அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை.

திருக்குர்ஆனிலோ முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலோ வாக்கிலோ குலம், பிறப்பு, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் போதிக்கப்பட்டிருப்பதாக யாரும் சொல்லிட முடியாது. மாறாக, இந்த வேற்றுமைகளெல்லாம் மறந்து மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட வேண்டும் என வலியுறுத்தும் திருமறை வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் ஏராளம் இருக்கின்றன. இதே இறை வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இஸ்லாமிய சமுதாய வாழ்வுக்கான அடிப்படைகளையும் அமைத்துத் தருகின்றன.

இந்த அடிப்படைகளில் ஒன்று மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே! அவர்கள் ஒரே தாய் தந்தை என்ற ஒரே ஊற்றிலிருந்து படர்ந்தவர்களே! அவர்கள் அனைவரும் ஒரே இலக்கை நோக்கிப் பயணம் செய்பவர்களே! (மறுமையை நோக்கி)

மனிதர்கள் அனைவரும் ஆதம் ஹவ்வா என்ற பெற்றோரின் பிள்ளைகள் என்ற உண்மையிலிருந்து பிறப்பதே மனித இனத்தின் ஒற்றுமை. முதல் தந்தை, முதல் தாய் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களே மனிதர்கள் அனைவரும். ஆகவே பொதுவான நன்மைகள், படைப்புகள், பலன் பயப்பவை ஆகியவற்றிலிருந்து எல்லோரும் பலன் பெறலாம். அதேபோல் பொதுவான பொறுப்புகளிலும் எல்லோருக்கும் பங்குண்டு.

மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா ஆகியோரின் சந்ததிகள் என்பதையும், அவர்கள் அனைவரும் இறைவனின் படைப்பினங்களே என்பதையும் உணர்ந்தால் இன, நிற மாச்சரியங்களோ, சமூக அநீதிகளோ இடம் பெறாது. இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதிற்கும் இடமிருக்காது. மனிதர்கள் தாங்கள் ஒரே தாய் தந்தையர்களின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் எவ்வாறு ஒன்றுபடுவார்களோ அதேபோல் தங்களது சமுதாய வாழ்விலும் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் வாழ்ந்திடுவர். திருக்குர்ஆனிலும், பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகளிலும் அடிக்கடி இந்த ஒற்றுமையின் அடிப்படை வலியுறுத்தப்படுவதைக் காணலாம். இயல்பாலும், பிறப்பாலும் மனிதர்கள் அனைவரும் ஒன்றே என இஸ்லாம் எடுத்துக் காட்டுவதற்கான காரணம், இனம், நிறம், நாடு என்ற அடிப்படையில் மனிதர்கள் பிளந்து நிற்பதைத் தடுப்பதற்கும், உலகில் உண்மையான சகோதரத்துவம் தழைப்பதற்குமேயாகும். (சான்றாக திருக்குர்ஆன், 4:1, 7:189, 49:10-13 வசனங்களைப் பார்க்கவும்.)

மனிதர்களின் ஒற்றுமை அவர்களின் பிறப்பால் வந்தது மட்டுமல்ல, அது அவர்களின் இலட்சியத்தாலும் ஏற்படுவது. இஸ்லாத்தின் போதனைகளின்படி மனிதர்கள் அனைவரின் இறுதி இலக்கும் இறைவனே! நாம் அவனிடமிருந்தே வந்தோம். அவனுக்காகவே வாழ்கின்றோம். அவனிடமே மீளுவோம். உண்மையில் மனிதர்கள் படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவனை வணங்குவதும், அவன் பணித்த கடமைகளை அவனுக்காகவே செய்வதற்குமேயாகும். உண்மையையும், நீதியையும், உலக சகோதரத்துவத்தையும் நிலை நாட்டுவதும் இந்த நோக்கத்தின் பகுதிகளாகும். (திருக்குர்ஆன்: 51:56-58)

நாம் ஒரே பெற்றோரின் பிள்ளைகள் என்பதும், நாம் எல்லோரும் சென்றடைய வேண்டிய இடம் ஒன்றேதான் என்பதும் அடிப்படையாக அமைய இஸ்லாம் தனிமனிதன், சமுதாயம் ஆகியவற்றிற்கான உறவுமுறைகளைக் குறித்துப் பொதுவான விதிகளை வகுத்துத் தருகின்றது. தனிமனிதனின் பணிகள் சமுதாயத்தின் பணியோடு பிண்ணிப் பிணைந்தவையாகும். இவை இரண்டிற்கும் இடையே சமுதாய ஒற்றுமையும், அதில் அங்கம் வகிப்பவர்கள் ஆற்றிட வேண்டிய கடமைகளும் அமைந்திருக்கின்றன.

சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிக்கும், செழிப்பிற்கும் அதில் அங்கம் வகிக்கும் தனிமனிதனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த வகையில் தனிமனிதன் தனது சமுதாயத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளான். தான் சார்ந்த சமுதாயத்தின் நலிவுக்கும் அல்லது நல்வாழ்வுக்கும் அவன் நேரடியாகப் பொறுப்பேற்றாக வேண்டும். அவனது பொறுப்புப் சமுதாயம் என்ற அளவோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவன் இறைவனிடமு நேரடியாகப் பொறுப்பாவான். இந்த வகையில் தனிமனிதன் உண்மையான சமுதாய உணர்வுடன் செயல்படுவான். அத்துடன் தான் ஆண்டவனிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவன், அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்ற உணர்வு ஊக்கம் தர உண்மையான உள்ளத்துடன் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவான்.

சமுதாயத்தின் நலனுக்குத் தன்னால் முடிந்தவைகளைச் செய்திட வேண்டியது அவனது கடமையாகும். மறுபுறம் தனிமனிதனின் நல்வாழ்வுக்கு வேண்டியவற்றைச் செய்திட வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும். தனிமனிதனுக்கு முடியும்போது அவன் தன்னால் முடிந்ததையெல்லாம் சமுதாயத்திற்காகச் செய்கின்றான். சமுதாயம் பலன் அடைகின்றது. அவனுக்கு முடியாதபோது அவனை பாதுகாத்திட வேண்டியதும், அவனது தேவைகளைக் கவனித்திட வேண்டியதும் சமுதாயத்தின் கடமையாகும். இதில் அவன் பலனடைகின்றான், சமுதாயம் பணியாற்றுகின்றது. இவ்வாறாக தனிமனிதன் தன்னால் இயன்றபோது சமுதாயத்தை காக்கின்றான். அவனால் இயலாதபோது சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றான். எனவே சமுதாயத்தின் கடமையும் தனிமனிதனின் கடமைகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கடமையும், கருணையும் தனிமனிதனிடமிருந்து சமுதாயத்திற்கும், பின்னர், சமுதாயத்திலிருந்து தனிமனிதனுக்கும் பரிமாறப்படும்.

தனிமனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவோர் யாருமில்லை. அவனது தனித்தன்மைகளையோ, உரிமைகளையோ பறித்திட யாருக்கும் உரிமையில்லை. அதுபோலவே தனிமனிதனுக்கோ, ஒரு சிறு கூட்டத்திற்கோ சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்திட எந்த உரிமையும் இல்லை. இஸ்லாமிய சமுதாய அமைப்பில் தனிமனிதன் சமுதாயத்தைப் பாதுகாக்கின்றவனாகவும், சமுதாயம் தனிமனிதனைப் பாதுகாக்கின்ற அரணாகவும் விளங்கும். அங்கே நிரந்தர அமைதி நிலவும்.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏதுமற்ற ஒற்றுமை, ஒருவருக்கொருவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், பரிமாறிக்கொள்ள வேண்டிய கருணை, இவைதவிர, இஸ்லாமிய சமுதாய வாழ்க்கை நல்லவைகளைச் செய்திடுவதிலும், இறையச்சத்தை வளர்ப்பதிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்திட வேண்டும் என்ற அடிப்படையையும் கொண்டது. அத்துடன் இஸ்லாமிய சமுதாய வாழ்விற்கு ஒளியூட்டுவது, தனிமனிதனுக்குத் தரப்படும் அங்கீகாரம், அவனது புனிதமான உரிமைகளுக்குத் தரப்படும் மதிப்பு, அவனது உடைமைகளுக்கும், கண்ணியத்திற்கும் தரப்படும் பாதுகாப்பு ஆகியவையாகும். சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவராலும் பேணப்பட்டு வரும் ஒழுக்கம், பொதுவான நியதிகள் இவற்றைக் காத்து நடத்திடுவதில் தனிமனிதன் காட்டும் தீவிர முயற்சி இஸ்லாமிய சமுதாய வாழ்விற்கு அணி சேர்ப்பதாகும்.

இஸ்லாமிய சமுதாய அமைப்பில் மனிதன் தான்தோன்றித்தனமாக  – எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக நடந்திட முடியாது. அவன் நன்மைகளைச் செய்திட மக்களை தூண்டிட வேண்டும். தீமைகளை அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும்படி மக்களைத் தட்டி எழுப்பிட வேண்டும். தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்கிட வேண்டும். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டியது அவனது கடமையாகும்.

இவ்வளவு முக்கியமான பொறுப்புக்கள் இருக்க, இவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக நடந்திடுபவன் சுயநலம் நிறைந்த பாவியேயாவான். அவனுடைய ஒழுக்கம் களங்கப்பட்டதாகத்தான் இருக்கும். அவனுடைய மனசாட்சி நிலைகுலைந்தது. அவனுடைய நம்பிக்கை ஆரோக்கியமானதல்ல.

இஸ்லாமிய சமுதாய வாழ்வின் அமைப்பு மிகவும் ஆழமானது, உறுதியானது, பூரணமானது.

இந்த அமைப்பின் பல்வேறு கூறுகள்:

ஏனைய மனிதர்களிடம் உண்மையான அன்பு செலுத்துதல், இளையவர்கள்பால் இரக்கம் காட்டுவது, முதியவர்களை மதித்து நடப்பது, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, ஆறுதல் கூறுவது, நோயுற்றோரை சென்று பார்ப்பது, திக்கற்றோருக்கு நிவாரணம் தேடித்தருவது, சகோதரத்துவத்தை உண்மையாகவே நிலைநாட்டுவது, சமுதாய ஒற்றுமை உடைந்திடாமல் பாதுகாப்பது, அடுத்தவர்களின் உரிமைகள், உடமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்தல், சமுதாயம் – தனிமனிதன் என்ற வகையில் ஏற்படும் பரஸ்பர பொறுப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவையாகும்.

ஒருவரின் இவ்வுலகத் துன்பத்தில் ஒன்றைத் தீர்ப்பவனுக்கு இறைவன் தீர்ப்பு நாளில் ஒரு துன்பத்தைத் தீர்ப்பான்.

இளையவர்கள் மீது இரக்கம் காட்டாதவர்களும், பெரியவர்களை மதித்து நடக்காதவர்களும் முஸ்லிம்களாக மாட்டார்கள்.

தான் விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் விரும்பாதவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்.

நன்மையின் பக்கம் மக்களை அழைப்பவர் அந்த நன்மையைச் செய்தவராவார். அதற்கான நற்கூலியைப் பெறுவார். தீமையைத் தூண்டுபவர் அந்தத் தீமையைச் செய்தவராவார். அதற்கானத் தண்டனையைப் பெறுவார்.

இன்னும் இதுபோன்ற பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகள் பலவற்றை நாம் நபிமொழி தொகுப்புகளில் ஏராளம் காணலாம்.

அதுபோலவே திருக்குர்ஆனில் பின்வருபவைப் போன்ற பல இறைக்கட்டளைகளைக் காணலாம்.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயப்பட வேண்டியவாறு மெய்யாகவே பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிபட்ட) முஸ்லிம்களாக அல்லாமல், நீங்கள் இறந்துவிட வேண்டாம்.

மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இருதயங்களில் அன்பையூட்டி, ஒன்று சேர்த்தான். ஆகவே அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்குக்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்து அவன் உங்களை இரட்சித்துக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவு படுத்துகின்றான்.

(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டிருக்கவும். இத்தகையோர்தான் வெற்றி பெற்றவர்கள்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்…………. அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாபத்திற்கும், அக்கிரமத்திற்கும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருக்கின்றான்.

மேலே சொன்னவற்றோடு இஸ்லாமிய சமுதாய வாழ்வின் இன்னும் சில அடிப்படைகளைப் பெருமானார் (ஸல்) அவர்கள் (தங்களது ஹஜ் பயணத்தின் முடிவில்) ஆற்றிய இறுதி உரையில் காணலாம். இந்த உரையை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவிமடுத்திடும் அரும்பேறு பெற்றார்கள். ‘அரபாத்’ பெருவெளியில் நிகழ்த்தப்பட்ட அந்தப் பேருரையில் ஏனைய அறிவுரைகளோடு பின்வருபனவற்றையும் மொழிந்தார்கள்.

ஓ மனிதர்களே! நான் கூறுபவற்றை உன்னிப்பாக கவனியுங்கள். ஏனெனில் இந்த இடத்திற்கு இதற்குப்பிறகு உங்களைச் சந்திக்கும் பிரிதொரு வாய்ப்பினை நான் பெறுவேனா? என்பதை நான் அறியேன்!

இந்த உலகம் உள்ளவரை, உங்களில் ஒவ்வொருவருடைய உயிரும், உடைமையும், கண்ணியமும் மற்றவருக்கு இந்த மாதத்தின் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானதாகும். நீங்கள் உங்களுடைய இறைவனை நிச்சயமாக சந்தித்தே ஆகவேண்டும். அவன் உங்களுடைய செயல்கள் அனைத்திற்கும் உங்களிடம் கணக்குக் கேட்பான் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

ஓ மனிதர்களே! உங்கள் மனைவியரின் மேல் உங்களுக்கு உரிமை இருக்கின்றது. உங்கள் மனைவியருக்கு உங்கள்மேல் உரிமை இருக்கின்றது. உங்களது மனைவியரை அன்போடும், இரக்கத்தோடும் நடத்துங்கள். உண்மையில் அவர்களை, நீங்கள் உங்கள் இறைவனிடமிருந்து அமானிதப் பொருளாகவே பெற்றிருக்கின்றீர்கள். இறைவனின் வார்த்தையின்படி அவர்கள் உங்களுக்கு ஆகுமானவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். உங்கள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அமானிதப் பொருள்களை பொறுத்தவரை நீங்கள் உண்மையுடன் நடந்து கொள்ளுங்கள். பாவங்களிலிருந்து விலகி இருங்கள்.

இதுமுதல் அரியாமை சூழ்ந்திருந்த நாட்களில் நடந்துவந்த பழிவாங்கி இரத்தம் சிந்திடும் பழக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்டன. அத்துடன் எல்லா இனக்கலவரங்களும் ஒழிக்கப்பட்டு விட்டன.

நீங்கள் உண்ணும் அதே (தரமான) உணவையே உங்கள் அடிமைகளுக்கும் தாருங்கள். நீங்கள் அணியும் ஆடைகளைப் போலவே உங்கள் அடிமைகளுக்கும் அணியத் தாருங்கள். அவர்கள் ஏதேனும் தவறிழைத்து விட்டால் மன்னித்து விடுங்கள். அப்படி நீங்கள் மன்னிக்க விரும்பாவிட்டால் அவர்களை (பிரித்து) விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்கள். அவர்களைக் கடினமாக நடத்திடக் கூடாது.

ஓ மனிதர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே! என்பதை அறியுங்கள். நீங்கள் அனைவரும் ஒரே சகோதரத்துவத்தின் உறுப்பினர்களே என்பதை அறியுங்கள். உங்களில் ஒருவருக்குச் சொந்தமானது எந்தக் காரணத்தாலும் அடுத்தவருக்கு உரியதாகாது. அவர் மனமுவந்து உங்களுக்கு உரியதாக்கினாலன்றி. நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும்வரை இந்த மாதத்தின் இந்த நாளைப்போல் இந்த எல்லைக்குள் அடுத்தவர்களின் உயிர், உடைமை, கண்ணியம் ஆகியவை தூய்மையானவையாகும்.

இங்கே வராதவர்களுக்கு இங்கே இருப்பவர்கள் இவற்றை அறிவியுங்கள். ஒருவேளை அவ்வாறு அறிவிக்கப்படுபவர், இங்கு கேட்பவரை விட நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

உண்மையாக நான் என்னுடைய திருப்பணியை முடித்து விட்டேன். நான் உங்களிடம் தெளிவானதொரு அத்தாட்சியை விட்டுச் செல்கிறேன். அது இறைவனின் வேதமாகும். தெளிவான கட்டளையாகும். அதை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் வழிகேட்டில் விழ மாட்டீர்கள்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.