அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. நிரந்தரமாக தங்களது வேலைகளுக்காக ஏவலர்களை அமர்த்தியிருப்பவர்கள், அந்த ஏவலர்களை தங்களுடைய சகோதரர்களைப்போல் நடத்திட வேண்டும் என்றும், அடிமைகளைப்போல் நடத்திடக் கூடாதென்றும் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஏனெனில் யாரெல்லாம் தங்களுடைய ஏவலர்களை நல்ல முறையில் நடத்துகின்றார்களோ அவர்களது மரணத்தை இறைவன் மகிழ்ச்சியானதாகவும், எளிதானதாகவும் ஆக்கியருள்வான் என பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நீதி, இரக்கம், அன்பு, அனுதாபம், உணவு, உடை, தங்குமிடம், ஏனைய செலவினங்களுக்கானப் பணம் இவை பணியாட்களுக்கு உரியனவாகும். எஜமானர்கள் உடுப்பது போலவே ஏவலர்களுக்கும் உடுத்திட ஆடைகள் தரப்பட வேண்டும். எஜமானர்கள் உண்பது போலவே ஏவலர்களுக்கும் உணவளிக்கப்பட வேண்டும். இவைகளை எஜமானர்கள் தங்களது கடமையெனக்கருதி நிறைவேற்றிட வேண்டும். இவைகளுக்காக ஏவலர்களிடம் அதிகமான வேலைகளை ஒப்படைக்கவோ அல்லது அவர்களைக் கஷ்டப்படுத்திடவோ கூடாது என பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மேலே சொன்ன பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் இஸ்லாம் மனித இனத்தை எந்த அளவுக்கு மாட்சிமைப்படுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதுபோலவே இஸ்லாம் எந்த அளவிற்கு உழைப்பையும், உழைப்பவர்களையும் கண்ணியப்படுத்துகின்றது என்பதையும் விளக்கிடுகின்றது. இதனால் இஸ்லாத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு வழி இல்லை அல்லது உழைப்பவரின் சர்வாதிகாரம் நிலவ வழி இல்லை. ஒருவன் நமக்குக்கீழ் வேலை செய்பவனாக இருக்கின்றான் அல்லது ஏவலாளாகப் பணியாற்றுகின்றான் என்பதற்காக அவனுடைய உரிமையையோ, கண்ணியத்தையோ பறித்திடக் கூடாதென பணிக்கின்றது இஸ்லாம்.

உண்மையான முஸ்லிம் சமுதாய அமைப்பில் எல்லோருக்கும் சம உரிமைகள் உண்டு. இஸ்லாம் மனிதர்களுக்குள் எந்த வேற்றுமையையும் பாராட்டுவதில்லை. இஸ்லாத்தில் இரண்டாந்தரக் குடிமகன் என்ற பாகுபாடே, சாதிவேறுபாடே இல்லை. இஸ்லாம் அங்கீகரிக்கின்ற ஏற்றத் தாழ்வுகளெல்லாம், இறையச்சம், இறைவனின் வழியில் நற்செயல்கள் செய்திடுவது ஆகியவற்றின் அடிப்படையில்தான். இறையச்சம் மிக்கோர் மேலோர், என்பதே இஸ்லாத்தின் கொள்கை. (சான்றாக திருமறையின் 9:105, 49:13 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

ஏனைய குடும்ப உறுப்பினர்களோடும், உறவினர்களோடும் மிக்க கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்திட வேண்டும் என்றுமிறைவன் கட்டளையிட்டுள்ளான். அவர்களோடு உண்மையான அன்புடன் நடந்திட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களது இன்ப துன்பங்களில் முழு மனதுடன் பங்கேற்றிட வேண்டும். ‘உறவு’ என்ற பொருளைத்தரும் ‘அரபி’ சொல் இரக்கம், கருணை ஆகிய பொருளைத்தரும் வேர்சொல்லிலிருந்து (ரஹீம், ரஹ்மா) பிறந்ததாகும். உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது சுவர்க்கத்தை எட்டிப்பிடித்திட கிடைத்த குறுக்கு வழியாகும். உறவினர்களிடம் இறைவன் பகர்ந்துள்ள பாதையில் நடந்திடாதவர்க்கு இவ்வழி அடைபட்டு போகும்.

உறவினர்களுடன் பாசமுடன் நடந்து கொள்வது ஒருவரது உயிருக்கும் உடமைகளுக்கும் கிடைத்த இறைவனின் அருளாகும் எனப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாம் காட்டும் பாசம், பரிவு இவைகளுக்கு உறவினர்கள் நன்றியுடன் நடந்து கொண்டாலும், இல்லையென்றாலும் நாம் அவர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மிடம் அதுபோல் நடந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் நம்மைத் தாக்கிடக் கூடாது. உறவினர்களுடன் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டியது இறைவன் நம்மீது பணித்த கடமையாகும். ஆகவே அதை அவனுக்காகவே நிறைவேற்றிட வேண்டும். இதில் உறவினர்களின் நன்றியை எதிர்பார்த்திடக் கூடாது. அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்திடக்கூடாது. இவைகளை எதிர்பார்த்து இருந்திடவும் கூடாது. (சான்றாக திருமறையின் 2:177, 4:36, 16:90, 17:23-26 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

அண்டை வீட்டில் வாழ்பவர்களுக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளும் உயர்வுகளும் மகத்தானவை. அண்டை வீட்டில் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எண்ணற்ற சிறப்பான உரிமைகளுக்கு உரியவர்களாவர். இது தொடர்பான திருமறை வசனத்திற்கு விளக்கம் தந்தபோது பெருமானார் (ஸல்) அவர்கள் யாருடைய அண்டை வீட்டார் அவரிடம் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார் எனக் கூறியுள்ளார்கள். அண்டை வீட்டார் இரவெல்லாம் பட்டினியில் வாடிடும்போது தான் வயிறு வீங்க உண்டு களிப்பவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார் என்பதும் அண்ணல் நபி (ஸல்) ஆவர்கள் அண்டை வீட்டார் குறித்து மொழிந்த நல்லுரையாகும். தன்னுடைய அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்பவர் மறுமையில் அல்லாஹ்வை தன் அண்டை வீட்டார்கப் பெறுவார். பரிசுகளையும், பரிசுத்தமான அன்பினையும் அண்டை வீட்டாரோடு பரிமாறிக் கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களது துன்பங்களிலும், துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

தங்களுடைய பிரிதொரு பொன்மொழியில் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பகர்ந்துள்ளார்கள். ‘உங்களது அண்டை வீட்டாரது உரிமைகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர் (அண்டை வீட்டார்) உங்களிடம் உதவி தேடினால் நீங்கள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவர் உங்களிடம் நிவாரணம் தேடினால் நீங்கள் அவருக்கு நிவாரணம் அளியுங்கள். அவருக்குக் கடன் தேவைப்பட்டால் நீங்கள் அவருக்குக் கடன் தாருங்கள். அவர் துக்கத்தில் இருந்தால் நீங்கள் அவருடன் அனுதாபத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர் நோயுற்று இருந்தால் அவருக்கு பணிவிடை செய்யுங்கள். அவர் இறந்தால் அவர் இறப்பில் கலந்து கொள்ளுங்கள். அவர் நல்லதைப் பெற்றால், நல்லதை அடைந்தால் அவருக்கு வாழ்த்துக் கூறுங்கள். உங்களது கட்டிடத்தை அவரது சாளரத்திற்கு மேல் உயர்த்தி அவருக்குச் செல்லும் காற்றை தடை செய்யாதீர்கள். (அவருடைய அனுமதியின்றி) அவருக்கு எந்த விதத்திலேயும் தொல்லை தராதீர்கள். நீங்கள் பழங்களை வாங்கினால் உங்கள் அண்டை வீட்டாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் அளவில் இல்லையென்றால் அவற்றை அமைதியாக உங்கள் வீட்டினுள் எடுத்துச் சென்று விடுங்கள். அத்துடன் உங்கள் குழந்தைகள் அவற்றை வெளியில் எடுத்து வந்து அண்டை வீட்டுக் குழந்தைகள் குமுறும் அளவில் காட்டித்திரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‘வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாரது உரிமைகளைப்பற்றி கூறிடும்போது அண்டை வீட்டார்கள் நமது வாரிசுகளாகக்கூட ஆகிவிடுவார்களோ என நான் பயந்தேன்’ என பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக நபிமொழி (ஹதீஸ்) அறிவிப்பாளர்கள் கூறுகின்றார்கள். (முந்தியப் பத்தியில் சான்றாகக் குறிப்பிட்டுள்ள திருமறை வசனங்களையும் பார்க்கவும்.)  

Leave a Reply