அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)

மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் அரசியல், அதன் அமைப்பு, செயல்படும் முறை, நோக்கம் ஆகியவற்றில் பல தனித்தன்மைகளைக் கொண்டது. அது வெற்று வேதாந்தமுமல்ல, ஒரு சிலரின் கையில் அதிகாரப் பிரம்பைக் கொடுத்து அடுத்தவர்களை அடித்திடச் சொல்லும் எதேச்சதிகாரமுமல்ல. அரசியலில் அதிகாரமென்பது எவர் பாட்டன் சொத்துமல்ல. ஒரு சில பரம்பரையினரின் பாரம்பரியச் சொத்துமல்ல. யாராலும் மாற்ற முடியாத, யாரிடமும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற அளவிற்கு ‘சிலர்’ அனுபவத்திடும் குடும்ப சொத்துமல்ல. அரசியல் அதிகாரம், அதேபோல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எனத் தொழிலாளர்களிடம் அத்தனை அதிகாரத்தையும் ஒப்படைத்திடுவதுமல்ல இஸ்லாத்தின் அரசியல் கொள்கை. இஸ்லாம் தரும் அரசியல் கொள்கை, அதன் அடிப்படை இவை மேலே சொன்ன பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இன்று பொதுவாகப் பேசப்படுகின்ற – செயல்படுத்தப்படுகின்ற பொருளிலுள்ள ஒரு ஜனநாயகமுமல்ல இஸ்லாத்தின் அரசியல் கொள்கை. இஸ்லாத்தின் கொள்கையைப் புரிந்திட ஒருவர் பின்வரும் அடிப்படைகளைக் கவனித்தால் போதும்.

1. ஒரு முஸ்லிம் தனியாகவோ, முஸ்லிம்கள் கூட்டாகவோ செய்திடும் ஒவ்வொரு செயலும் இறைவனின் சட்டமாம் திருக்குர்ஆன் காட்டிய வழியில் அமைதல் வேண்டும். திருக்குர்ஆன் தான் இறைவன் தன் நல்லடியார்களுக்கெனத் தேர்ந்தெடுத்துள்ள (அரசியல்) அமைப்பு நிர்ணயச் சட்டமாகும். இறைவன் அருளியுள்ள சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கத் தவறுபவர்கள், ஆட்சி நடத்த மறுப்பவர்கள் நிராகரித்தோராவர். அவர்கள் தான் தவறு செய்தவர்கள். அவர்களே இறைவனை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்கள். உண்மையாக திருக்குர்ஆன் மிகச் சரியானதை நோக்கியும், மிகவும் சிறந்ததை நோக்கியும் வழிகாட்டுவதாகும். (சான்றாக 5:47-50, 17:9 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

2. இஸ்லாத்தில் ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அது ஆள்பவருக்குச் சொந்தமானதல்ல. மக்களுக்குச் சொந்தமானதுமல்ல. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா அதிகாரமும் சொந்தம். அனைத்தும் அறிந்த அல்லாஹ்வின் கையில், அருளிலும், அன்பிலும் இணையற்ற அல்லாஹ்வின் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதே முறை. ஆண்டவனுக்குச் சொந்தமான இந்த அதிகாரத்தை அமானிதமாகப் பெற்றவர்களே மக்கள். அமானிதமாகப் பெற்ற இந்த இறையாட்சியை இந்த உலகில் நடத்திக் காட்டுபவர்களே மக்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளையே தங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களாக ஆக்கிக் கொள்பவர்கள். ஆட்சி செலுத்துபவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை, கட்டளைகளை மக்களிடத்திலே அமுல்படுத்திட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே! ஆட்சியாளர் அல்லாஹ்வின் நியதிபடி மக்களுக்காக சேவை செய்திட இருப்பவரேயன்றி தனக்கென சுயேட்சையாக எந்த அதிகாரத்தையும் பெற்றவரல்ல. இஸ்லாமிய அரசியல் அமைப்பின் அடிப்படை இதுவேயாகும்.

இது இஸ்லாம் போதிக்கும் ஏனைய போதனைக்கு மிகவும் ஏற்புடையதே! இந்த உலகத்தை ஆக்கி அதை இயக்கி வருபவன் இறைவனே! ஆகவே அதிகாரங்கள் அனைத்தும் அவனிடம் தான் இருக்க வேண்டும், இருக்கிறது, இருக்கும்.

ஆட்சி அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் ஏராளமான வசனங்களைத் திருக்குர்ஆனிலே காணலாம்.

எல்லா சக்தியும், வல்லமையும், அதிகாரமும் அல்லாஹ்வுகேயன்றி வேறு யாருக்கும் சொந்தமல்ல.

வானம், பூமி ஆகியவற்றின் ஆட்சி யார் கையில் இருக்கின்றதோ அவன் மிக்க பாக்கியமுடையவன்! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். (சான்றாக அல்குர்ஆன்: 67:1)

(விசுவாசிகளே! உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே மிகவும் சிறந்தது. நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:58)

வானங்களும், பூமியும் இன்னும் இவற்றின் இடையே இருப்பவைகளும் அந்த இறைவனுக்கே சொந்தம். இன்னும் அவனிடமே நாம் அனைவரும் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். (இதுபோன்ற இன்னும் பல வசனங்களை திருக்குர்ஆனிலே பார்க்கலாம்.)

3. இஸ்லாமிய அரசமைப்பின் நோக்கம், நீதியை நிலைநாட்டுவதும், குடிமக்களைப் பாதுகாப்பதுமாகும். இந்தப் பணியைச் செய்திடுவதில் நிறம், குலம், கொள்கை போன்றவற்றின் அடிப்படையில் பேதம் பார்ப்பதில்லை. நீதியின் அளவுகோலாக இறைவனின் சட்டமாம் திருக்குர்ஆனே பின்பற்றப்படும். மதத்தின் அடிப்படையில் அல்லது குலத்தின் அடிப்படையில் சிறுபான்மைய்னர் என்ற கேள்வி நீதியைப் பொறுத்தவரை எழுவதில்லை. இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)

நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்கிறான்….. அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன்:22:38,41)

4. மேலே சொன்ன நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டு, அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்ட வந்த இஸ்லாமிய அரசினை எந்த இஸ்லாமல்லாத அரசியல் கட்சியும் கட்டுப்படுத்திட முடியாது. அதுபோலவே அந்த இஸ்லாமிய அரசினை எந்த அந்நிய ஆதிக்கத்தின் கீழும் அடிமைப்படுத்திட முடியாது. அல்லாஹ்வின் ஆட்சியை (அவனுக்காக) நிலைநாட்டிட வேண்டிய இஸ்லாமிய அரசு எந்த சக்திகளுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகத்தான் இருந்திட வேண்டும்.

இது இறைவனுக்கு மட்டுமே பணிந்து நடப்பவர்தான் முஸ்லிம் என்ற பொது நியதியிலிருந்தும், ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டத்தை மட்டுமே பணிந்து நடப்பான் என்ற கொள்கையிலிருந்தும், இறைவனின் சட்டத்தை இந்த உலகில் நிலைநாட்ட முனைபவர்களுக்கு மட்டுமே ஒரு முஸ்லிம் ஆதரவளிப்பான், அவர்களுக்காக உழைப்பான் என்ற உறுதியிலிருந்தும் பிறந்ததாகும். ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டத்தை இந்த உலகில் நிலைநாட்ட தன்னால் இயன்றவரை உழைத்திட வேண்டும் என்பது பொதுவான கடமையாகும்.

இந்த விளக்கங்களை வைத்துப் பார்த்திடும்போது ஒரு முஸ்லிம் இஸ்லாமல்லாத அரசியல் கட்சிக்குக் கட்டுப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளோடு பொருந்திப் போவதில்லை. இஸ்லாமல்லாத அந்நிய அரசுக்கு ஒரு முஸ்லிம் தன்னை ஒப்படைப்பான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நியதிகளுக்குப் புறம்பானதாகும்.

…..நிராகரிப்பவர்கள் விசுவாசிகளை வெற்றிகொள்ள, அல்லாஹ் யாதொரு வழியும் வைக்கமாட்டான். (அல்குர்ஆன்: 4:141)

எனினும் மெய்யாகவே விசுவாசம் கொண்டவர்களோ, அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தில்) தீர்ப்புப்பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள், ‘நாங்கள் செவிசாய்த்தோம்: நாங்கள் வழிபட்டோம்’ என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் கூறுவதில்லை.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்.” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன்: 24:51,55)

நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலபடுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன்: 58:21,22)

5. ஆட்சியாளர், அவர் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் அவருக்கு மக்கள் மீது ஏகோபித்த அதிகாரம் கிடையாது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடைய பிரதிநிதி. அவர் தனது அதிகாரத்தை இறைவனின் சட்டத்திற்கு அடிபணிவதன் மூலமே பெறுகிறார். இந்த இறைச்சட்டம் ஆள்பவரையும் ஆளப்படுபவரையும் ஒன்றுபோலவே கட்டுப்படுத்தும். இவர்களின் ஒட்டுமொத்தமான காண்காணிப்பாளனாக இறைவன் இருக்கின்றான். ஒரு அரசு அமைகின்றது என்றால் அங்கே ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகின்றது என்றே பொருள். ஆனால் இஸ்லாத்தில் இவ்வாறு செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் இடையே செய்து கொள்ளப்படுவதல்ல. இஸ்லாமிய அரசில் ஆள்பவர், ஆளப்படும் மக்கள் இவர்கள் அனைவரும் ஒப்பந்தத்தின் ஒருபுறத்தினர். மறுபுறத்தில் இறைவன் இருக்கின்றான். ஆக இஸ்லாத்தில் அரசியல் ஒப்பந்தம் இறைவனுக்கும், மக்கள் – ஆட்சியாளர் ஆகியோருக்குகிடையே ஏற்படுவதாகும். இந்த ஒப்பந்தம் ஆட்சியாளரும் மக்களும் இறைவனின் சட்டங்களை பணிந்து நடந்திடும் வரைதான் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தம் ஆட்சியாளர்களும் மக்களும் இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றிடும் வரைதான் செல்லுபடியாகும்.

மக்களால் அல்லாஹ்வின் சட்டங்களை மக்களிடையே அமுல்படுத்திடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், அல்லாஹ்வின் சட்டத்தை செயல்படுத்திடும்வரை, மக்கள் அவர்களுடன் பூரணமாக ஒத்துழைத்திட வேண்டும். மக்களுடைய ஒத்துழைப்பைப் பெற்றிடுவது ஆட்சியாளர்களின் உரிமையாகும். குடிமக்களில் யாரேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அமுல்படுத்திடும் ஆட்சியாளரோடு ஒத்துழைக்க மறுத்தால் அது அவர் ஆட்சியாளருக்கு எதிராக மட்டுமல்ல ஆண்டவனுக்கு எதிராகவே செய்யும் பொறுப்பற்ற செயலாகக் கருதப்படும். அதுபோலவே ஆட்சியாளர் அல்லாஹ்வின் சட்டத்தை பின்பற்ற அல்லது அமுல்படுத்த தவறினால் அவரும் ஆண்டவனுக்கெதிராக முறுப்பற்ற முறையில் நடப்பதாகக் கருதப்படுவார். அந்நிலையில் அவருடன் ஒத்துழைத்திட வேண்டும் என்ற கடமை மக்களுக்கு இல்லை. திருமறை இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (திருக்குர்ஆன்: 4:59)

ஆட்சிப்பொறுப்பு யார் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு முஸ்லிம்கள் அவசியம் பணிந்திட வேண்டும். ஆனால் ஆட்சியாளர் அல்லாஹ்வின் அதிகாரத்தை அமுல்படுத்தி அவனுக்கு அடிபணிந்து நடந்திட வேண்டும். அல்லாதபோது மக்கள், ஆட்சியாளரைப் பணிந்திட வேண்டியது கட்டாயமில்லை என்பது மட்டுமல்ல, பணிந்து நடந்திடவும் கூடாது.

அல்லாஹ்வின் அருள்வாக்குக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவது பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியாகும். ஆட்சியாளர்களும், குடிமக்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் முன்மாதிரியையும் பின்பற்றி நடந்திட வேண்டும்.

தனது இறுதி உரைகளுல் ஒன்றில் பெருமானார் (ஸல்) அவர்கள், இறைவனுக்கும், இறைவனின் சட்டத்திற்கும் கீழ்படிந்து நடக்காத ஆட்சியாளர்களுக்கோ, மற்றவர்களுக்கோ கீழ்படிதல் அவசியமில்லை என அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்தும் புரிந்தும் இருந்தார்கள். எனவேதான் அவர்கள் ஆட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாத்திரத்திலேயே ஒரு அறிவிப்பை விடுத்தார்கள். அதில் மக்களைப் பார்த்து ‘நான் அல்லாஹ்வையும் அவனது இறுதித் தூதரையும் பின்பற்றி நடந்திடும்வரை நீங்களும் என்னைப் பணிந்து நடங்கள். நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு விலகிச் சென்றால் என்னைப் பணிந்து நடப்பது உங்கள் மீது கடமையாகாது’ எனக் குறிப்பிட்டார்கள்.

6. ஆட்சியாளர்களும், ஏனைய நிர்வாகிகளும் மக்களில் மிகவும் அதிகமாகக் கல்வியறிவுடைய குடிமக்களிலிருந்து அவரவருடைய தனிப்பட்ட நற்குணங்களின் அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தனித்தன்மைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குலப்பெருமை, பிறப்பால் வந்தப்பெருமை, குடும்பப்பெருமை, பொருளாதார வசதிகள் ஆகியவைகளுக்கு அதிகக் கவனம் செலுத்திடக் கூடாது. நிச்சயமாக இந்தத் தகுதிகளை அளவுகோலாகக் கொண்டிடக் கூடாது. இவைகள் ஒருவரது தகுதிகளை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ செய்யாது. ஒவ்வொரு வேட்பாளரையும் அவருடைய சொந்தத் தகுதிகளின் அடிப்படையிலேயே கணித்திட வேண்டும். இதில் அவரது குலம், கோத்திரம், பணம் ஆகியவைகளுக்கு எந்த சிறப்பியல்பும் கிடையாது. ஆட்சியாளரை பொதுமக்களின் ஒப்புதலின் அடிப்படையில் பொதுத்தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுத்திடலாம் அல்லது அவர்களைப் பொதுத்தலைவர்கள் தெரிவுசெய்து அதிகாரத்தைத் தரலாம். இந்தப் பொதுத்தலைவர்கள் மக்களால் பல்வேறு தொகுதியினராலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒரு இஸ்லாமிய அரசு எத்தனை பிரநிதி அவைகளை வேண்டுமானாலும் பெற்றிருக்கலாம்.

அதுபோலவே எத்தனை நகராட்சி, ஊராட்சிகளை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். இது தேவையைப் பொறுத்து மாறுபடும்.

ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்தல் அல்லது தெரிந்தெடுத்தல் என்பதற்கான உரிமைகள் இறைச்சட்டத்தினால் வழங்கப்பட்டவையே! நிர்வாகத்தை நடத்தும் முறையும் இறைவனின் சட்டப்படிதான் இருக்கும். இதில் எந்த முறையை பின்பற்றினாலும் அது சமுதாயத்தின் பொதுநலத்தை நோக்கமாகக் கொண்டே இருந்திட வேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் இது குறித்து பின்வருமாறு பகர்ந்துள்ளார்கள்:

‘மக்கள் ஆட்சியை நடத்துகின்ற பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்திடும்போது அவரை விட திறமையானவர் ஒருவர் இருந்தால் அவ்வாறு (திறமை குறைந்தவரிடம்) யார் ஒப்படைத்தாரோ அவர், இறைவன், இறைவனின் தூதர், முஸ்லிம்கள் ஆகியோரின் அமானிதத்தில் துரோகம் செய்தவராவார்.’

இந்த நபிமொழியுடைய அரசியல் விளக்கம் என்னவெனில், ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பவர்கள் நாட்டு நடப்புகளில் கவனம் இல்லாதவர்களாக இருந்திடக் கூடாது. அவர்கள் தங்களது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்திடும் உரிமையைப் பயன்படுத்திடும்போது வேட்பாளரின் தனித்தன்மைகளில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். இந்த வகையில் அந்த நாடு நல்ல ஆட்சியாளரைப் பெறும். நல்ல பொறுப்புள்ள மக்களாக குடிமக்களும் இருந்திட வழி பிறக்கும். இன்று பொதுவாகப் புழக்கத்திலிருக்கும் ஜனநாயக அமைப்பு இந்த சிறப்புத் தகுதியை பெற்றதல்ல.

7. ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்து அல்லது தெரிந்தெடுத்து விட்டதும் தங்களது பணி முடிந்தது என்று முஸ்லிம்கள் முடங்கிக் கிடந்திடக் கூடாது. அதுமுதல் அவர்கள் ஆட்சியாளர்களின் போக்கையும் நாட்டுநடப்பையும் ஊன்றிக் கவனித்திட வேண்டும். ஆட்சியாளர் எப்போதாவது தவறிழைத்தால் மக்கள் அதனை எடுத்துக்காட்டி ஆட்சியாளரைத் திருத்திட வேண்டும். இறைவனும் மக்களும் சேர்ந்து ஆட்சியாளரிடத்தில் தந்திருக்கும் ஆட்சி எனும் அமானிதத்தைத் தவறாக பயன்படுத்தினால் ஆட்சியில் நீடிக்க அவருக்கு எந்த உரிமையுமில்லை. அந்த ஆட்சியை உடனே மாற்றிட வேண்டும். இந்தப்பணியை சமுதாய நலன்கருதி உடனே செய்து முடித்திட வேண்டியது குடிமக்களின் கடமையாகும். பாரம்பரிய அரசுரிமை அல்லது ‘ஆயுள் முடியும்வரை அவரே ஆட்சியாளர்’ என்பன போன்ற கொள்கைகள் இஸ்லாத்திற்கு அந்நியமானவை.

8. ஆட்சியாளரை மக்களே தேர்ந்தெடுத்தாலும் அவர் முதலில் ஆண்டவனுக்கே கடன்பட்டவர். அவர் இறைவனுக்குத்தான் பொறுப்பு என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனுக்கு அடுத்தபடியாக அவர் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பொறுப்பாவார். அவர் ஆட்சியில் அலங்காரத்திற்காக அமர்த்தப்பட்டவரல்ல. அவர் அதிகாரம் ஏதுமற்ற பொம்மையுமல்ல. காட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்திட்டிடும் பதுமையுமல்ல. மக்கள் சொல்வதையெல்லாம் அவை தவறானவையா? முறையானவையா? என ஆராய்ந்திடாமல் அமுல்படுத்திட வேண்டிய அதிகாரியுமல்ல.

ஆட்சியாளர் தனக்கென தரப்பட்ட அதிகாரத்தை மக்களின் சார்பாக, மக்களின் நன்மைக்காக அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின்படி பயன்படுத்திட வேண்டும். ஏனெனில் அவருக்கு இரண்டு விதமான பொறுப்புக்கள் இருக்கின்றன. ஒருபுறம் அவர் தன்னுடைய செயல்களுக்கு இறைவனிடம் நேரடியாகப் பொறுப்பாவார். மறுபுறம் அவர் தன்னை நம்பி தன்னிடம் ஆட்சியை ஒப்படைத்த மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்திடக்கூடாது என்ற விதத்தில் மக்களிடம் பொறுப்பாவார். மக்களின் பிரதிநிதிகளை அல்லது மக்களைத் தான் எவ்வாறு நடத்தினார் என்பதற்கான முழுமையான கணக்கை மறுமையில் இறைவனிடம் தந்திட வேண்டும்.

குடிமக்களும், ஆட்சியாளரும் தாங்கள் திருக்குர்ஆனையும், இறைவன் பணிந்து பின்பற்றுங்கள் எனப் பணித்த கட்டளைகளையும் எவ்வாறு மதித்து நடந்தார்கள் என்பதற்கான விளக்கங்களை இறைவனிடம் தந்திட வேண்டும்.

ஆட்சியாளர் குடிமக்களிடம் தனக்கிருக்கும் பொறுப்பின் காரணமாக அவர் குடிமக்களின் விவகாரங்களை அவர்களின் நலனை மனதிற்கொண்டே நடத்திட வேண்டும். இறைவனிடம் அவருக்கிருக்கும் பொறுப்பின் காரணமாக அவர் பொதுமக்களின் நலன் என்பதை இறைவனின் சட்டத்தைக் கொண்டே முடிவு செய்வார். ஆட்சியாளர் தனது சொந்த விருப்பத்தை தான் விரும்பிய வண்ணம் செயல்படுத்துபவரல்ல. அல்லது அவர் மக்களின் விருப்பம்போல் செயல்படுபவருமல்ல. அவர் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மக்களிடையே அமுல் படுத்துவார்.

அல்லாஹ்வின் சட்டத்திட்டங்களிலிருந்து அவர் மாறுபடுவாரேயானால் அவர் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை இழப்பார்.

குடிமக்கள் அல்லாஹ்வின் சட்டப்படி தங்களை ஆள்வதற்கே ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏதேனும் காரணத்திற்காக அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான முறையில் செயல்பட முயல்வார்களேயானால், அதை ஆட்சியாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களேயானால், ஆட்சியாளரால் தடுத்து நிறுத்தப்படுவார்கள். ஆகவே ஆட்சியாளரின் அதிகாரமும் குடிமக்களின் உரிமையும் அல்லாஹ்வின் கட்டளைகள் என்ற வரையறைக்கு உட்பட்டவைகளே!

இவ்வாறாக இஸ்லாத்தின் அரசியல் அமைப்பும், முறையும் உலகில் புழக்கத்தில் இருந்துவரும் அரசியல் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கே ஆட்சியாளரும் குடிமக்களும் இறைவனே எல்லா அதிகாரத்திற்கும் சொந்தக்காரன் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆகவே இதயத் தூய்மையுடன் அவனது சட்டத்திட்டங்களைப் பணிந்து நடக்கின்றனர்.

Leave a Reply