அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை.
இன்னும் முஸ்லிம்கள் வென்ற பல இடங்களில் அங்குள்ள மக்கள் முஸ்லிம்களை வரவேற்றதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களோடு சேர்ந்துகொண்டு அநீதியாளர்களை எதிர்த்துப் போராடவும் செய்தார்கள். அந்த மக்களுக்கு முஸ்லிம்கள் தந்த சுதந்திரம், அவர்களின் பொருளாதார வளத்தில் காட்டிய ஆர்வம் இவைகளையெல்லாம் படித்துப் பார்த்த வரலாற்று விமர்சகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையெல்லாம் அவர்கள் மறைத்ததன் காரணம் ஏற்கனவே அவர்களின் இதயத்தில் குடியேறி கோலோச்சி வந்த காட்புணர்வேயாகும்.

இங்கே நாம் குறிப்பிட்ட நோக்கத்திற்காக இப்படிக் கூறுகின்றோம் என்பதல்ல. அல்லது நாம் சில அவசர முடிவுகளுக்கு வந்து விட்டோம் என்பதுமல்ல. போர்கள் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை திரித்துக்கூறி வருபவர்கள் தங்களுடை கருத்தை மறுபரிசீலனைச் செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர்கள் இதை மறுமுறை ஆராய்ந்து பார்த்திட வேண்டியது அவசியமுமாகும். அப்படி அவர்கள் இந்த ஆராய்ச்சியில் இறங்கிடுவார்களேயானால் அது மிகவும் உற்சாகம் தருவதாகவும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும்.

மேலை நாட்டினரும், மேலை நாட்டினரைப் போன்ற மனநிலையை வளர்த்துக் கொண்டுள்ள ஏனைய நாட்டவர்களும், இதனை தற்போது உலக நாடுகளில் நிலவும் நிலவரத்தை மனதிற்கொண்டு ஆராய்ந்தால் அவர்கள் இன்னும் பல உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

4. முஸ்லிம்கள் வெளி உலகங்களோடு நடத்திய போர்கள் அத்தனைக்கும் காரணம் அவர்களின் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே என்று கூறுவோரின் கருத்துக்களையும் நாம் இங்கே கவனத்தில் கொண்டாக வேண்டும். தங்களுடைய கருத்துக்களில் அவர்கள் முழுமையாக நம்பிக்கைக் கொண்டவர்கள் போல் தோன்றினாலும், அவர்கள் உண்மையைக் கண்டுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. முஸ்லிம்கள் அரேபியாவின் எல்லைகளைக் கடந்து வெளியுலகத்தோடு தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள வெளியே வந்தது, பொருளாதார நெருக்கடிகள் தான் என்பதை அவர்கள் உண்மையாகவே நம்புகின்றார்களா? அன்று அரேபியர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தேடிக்கொள்ள முடியவில்லை என்பதை அவர்கள் எந்த அடிப்படையில் நம்புகிறார்கள்? அரேபியர்கள் தங்களுக்கிருந்த பாலைவனச் சோலைகள், வியாபாரத் தொடர்புகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் மூலம் தங்களுக்குத் தேவையானவற்றை விட அதிகமான பொருளாதார வளத்தைப் பெற்றே இருந்தார்கள்.

பொருளாதாரப் பேராசைகளே காரணம் என வாதிடுவோர், முஸ்லிம்கள் போர்களின் மூலம் கவர்ந்து கொண்ட பொருள்கள் எவ்வளவு? எவ்வளவு பொருள்களை அவர்கள் தங்களுக்கென சுருட்டிக் கொண்டார்கள்? எவ்வளவு பொருள்களை தாங்கள் வெற்றிக் கொண்ட மக்களுக்காக செலவிட்டார்கள்? எவ்வளவு பொருள்களை அவர்கள் மதீனாவிற்கோ, கெய்ரோவிற்கோ, பாக்தாத்திற்கோ அனுப்பினார்கள்? இவை பற்றிய விபரங்கள் அல்லது தகவல்கள் எதையேனும் இவர்கள் சேகரித்துள்ளார்களா? இஸ்லாம் வெற்றி கொண்ட இடங்களில் இஸ்லாம் செல்வதற்கு முன்னிருந்த பொருளாதார நிலையென்ன? இந்தத் தகவல்களை சேகரித்த பின்னர்தான் அவர்கள், முஸ்லிம்கள் பொருளாதார ஆசைகளால் உந்தப்பட்டவர்களே என்ற முடிவுக்கு வந்தார்களா? முஸ்லிம்கள் தாங்கள் மேற்கொண்ட வியாபாரங்களில் எங்கேயாவது தாங்கள் முதலீடு செய்ததைவிட அதிகமாக எடுத்துச் சென்றார்கள் என்பதற்கோ, அவர்கள் கொடுத்ததை எடுத்துக் கொண்டதே அதிகம் என்பதற்கோ ஏதேனும் நம்பகரமான தகவல்களை வைத்திருக்கின்றார்களா? அல்லது, வெற்றி கொண்ட நாடுகளிலிருந்து ஏதேனும் வரிகளையோ, திறைகளையோ மதீனாவிலிருந்த ஆட்சியாளர்கள் பெற்றார்கள் என்பதற்கு இவர்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அந்த ஆட்சியாளர்கள் பெற்ற திறைப்பொருள் எவ்வளவு? அப்படியே பெற்றிருந்தாலும் அந்தத் தொகை அவர்கள் பெற்றிருந்த இழப்புக்களுக்கு ஈடாக இருந்தனவா? அந்தப் பொருட்கள் முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவனவாக இருந்தனவா? இஸ்லாம் பரவிய இடங்களில் வாழ்ந்த மக்களுக்காக முஸ்லிம்கள் செலவிட்டத் தொகையில் அரபு ஆட்சியாளர்களுக்குஏதாவது சிறப்புரிமைத் தரப்பட்டிருந்ததா? இதற்கான ஆதாரங்கள் ஏதேனும் அவர்கள் கையில் உண்டா? முடிவாக அரேபியா அப்போது ஒரு பெரிய ஜனத்தொகைப் பெருக்கத்தை எதிர் நோக்கியதா? அதனால்தான் அவர்கள் பொருள் தேட வெளியிடங்களுக்குப் புறப்பட்டார்களா?

முஸ்லிம்கள் பொருள் சேர்த்திடத்தான் முஸ்லிம் அல்லாதவர்களோடு தொடர்புக் கொண்டார்கள் என்ற கருத்து உண்மை நிறைந்ததைப் போலவும், அனுதாபத்திற்குரியது போலவும் தோன்றினாலும் அதில் உண்மை எள்ளளவும் இல்லை. இந்தக் கருத்து முழுமையானதுமல்ல, திருப்திகரமானதுமல்ல. இது குறித்து ஆராய்ச்சி செய்திட வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. இந்த ஆராய்ச்சிகளை முடித்திடும்வரை எந்த வரலாற்று ஆசிரியருக்கும் இதுகுறித்து அவதூறுகளை பரப்பிட எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் தங்களது யூகங்களையும், அனுமானங்களையும் தீர்க்கமானவை எனக்கூறிட உரிமை உடையவர்களாக மாட்டார்கள்.

இஸ்லாம், வரலாற்று விமர்சகர்களே! உண்மையை உண்மைக்காகவே தேடிட, தேடியதை தெளிவற்றவர்களுக்குத் தெரியப்படுத்திட ஓடோடி வாருங்கள் என அழைத்த வண்ணம் இருக்கின்றது.

5. முஸ்லிம்கள் வெளி உலகத்தோடு தொடர்புக் கொண்டதெல்லாம் அவர்கள் கொள்ளைப் பொருட்கள் மீது கொண்ட ஆசையினால் தான் எனப் பகர்ந்திடுவோரது கருத்துக்களை அவ்வளவு பெரிதுபடுத்துவதகில்லை. இந்தக் கருத்துக்கள் மிகவும் சாதாரணமானது. வாடிக்கையாக முஸ்லிம்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளாகும். சிலர் மேற்கொண்டிடும் குறுக்கு வழிகளில் இதுவும் ஒன்றாகும். சில நுட்பமான பிரச்சினைகளிலிருந்தும், மேற்கொள்ள வேண்டிய சில ஆராய்ச்சிகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ள “அறிஞர்கள்” மேற்கொள்ளும் குறுக்கு வழிகளில் இதுவும் ஒன்று. உண்மைக்கும் இந்தக் கருத்துக்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகமானதாகும்.

இதற்கு முந்திய விவாதத்தில் (குறிப்பு 3ல்) நாம் கேட்ட கேள்விகளை இங்கேயும் திரும்பக் கேட்கலாம். முஸ்லிம்கள் கவர்ந்து சென்ற கொள்ளைப் பொருட்கள் எவ்வளவு? இஸ்லாத்தைப் பரப்பிய இடங்களிலிருந்து அவர்கள் அரேபியாவை நோக்கி அனுப்பிய பொருட்கள் எவ்வளவு? எத்தனை இஸ்லாமிய வீரர்கள் கொள்ளைப் பொருட்களோடு வீடு திரும்பினார்கள்? அந்த முஸ்லிம்கள் இஸ்லாத்திற்காக ஏற்றுக்கொண்ட துன்பங்களும் துயரங்களும் அதிகமில்லையா? இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே குற்றத்திற்காக அவர்களின் உயிர்களும் உடைமைகளும் சூறையாடப்படவில்லையா? உலகியல் இலாபங்கள் சிலவற்றை மட்டும் அவர்கள் கவனத்தில் கொண்டிருந்தால் அத்தனை இடறுகளையும், இழப்புக்களையும் தாங்கி அவ்வளவு தூரம் இஸ்லாத்தைப் பரப்பி இருக்க முடியுமா?

நாம் இங்கே சில வினாக்களை எடுத்து வைப்பதெல்லாம் அந்த வரலாற்று வல்லுனர்கள் இது குறித்து மிக கவனமானதொரு சர்ச்சையை – ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதற்குத்தான். எதிரிகள் முஸ்லிம்கள் மீது இழைத்த அநீதிகள் முஸ்லிம்கள் பெற்ற பொருட்களைவிட எத்தனையோ மடங்கு அதிகம்.

வரலாற்றினை வரைந்திட பேனா பிடிப்பவர்கள் தாங்கள் மக்களுக்குத் தருகின்ற தகவல்கள் உண்மையானவையா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடுத்தியப் பின்னரே தங்களது பேனாக்களை ஓட்ட வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என எழுதுவதெல்லாம் வரலாறாகி விட முடியாது. நமக்கு இலாபம் தேடித்தராவிட்டாலும் உண்மை உண்மையே!

நாம் எடுத்து வைக்கின்ற இந்த உண்மையான விவாதத்தை வரலாற்று வித்தகர்களே உண்மையை தேட வாருங்கள் என்று விடுக்கின்ற அழைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ, இஸ்லாம் அமைதியை நாடுகின்ற – நிலைநாட்டுகின்ற – மதம் என்பது மட்டும் உண்மை. அமைதி, சாந்தி, சமாதானம் ஆகியவற்றைப் பெற்றிட இருக்கின்ற ஒரே உண்மையான மார்க்கம் இஸ்லாமேயாகும். அநியாயமாக போர் தொடுப்பது என்பது நிச்சயமாக இஸ்லாத்தின் போதனைகளுள் இல்லை. ஆக்கிரமிப்புகளை அது அனுமதிப்பதே இல்லை. இஸ்லாத்தைப் பரப்பிட பலம் ஒருபோதும் பிரயோகிக்கப்பட்டதே இல்லை. நிர்பந்தங்களாலோ, கட்டாயங்களாலோ இஸ்லாம் ஒருபோது விரிவடைந்ததில்லை, பரவியதில்லை. சுரண்டி வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் சகித்துக் கொண்டதில்லை. அதை இறைவன் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.

இஸ்லாத்தையும் அது வளர்ந்த வரலாற்றையும் திரித்துக் கூறுபவர்கள் இஸ்லாத்திற்கு ஏற்படுத்திடும் இழப்பைவிட தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்திடும் இழப்புகளே அதிகம். ஏனெனில் இஸ்லாம் இறைவைன் மார்க்கமாகும். இறை நெருக்கத்திற்கு இட்டுச்செல்லும் ஒரே நேரிய பாதை இஸ்லாமாகும். அது பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. மறுமை என்ற நிரந்தர வெற்றிக்கு இட்டுச்செல்லும் இறுதி மார்க்கமாக அது இருந்திடும். வரலாற்று விமர்சகர்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அவர்கள் வரலாற்றை ஊன்றிப் படிக்கட்டும். திருக்குர்ஆனையும், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் திரும்பத், திரும்பப் படிக்கட்டும். பலன் பெறட்டும்.

இஸ்லாம் பரவிய இடங்களில் பண்பாட்டு மறுமலர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டன என்பது உண்மையே. ஆனால் இவைகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் பொருளாதார இலாபத்தையே இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள் எனக் கூறிடுவது மிகப்பெரிய தவறாகும். சில போர்களில் எதிரிகள் விட்டுச்சென்ற முஸ்லிம்களிடம் சிக்கவே செய்தன. இதைப் பொருட்டாகக் காட்டி இஸ்லாம் அமைதிக்குப்பதில் போர்களையே விரும்புகின்றது என வாதிடுவது பொருந்தாத வாதமாகும். முஸ்லிம்கள் போர்களிலே கிடைக்கும் பொருள்களிலே அதிக ஆர்வம் காட்டினார்கள் எனக் கூறிடுவது அடிப்படையே இல்லாததாகும். இதற்கு இன்னும் தெளிவான பல விளக்கங்கள் இருக்கின்றன. இவைகளில் ஒன்று ‘பிராட்டஸ்டாண்ட்’ என்றொரு தனிப்பிரிவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்றாக புரியும். தற்கால முதலாளித்துவம் ஏற்படுவதற்கு ‘பிராட்டஸ்டாண்ட்’ உம் பல காரணங்களுல் ஒன்றாக இருந்தது. இதை வைத்துக் கொண்டு யாராவது ‘பிராட்டஸ்டாண்ட்’ என்றொரு பிரிவு ஏற்படுவதற்குக் காரணமே பொருளாதாரம் தான் என வாதிட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அல்லது இன்றைய முதலாளித்துவம் ‘பிராட்டஸ்டாண்ட்’ ஐயே சார்ந்திருக்கின்றது என்று சொன்னால் எப்படி பொருத்தமானதாகக் கொள்ள முடியும்?

இதேபோல் இஸ்லாம் பரவிய இடங்கள் பொருளாதாரத்தில் வளம் பெற்றதை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் பொருளாசையினாலேயே வேறு நாட்டவர்களுடன் தொடர்புக் கொண்டார்கள் என்பது முற்றிலும் முரணானதாகும்.

Leave a Reply