அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)

சுட்டெரிக்கும் பாலைப் பெருவெளியில் இருண்டு கிடந்த அரேபியாவிலிருந்து கிளர்ந்தெழுந்து ரோம், பாரசீகம், இன்னும் ஐரோப்பா போன்ற பெருநில வெளிகளிலெல்லாம் அறிவுக்கதிர் சிந்திய அரேபியர்களைப் போர்வெறியர்கள் என வர்ணிக்கின்ற ‘மேதை’களும் வாழத்தான் செய்கின்றார்கள். இந்த ‘மேதை’களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக தங்களது பேனா முனைகளை ஓட்டியபோது, ’இஸ்லாம் தந்த உற்சாகத்தால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் பரப்பினார்கள்’ என வரைந்து வைத்துள்ளனர்.

உண்மை உணர்வுள்ள பலர் இதை மறுத்துப் பதில் தந்துள்ளார்கள். அதாவது:

இஸ்லாம் வாளால் பரப்பிடக்கூடிய மதமல்ல. அதன் இயற்கை வன்முறைகளை அனுமதிக்கின்ற விதத்திலேயும் இல்லை.

முஸ்லிம்கள் தாங்கள் வாகை சூடிய மக்கள் மீது இஸ்லாத்தைப் பலவந்தமாகத் திணித்திருப்பார்களேயானால் அது இவ்வளவு காலம் நிலைத்திருந்திருக்காது. வாளுக்காக மக்கள் மதத்தை ஏற்றிருந்தால் சில காலத்துக்குள் அதை காற்றிலே பறக்க விட்டிருப்பார்கள்.

அதுபோலவே முஸ்லிம்கள் வாளால் மதம் பரப்பியிருந்தார்களேயானால் எப்படி அவர்கள் தங்களது ஆட்சி எல்லைக்குள் ஏக இறைவனை நிராகரித்தவர்களை வாழ விட்டிருப்பார்கள்.

வரலாறு சாட்சி பகருகின்றது. இஸ்லாம் பரவிய இடங்களிலெல்லாம் நிலைத்தே இருந்திருக்கின்றது. (ஸ்பெய்ன் நாட்டைத்தவிர, அதற்கு சில சிறப்புக் காரணங்கள் உண்டு.) முஸ்லிம்களின் ஆட்சி எல்லைக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கின்றார்கள்.

இஸ்லாத்தைப் போன்றதொரு மதத்தை யார் மீதாவது திணித்து அவரை ஒரு உண்மையான முஸ்லிமாக ஆக்கிடுவதென்பது இயலாத ஒரு காரியமேயாகும். போரிலே தோற்றுவிட்டதன் காரணமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் எப்படித் தன் நம்பிக்கையில் நேர்மையாக நிலைத்திருப்பார்கள். அவர்கள் எப்படி உண்மையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களைப்போல் சிறந்த முஸ்லிம்களாக விளங்க முடியும். ஆனால் இஸ்லாம் பரவிய இடங்களிலெல்லாம் முஸ்லிம்கள் ஆரம்ப முஸ்லிம்களைப் போலவே இறையச்சமிக்க நேர்மையான முஸ்லிம்களாகவே இருந்திருக்கின்றனர்.அவர்களும் இஸ்லாத்தைப் பரப்பிட தங்களது உயிரையும் தரத் தயாராக இருந்திருக்கின்றார்கள்.

தங்களை நுண்ணறிவு நிறைந்தவர்கள் என்றும், வரலாற்று விமர்சகர்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிலர், முற்றிலும் வித்தியாசமானதொரு விளக்கத்தைத் தருகின்றார்கள். இஸ்லாம் ‘வாளால் பரவியதே’ என வாதிக்க வந்த அவர்கள் பொருளாசையைக் காரணமாகக் காட்டினர். இந்த மெத்தப்படித்த ‘மேதாவிகள்’ முஸ்லிம்கள் வாள் தூக்கிப் போராடி இஸ்லாத்தைப் பரப்பிட முன்வந்தது தங்களது வறுமையைப் போக்கிடவே என வாதிட்டனர். வரண்ட பாலையில் வரண்டு வாடிக்கிடந்த முஸ்லிம்கள் தங்களது வாட்டம்போக்க வாள்தூக்கிப் போராடினர் என வரலாற்றை வரைகின்றனர். அரேபியர்கள் இஸ்லாத்தின் பெயரால் நடத்தியப் போர்கள் மதம் தந்த உணர்வாலும் அல்ல, ஆன்மீகத்தைப் பரப்பிடும் அவாவாலுமல்ல. அவைகள் முழுக்க முழுக்க பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்திடுவதற்காக மேற்கொள்ளப்பட்டவைகளே! எனக் கூறுகிறார்கள் ‘இந்த மேதாவிகள்’.

இந்த ‘மேதாவிகளின்’ கருத்துக்கள் பல விதத்தில் பொருள்படும். 1. முஸ்லிம்கள் எப்போதுமே பெரிய அளவில் தியாகங்கள் செய்திட துணிந்ததில்லை. அல்லது முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப்பின் வந்தவர்கள் இஸ்லாத்தை அறவே மறந்துவிட்டுத் தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதிலேயே குறியாக இருந்தனர். 2. இஸ்லாம் தன்னளவில் அரபு மக்களிடம் அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திட தூண்டிடும் வலுவினைப் பெற்றிருக்கவில்லை.

ஆனால் வரலாறு இவையெல்லாம் உண்மையல்ல என்பதைத் தெளிவாக விளக்குகின்றது. முஸ்லிம்கள் ஒருபோதும் பொருளாதாரத் தேவைகளைப் பொருட்டாகக் கொண்டதில்லை. அவர்கள் எல்லா நிலைகளிலேயும் ‘மறுமையில் வெற்றி’ என்பதையே இலக்காகக் கொண்டிருந்தனர் என்பதே உண்மை!.

இன்னும் சிலர் அன்று அரேபியாவில் முஸ்லிம்கள் நடத்தியப் போர்களுக்கு பிரிதொரு காரணத்தைக் கற்பிக்கின்றனர். அன்று அரேபியாவில் நடந்த போர்களுக்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் கொள்ளைப் பொருள்கள் மீது கொண்டிருந்த தனியாத ஆசையே எனக் கூறுகின்றனர். அவர்கள், முஸ்லிம்கள் கொண்டிருந்த இரத்த வெறியும், கொள்ளையடித்திட வேண்டும் என்ற வெறியும்தான் அன்று நடந்த போர்களின் காரணம் எனத் திரித்துக்கூறி திருப்தி கொள்கின்றனர். முஸ்லிம்களிடம் நல்லெண்ணங்கள் சற்றேனும் இருந்ததாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அதுபோலவே இஸ்லாத்தில் உயர்ந்த இலட்சியங்கள் எதுவும் இருந்ததாகவும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

இப்படி உண்மையை விட்டுவிட்டு தங்களுக்குப் பட்டதையெல்லாம் வரலாறு என வரையும் வல்லுனர்கள் சில நேரங்களில் இதுகுறித்து மிகப்பெரிய விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டதாகக் காட்டியிருக்கின்றார்கள். பல நேரங்களில் எதையும் பொருட்படுத்தாததைப்போல் காட்டியிருக்கின்றார்கள். உண்மை என்னவெனில் இவர்கள் யாரும் இதை முழுமையாகப் புரிந்து, உண்மையைக் கண்டறிந்து, அதை நேர்மையான முறையில் மக்களுக்குத் தந்திட எந்த முயற்சியையும் மேற்கொண்டதே இல்லை. திறந்த மனதுடன் இதை ஆரம்பம் முதல் முடிவுவரை ஆராய்ந்து உண்மையை வெளியிட வேண்டும் என்ற ஆர்வமோ, அதற்கான ஒழுக்கபலமோ அவர்களிடம் இருந்ததில்லை.

உண்மையைத் திரித்துக்கூறி, மக்களை தவறான பாதையில் இட்டுச்சென்றோம் என்பது வெளிச்சமாகும்போது இந்த வரலாற்று மேதைகள் சுமக்க வேண்டிய பழியின் சுமை எத்தன்மையானதாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராகவும், தங்களை பின்பற்றி வந்தவர்களுக்கு எதிராகவும் மிகப்பெரிய அநீதியொன்றை இழைத்திருக்கின்றோம் என்பது வெளிப்படும்போது இந்த வரலாற்று விற்பன்னர்கள் சுமக்க வேண்டிய பொறுப்பு எத்தன்மையதாக இருக்கும். ஆனால் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தங்களுக்குக் கிடைத்த தற்காலிக இலாபங்களோடு திருப்தி அடைந்து விட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற அத்தனைப் போர்கள் பற்றிய விளக்கங்களை இங்கே தந்திடுவதென்பது அத்துணை எளிதானதல்ல. எனினும் இந்த விஷயம் முழுவதையும் புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் சில முக்கியமான குறிப்புக்களை மட்டும் இங்கே தருகின்றோம்.

1. இந்த உலகிற்கு ஓர் அருட்கொடையாக அருளப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த நாடுகளின் ஆட்சியாளர்களை இஸ்லாத்தை ஏற்று இறைவனின் கருணைக்குரியவர்களாக ஆகிடுமாறு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அவர்கள் இந்த அழைப்பை நிராகரித்ததோடு அல்லாமல் முஹம்மத் (ஸல்) அவர்களை எள்ளி நகையாடினார்கள். அத்துடன் முஸ்லிம்கள் மீது பகிரங்கமாகப் போர் பிரகடனம் செய்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் ஆயுட்காலத்திலேயே ரோமர்களும் பாரசீகர்களும் பலமுறை முஸ்லிம்களின் எல்லைக்குள் புகுந்தனர். ஆகவே பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே முஸ்லிம்கள் மீது அண்டை நாட்டவர்களால் திணிக்கப்பட்ட போர்களிலே ஈடுபட்டிருந்தார்கள்.

இந்தப் போர்களும் பகையும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. பின்னைய தலைமுறையினர் ஈடுபட்ட போர்களை இந்த முதல் சம்பவங்களின் அடிப்படையிலேதான் ஆராய்ந்திட வேண்டும். அப்போது கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அத்தனை நாடுகளும் ‘ஸ்பெயின், பிரான்ஸ்’ போன்ற நாடுகள் உட்பட, ஓங்கி வளர்ந்து கொண்டிருந்த இஸ்லாத்திற்கு எதிராக ஒன்று திரண்டன. முஸ்லிம்கள் ஐரோப்பாவில் நிகழ்த்திய சாதனைகளையும் இந்தச் ‘சுற்றிப்பகை’ என்றப் பின்னணியிலேதான் பார்த்திட வேண்டும். ரோமன் ‘போப்’ என்ற மதத்தலைவரின் கீழ் எல்லா கிறிஸ்தவ நாடுகளும் இஸ்லாத்திற்கெதிராகத் திரண்டெழுந்தன. சிலுவை போர்களின்போது எல்லா கிறிஸ்தவ நாடுகளும் இஸ்லாத்திற்கெதிராக ஓரணியில் நின்றன என்ற உண்மையிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பகைமை இருபதாம் நூற்றாண்டின் முதற் கால்பகுதி வரை நீடித்திருந்தது.

ஆகவே ரோமர்கள் இஸ்லாத்திற்கெதிராக போர் பிரகடனம் செய்தபோது களத்திலே அவர்களை சந்திக்கும் உரிமை, தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு இல்லையா? எப்படியேனும் இவர்களை அழித்திட வேண்டுமென வரிந்து கட்டிக்கொண்டு ஒருசாரார் துணிந்து நின்றபோது முஸ்லிம்கள் அவர்களை முறையாகப் பொருந்தியது எவ்வாறு குற்றமாகும்? அது பாலஸ்தீனமாகட்டும், ஹங்கேரியாகட்டும், இத்தாலியாகட்டும். எங்கும் முஸ்லிம்கள் தங்களைக் காத்துக்கொள்ள களத்தில் இறங்கியது குற்றம் எனக் கொள்ள முடியாது. இதுதான் அவர்களை ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளை நோக்கி இழுத்துச் சென்றது. ரோமப் பேரரசர்களும், பாரசீகப் பேரரசர்களும் முஸ்லிம்களைச் சுற்றி சுற்றித் தாக்கிடும்போது முஸ்லிம்கள் மட்டுமே எப்படி வாள் தூக்காது வாளாதிருந்திட முடியும்? மண்ணிலே இருந்து இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் துடைத்தெறிந்திட வேண்டும் என கிளர்ந்து நின்றவர்களை முஸ்லிம்களாகிய அவர்கள் எவ்வாறு அனுமதித்துக் கொண்டிருக்க முடியும்?

கிறிஸ்தவம் ரோமிலே அடியெடுத்து வைத்தபோது ‘அதனை ரோம் நாட்டுக்குக் கொண்டு வந்தவர்களின் தலையைக் கொய்து அவைமுன் கொண்டுவாருங்கள்’ என்றொரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதே போன்றதொரு ஆணை ரோமிலிருந்து இன்னொரு முறை வெளியானது. முஹம்மத் (ஸல்) அவர்களின் தலையைக் கொய்து ரோம்நாட்டு கொழுமண்டபத்தில் முன்னே வைத்திட வேண்டுமென்பதே அந்த ஆணை. உலகத்தில் தாம் விரும்பாத யாரையாவது பார்க்க வேண்டும் என்று ரோம் நாட்டு ஏகாதிபதிகள் விரும்பினால் இதுபோன்ற ஆணைகளைத் தான் பிறப்பிப்பார்கள். இதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கும்போது, அந்த ஆணைகள் அரங்கேர ஆவனச் செய்திடும்போது, முஸ்லிம்கள் எப்படிக் கைகட்டி வாய்பொத்தி இருந்திட முடியும்?

எனினும் ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். பிந்திய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சில போர்களில், முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்றாலும் இஸ்லாத்திற்கும் அந்தப் போர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவைகள் இஸ்லாத்தைப் பரப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டவைகளுமல்ல. அவைகள் இடம் பெற்றதற்கான காரணம் தனிப்பட்ட முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதேயாகும். ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பேயாகும். அதை யார் செய்தாலும் அனுமதிக்க முடியாது. அது முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டாலும் சரி அல்லது முஸ்லிம்களால் தொடுக்கப்பட்டாலும் சரியே! ஆக்கிரமிப்பாளர்களை பொறுத்து இஸ்லாத்தின் தீர்ப்புத் தெரிந்தது. மாற்ற முடியாதது. ஆகவே அந்த பிந்திய நூற்றாண்டுகளில் ஏதேனும் ஆக்கிரமிப்பு இடம் பெற்றிருக்குமானால் அதை இஸ்லாம் நியாயப் படுத்துவதாகவுமில்லை, இறைவன் அதை ஏற்றுக் கொள்வதாகவுமில்லை.

2. நாம் முன்னே குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களில் எவரும் ஆரம்ப நூற்றாண்டுகளில் இருந்த சூழ்நிலைகளைப் புரிந்திட தயாராக இல்லை. அன்று, இன்று இருப்பதைப் போன்ற மக்கள் தொடர்புக் கருவிகள் எதுவும் இருந்ததில்லை. அச்சுக்கூடங்களோ, வானொலிகளோ, தொலைக்காட்சியகங்களோ இருந்ததில்லை. ஏன் முறையான அஞ்சல் போக்குவரத்துக்கள் கூட இருந்ததில்லை. பொதுமக்களைத் தொடர்புக் கொள்ள எந்த வழியும் இருந்ததில்லை. மக்களை நேரடியாகத் தொடர்புக் கொள்வதன்றி வேறுவழி இருந்ததில்லை. உயிர், உடைமைகள், கண்ணியம் ஆகியவற்றிற்கு எந்த மதிப்பும் இருந்ததில்லை. தனிமனிதர்களும் பலம் குன்றிய நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்பட்டன. அங்கே பேச்சு சுதந்திரம் இருந்ததே இல்லை. நல்ல இலட்சியங்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், பரவலாக இருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக புதிய கருத்துக்களைக் கொண்டு வந்தவர்களும் எதிர்ப்புகளையே சந்தித்திட வேண்டியதிருந்தது. கிரேக்கநாட்டு தத்துவமேதை சாக்ரடீஸ், கிருஸ்துவத்தை ரோம் நாட்டுக்கு கொண்டுவந்த முதல் கிறிஸ்தவர்கள், ஆரம்பகால முஸ்லிம்கள் இவர்களெல்லாம் வசைக்கும், பகைக்குமே ஆளானார்கள். ஆட்சியாளரைப் பார்த்துப் புதுமையான கருத்துக்களைச் சொன்னவர்கள் எவரும் உயிருடன் திரும்பியதில்லை.

இதைவிட கொடுமையான எதிர்ப்புக்களை அந்த அரபுநாட்டு ஆரம்ப முஸ்லிம்கள் எதிர் நோக்கினார்கள். அந்தக் கொடிய சூழ்நிலைக்கு உட்பட்டே அவர்கள் தங்களது புனிதமான கடமைகளை நிறைவேற்றிட வேண்டியதிருந்தது. அவர்கள் மனித இனம் முழுமைக்கும் சொந்தமான இரு இறைச்செய்தியைப் பெற்றிருந்தார்கள். அந்த நற்செய்தியை மனித இனத்திற்கு எடுத்துச் சொல்லிட வேண்டியது அவர்களின் கடமையாக இருந்தது. மனித இனத்தை அறியாமையிலிருந்து காப்பாற்றிடும் பெரும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அழகிய வாதங்களைக் கொண்டு நளினமான விதத்தில் மக்களை நேர்வழியின்பால் அழைத்திட வேண்டுமென திருக்குர்ஆன் அவர்களைப் பணிக்கின்றது. ஆனால் இறைவனின் அழைப்பைச் செவிமடுத்திடுவோர் அங்கே யாருமில்லை.

நிராகரித்தோரில் பலர் பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுக்களைக் கேட்பதற்குக்கூட மறுத்தார்கள். தாங்கள் அவரது பேச்சைக் கவனித்தால் அதன்பால் அதன்பால் கவரப்பட்டு விடுவோமென்ற அச்சமே காரணம். இஸ்லாம் அமைதியாக எடுத்து வைத்த இறைச்செய்தியை அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு எதிர்த்தார்கள். ஆரம்பத்தில் அரேபியாவில் முஸ்லிம்கள் பெற்ற அனுபவம் என்னவெனில் அமைதியான வழியே வெற்றி தருவதாகும். ஆனால் அந்த அமைதி எப்போது கிடைத்திடும் என்றால் அவர்கள் தங்களைக் காத்திடும் அளவுக்கு வலுப்பெற்றிருக்கும் போதுதான். பொதுவாக அமைதியும் அறவழியும் எப்போது பலன் தரும் என்றால் நாம் அடுத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றிடும் வலிவைப் பெற்றிருக்கும் போதுதான்.

முஸ்லிம்கள் இறைவனின் வழிகாட்டுதலை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிட வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் மக்கள் தொடர்புக் கருவிகள் ஏதும் அப்போதிருந்ததில்லை. ஆகவே மக்களை நேரில் சந்தித்துதான் அவர்கள் இறைச்செய்தியை எடுத்துச் சொல்லிட வேண்டியதிருந்தது. இதன் பொருள் அவர்கள் சில எல்லைகளைக் கடந்துதான் ஆகவேண்டும் என்பதாகும். இதை அவர்கள் தனித்தோ நிராயுதப்பாணியாகவோ நிறைவேற்றிட முடியாது. ஆகவே அவர்கள் தற்காப்பிற்குத் தயாராக சிறு கூட்டத்தினராகச் சென்றார்கள். அவர்கள் கூட்டங்கூட்டமாக சென்றார்களேயல்லாமல், போர்வீரர்களாகப் போருக்கு அணிவகுத்துச் சென்றவர்களல்ல. அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் சில நாடுகளில் தங்களது இறைத்தூதை எடுத்துச் சொல்ல சென்றிருக்கின்றனர். அதன் பிறகு அந்த நாடுகளில் என்ன நடந்தது என்பதைத்தான் ஆழ்ந்து கவனித்திட வேண்டும்.

பல இடங்களில் இறைத்தூதை எடுத்துச் சென்ற முஸ்லிம்கள் அன்போடு வரவேற்கப்பட்டார்கள் அந்த நாட்டு மக்களால். ஏனெனில் அவர்களை பாரசீகரும், ரோம் நாட்டவர்களும் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சில இடங்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருந்தவர்களோடு தங்களது அழைப்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதிருந்தது. எனினும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் பெரும்பான்மையோராக இருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களை நிர்பந்திக்கவில்லை. அவர்கள் இஸ்லாமிய வரியாகிய ஜகாத்தைப் போன்றதொரு வரியை தந்திட வேண்டுமென கோரப்பட்டார்கள். இந்த வரியை இஸ்லாத்தை ஏற்காத மக்களிடம் வசூலித்ததற்கான காரணம்:

(அ) இந்த வரியைத் தருபவர் தான் இஸ்லாத்தின் தூதை அறிந்திருந்தும் நிராகரித்தார் என்பதையும், அவ்வாறு அவர் நிராகரித்தது அவரது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலே தான் என்பதையும் நினைவுறுத்துவது முதற்காரணம்.

(ஆ) முஸ்லிம்கள், இந்த வரியைத் தருபவரை ஏனைய முஸ்லிம்களைப்போல பாதுகாத்திட வேண்டும் என்பது இரண்டாவது காரணம். அவர்களது உரிமைகளை ஏனைய முஸ்லிம்களின் உரிமைகளைப்போல பாதுகாத்திட வேண்டும். ஏனெனில் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஏற்படும் ஆபத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படும் என்பதாகும். ஆகவே முஸ்லிம்களைப் பாதுகாத்திட முஸ்லிமல்லாதவர்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும்.

(இ) இஸ்லாமிய சமுதாய அமைப்பிற்கு எல்லாப் பிரிவினரின் ஒத்துழைப்பும் தேவை. இந்த அடிப்படையில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பைப் போலவே முஸ்லிமல்லாதவர்களின் ஒத்துழைப்பும் தேவை. முஸ்லிம்கள் தங்கள் பங்காக மார்க்க வரியாம் ஜகாத்தைத் தருகின்றார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அதே ஒத்துழைப்பை வேறு பெயரில் தருகின்றார்கள்.

(ஈ) முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களிடம் எந்தப் பகைமையையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி படுத்திடவும், அவர்கள் எந்த நிலையிலேயும் தங்களது முஸ்லிம் தோழர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்திட மாட்டார்கள் என்பதை உறுதி படுத்துவதற்குமே அந்த வரி வசூலிக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசுக்கு தரப்பட வேண்டிய வரியை தர மறுப்பவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் உள்ளுக்குள்ளேயே பகையை வளர்க்கின்றார்கள் என்றும் பொருள்படும். அத்துடன் தங்களது நிலையையும் மோசமாக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பகைமை உணர்வோடு செயல்படுகின்றார்கள். இன்னும் பல தொல்லைகளை தோற்றுவிப்பார்கள். அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்குள் வந்தவர்களைவிட ஏற்கனவே இருப்பவர்களுக்குத்தான் அதிகம் தொல்லைகளைத்தர தயாராகின்றார்கள். அரசாங்கத்தை நடக்க விடாமல் தடுத்தார்கள். (வரி தர மறுப்பதன் மூலம்) ஒருநாடு என்ற அடிப்படையில் பார்த்தால் இது ஒரு தேசத்துரோகம், மனிதர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இது ஒரு ‘குறுமதி’யின் வெளிப்பாடு, சமுதாயம் என்ற அடிப்படையில் பார்த்தால் இது ஒரு ‘பொறுப்பற்ற’ செயல். பொதுவாகப் பார்க்குமிடத்து இது ஒரு அப்பட்டமான ‘ஆக்கிரமிப்பு’ . நடைமுறையில் இது களையப்பட வேண்டிய ஒன்று. இது சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான நன்மையை மனதிற்கொண்டு வேரருக்கப்பட வேண்டியதொரு செயலாகும். சமுதாயத்தின் நன்மை என்று வரும்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் நன்மையும் அடங்கும்.

இஸ்லாமிய எல்லைக்குள் வாழும் முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்பதோ நிராகரிப்பதோ அவர்களின் சொந்த விருப்பம். ஆனால் அவர்கள் பாதுகாப்பிற்காகவும், பராமரிப்பிற்காகவும் அரசுக்குத் தரவேண்டிய வரியைத் தந்துவிட வேண்டியது அவர்களின் கடமையாகும். அவ்வாறு அவர்கள் தரமறுத்து அரசு இயந்திரத்தை சிக்கலாக்கிடும்போது அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். அமைதியான வழிகள் அத்தனையையும் முறியடிக்கப்படும்போது தேவைப்பட்டால் அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டியதாகின்றது. இங்கேதான் அரசு பலத்தைப் பயன்படுத்துகின்றது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.