அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் தேவையில்லை. அதுபோலவே சிலரை முகஸ்துதி செய்திட வேண்டியதுமில்லை. சில, பலரைத் திருப்திபடுத்திட வேண்டியதுமில்லை. சிலரைச் சாடிட வேண்டியதுமில்லை. ஏனெனில் இஸ்லாம் இவை போன்றவற்றைச் சகித்துக் கொள்வதேயில்லை. இஸ்லாம் நம்மிடம் நேரிய எண்ணத்தையும், நேரிய செயல்களையும் எதிர்பார்க்கின்றது. துன்பங்கள் ஆயிரம் வரினும் அஞ்சாது நேர்மையைக் கடைபிடித்திட கட்டளையிடுகின்றது.

ஆகவே, இங்கே நமது நோக்கம் உண்மையை, உண்மைக்காகவே கடைபிடிப்பதும், அந்த உண்மையை உரியவர்கள் மனதில் பதியும்படி சொல்லி விடுவதுமேயாகும். பின்னர், இந்த உண்மையை செவிமடுப்போர் தாங்களாகவே ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும். இந்த உண்மையை அவர்கள் அறிவும், பொறுப்பும் நிறைந்தவர்கள் என்ற அளவிலேயே அணுகிடுவார்கள் என எதிர்பார்ப்போம்.

மேலைநாடுகளில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள், மேலைநாட்டுக் கலாச்சாரத்தையும், இலக்கியங்களையும் படித்த மக்கள் மேலைநாட்டினர் இஸ்லாத்தைப் பற்றிக் கூறியுள்ள சில அவதூறுகளைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

‘புனிதப்போர்’ [அறப்போர் – ’ஜிஹாத்’], ‘ஏசுவுக்கு எதிரான இஸ்லாம்’, ’பலதார மணம்’, ‘விவாகரத்து’, ‘இஸ்லாத்தில் பெண்கள் நிலை’ இவையும், இவை போன்றவற்றில் இஸ்லாத்தின் கருத்துக்களும் மேலை நாட்டவர்களால் அடிக்கடி திரித்துக் கூறப்பட்டு வருகின்றன. இவர்கள் தூற்றிய அவதூறுகளால் உண்மை நிலையை அறிந்திட முடியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் நிரபராதிக்களுக்காக இங்கே சில உண்மைகளை எடுத்துத் தருகின்றோம்.

1 – புனிதப்போர் (ஜிஹாத்)

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? முஸ்லிம்களின் வழிகாட்டி திருக்குர்ஆனா? அல்லது வாளா? முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் ஆசைக் கொண்டவர்களா? அதிகாரம், ஆட்சி, ஆதிக்கம் இவை இவர்களின் இலட்சியமா? பலர் இஸ்லாத்தில் வன்முறைகள் இருக்க முடியாது என எண்ணுகின்றனர். பலர் இஸ்லாம் வாளை நம்பி வாழுவதே எனக் கருதுகின்றனர். இன்னும் பலர் இவைக் குறித்துக்கொண்ட குழப்பம் இன்னும் தீரவில்லை. இவை குறித்து திருக்குர்ஆன் தரும் தெளிவு என்ன? முஹம்மத் (ஸல்) அவர்களின் புனிதமான வாழ்வு தரும் செயல்முறை விளக்கம் என்ன? உண்மையை உள்ளபடியே தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நேர்மையாளர்கள், உண்மையை நாமும் தெரிந்து கொண்டு ஏனையவர்களுக்கும் எடுத்துச் சொல்லிட வேண்டும் என்ற மனித மாண்பு நிறைந்தவர்களும் நிச்சயமாக இதனை ஊன்றிப் படித்திட வேண்டும். உண்மையை உண்மைக்காகத் தேடுபவர்கள் அனைவரும் இதனைப் படித்திடுவது கடமையாகும்.

அநீதி, அடக்குமுறை, மனிதனை மனிதன் அடக்கியாளும் ஆணவம், முறையற்ற ஆசைகள் இவைகள் இந்த உலகிலே இருந்திடும்வரை இந்த உலகில் போர்களும், போராட்டங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும் எனத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. விரும்புகின்றமோ இல்லையோ, மேலே சொன்னவைகள் இருந்திடும்வரை போர்களும், போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில் இது வாழ்வின் ஓர் உண்மை என்றே எண்ணப்படுகின்றது. இந்த உண்மை நமக்குப் புதிதாகத் தெரியலாம். ஆனால் மனித வரலாறு முழுவதும் வட்டார, மண்டல குழப்பங்களும் உலகளாவிய போர்களும் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது என்பது உண்மையில்லையா? உலக நாடுகள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று, தங்களுக்குத் தேவையானவற்றை போர்களின் மூலமும், ‘போர்’ என்ற மிரட்டல்கள் மூலமும் சாதித்துக் கொள்வதில்லையா? இன்னும் உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் மக்கள் எப்போதும் போர் மூண்டு விடலாம் என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? வாழ்வின் உண்மை இவ்வாறு இருந்திடும்போது, இறைவன் இதனைப் புறக்கணித்திட முடியுமா? அல்லது திருக்குர்ஆன் இதற்கான வழிகாட்டுதல்களையும் பொது நியதிகளையும் தராமல் இருந்திட முடியுமா? நிச்சயமாக அவ்வாறு இருந்திட முடியாது. இதனால்தான் இஸ்லாம், அநீதியை அகற்றி நீதியை நிலைநாட்டிடவும், அடிமைத்தளைகளை அறுத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டிடவும், அமைதியை நிலைநாட்டிடவும் பெருவாரியான நேரங்களில் தற்காப்பிற்காவும் போர்களை அனுமதித்தது.

இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம், ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன்: 2:216)

…..(இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். (திருக்குர்ஆன்: 2:251)

…..மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 22:40)

போர்களை இஸ்லாம் அனுமதித்திருந்தாலும் ஆக்கிரமிப்புகளையும், ஆக்கிரமிப்புக்காகச் செய்யப்படும் போர்களையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதேபோல் இஸ்லாம் தன்னை ஆக்கிரமிக்க, ஆதிக்கம் செலுத்த முனைபவர்களையும் அனுமதிப்பதில்லை.

முஸ்லிம்கள் அடுத்தவர்களின் உரிமைகளில் தலையிடக் கூடாதெனவும், வலுச்சண்டைக்குப் போகக் கூடாதெனவும், பகைமைகள் வளர தாங்கள் காரணமாக இருந்திடக் கூடாதெனவும், போரைத் தூண்டும் எந்தச் செயலையும் அவர்கள் செய்திடக் கூடாதெனவும் இறைவனால் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். நாம் முன்னரே பார்த்த திருக்குர்ஆன் வசனங்களைப்போல் இன்னும் சில வசனங்கள் இதில் தெளிவு தருவதாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள். ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (திருக்குர்ஆன்: 2:190-193)

போர்கள் இஸ்லாத்தின் நோக்கமுமல்ல, அதேபோல் அவை முஸ்லிம்களின் வாழ்க்கையில் வாடிக்கையானவையுமல்ல. அமைதிக்கான முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்றபோது, வேறு வழியேயில்லை என்றாகும்போது, இறுதியாக மேற்கொள்ளப்படுபவையே போர்கள். இதுதான் போர்களைப் பற்றிய இஸ்லாத்தின் சாதாரணக் கொள்கையாகும்.

இஸ்லாம் அமைதியானதொரு மார்க்கமாகும். அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். இறைவனின் பெயர்களுள் ஒன்று ‘அமைதி’ என்பதாகும். முஸ்லிம்களின் நித்திய முகமனாகிய ஸலாம் ‘அமைதியைக்’ கொண்டே கூறப்படுவதாகும். சுவர்க்கம் என்பது அமைதியின் இருப்பிடமாகும். அமைதியே இஸ்லாத்தின் இயற்கையான குணமாகும். அதன் நோக்கம் மனித வாழ்க்கையில் அமைதியைப் பெற்றுத் தருவதாகும். அதன் சின்னமும் சிறப்பும் அமைதி என்பதேயாகும். மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் இஸ்லாம் சொல்லும் அமைதியை அனுபவித்திடும் உரிமையைப் பெற்றவை. அதுபோல் அமைதியே உருவான முஸ்லிம்களின் ஆதரவையும் பெற்றிடும் உரிமையைப் பெற்றவை. இதில் இன, நிற, நில வேற்றுமைகள் எதுவுமில்லை. ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் அதுபோது முஸ்லிம்கள் மீதோ இஸ்லாத்தின் மீதோ எந்த ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது.

முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களோடு அமைதியாக இருண்டும்போது அல்லது அவர்கள் இஸ்லாத்தோடு மோதாதிருந்திடும்போது அவர்களோடு எந்தக் காட்புணர்வையும் பாராட்டிடக் கூடாது. முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களோடு போர் தொடுக்க நிர்பந்திக்கின்ற விதத்தில் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. ஏனெனில் இஸ்லாம் வலுவான அடிப்படைகளைக் கொண்டதாக இல்லாதிருந்தால் அது இறைவனின் அங்கீகாரத்தைப் பெற்ற மார்க்கமாக இருந்திருக்காது. அதுபோலவே அது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கும் உதவி செய்வதாக இருந்திடாது.

இந்த உலகில் ஏதேனும் ஒரு மார்க்கம் அல்லது மதம் அல்லது சட்டம், மனிதர்களுக்கு முழுமையானச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றது என்றால் அது இஸ்லாம்தான். மார்க்கத்தில் நிர்பந்தங்களே கூடாது எனக் கூறியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இதைப் பொறுத்தவரை இஸ்லாம் பின்வருமாறு கூறுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 2:256)

இஸ்லாத்தை அடுத்தவர்களிடம் எடுத்துச் சொல்லிடுவதில் கூட, முஸ்லிம்கள் பலம் பிரயோகிக்கக் கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் எவ்வளவு அமைதியான வழிகளைப் பயன்படுத்திட முடியுமோ அவ்வளவு அமைதியான வழிகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இறைவன் சொல்கின்றான்:

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (திருக்குர்ஆன்: 16:125)

(விசுவாசிகளே!) நீங்கள் வேதத்தை உடையோர்களுடன் (தர்கிக்க நேரிட்டால்) (கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோருடன்) அழகான முறையிலன்றி (அவர்களுடன்) தர்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால், (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) “எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். எங்கள் ஆண்டவனும் உங்கள் ஆண்டவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிபட்டு நடக்கின்றோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன்: 29:46)

இப்போது இஸ்லாம், அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவமும் முதன்மையும் தருகின்றபோது, முஸ்லிம்கள் அமைத்திக்காகவே உழைக்கின்றவர்கள் என்கின்றபோது, இன்னும் திருக்குர்ஆன் அமைதியை இவ்வளவு தூரம் வலியுறுத்திடும்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏன் சில போர்களிலே ஈடுபட்டார்கள்? இதனை அவர்கள் தெளிவுபடுத்திட சில வரலாற்றுக் குறிப்புகளை இங்கே விவாதித்திட வேண்டும்.

இறைவனின் தூதை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லிட வேண்டும் என்ற பொறுப்பை முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டதும், ஒரு மக்கள் கூட்டத்தை அழைத்து தன்னிடம் சொல்லப்பட்ட தூதை எடுத்துச் சொன்னார்கள். சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த அந்த மக்களிடம் சிலை வணக்கத்தை விடுத்து உண்மையான ஏக இறைவனை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் முதன்முதலாக எடுத்து வைத்த அமைதியான, அறிவுபூர்வமான வாதத்தை அம்மக்கள் எள்ளி நகையாடினர். விமர்சித்தனர், பரிகசித்தனர். எனினும் அவர்கள் தனது முயற்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் மிகச்சிறிய அளவே வெற்றி பெற்றார்கள். வெளியில் பிரச்சாரம் செய்திட அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை தன்னுடைய குடும்பத்தின் அளவுக்குக் குறுக்கிட வேண்டியதாயிற்று. அவர்கள் தன்னுடைய உயிரையும், தன்னைப் பின்பற்றிய சிறு கூட்டத்தாருடைய உயிரையும் காப்பாற்றிட வேண்டுமேயானால் வெளியில் பிரச்சாரம் செய்திடக் கூடாதென அச்சுறுத்தப்பட்டார்.

அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை வெளியிலேயும் செய்திட வேண்டும் என இறைவனால் பணிக்கப்பட்டு, அதை செயல்படுத்த முனைந்தபோது எதிர்ப்புகள் இன்னும் அதிகமாயின. முஸ்லிம்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் எதிர்ப்புகள் வலுவாகவே முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. எதிர்த்தவர்கள் இறைத்தூதரின் அழைப்பை அடக்கிட எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்புக்கள் வலுக்க, வலுக்க முஸ்லிம்களும் முஹம்மத் (ஸல்) அவர்களும் துணிவாகவும், திடமாகவும் தங்களது பணியை நிறைவேற்றலாயினர். நம்பிக்கையாளர்களின் ஈமானை ஏளனம், ஏகடியம், வன்முறை, உடைமைகளைப் பறிமுதல் செய்தல் போன்றவையால் எதுவும் செய்திட முடியாத அந்த மக்கள், ஒரு பெரிய ஏற்பாட்டைச் செய்தார்கள். ஒரு “சமுதாயப் புறக்கணிப்பை” ஏற்பாடு செய்தார்கள். அதன்படி முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ வேண்டியவர்களானார்கள். அவர்கள் அங்காடிக்குச் சென்று பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. அதுபோலவே வியாபாரம் செய்திட முடியவில்லை. திருமணம் செய்திட முடியவில்லை. அடுத்தவர்களைத் தொடர்புக் கொண்டிட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது தூதை அடுத்தவர்களுக்குச் சொல்லிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

இத்தனை முயற்சிகளும் அந்த முஸ்லிம்களின் ஈமானை அணுவும் அசைத்திடவில்லை. பின்னர் எதிரிகளே அந்தப் புறக்கணிப்பை தாங்களாகவே கைவிட்டனர்.

சமுதாயப் புறக்கணிப்பு விலக்கப்பட்டதேயல்லாமல் எதிர்ப்புகளும் வன்முறைகளும் நின்றபாடில்லை. மாறாக எதிர்ப்புகளும் இன்னல்களும் அதிவேகமாக முடுக்கி விடப்பட்டன. முஸ்லிம்களை பொருத்தவரை அவை எந்த தடுமாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை.

முடிவாக எதிரிகள் ஒரு ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களையும், அவர்களது போதனைகளையும் வேரோடு கில்லி எறிய என்ன வழி என்பது அங்கே விவாதிக்கப்படுகின்றது. கூட்டத்தின் முடிவில் குலத்துக்கொருவர் என்ற வகையில் கூடி முஹம்மத் (ஸல்) அவர்களைப் படுக்கையிலேயே கொன்று விடுவது என்று முடிவு செய்யப்படுகின்றது. இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களின் பணியை அத்தோடு நிறுத்திட விழையவில்லை. ஆகவே இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களை மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குப்போய் இறைப்பணியைத் தொடர்ந்திடும்படி பணிக்கின்றான். ஏற்கெனவே பல முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குத் துரத்தப்பட்டிருந்தார்கள். (சான்றாக திருமறையின் 8:30, 9:40 ஆகிய வசனங்களைக் காணவும்.) இதைத்தான் “ஹிஜ்ரத்” என முஸ்லிம்கள் அழைக்கின்றார்கள். இதிலிருந்துதான் இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்படுகின்றது.

மக்காவிலிருந்து முஸ்லிம்கள் எதிரிகள் தந்த கொடுமைகளினால் வெளியேற வேண்டியதாயிற்று என்பதோடல்லாமல் அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் மக்காவிலேயே விட்டுச் சென்றிட வேண்டியதாயிற்று. ஏன்? பலர் தங்களது குடும்பங்களையே விட்டுவிட வேண்டியதாயிற்று.

மதீனா வந்தடைந்ததும் முஹம்மத் (ஸல்) அவர்கள், தங்களது இறைப்பணியை, பிரச்சாரத்தை அமைதியான வழியிலே ஆரம்பித்தார்கள். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடும் பணி தொடர்ந்தது. மதீனாவாசிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவி முழுமையான முஸ்லிம்களாயினர். எஞ்சியவர்கள் இஸ்லாத்தைத் தழுவவில்லை. தங்களது நம்பிக்கையிலேயே நிலைத்திருந்தார்கள். அங்கே ஒரு இஸ்லாமிய சமுதாயம் அமைக்கப்பட்டது. எனினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அமைதியாக வாழ்ந்திட அத்தனை சுதந்திரமும் இருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் உறுதி தரப்பட்டிருந்தது. அவர்களிடையே ஒரு சமுதாய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்களை ஆட்கொண்டிருந்த குலப்பெருமை, கோத்திரப்பெருமை போன்ற உணர்வுகளை மாற்றினார்கள்.

இப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் அமைதியாக வாழ்ந்திட சில ஒப்பந்தங்களை செய்து கொண்டார்கள். மதீனாவில் அமைதி நிலவினாலும், மக்காவின் எதிரிகள் ஓயவில்லை. முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்டிருந்து வெறுப்பு வளர்ந்தது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒழித்திட அவர்கள் திட்டங்களைத் தீட்டிய வண்ணமிருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு புதுத் திட்டத்தைத் தீட்டுவார்கள். அதை உடனே செயல்படுத்துவார்கள். அவர்கள் உள்ளிருந்தும் புறமிருந்தும் முஸ்லிம்களுக்குச் சில தொல்லைகளைக் கொடுப்பது என முடிவு கட்டினார்கள். அடிக்கடி மதீனாவாசிகளைக் கொள்ளை அடித்து அகப்பட்டதை மக்காவுக்கு எடுத்துச் சென்றார்கள். இதனை தருணம் வாய்த்தபோதெல்லாம் செய்தார்கள்.

அதே நேரத்தில் மதீனாவில் வாழ்ந்துவந்த முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியையும், அது மக்களிடையே ஏற்படுத்தி வந்த சகோதர உணர்வுகளையும் கண்டு ஒருவித காட்புணர்வைத் தங்களுக்குள் வளர்த்து வந்தார்கள். மக்கத்து எதிரிகள் இதைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு முடிந்தவரைத் தொல்லைத் தருவதில் முனைப்புக் காட்டினார்கள். ஏற்கனவே ஒரு காட்புணர்வைத் தங்களுக்குள் வைத்திருந்த மதீனத்து எதிரிகள், மக்கத்து எதிரிகள் தந்த உற்சாகத்தால் வலுப்பெற்று மதீனாவெங்கும் இருந்த அமைதியை கலைக்கலானார்கள்.

இப்போது முஸ்லிம்கள் மதீனாவாசிகள் தந்த தொல்லைகளையும், மக்கத்தவர்கள் அடிக்கடி அடித்துவந்த கொள்ளை போன்ற தொல்லைகளையும் எதிர்நோக்க வேண்டியவர்களானார்கள். முடிவில் முஸ்லிம்கள் இதுபோன்ற தொல்லைகளையும், அச்சுறுத்தல்களையும் தாங்க முடியாதவரானார்கள். வன்முறை பிரயோகிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டன. அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அவர்களது உயிர்களுக்கும் அவ்வப்போது உலைவைக்கப்பட்டது. அவர்கள் தங்களது இல்லங்களைத் துறந்து வெளியூர்களுக்குப் போக வேண்டியதாயிற்று. அப்படி அவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளானார்கள். இறுதியாக ஒட்டுமொத்தமாக அழிந்து போவதைத்தவிர  வேறுவழியில்லை என்றதொரு நிலை உருவானது. இப்போது அவர்கள் தங்களைத் தற்காத்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை.

ஒருவிதத்தில் இது நமக்கு முன்னுக்குப்பின் முரணானதாகத் தோன்றலாம். இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சாந்தியையும், அமைதியையும், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் பெற்றுத்தர வந்ததே! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இறைவனுடன், சகல வல்லமையும் பெற்ற இறைவனுடன் தொடர்புக் கொண்டவர்களாவார்கள். ஆனால் இங்கே முஸ்லிம்கள் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு, திக்கற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இஸ்லாம், முஸ்லிம்களை அமைதியை நிலைநாட்டுமாறும், நன்மையை ஏவிடுமாறும், தீமையை எதிர்த்துப் போராடிடுமாறும், அமுக்கப்பட்டோருக்கு உதவி செய்திடுமாறும், அடிமைப்பட்டு கிடப்பவர்களை விடுவிக்குமாறும் பணித்துள்ளது. அதுபோலவே இறைவனின் அடியார்கள் நம்பத்தகுந்தவர்கள், உதவி செய்பவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களே அமுக்கப்பட்டிருக்கும்போது, அவர்களே அமைதியை இழந்து நின்றிடும்போது, அவர்கள் எங்ஙனம் அமைதியை நிலைநாட்டிட முடியும், அமுக்கப்பட்டோருக்கு உதவிட முடியும்?

இன்னும் முஸ்லிம்களுக்குத் திகைப்பைத் தந்தது என்னவெனில் திருக்குர்ஆன் இதில் அமைதியாக இருந்தது. அவர்கள் என்ன செய்திட வேண்டும் என எந்தக் குறிப்பான கட்டளையையும் தரவில்லை. அவர்களின் திகைப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இறைவன் அவர்களுக்குத் தீர்க்கமான முறையில் வழிகாட்டவே செய்தான். இன்னும் இதேபோன்று இறைவனை மட்டுமே நம்பி, அவனுக்காக அல்லல்களைச் சந்திப்பவர்களுக்கு அவன் வழிகாட்டவே செய்வான்.

அவன் அவர்களுக்கு அதுபோது அருளிய வழிகாட்டுதல் இதோ:

நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ‘எங்களுடைய இறைவன் ஒருவன்தான்’ என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை). மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திருநாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள். மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன்: 22:38-41)

இந்த அனுமதிக்குப் பிறகு, முஸ்லிம்கள் அத்தனை அல்லல்களிலிருந்தும் விடுபடுகின்றார்கள். தங்களது உயிரையும், உடைமைகளையும் சூறையாடியவர்களை அவர்கள் தடுத்து நிறுத்த ஆரம்பிக்கின்றனர். தாங்கள் இழந்துவிட்ட நிம்மதியை அவர்கள் திரும்பப் பெறுகின்றனர். தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்ட சுதந்திரத்தைத் திரும்பப் பெறுகின்றனர். தாங்கள் நிர்பந்தத்தின் காரணமாக பிரிந்துவந்த தங்கள் குடும்பங்களோடு திரும்பப் போய்ச் சேர்ந்தனர். தங்களிடமிருந்து கவர்ந்து செல்லப்பட்ட பொருள்களை மீட்டிடுகின்றனர்.

நிராகரித்தவர்களோடு முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் தடைபோட்டு நிறுத்த வந்தவர்களோடு போர்கள் நடத்த வேண்டியதாயிற்று. ஆனால் முஸ்லிம்கள் ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்ததில்லை. குடியிருப்புக்களை முஸ்லிம்கள் தகர்த்ததில்லை. பயிர், பச்சைகளை நாசப்படுத்தியதில்லை. வாள்தூக்கி போராடத் துணியாத குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் ஆகியோரைத் தாக்கியதில்லை. முஸ்லிம்கள் இறைவன் போட்ட இந்தக் கோட்டில் நின்றுதான் தங்களது தற்காப்புப் போரை நிகழ்த்தினார்கள். இறைவன் வரைந்த கோட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் தாண்டியதில்லை. இதுபோன்ற நியதிகள் நிறைந்த போர்கள் – நியதிகள் காக்கப்பட்டப் போர்கள் – மனித வரலாற்றில் வரையிட்டுக் காட்டப்பட வேண்டிய வரலாற்றுச் சம்பவங்களாகும். அதற்கு முன்னரோ பின்னரோ இவைபோன்ற நீதிப்போர்கள் நிகழ்ந்ததே இல்லை.

இவைபோன்ற நியதிகளும் ஒழுக்க நெறிகளும் உட்பட்டுத்தான் முஸ்லிம்கள் போராட வேண்டியிருந்தது. இந்த நியதிகளுக்கு உட்பட்டுத்தான் முஸ்லிம்கள் தீர்க்கமான வெற்றிகளை ஈட்டினார்கள்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.