அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.  இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது.

சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாகவும் இருந்திடுவதுமுண்டு. இந்த உண்மைகளை இஸ்லாம் நன்றாகக் கவனத்தில் கொள்ளுகின்றது.

மூன்றாவதாக இந்த உண்மையை அடியொற்றி குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி சில விதிகளையும் தருகின்றது. குழந்தைகள் வாழ்வின் சுவைகூட்டும் சொத்துக்களாவர். பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பவர்கள். அதே நேரத்தில் அவர்கள் வீண் பெருமை, தற்பெருமை, ஆணவம் ஆகியவற்றைத் தருபவர்களாகவும் மாறி விடுவதுண்டு. சில நேரங்களில் துன்பங்களின் ஊற்றாகவும் மாறிடுவதும் உண்டு. இவை குறித்துப் பெற்றோர்கள் கவனமாக இருந்திட வேண்டுமென எச்சரிக்கின்றது இஸ்லாம். இதில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல் என்னவென்றால், ஒவ்வொரு தனிமனிதனும், (அது பெற்றவர்களாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி) தனது செயல்களுக்குத் தானே பதில் சொல்லிட வேண்டும் மறுமையில். அவரவர் செயல்களுக்கு அவரவரே இறைவனிடம் விளக்கம் தந்திட வேண்டும். இறுதி தீர்ப்பு நாளில் குழந்தைகள் பெற்றோரின் செயல்களுக்குப் பொறுப்பேற்க முடியாது. அதுபோலவே குழந்தைகளுக்காகப் பெற்றோர் பரிந்து பேச முடியாது.

இறுதியாக, குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதில் திருக்குர்ஆன் ஆழ்ந்த கவனம் செலுத்துகின்றது. குழந்தைகளை உருவாக்குவதில் பெற்றோருக்கு இருக்கின்ற தீர்க்கமானப் பொறுப்பை நன்றாக உணருகின்றது, உணர்த்துகின்றது. இறைவனின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடைய விழுமிய அறிவுரை ஒன்றில், ‘பிறக்கும் ஒவ்வொரு குழ்ந்தையும் ‘பித்ரா’ என்ற புனித நிலையிலே தான் பிறக்கின்றது. அந்தக் குழந்தையை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மாற்றுவது பெற்றவர்களே’ எனப் பகர்ந்துள்ளார்கள்.

இஸ்லாம் குழந்தைகளுக்குத் தந்திருக்கும் பிரிதொரு உரிமை வாழும் சுதந்திரம். வாழ்வதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்திடும் உரிமை.

குழந்தையின் உயிரை பாதுகாத்திட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இது இஸ்லாம் வழங்கும் கட்டளையாகும். (6:151-17:23)

குழந்தைகளுக்கு இருக்கும் இன்னொரு மறுக்கமுடியாத உரிமை; ‘கண்ணியமான பிறப்பு’ என்பதாகும். முறைப்படியான வாழ்க்கை ஒப்பந்தத்தின் கீழ் முறையாகப் பிறந்த குழந்தை என்ற கண்ணியம் குழந்தைகளின் உரிமையாகும். (இந்த உரிமை பெற்றோர்களின் நல்லொழுக்கத்திலிருந்து பிறப்பதால் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்திட வேண்டும். ‘இழிபிறப்பு’ என்பது தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தி விடும்.)

குழந்தைகளை நல்லமுறையில் பாதுகாத்து வளர்ப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான கடமையாகும். இறைவனின் தூதரவர்கள் குழந்தைகளிடம் அதிகமான அன்பு செலுத்துபவர்களாக இருந்தார்கள். முஸ்லிம்கள் ஏனைய சமுதாயத்தாரைவிட அதிகமாகக் குழந்தைகளிடம் அன்பு செலுத்துபவர்களாக இருந்திட வேண்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குழந்தைகளின் ஆன்மீக உயர்வுக்கு வழி தேடுவதும், அவர்களின் கல்வித்தேவை ஆகியவற்றைத் தேடித்தருவதும், அவர்கள் வாழ்வில் வளம்பெற வழிகாட்டுவதும் நற்செயல்களில் தலையானவையாகும். பெருமானார் (ஸல்) அவர்களின் நற்போதனைகளின்படி குழந்தை பிறந்த ஏழாவது நாளிலேயே அதன் தலைமுடி வழிக்கப்பட வேண்டும். அத்துடன் அதற்கு ஒரு அழகிய பெயரும் சூட்டியாக வேண்டும். இந்த இனிய நிகழ்ச்சியை தானதர்மங்கள் நிறைந்த ஒன்றாக ஆக்கிக் கொண்டாடிலாம்.

குழந்தைகளின் நலனில் அதிகமாக அக்கறைக் காட்டிட வேண்டியதும், அன்பு செலுத்திட வேண்டியதும் ஒரு சமுதாயத்தேவை! ஒரு மார்க்கக் கடமை! பெற்றோர்கள் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழ்ந்தைகளின் நலன் உரியவர்களால் கவனிக்கப்பட்டாக வேண்டும். பெற்றோர்கள் இல்லாதபோது குழந்தைகளின் காப்பாளர்கள் அல்லது உறவினர்கள் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்திட வேண்டும். இத்தகைய உறவினர்கள் இல்லையென்றால், பின்னர் இந்தப் பொறுப்பை நிறைவேற்றிட வேண்டியது இஸ்லாமிய சமுதாயத்தின் பொறுப்பாகும். அரசு இஸ்லாமிய அரசாக இருந்தால் இது அரசின் பொறுப்பாகும். அரசு இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு செய்யலாம். அல்லது நாட்டிலே வாழும் முஸ்லிம் குடிமக்களைக் கொண்டு இதனை நிறைவேற்றிடலாம்.

குழந்தைகளின் கடமைகளும், பெற்றோரின் உரிமைகளும்.

குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டிய கடமைகளாலும் உரிமைகளாலும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளார்கள். பல நேரங்களில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலுள்ள வயதின் இடைவெளி மிகவும் அதிகமாகி விடுகின்றது. இதனால் பெற்றோர்கள் பலம் குன்றி, ‘தள்ளாத’ நிலைக்கு வந்து விடுகின்றனர். வயது முதிர்ச்சியின் காரணமாக அவர்கள் பொறுமையை இழக்கின்றனர். எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்ற தன்மை வளர்ந்து விடுகின்றது. பல நேரங்களில் தவறான முடிவுகளுக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனர். சில நேரங்களில் இது பெற்றோர்கள் என்ற நிலையில் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்ற அளவிற்குப் போய்விடுகின்றது. மனிதனிடம் ஏற்படுகின்ற இந்த மாற்றங்களை மனதிற்கொண்டுதான் இஸ்லாம் தனிமனிதன் பெற்றோர்களிடம் கொள்ளவேண்டிய உறவுமுறைகளை ஒழுங்குபடுத்திடும் சில அடிப்படை நியதிகளை வகுத்தளித்துள்ளது.

பெற்றோர்கள் வயதில் முதிர்ந்தவர்கள், அனுபவத்தில் தேர்ந்தவர்கள் என்பவை மறுக்க முடியாத உண்மைகள். இந்த உண்மைகளை அங்கீகரிப்பதனால் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவைகளாக ஆகமாட்டாது. அவர்களின் கருத்துக்கள் ஓர் அளவுகோல் எனவும் கொண்டிட முடியாது. அதுபோலவே ’இளமை’தான் சக்தியின் உறைவிடம், அதுவே ஞானம் நிறைந்தது எனக் கொண்டிட முடியாது. பல நேரங்களில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் பெற்றோரின் கருத்துக்கள் தவறாக இருந்திருக்கின்றன. அதுபோலவே பல நேரங்களில் பிள்ளைகள் பெற்றோர்கள் எடுத்த முடிவை தவறாக கணித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நிலைகளையும் திருமறை பல்வேறு வசனங்கள் வழியாகச் சுட்டிக் காட்டியுள்ளது. (சான்றாக திருமறையின் 6:74, 11:42-46, 19:42-48 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)

இங்கே நாம் முக்கியமாகக் கவனித்திட வேண்டியது குலம், கோத்திரம், பரம்பரைப் பழக்கம், பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்டவைகள் இவைகள் உண்மையாகத்தான் இருந்திடும் என்றில்லை. சமுதாய வழக்கத்திற்கும், பரம்பரையின் பண்பாட்டிற்கும் மாற்றமானது, இதுவரை இல்லாத புதுமை எனக்கூறி உண்மையை நிராகரித்தவர்களை திருமறை கடிந்துரைத்துள்ளது. அத்துடன் இன்னொரு உண்மையையும் விளங்க வைக்கின்றது. பெற்றோர்களிடம் பிள்ளைகள் காட்டிடும் பணிவு பிள்ளைகளை இறைவனிடமிருந்து பிரித்து வெகுதூரம் கொண்டு சென்றிட நிர்பந்திக்குமேயானால் பிள்ளைகள் இறைவனின் பக்கமே சாய்ந்திட வேண்டும். பெற்றோர்களிடம் பிள்ளைகள் அன்புடனும், பாசமுடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பது உண்மையே! அவர்களின் தள்ளாத நிலையில் அவர்களைக் காத்திட வேண்டியது பிள்ளைகளின் கடமையே! ஆனால், அவர்கள் அவர்களுக்கேயுரிய உரிமையின் வரம்புகளைக் கடந்து இறைவனின் உரிமையில் கை வைத்திடுவார்களேயானால் அவர்களின் உரிமைக்கும், இறைவனின் உரிமைக்கும் இடையே ஒரு எல்லை வரையப்பட்டாக வேண்டும். அந்த எல்லை காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இஹ்ஸான் என்ற கோட்பாடு மூலம் திருமறை இதைத் தெளிவாக விளக்குகின்றது. இஹ்ஸான் என்பது எது நல்லது எது முறையானது, எது சிறந்தது என்பதைக் குறிப்பிடுவதாகும். நடைமுறையில் இஹ்ஸான் என்ற கோட்பாட்டின் விளக்கம் பெற்றோர்களிடம் குழந்தைகள் அன்புடனும், அனுதாபத்துடனும், பொறுமையுடன், நன்றியுடன், இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும். பெற்றோர்களை மதித்து நடந்திட வேண்டும் என்பதும், அவர்களின் ஆன்மாவிற்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதுவும் இதில் அடங்கும். பெற்றோர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்திட வேண்டியதும், அவர்கள் கடன்பட்டிருந்தால் அதைக் கொடுத்திட வேண்டியதும் பிள்ளைகளின் பங்காகும்.

கருத்துக்களில் வேறுபடுவதற்கு இருக்கின்ற உரிமை ‘இஹ்ஸான்’ என்பதன் இன்னொரு அடிப்படையாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றார்கள். இதனால் குழந்தைகள் ‘ஆளாகியப்’ பின்னரும் பெற்றோர்களைப் பணிந்து நடந்திட வேண்டும். இது பெற்றோர்களின் உரிமையாகும்.

ஆனால், பெற்றோர்கள் தவறானவற்றைக் கோருவார்களானால், குழந்தைகள் நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக நடந்திட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்களேயானால், குழந்தைகள் கீழ்ப்படிய மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, கீழ்படியவும் கூடாது.

பிள்ளைகள் பெற்றோர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிடவும் கூடாது. அதேபோல் காரணமின்றி கீழ்படியாதிருக்கவும் கூடாது.

இஹ்ஸான் என்பதன் இறுதி பகுதி என்னவெனில் பிள்ளைகளே பெற்றோர்களுக்கு ஆதவளித்திட வேண்டும். (பெற்றோர்களினால் சம்பாதிக்க முடியாத நேரத்தில்) பெற்றோரது எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்திட வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.