அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (2)

திருக்குர்ஆன் செல்வம் மனிதனுக்கு ஒரு சோதனை என்றும், அது மனிதனுக்கு அடுத்தவர்களைச் சுரண்டுவதற்கோ, செல்வந்தன் என்ற செருக்கினால் மமதைக் கொண்டிடவோ அல்ல என்றும் கூறுகின்றது. இறைவன் சொல்கின்றான்:

(அல்லாஹ்வாகிய) அவன்தான் உங்களைப் பூமியில் (தன்) பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். அன்றி, உங்களில் சிலரை மற்றோரைவிடப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கின்றான். இதன் மூலம் உங்களுக்குக் கொடுத்தவற்றில் (செல்வங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும் நிச்சயமாக அவன் மிகப் பிழைபொறுப்போனும் பேரன்பு உடையோனுமாவான். (திருக்குர்ஆன்: 6:165)

நபி மூஸா (அலை) அவர்களுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றைத் திருக்குர்ஆன் மனித இனம் அறிவொளி பெறும் பொருட்டு எடுத்துக் காட்டுகின்றது. அது பின்வருமாறு:

அதற்கு முஸா தனது மக்களை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவிதேடி (பிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நொச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குடையதே! இதனை அவன் தனது அடியார்களுக்குத் தான் விரும்பியவர்களுக்கு உரிமைப்படுத்தி விடுவான். (நல்ல) முடிவு அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்களுக்கே!’ என்று கூறினார்.

அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி, ‘நீர் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீர் வந்ததன் பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகிறோம். (நீர் வந்ததால் எங்களுக்கொன்றும் பலனேற்படவில்லை)’ என்று கூறினார்கள். அதற்கு மூஸா ‘உங்களுடைய இறைவன் உங்களுடைய விரோதிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக ஆக்கிவைக்கக் கூடும். நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைக் கவனிப்பதற்காக’ என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:128-129)

நபி மூஸா (அலை) அவர்களுக்கும் அவரது மக்களுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல், இனம், பிறப்பு, சில தனித்தன்மைகள் என்ற அடிப்படைகளில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஏனைய மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்திடும் அதிகாரம் இருக்கின்றது என்பதை அங்கீகரிப்பதற்காகச் சொல்லப்பட்டதல்ல. அதுபோலவே பிந்திய நூற்றாண்டுகளில் மூஸா (அலை) அவர்களை பின்பற்றியவர்கள் செய்தவற்றையும், அவர்கள் கொண்ட கொள்கைகளையும் திருக்குர்ஆன் ஏற்றுக் கொள்கின்றது என்றும் பொருளாகாது. மாறாக, இறைவன் இந்த உரையாடலை எடுத்துக் காட்டுகின்ற விதம், சந்தேகப்படுபவர்களுக்கும், குறை கூறுபவர்களுக்கும் பதில் கூறுகின்ற விதத்திலேயே அமைந்திருக்கின்றது. அத்துடன் இந்த பூமியில் இருப்பவை அனைத்தும் இறைவனுடையதே என்ற உண்மையை எடுத்துக் கூறுவதாகவும் இருக்கின்றது. அந்த இறைவன் தனக்குச் சொந்தமானவற்றை தான் விரும்பியவர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களைச் சோதிப்பான் என்ற கோட்பாட்டை உறுதிபடுத்துவதுமாகும்.

இந்த உண்மைகளைத் திருக்குர்ஆன் பலமுறைக் குறிப்பிட்டுக் காட்டி மானிட இனத்தை எச்சரிக்கின்றது. சான்றாக, திருக்குர்ஆன் கூறுகின்றது:

வானங்கள் பூமி இவற்றின் ஆட்சி அவனுக்குரியதே! சகல காரியங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். (ஆகவே, மனிதர்களே நீங்கள்!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசியுங்கள். அன்றி, (உங்களுக்கு முன்னிருந்தோரின் இடங்களில் உங்களை வைத்து) உங்களை அவன் எதற்கு (உரிமையுடைய) பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள். உங்களில் எவர் விசுவாசங்கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.

அன்றி, உங்களுக்கென்ன? அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள் பூமியிலுள்ளவைகளின் அனந்தரம் அல்லாஹ்வுக்குடையதுதானே!….. (திருக்குர்ஆன்: 57:5,7,10)

ஆக்கப்பட்டவைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கே சொந்தம் என்பதே கம்யூனிசத்தின் கொள்கை. இது அரசாங்கத்திற்கு எல்லாவற்றிலும் ஏகபோக உரிமையினை வழங்குகின்றது. கம்யூனிசத்தில் அரசாங்கம் ஒரு சர்வாதிகாரியே ஆகும். இஸ்லாம், கம்யூனிசம் செயற்கையாக ஏற்படுத்தி வைத்திருக்கின்ற தீமை பயக்கும் அதிகாரத்தை அகற்றி கருணையுள்ள இறைவனுக்கே எல்லாம் சொந்தம் என்ற நன்மை பயக்கும் கொள்கையை வழங்குகின்றது. கம்யூனிசத்தின் தவிர்க்க முடியாத விளைவான வர்க்கப்பேதத்தையும், வர்க்கப்போராட்டத்தையும் அகற்றி ஒருவருக்கொருவர் அன்பு, அனுதாபம், அரவணைப்பு என்பனவற்றை நிலைநாட்டுகின்றது.

முதலாளித்துவம் இயல்பாகவே ஏற்படுத்தும் பேராசை, கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொள்ளும் சுரண்டல் புத்தி ஆகியவை மனிதனிடம் ஏற்படாமல் காத்திடும் அரணாக அமைகின்றது இஸ்லாத்தின் போதனைகள். முதலாளிகள் தொழிலாளிகளை எதேச்சதிகாரத்துடன் நடத்திடும் போக்கை மாற்றி அமைக்கின்றது இஸ்லாம்.

மனிதனிடம் இயற்கையாகக் காணப்படும் வேலை செய்ய வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் என்பன போன்ற உந்துதல்களுக்கு உரிய மதிப்பளிக்கின்றது இஸ்லாம். அதேநேரத்தில் மனிதனின் தனித்தன்மைகளுக்கும், தான் சுயமாக, சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற உணர்வுகளுக்கும் உரிய மதிப்பளிக்கின்றது இஸ்லாம். எனினும் இஸ்லாம் மனிதன் இறைவனிடமிருந்தும் இந்த பிரபஞ்சத்திலிருந்தும் முழுக்க முழுக்க தனித்தவன் என அவனைத் தனியாகப் பிரித்து பார்த்திடுவதில்லை. அவ்வாறு மனிதன் பிரிந்து நிற்பதை அங்கீகரிப்பதுமில்லை. மனிதனின் சுதந்திரத்தையோ, அவன் தனித்து முதல்போட்டுத் தொழில் செய்யும் சுதந்திரத்தையோ இஸ்லாம் மறுப்பதில்லை. இஸ்லாம் என்னென்ன இயல்புகளோடு மனிதன் படைக்கப்பட்டானோ அதே இயல்புகளுடன் அவனை ஏற்றுக் கொள்கின்றது. அவனுடைய தனித்தன்மைகளை ஏற்றுக் கொள்கின்றது. அவனுடைய இயற்கையான ஆசைகளுக்கும், பலவீனங்களுக்கும் உரிய கவனம் செலுத்தி அவன் வாழ்வதற்கான வாழ்க்கைத் திட்டத்தை அமைத்தும் தருகின்றது. அவனுக்கிருக்கும் வரையறைக்குட்பட்ட சக்திக்குள் அவனை இயங்கச் செய்கின்றது இஸ்லாம். தவறே இழைக்க மாட்டான் எனக்கருதி அவனிடம் முழுமையான அதிகாரத்தை ஒப்படைத்திட அவன் கடவுளோ அல்லது குறையற்ற நிறைபொருளோ அல்ல. அதேநேரத்தில் அவனது திறமைகளைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது.

மனிதனை அவனது நிறை, குறைகளுடனேயே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய உண்மையான நிலையோடும், அந்தஸ்தோடும் அவனைப் பார்த்திட வேண்டுமேயல்லாமல் அவனை ஒரேடியாக உயர்த்துதலும் கூடாது. இந்த அகிலத்தில் இருக்கும் ஏனையவற்றிலிருந்து அவன் பிரிந்து நிற்பவனுமல்ல அவற்றிற்கு அப்பாற்பட்டவனுமல்ல. அவன் அகிலத்தில் காணப்படும் ஏனையவற்றோடு பின்னிப் பிணைந்தவன். உலகில் இருக்கும் எல்லாப் பொருட்களோடும் அவன் தொடர்பு உடையவன். இயற்கையின் மூலக்கூறுகளோடு இறுகப் பிணைந்தவன். அவனை உலகில் இருக்கும் ஏனையவற்றோடு தொடர்புடையவன் என்ற முறையிலே அணுகிட வேண்டும்.

மனிதன் சுதந்திரமானவன். அவனுக்கு சுயமான முயற்சிகளை மேற்கொண்டு சம்பாதிக்கும் உரிமையுண்டு. அதனை தனக்கென வைத்துக் கொள்ளும் இயல்பும், உரிமையும் உண்டு. இந்த உரிமைகள் அவனுக்கு இருந்திடும்போது அவனிடமிருப்பதை அடுத்தவர்களுக்கு அள்ளித்தரச் செய்வது, அவனிடமிருக்கும் பொருட்களை விரயம் செய்யாமல் தடுப்பது, அவனிடமிருப்பதை முறையாகப் பயன்படுத்திடப் பணிப்பது ’இறைவனின் அருட்கொடைகளே தன்னிடமிருப்பது’ என்ற எண்ணமே! இந்த எண்ணம் அவனிடமிருக்கும் செல்வங்களைத் துர்ப்பிரயோகம் செய்திடாமல் தடுத்திடும் அரணாக அமைகின்றது. அவனுக்குப் பொருள் சேர்த்திடும் உரிமையுண்டு. அதனை முதலீடு செய்திடும் உரிமையுண்டு. அதனைத் தன் விருப்பப்படி செலவு செய்யும் அதிகாரமுண்டு. ஆனால் அவன் அதைப் பயன்படுத்தித் தவறான பாதையில் போய் அழிந்திடக் கூடாது. அவனைப் பாதுகாப்பதற்கு சில உயர்ந்த கொள்கைகளை வழங்குகின்றது இஸ்லாம். இதனைத் தெளிவுபடுத்திட ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம்.

முதல்போட்டு தொழில் நடத்த விரும்புபவர்களெல்லாம் எந்தக் கட்டுபாடுமின்றி எதேச்சையாக செயல்படும் அதிகாரம் படைத்தவர்களல்ல. அவர்கள் தங்களுடைய முதலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு சில நியதிகள் இருக்கவே செய்கின்றன. அவற்றை அவர்கள் பின்பற்றியாக வேண்டும். திருக்குர்ஆன் வசதிபடைத்த ஒவ்வொருவரும் தங்களுடைய சகோதர மனிதர்களுக்காக நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன எனக் குறிப்பிடுகின்றது. அத்துடன் தங்களுடைய தனிப்பட்ட செலவினங்களில் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனப் பணிக்கின்றது. இறைவன்தான் அனைத்திற்கும் அதிபதி. அவனே உண்மையான சொந்தக்காரன் என்பது பணம் படைத்தோருக்கு அடிக்கடி நினைவுறுத்தப்படுகின்றது. இந்தக் கட்டளைகளை அறிவிக்கும் திருக்குர்ஆன் வசனங்கள்:

பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய பாத்தியதைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவுகடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.

ஏனெனில், மிதமிஞ்சிய செலவு செய்வோர், ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தாதவன்.

(உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! அன்றி, (உம்மிடம் இருப்பதையெல்லாம் கொடுத்து) உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்.

நிச்சயமாக உம் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான். (தான் விரும்பியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 17:26,27,29,30)

Leave a Reply