும் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையிலிருந்து எழுவதல்ல என்பதே முஸ்லிம்களின் கணிப்பு. ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்கள், அது மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைந்தது என்பதெல்லாம் அவரது உயர்வுக்கு வித்திடவில்லை.  கிறிஸ்தவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் இந்தக்கருத்து நிலையானதாக இருக்குமானால், ஈஸா (அலை) அவர்கள் பாவங்களைப் போக்கிட சிலுவையில் உயிர் நீத்தது வீணானது எனக்கூறிட தலைப்படுவர் பாமரர்கள். ஏனெனில் பாவங்கள் இன்னும் போக்கப்படவில்லை என்பதை எல்லோரும் நன்றாக அறிவர்.  ஈஸா (அலை) அவர்களைப்போல பலர் மனித இனத்தின் ஈடேற்றத்திற்கும், இன்னும் இதுபோன்ற காரியங்களுக்காகவும் உயிர் நீத்திருக்கின்றார்கள். இதனை ஜெர்மன் நாட்டிலே, கம்யூனிஸ நாடுகளிலே, ஐக்கிய நாடுகளின் சபையிலெ, மதத்தலைவர்களிலே, சுதந்திர வீரர்களிலே காணலாம். வன்முறைகளுக்கு ஆட்பட்டு உயிர் நீத்திடுவது ஒருவரை இறைத்தன்மைக்கு இட்டுச் செல்லுமேயானால் பின்னர் மனிதர்களிலே ஆயிரக்காணக்கான ஆண்டவர்கள் இருப்பதாகக் கொண்டாக வேண்டும். இந்த அடிப்படையில் அடுத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு ஈஸா (அலை) அவர்களை மட்டும் இறைவன் என்ற நிலைக்கு உயர்த்துவது எதேச்சையானதொரு செயலாகும்.

இங்கேயும் முஸ்லிம்கள் எந்தக் குழப்பத்திலேயும் இல்லை. முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை தன் தூதராக தேர்ந்தெடுத்து தனது வார்த்தைகளின் மூலம் கண்ணியப்படுத்தினான் என நம்புகின்றார்கள். இதனாலேயே நபி ஈஸா (அலை) கண்ணியத்திற்கும், உயர்வுக்கும் ஆளானார்கள் எனவும் நம்புகின்றார்கள். அத்துடன் ஈஸா (அலை) அவர்கள், இறை வெளிப்பாடுகளின் மூலம் கண்ணியப்படுத்தப்பட்டார்கள். இறைவனின் தூதை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தவர்கள் என்ற முறையிலே கண்ணியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் ஒழுக்க பலமுள்ள ஒரு இறைத்தூதர். அவர்கள் தன்னுடைய பணியை நிறைவேற்றுவதில் அகத்திலும், புறத்திலும், தூய்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டார்கள். அவர்கள் அநீதி, நயவஞ்சகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடினார்கள். பிறக்கும்போது இறைவனால் கண்ணியப்படுத்தட்டதொரு விதத்திலேயே பிறந்தார்கள். அதுபோலதான் இறைவன் அவர்களை உயர்த்திக் கொண்டபோதும் கண்ணியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களுக்கு ஒரு தெளிவான அத்தாட்சி. இறைக் கருணையின் வெளிப்பாடு. அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!.

நான் இங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த பொருள் குறித்து திருக்குர்ஆன் கூறும் அத்தனை வசனங்களையும் விவாதித்திட இயலவில்லை. இங்கே நான் தந்திருப்பது அடிப்படை பகுதிகள் தான். வாசகர்கள் இதில் திருக்குர்ஆன் கூறும் கருத்தை ஆழ்ந்து சிந்தித்திட வேண்டுகிறேன். அவர்கள் திருக்குர்ஆன் இது குறித்துக் கூறும் கருத்துக்களை கண்டறிய துணை செய்யும் பொருட்டு திருமறை வசனங்களின் பட்டியலைக் கீழே தருகின்றேன்.

                                                  திருக்குர்ஆன்

அத்தியாயம்                                                                   வசனங்கள்

     2                                                                                       87, 136, 253.
     3                                                                                       42-59, 84.
     4                                                                                       156-159, 171-172.
     5                                                                                       17, 46, 72, 75, 78, 110-118.
     6                                                                                       85.
     9                                                                                       30, 31.
    19                                                                                      1-40.
    23                                                                                      50.
    33                                                                                      7.
    42                                                                                     13.
    43                                                                                     57-65.
    57                                                                                     27.
    61                                                                                     6, 14.   

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.