அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும்.

உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். அது ஒரு அவமானமுமாகும். ஒரு முஸ்லிம் தனது உழைப்பாலேயே தனது வாழ்க்கையை நடத்திட வேண்டும். யாருக்கும் ஒரு சுமையாக அவன் இருந்திடக் கூடாது. இது இறைவனின் கட்டளையாகும்.

இஸ்லாம் செய்யும் தொழிலில் பேதங்களைப் போதிப்பதில்லை. நேர்மையான தொழில்கள் அனைத்தையும் இஸ்லாம் மதிக்கின்றது. ஒருவன் தன் வாழ்க்கையை நடத்திட மேற்கொள்ளும் வழி ஒழுக்க நெறிகளுக்குப் புறம்பானதாகவோ, தவறிழைப்பதாகவோ இருந்திடக்கூடாது. தூய்மையான உள்ளத்தோடு, சமுதாயத்திற்கு தரவேண்டிய மரியாதையையும் தந்து ஒரு முஸ்லிம் தன் கரங்களைத் தராளமாகப் பயன்படுத்தி துணிவோடு எந்த வேலையை வேண்டுமானாலும் செய்து தன்னைச் சார்ந்தவர்களும் தானும் வாழ்ந்திட வகை தேடிக் கொள்ளலாம்.

அடுத்தவர்களிடம் ‘கையேந்தி’ வாழ்வதைவிட, ஒருவன் தனது கையிற்றை* எடுத்து விறகு கட்டிச் சுமந்து அதை விற்று தனது வாழ்க்கையை நடத்திடுவது எவ்வளவோ மேல் என இறைவனின் தூதரவர்கள் பகர்ந்துள்ளார்கள். ஏதேனும் ஒரு நேர்மையான வழியில் நமது உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை நடத்திடுவதே சிறப்பு! (*அரபு மக்கள் தங்களது உடையுடன் சேர்த்து இடுப்பில் கட்டிடும் கயிறு. அதாவது ஒரு மனிதனிடம் எந்த மூலதனமும் இல்லையென்றாலும் அவன் உழைத்து வாழவே வழி தேட வேண்டும் என்பதைத்தான் இது தெளிவுப்படுத்துகின்றது.)

தூய்மையான, நேர்மையான தொழிலாளி ஒருவனின் கண்ணியத்தை அவன் செய்யும் தொழிலைக் காரணமாகக் காட்டிப் பறித்திட முடியாது. தொழிலைக் காரணமாகக் காட்டி உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திடுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. உழைப்பவன் தான் செய்யும் தொழிலில் நேர்மையாக இருந்திடும்வரைஅவன் எந்தத் தொழில் செய்தாலும் அவன் கண்ணியமானவனே! இஸ்லாத்தில் உழைக்கும் மனிதர்கள் உயரும் அளவிற்கு அல்லது உயரவேண்டிய அளவிற்கு எல்லையே இல்லை. அவர்கள் தங்களால் இயன்றவரை உழைத்து முன்னேறிக் கொள்ளலாம். வாய்ப்புகள் அனைத்தும் எல்லோருக்கும் உரிமையானதே! அனுமதிக்கப்பட்ட தொழிலில் ஈடுபடுவதற்கு எல்லோருக்கும் உரிமையுண்டு.

தனிமனிதன் தன் முயற்சியின் மூலம் திரட்டும் பொருட்கள் அனைத்தும் அவனுக்கே சொந்தம்! அதில் அரசாங்கமோ அல்லது சமுதாயத்தின் பிற உறுப்பினர்களோ தலையிட முடியாது. இந்த உரிமைக்குப் பதில் அவன் சமுதாயத்திற்கென சில கடமைகளை நிறைவேற்றிட வேண்டும். அரசுக்கு சில வரிகளையும் தந்திட வேண்டும். இவைகளைச் செய்திட்டால் அவனது சொத்துக்களைப் பாதுகாத்திட வேண்டியது அரசின் கடமையாகும். அவ்வாறு பாதுகாத்திட வேண்டும் எனக்கோரிடும் உரிமையை அவன் பெறுகின்றான். அத்துடன் அனுமதிக்கப்பட்ட எல்லாத் தொழில்களிலும் ஈடுபடும் உரிமையும் பாதுகாக்கப்படுகின்றது. அந்தப் பாதுகாப்பிற்கான உறுதியளிக்கப்படுகின்றது.

இஸ்லாம் வகுத்துத் தரும் பொருளாதார நியதியின் கீழ் முதலாளித்துவத்தின் ஏற்படுவது போன்று பேராசைப் பேயாக மனிதன் மாறிடும் நிலை வரவில்லை. அதுபோல் வர்க்கப்பேதத்தை போதிக்கும் நாச சக்தியான கம்யூனிசத்தின் தீமைகளும் ஏற்படாது. தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் நாட்டை வளப்படுத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியவராவார்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டியது அரசின் பொறுப்பு. வர்க்கப் போராட்டம் என்பதற்குப் பதிலாக ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் நிலைமையுமே மேலோங்கி நிற்கும். அச்சமும், ஐயமும் அகற்றப்பட்டு உழைப்பவர் அனைவரும் நட்பு, நம்பிக்கை ஆகியவற்றால் பிணைக்கப்படுவார்கள்.

இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கை உற்பத்தித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதுபோலவே சில குறிப்பிட்ட கணிதவியல் கணிப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதுமல்ல. ஒழுக்க நெறிகளுக்கும், இஸ்லாம் பேணிவரும் பொதுவான நியதிகளுக்கும் உரிய இடம் தந்தே பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படும்.

செய்யும் தொழிலை நேர்மையாகவும், திறமையாகவும் செய்திட வேண்டும் எனப் பணிக்கின்றது இஸ்லாம். இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள்: நீங்கள் ஏதேனும் வேலையை ஒத்துக்கொண்டால் அதை உங்களால் முடிந்தவரை திறமையோடும், நேர்மையோடும் செய்திட வேண்டும் எனப் பணித்துள்ளார்கள். வேலையை செய்து முடித்தவுடன், வேலையை செய்து முடித்தவர் ஒரு நியாயமான கூலிக்குச் சொந்தகாரராகின்றார். இந்தக் கூலியைத் தராமலிருப்பது அல்லது நியாயமான வரம்பிற்கு குறைத்துத் தருவது இறைவனின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

வியாபாரக் கொடுக்கல் வாங்கல் இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. நேர்மையான வியாபாரங்கள் அனுமதிக்கப்பட்டவை என்பது மட்டுமல்ல ஆண்டவனின் ஆசியையும் அருளையும் பெற்றவையாகும். வியாபாரங்ளைச் செய்வது தனிமனிதனாகவோ, கம்பெனிகள் என்ற பெரிய நிறுவனங்களாகவோ முகவான்மைகளாகவோ இருக்கலாம். ஆனால் எல்லா வியாபார பரிமாற்றங்களும் நேர்மையுடன் இருந்திட வேண்டும். ஏமாற்றுதல், பொருள்களிலிருக்கும் குறைகளை வாடிக்கையாளர்களிடம் மறைப்பது, வாங்குவோரின் அவசரத்தையும், தேவையையும் பயன்படுத்தி அதிக விலை வாங்குவது, அங்காடியில் கிடைக்கின்ற பொருட்கள் அனைத்தையும் தானே சுருட்டி வைத்துக் கொண்டு பின்னால் விலையை உயர்த்துவது இவைகள் அனைத்தும் பாவங்கள். தண்டனைக்குரியவை என எச்சரிக்கை செய்கின்றது இஸ்லாம்.

தனது வாழ்க்கை இதமாகவும், நன்றாகவும் இருந்திட வேண்டும் என விழைகின்ற ஒவ்வொருவரும் தங்களது வருவாயை நேர்மையான வழியிலேதான் ஈட்டிட வேண்டும். எளிதாக வரும் பணம் மிகவும் எளிதாகவே வெளியில் போய்விடும். முறைகேடான வழிகளின் மூலம் பொருள் தேடிடும் ஒருவன் மறுமையில் எரிநரகின் விறகாவான் என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும்.

ஏமாற்று, பொய் போன்றவற்றை வணிகத்துறையிலிருந்து துடைத்தெறிய இஸ்லாம் வியாபாரத்தில் நேர்மையாக இருங்கள் என்று கூறுகின்றது. ஏமாற்றுபவர்களை எச்சரிக்கின்றது இஸ்லாம். நேர்மையாக உழைத்திடுவோருக்கு ஊக்கம் தருகின்றது இஸ்லாம். அத்துடன் வட்டியையும் தடை செய்துள்ளது. இவைகளெல்லாம், ஒரு மனிதனுக்கு சொந்தமாவது அவன் நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருள்தான் என்பதை அறிவுறுத்திடத்தான். அடுத்தவர்கள் அல்லலில் அகப்பட்டுத் திணறிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தரப்படும் கடனுக்கு வட்டி விதிப்பது, ஒரு நெருக்கடியில் சிக்கிக் கொண்ட மனிதனுக்கு அபராதம் விதிப்பது போலாகும். அது மதம் போதிக்கும் ஒழுக்க நெறிகளுக்கு புறம்பானது. மனிதாபிமானமற்றது. ஒழுங்கீனமானது.

திருமறையில் இறைவன் கூறுகின்றான்: யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:275-276)

மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள். எடையைக் குறைக்காதீர்கள். (அல்குர்ஆன்: 55:7,8,9)

திருமறை வழங்கும் இந்த போதனைகள் மனிதனை நீதியுடன் நடப்பவனாகவும், நேர்மையுடன் வியாபார பரிமாற்றங்களில் இருப்பவனாகவும் ஆக்கிடுவதற்கேயாகும். ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் செழித்து வாழ மாட்டார்கள். மறுமையில் நிச்சயமாக ஆண்டவனின் தண்டனையைப் பெறுவார்கள். இவர்களை திருக்குர்ஆன் எப்படி அணுகுகின்றது என்பதைப் பார்ப்போம்.

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளுக்காக, அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்! (அல்குர்ஆன்: 83:1-6)

அளவிலும், நிறையிலும் ஏமாற்றுபவர்கள் முஸ்லிம்களே அல்ல என அறிவுறுத்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் ஏராளம்! கொடுக்கல் வாங்கல்களில் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள், இருப்பதை பதுக்கி இல்லாமையை ஏற்படுத்தி அங்காடியில் விலையை உயர்த்துபவர்கள் ஆகியோரை பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களே அல்ல எனப் பகர்ந்துள்ளார்கள். அநியாயம், ஏமாற்றுதல் ஆகியவைகளைக் கொண்ட வியாபார ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது. இந்த ஒப்பந்தங்களை எந்த நிலையிலே வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம்.

வியாபாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கம் தனிமனிதனின் உரிமையை நிலைநாட்டுவதும், சமுதாயத்தின் ஒற்றுமையைப் பேணுவதுமாகும். வியாபார உலகில் உயர்ந்த ஒழுக்கங்களை நிலைநாட்டுவதும், தொழிற்துறையிலும், வணிகத்துறையிலும் இறைவனின் சட்டங்களை நிலைநாட்டுவதும் இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள வியாபார விதிகளின் குறிக்கோலாகும். தொழில், வணிகம் பொதுவான பொருளாதார நடவடிக்கைகள் இவைகள் அனைத்திலும் இஸ்லாம் பல பொது நியதிகளை வகுத்துத்தந்து அதன்படி நடந்திடுபவனே முஸ்லிம் எனக் கூறுவதன் காரணம், இஸ்லாம் வெறும் வெற்றுச் சடங்குகளை மட்டுமே கொண்ட ஒரு மதமல்ல. அது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒரு வாழ்க்கைத் திட்டம்.

செல்வ வளத்தில் இருப்பவர்களையும், பெரும் சொத்துக்களின் சொந்தக்காரர்களையும் இஸ்லாம் தெளிவாக எச்சரிக்கின்றது. அவர்களுக்கு சொந்தமானது அனைத்தும் ஆண்டவனால் அவர்களுக்கு அருளப்பட்டதே. அவனின் அருட்கொடைகளைப் பராமரித்திட அவனால் நியமிக்கப்பட்டவர்களே அவர்கள் என அறிவுறுத்துகின்றது இஸ்லாம். நியாயமான வழிகளில் தீவிரமாக முயற்சித்து செல்வத்தை சம்பாதிப்பதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை. எனினும் மனிதன் ஒரு உண்மையை மனதில் கொள்ள வேண்டும். அவன் இந்த உலகுக்கு வரும்போது வெறுங்கையோடுதான் வந்தான். அவன் திரும்பிப் போகபோவதும் அப்படியேதான். உலகில் இருப்பவைகளின் உண்மையான சொந்தக்காரன் இறைவனே. மனிதன் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியே ஆவான். ஆகவே அவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இது ஒரு உண்மை என்பது மட்டுமல்ல இந்த உண்மையை ஏற்றுக் கொள்வது மனித வாழ்வின் ஓட்டத்தை மாற்றி அமைப்பதுமாகும். மனிதனின் நோக்கையும், போக்கையும் மாற்றியமைப்பதுமாகும்.

இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் ஒரு செல்வந்தன் இறைவனின் பாதையில், இறைவனின் விருப்பப்படி, இறைவனுக்காக, தனது செல்வத்தை செலவு செய்ய முன்வருகின்றான். இதேபோல் சிறந்த இலட்சியங்களுக்காகத் தன்னிடம் இருப்பதையெல்லாம் செலவு செய்திடவும் தயாராக இருக்கின்றான்.

தன்னிடம் இருக்கும் செல்வங்கள் ஆண்டவனால் அருளப்பட்ட அருட்கொடைகளே என்ற உணர்வு மனதில் ஏற்பட்டவுடனேயே, சமுதாயத்தில் நலிவுற்றோருக்கும், ஏனைய சமுதாயத் தேவைகளுக்கும் தாராளமாக அள்ளித்தரும் தாராளத்தன்மையைப் பெறுகின்றான் மனிதன். அவன் தனக்குமுன் சிறந்ததொரு இலட்சியம் இருக்கின்றது, தனது செல்வத்தை செலவளிக்க என்பதை உணருகின்றான். அத்துடன் சுயநலம் என்ற பள்ளத்தில் விழுந்திடாமல் அவன் பாதுகாக்கப்படுகின்றான். இந்த இறை உணர்வால், பேராசை என்னும் பீடை பிடித்திடாமல் அவன் காப்பாற்றப்படுகின்றான்.

இவைதான் செல்வம், செல்வந்தன் என்பனவற்றில் இஸ்லாத்தின் கண்ணோட்டமாகும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.